Results 1 to 10 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.

    எம்.ஜி.ஆரின் சிறப்பு அவரது ஈகை குணம் தான். நடிகர் பாலாஜியின் நாடகக் குழுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் சேலத்தில் நாடகம் நடைபெற இருந்தது. காரிலேயே சேலம் சென்றோம். உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது எனக்குத் தாகம் ஏற்பட்டது. ரோடு ஓரத்தில் இருந்த ஒரு குடிசையின் அருகில் காரை நிறுத்தினோம். நான் காரை விட்டு இறங்கியதும் ஒரு வயதான பெண்மணி, என்னிடம், 'என்ன வேணும்?' என்று விசாரித்தார். 'குடிக்கத் தண்ணீர் வேணும்!' என்றதும் குடிசைக்குள் சென்று, பெரிய செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். வெயில் நேரத்தில் ஜில்லென்று உள்ளே இறங்கிய அந்த தண்ணீர் ரொம்ப இதமாக இருந்தது.

    நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுவதற்கு முன், நடிகர் பாலாஜி, தமது பர்ஸிலிருந்து நூறு ருபாய் நோட்டை எடுத்தார். அதை அந்தப் பெண்மணியின் கையில் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவர், ஆச்சர்யத்துடன் ருபாய் நோட்டையே சில வினாடிகள் பார்த்துக்கொண்டு இருந்தார். சட்டென்று ருபாய் நோட்டைப் பிடித்தபடி, தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, பாலாஜியைப் பார்த்து, 'எங்கள் எம்.ஜி.ஆர் வாழ்க!' என்றார். சில நிமிடங்களுக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனோம். அப்பறம் விஷயத்தை நாங்களாகவே புரிந்துகொண்டோம்.

    அந்த கிராமத்து மூதாட்டியைப் பொறுத்தவரை, 'எம்.ஜி.ஆர்' என்கிற மனிதர் மட்டும்தான் முன்பின் தெரியாத ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்வார். ஏழை மக்களுக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அது நிச்சயமாக எம்.ஜி.ஆரை தவிர வேறு ஒருவராக இருக்கவே முடியாது என்பது, அவரது மனத்தில் பதிந்து விட்டது. இவரைப் போன்ற நம்பிக்கைகொண்டு ஏழை எளியவர்கள், இன்னுமும் நிறையப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

    காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.
    எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

    அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!

    இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.

    ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!

    எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.

    எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

    எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!

    நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?

    திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தி.நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.

    அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.

    'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.

    இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!

    'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.

    'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.

    பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.

    இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.
    எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி, தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.

    அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.

    இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
    நடிகர் நாகேஷ் அவர்கள் முதன்முதலில் ஒரு நாடகத்தில் ஓரிரு நிமிடங்கள் வந்து போகும் வயிற்றுவலிக்காரனாக நடித்தார். அந்த நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்த அந்த முக்கிய பிரமுகர், நாடகம் முடிந்ததும் மைக்கை பிடித்த அவர், 'நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாக நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!' என்று சொல்லி நாகேஸ்வரன் என்கிற நாகேஷை மேடைக்கு அழைத்து, 'நாகேஸ்வரன் என்கிற பெயர் கொண்ட இவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்!' என்று சொல்லி பரிசுக்குரிய கோப்பையை கொடுத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே தான். இதில் ஹைலைட் என்னவென்றால், நாகேஷ் இதற்க்கு முன்பு எம்.ஜி.ஆரை பார்த்ததே இல்லை. எனவே தனக்கு பரிசு கொடுப்பவர் யாரென்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதை நினைத்து பலமுறை சிரித்திருக்கிராராம் நாகேஷ்.
    from Net

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •