அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

ஆயிரம் பதிவுகள் கடந்த உங்களுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள். தாங்கள் மேலும் ஆயிரக் கணக்கில் பதிவுகள் இட்டு எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திட வேண்டுகிறேன்!

தங்கள் "வீரபாண்டிய கட்டபொம்மன்" பதிவு மிகவும் நுணுக்கமாக உள்ளது.

எண்பதுகளின் இறுதியில், இப்படம் சென்னையில் பெரிய அளவில் மறு வெளியீடு கண்டு "ஸ்டார்" தியேட்டரில் ஐம்பது நாட்களைக் கடந்து பின் சென்னை முழுவதும் (நாட்கள் நினைவில் இல்லை) ஓடிக் கொண்டே இருந்தது. அப்போது தான் கட்டபொம்மனை முதலில் பார்த்தேன் - அதுவும் என் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் அத்தை மகன் ஆகியோருடன் - கமலா தியேட்டரில். அங்கு மட்டும் கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை ஓடியது.

எனக்குத் தெரிந்து, இந்த ஒரு படத்திற்கு படம் நெடுகிலும் அரங்கத்தில் கிடைத்த வரவேற்பும், கரவொலியும் "தெய்வ மகன்" தவிர வேறு எந்தப் படத்திற்கும் தற்போது மறு வெளியீடு கண்ட "கர்ணன்" வரை கிட்டியதில்லை. தெய்வ மகன் கூட அத்தனை தரப்பட்ட பொது மக்கள் வரவேற்பைப் பெற்றதா என்று சொல்ல முடியாது. ஆனால், "கட்டபொம்மன்" அனுபவம் வேறு மாதிரியானது. படம் நெடுகிலும், பல சிறிய காட்சிகளுக்குக் கூட ஒட்டு மொத்த அரங்கும் அதிர்ந்தது என்பது தான் உண்மை - ஒரு கட்டத்தில், ஒரு தாய் (எஸ்.என். பார்வதி?) அவரது மகனை போரில் இழந்து அவரைப் பார்க்க வரும் போது நடிகர் திலகம் காட்டும் ரியாக்ஷன், "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடலின் முடிவில், ஜெமினி/பத்மினிக்கு மேல் தொங்கும் மலைப்பாம்பை சுட்டிக் காட்டி அவர்களைத் தப்புவிக்க வைத்து சொல்லும் ஒரு வித ஏளனம் கலந்த வசனம் மற்றும் நடிப்பு, இப்படி பல இடங்களின் அரங்கம் ஆர்ப்பரித்தது.

படம் துவங்கி, முடியும் வரை, ஒரு நடிகன் அவனது நடிப்பினால் மட்டுமே ஒட்டு மொத்த அரங்கத்தையும் ஒரு வித அதீத ஜுரம் மற்றும் ரத்தக் கொதிப்பு நிலையில் வைத்திருந்ததை அன்று தான் முதலில் கண்டேன்.

படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த ஒவ்வொருவரும் அந்த ஜுரத்தோடேயே வெளியில் வந்தனர். அந்த நேரத்தில், யாராவது ஒருவர் ஒரு வெள்ளைக் காரரை வெளியில் பார்த்திருந்தால், அவரை அங்கேயே கொன்றிருப்பர். அந்த அளவிற்கு தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திய ஒரு நடிப்பை இவ்வுலகம் கண்டிருக்குமா?

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி