
Originally Posted by
parthasarathy
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் வெளி வந்த பாடல்கள் (தொடர்ச்சி...)
8. "எங்கே நிம்மதி" படம்:- புதிய பறவை (1964); பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழுவினர்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- தாதா மிராசி; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் சரோஜா தேவி.
இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகுக்கு மிகவும் புதிய முறையில் அளிக்கப் பட்ட பாடல். பொதுவாக, கனவுப் பாடல்கள் பெரும்பாலும் டூயட்டுகளாகவே இருக்கும் நிலையில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள் அவனை நிம்மதி இல்லாத மன நிலைக்கு இட்டுச் செல்ல, அவன் நனவுலகத்திலிருந்து விலகி, கனவுலகத்திற்குச் சென்று அங்கும் அல்லல் படுவதை, ஒரு வகை "fantasy " என்று சொல்லக் கூடிய முறையில் எடுத்திருப்பார்கள்.
இதற்கு முன்னரே, "நிச்சய தாம்பூலம்" படத்தில், "படைத்தானே" பாடலில் இந்த முறையை நடிகர் திலகம் சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், அந்தப் பாடலை விட, "எங்கே நிம்மதி" பாடலை இன்னமும் செம்மைப் படுத்தியிருந்ததால், இந்தப் பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.
இந்தப் பாடலின் பல்லவியான "எங்கே நிம்மதி" வரிகள் முதலில் கவியரசருக்குக் கிடைக்கவில்லை எனவும், கவியரசு, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் நடிகர் திலகம் மூவரும் பாடல் எடுப்பதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்த பின்னரும் அந்த முதல் வரி எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் (ஏனென்றால், கவியரசு எப்போதுமே முதல் வரியிலேயே மொத்தப் பாடலின் காலத்திற்கு அவரும் சென்று கேட்பவரையும் அழைத்துச் சென்று விடுவார், நடிகர் திலகம் நடிப்பில் காட்டுவது போல் - "கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே" என்று ஒரு கரிய நிறம் கொண்ட பெண்ணின் இறைவன் கண்ணனை நோக்கிய முறையீட்டில் தந்தவர். இது ஒரு சிறிய ஒரு உதாரணம். இது போல் பல உதாரணங்கள் கூறலாம்.), வீடு சென்றதாகவும், நள்ளிரவில், திடீரென்று நடிகர் திலகமே, அந்த வரிகள் மனதில் வரப் பெற்று, மற்ற இருவருக்கும் தொலைபேசி செய்து, அன்றிரவே, பாடலைப் பதிவு செய்ததாகவும் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன். பொதுவாக, நடிகர் திலகம் பிற துறைகளில் அதீதமாகத் தலையிட மாட்டார் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வார்கள் என்றாலும் இந்தக் கூற்று உண்மையல்ல. இந்தப் பாடலே அதற்கு உதாரணம். இது போல் பல படங்களைச் சொல்லலாம். அவர் அதீதமாகத் தலையிட மாட்டாரே தவிர, படம் முழுமையாக வர, அவரது ஆலோசனைகளை வழங்கி, முழு ஈடுபாட்டினையும் காட்டித்தான் வந்திருக்கிறார் - சக கலைஞர்களின் பங்களிப்பையும் பட்டை தீட்டுவது உட்பட.
இந்தப் பாடல் பல ஆண்டுகள், உலகின் எந்த மூலையில் மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் மறக்காமல் முயற்சி செய்து பாடப்பட்ட பாடல். இன்றும் இது தொடர்கிறது. மெல்லிசை மன்னர்களின் மிகச் சிறப்பான டியூனும், எண்ணற்ற வாத்தியக் கருவிகளின் ஆர்ப்பரிப்பும், இன்றளவும் ஒவ்வொரு இசையமைப்பாளரையும் இன்னமும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாடல் வரிகளோ கேட்கவே வேண்டாம். முக்கியமாக, "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே" சிரஞ்சீவித்தன்மை பெற்ற வரிகள். டி.எம்.எஸ்ஸின் அற்புதப் பங்களிப்பில், பாடல் எடுக்கப்பட்ட விதமும், அதில் நடித்த அனைத்து கலைஞர்களின் நடிப்பும் இன்றளவும் புதிதாகத் தோற்றமளிக்கிறது.
இப்போது, நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சிக்கு வருவோம். இந்தப் படத்தை முதலில் பார்த்தபோது, நடிகர் திலகம் அவருடைய முயற்சியில் தோற்று (சௌகாரின் கை ரேகையை பிரதி எடுக்க முயன்று தோற்று, நடிக வேள் எம்.ஆர். இராதாவால் மேலும் மனம் உடைந்து போயிருப்பார்) மிகுந்த மன உளைச்சலுடன் படுக்கையில் புரளுவார் - "என் நிம்மதியே போய்டும் போலிருக்கே!" - அப்போதே, திரை அரங்கம் ஆர்ப்பரிக்கத் துவங்கி விட்டது. அப்போதே எனக்கும் விளங்கி விட்டது - படத்தின் மிக முக்கியமான highlight பாடலான "எங்கே நிம்மதி" வரப் போகிறதென்று.
இந்தப் பாடல் முழுக்க நடிகர் திலகத்தின் உடல் மொழி கொடி கட்டிப் பறக்கும். பாடல் முழுவதிலும், அவரது கைகளும், கால்களும் காண்பிக்கும் அபிநயங்களை வேறெந்த நடிகன் முயற்சித்திருந்தாலும், நகைப்புக்கிடமாகத்தான் போயிருக்கும். எந்த விஷயத்தையும் பரீட்சித்துப் பார்ப்பதில் (சோதனை முயற்சி சில முறை ஜெயிக்கலாம் சில முறை தோற்கலாம். ஆனால் அதைப் பற்றி என்றுமே கவலைப் படாமல், கடைசி படம் வரை, வித்தியாசப் படுத்தி நடிப்பதில் பிடிவாதம் காட்டியவரல்லவா?) முனைப்பு காட்டும் நடிகர் திலகம் இந்த முறை, ஏற்கனவே "படைத்தானே" பாடலில் செய்த சோதனை முயற்சியை விட பல படிகள் முன்னே போய், அவரது நம்பிக்கைக்குரிய குழுவின் மூலம் (கவியரசு/டி.எம்.எஸ்./மெல்லிசை மன்னர்கள் - "படைத்தானே"வும் இதே குழு தான்!) ஒரு பரீட்சார்த்த பாடல் முயற்சியை செய்திருப்பார்.
அந்த மெல்லிய வெள்ளை சட்டை, முழங்கைக்கு மேல் மடித்து விட்ட விதம், அந்த வெளிர் நீல பாண்ட், சரியாக சவரம் செய்யப்படாத முகம் - இவைகளை மட்டும் வைத்துக் கொண்டே, துவக்கத்திலேயே, அந்தப்பாடலின் சூழலுக்கு உடனேயே சென்று, பார்க்கும் அனைவரையும் இழுத்துச் சென்று விடுவார் வழக்கம் போல்.
பாடல் துவங்கி கேமரா கீழே படுத்துக் கொண்டிருக்கும் அவர் மீது zoom செய்யப் பட, கோரஸில், பலர் "ஒ..." என்று கூவத் துவங்கும்போதே, அவர் எச்சிலை மிடறு விழுங்கி அந்தச் சூழலின் பயங்கரத்தைக் காண்பிப்பார். உடனே தொடரும் ஒரு அதிரடி இசைக்கு சட்டென பின்னோக்கி நடக்கும் போது அரங்கம் அதிரத் துவங்கும்.
"எங்கே நிம்மதி" எனப் பல்லவி பாடும் போது, இரண்டு கைகளையும் ஒரு விதமாக relaxed - ஆக stretch செய்து, மிகுந்த மன உளைச்சலில் இருப்பவனின் ஆயாச உணர்வினை எடுத்துக் காட்டும் விதம் பிரமிக்க வைக்கும்; கூடவே அரங்கமும் அதிரும்.
பல்லவி முடிந்தவுடன் சௌகார் மற்றவர்கள் சகிதம் வந்து அவரை இம்சை செய்யத் துவங்கியவுடன், அந்த இம்சையை எதிர் கொள்ளும் விதம்!
இப்போது சிறிய சரணம். அந்தக் கூட்டத்திடமிருந்து விலகி ஓடி வந்து, வலது கையை மட்டும் ஸ்டைலாக மேலே பின்னோக்கித் தூக்கி "எங்கே மனிதன் யாரில்லையோ" என்று சொல்லி இப்போது இடது கையைத் இலேசாக மேலே தூக்கி "அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று பாடுவார். இதற்கும் அரங்கம் அதிரும்!
இப்போது சரணம். "எனது கைகள்" எனும்போது, இடது கையை மேலே தூக்கி, "மீட்டும் போது வீணை அழுகின்றது" எனும் போது வலது கையை இடது கை அருகாமையில் கொண்டு சென்று வீணை போல் மீட்டி, "எனது கைகள் தழுவும் போது" என்று கூறும் போது, கைகளை உடனே X (எக்ஸ்) போல் ஆக்கி, தழுவுவது போல் வித்தியாசமாய்க் கைகளைக் கையாண்டிருப்பார். பொதுவாகத் தழுவுவது என்பது கைகளை நேரிடையாகத் தழுவுவது போல் தான் வரும். இருப்பினும் அதற்கு முன்னர் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு வீணை வாசிக்கும் பாவனையைக் காட்டிக் கொண்டே, அதே கோணத்தில், எதிரிடையாக X (எக்ஸ்) குறியில், தழுவும் பாவனையைக் காண்பித்திருப்பார். (ஆங்கிலத்தில், follow through என்று கூறுவார்களே, அது தான் இந்த நடிகர் திலகத்திடம் எத்தனை முறை பாடம் காண்பிக்கப்பட்டிருக்கிறது!) அப்படியே, பின்னோக்கிப் போய்க் கொண்டே "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே; ஓ! இறைவன் கொடியவனே" எனும் போது மேலே தூக்கிய இரண்டு கைகளையும் சட்டென்று கீழே இறக்கி "இறைவன் கொடியவனே" என்று சரியான follow through முறையில் கீழே கொஞ்சம் வேகமாகவும், ஒரு வித அலுப்பு கலந்த வன்மையோடும் கீழே இறக்கி அந்த வரிகளுக்கு அதாவது "இறைவன் கொடியவனே" என்ற அந்த வரிகளுக்குரிய வன்மையைக் காட்டியிருப்பார்.
முதல் சிறிய சரணம் முடிந்து அனு பல்லவியில் "எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி...அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று அந்த மேல் நோக்கிச் செல்லும் வழியில் ஏறும் போது, அலுப்பையும் ஆயாசத்தையும் நடையில் காட்டிய நடிப்புலக மன்னர் மன்னன், இந்த இரண்டாம் சரணம் முடிந்து - அதாவது "எனது கைகள் மீட்டும் போது..." என்கிற சரணம் - ஒரு வித வேகத்துடன் "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி" என்று இரு புறமும் திரும்பித் திரும்பி நடித்திருப்பார் - ஏன்? முதல் முறை, ஆயாசத்தையும், இரண்டாவது முறை, வேகத்தையும், பாடிய டி.எம்.எஸ். தந்ததால்!
மூன்றாவது சரணம் - "பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே" சரோஜா தேவி அருகில் வந்ததும், பாலைவனத்தில் சோலையைக் கண்ட மன நிலையுடன், ஒரு வித ஆயாசம் கலந்த relief-உடன் சென்று, அவரை முழுமையாகத் தழுவாமல், "உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்" என்ற மன நிலையில் கண்ணியத்துடன் தழுவி நடந்தவுடன், திரும்பவும் "பழைய பறவை போல ஒன்று" என்று அதே சரணம் இரண்டாவது முறை வரும் போது, உள்ளே இருந்து சௌகார் வேகமாக வந்தவுடன், அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து, ஸ்டைலாக பின்னோக்கி செல்லும்போது, மீண்டும் அரங்கம் அதிரும்! மறுபடியும் சரோஜா தேவி வந்தவுடன், "என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே என்று வேதனையுடன் (அளவான) கூறி அப்படியே கீழே உட்கார்ந்து, அவரது மடியில் படுத்து, "இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே" என்று கூறி, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?" என்று படுத்துக் கொண்டு சரோஜா தேவியைப் பார்க்கும் போது, அப்போது தான் முதன் முறையாக அவரது முகத்தில், ஒரு வித relief தெரியும்! சௌகாரின் இம்சை போய், காதலி சரோஜா தேவியைப் பார்த்த திருப்தியில்!
மீண்டும் அனு பல்லவி துவங்கி, பலர் சௌகாருடன் சேர்ந்து அவரை இம்சித்து, அப்படியே, நடிகர் திலகம் சௌகாரின் பிடியில் freeze ஆகி நிற்பது போல் முடியும்.
நடிகர் திலகம் வேறொரு உலகத்திற்குச் சென்று, பார்க்கும் எல்லோரையும் அந்த உலகிற்கு அழைத்துச் சென்றிருப்பார்! பாடல் முடிந்து, நனவுலகதிற்குச் சென்று மீண்டும், அவரது முகம் க்ளோசப்பில் காட்டப்படும் போது, அவர் முகத்தில் தெரியும் ஆயாசம் கலந்த அதிர்ச்சி நம்மையும் தொற்றியிருக்கும்!!
அந்தப் பாடல் முடியும் போது இருக்கும் shot - சௌகாரின் பிடியில் freeze -ஆகி நிற்கும் காட்சி - ஆங்கில நாடகங்களில் பாலே போன்ற நடன நாடகங்களின் inspiration தெரியும்! இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், பாடலும் (இந்தப் பாடலையும் சேர்த்து!), அரங்க அமைப்பும், நடை/உடை/பாவனைகளும், களமும், கலைஞர்களின் உழைப்பும் (நடிகர் திலகம் துவங்கி), ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருக்கும்.
கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னரே, "ahead of times" என்று கூறிய, இன்றும், படத்தைப் பார்ப்பவர்கள் (இன்றைய தலைமுறையினர் உட்பட) வாய் பிளந்து அதிசயிக்கும் இந்தப் படத்தை, almost ghost direct செய்தது நடிகர் திலகமே தான் என்று கூறுவார்கள். பின் எப்படி, அவருக்கு சினிமா என்ற ஊடகத்தில், பிற துறைகள் அந்த அளவிற்குத் தெரியாது என்று சொல்லப் போயிற்று?!!!!
தொடரும்,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Bookmarks