Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தெய்வ மகன் - முரளி சாரின் பதிவு மீண்டும் இங்கே

    பாகம் 1 நாள் 01.04.2008

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post289528

    தெய்வ மகன் - என் மனதிற்கும் சிந்தைக்கும் மிக நெருக்கமான படம். மீண்டும் பார்த்த போது தோன்றிய சில எண்ணங்களை பதிகிறேன்.

    சங்கர் - பணக்கார தந்தை. இயற்கையாகவே அமைந்த விகாரமான முக அமைப்பினால் தனக்கு நேர்ந்த அவமானங்கள்,புறக்கணிப்புகள் தன் மகனுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் ஒரு முடிவினால் கடைசிவரை மன துன்பம் அனுபவிக்கும் ஒரு மனிதன்.

    முதல் காட்சி. முகம் தெரியவில்லை என்றாலும் கூட அந்த துடிப்பு, சந்தோஷம், துள்ளல் எல்லாம் தெரியும் அந்த நடையிலேயே. டாக்டரிடம் பேசும் போது உள்ள மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பு, அது ஏமாற்றமாக மாறும்போது தளர்ந்து போகும் அந்த நடை. இரண்டு நடைக்கும் எவ்வளவு வித்யாசம்? குழந்தையை கொல்ல மாட்டேன் என்று மறுக்கும் டாக்டரிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்வது.[ என்னை உண்மையிலே நேசிக்கறவங்க என் உயிர் நண்பனான நீயும் என் மனைவியும்தான். மத்தவங்க எல்லாம் என் பணத்துக்காக என்னை மதிக்கிறாங்க.]

    நண்பன் தான் கொடுத்த பணத்தை தூக்கி எறிந்து விட்டு நட்பு முறிந்து விட்டது என சொன்னவுடன் மௌனமாக வெளியேறுவது, இப்படி முதல் காட்சியில் இளமையாக இருக்கும் போது இரு வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த பாத்திரம் 25 வருடங்களுக்கு பின் ஒரு கம்பீரமான ஆளுமையை வெளிப்படுத்தும்போது நடிகர் திலகம் அதை அழகாக கையாள்வர்.

    தனக்கு முன்னால் வளைந்து நெளிந்து நின்று பணம் கேட்கும் மகனிடம் (Just a Lakh and Fifty thousand) கடுமை காட்ட முடியாமல் வரும் சிரிப்பை அடக்கி கொண்டு அவர் காட்டும் expressions ஓஹோ! இதில் இன்னொன்றும் சுட்டி காண்பிக்கப்பட வேண்டியது. நடிப்புதானே என்று சும்மா கிறுக்காமல் செக்-ஐ எழுதுவார். எழுத்தி முடிக்கும் போது மகன் நாற்காலிக்கு பின் பக்கமாக சுற்றி வர அவனை சைடு-ல் திரும்பி பார்த்து விட்டு செக்-ஐ கிராஸ் செய்வார். மகன் பக்கவாட்டில் வருவதும் அவர் திரும்பி பார்ப்பதும் ஒரே டைம்-ல் நடைபெறும். பார்ப்பவர்களுக்கு இரண்டும் வேறு வேறு ஆட்கள் என்றே தோன்றும். மிக சரியாக அந்த timing-ஐ அவரால் மட்டுமே செய்ய முடியும்.

    அந்த நீளமான படிக்கட்டில் அந்த தாளக்கட்டு மாறாமல் அவர் இறங்கி வரும் அழகு. மனைவி கோவிலில் பார்த்தது தன் மூத்த மகனாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு டாக்டர் வீட்டிற்கு வருவார். டாக்டர், நண்பனாக பழகாமல் விலகி நின்று பேச, வாய் தவறி ஒருமையில் அழைத்து விட்டு உடனே "Sorry, Dr. ராஜு" என்று style-aga கூறுவது. இறுக்கம் தளர்ந்து விடை பெறும்போது மாடியிலிருந்து ஒலிக்கும் சிதார் இசையை கேட்டு விட்டு அவர் காட்டும் அந்த தவிப்பு, எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவிப்பது, அதை புரிந்து கொண்டு டாக்டர் " உன் மகனை பார்க்கணுமா?" என்று கேட்க முகமெல்லாம் பூரிப்பாக "ஆமாம்" என்று சொல்லிவிட்டு அதை கேட்க தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை உணர்ந்தவராக பேசாமல் வெளியேறுவது. திலக முத்திரைகள்.

    இளைய மகனை காதலிக்கும் பெண்ணிடம் கடுமையாக பேசுவது போல பாவனை செய்வது, இளைய மகனின் கல்யாணத்தன்று தன் மனைவிக்கு ஒரு விலை மதிப்பில்லாத பரிசு கொடுக்க போவதாக சொல்வது, இதெல்லாம் அவருக்கு child's play.சுருக்கமாக ஒரு கம்பீர performance.

    கண்ணன் மற்றும் விஜய் பற்றி -விரைவில்
    பாகம் 2
    நாள் 05.04.2008

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post290877

    தெய்வ மகன் - கண்ணன்

    கண்ணன் - பரிதாபத்திற்கு உரிய அதே சமயம் நம் மனதில் ஒரு பிடிப்பு அந்த பாத்திரத்தின் மேல் ஏற்படுத்தக்கூடிய திரைக்கதை அமைப்பு. சிறுவனாக இருக்கும் போதும் ஆரம்பிக்கும் அந்த கோபமும் ஆவேசமும் கடைசி வரை குறையாது வெளிப்படும். தான் அனாதை இல்லை என்று தெரிந்ததும் பாபா (நாகையா) கொடுத்த டைரி-ஐ புரட்டி பார்க்கும் ஆவேசம், மருத்துவமனையில் டாக்டர்-ஐ மிரட்டும் கோபம், தன் தாய் தந்தையரை தெரிந்து கொள்ள எந்த காரியத்தையும் செய்ய தயாராக இருப்பது இவை அந்த கதாபாத்திரத்தை வலுவாக நிலை நிறுத்தும் களங்கள். அவற்றை நடிகர் திலகம் தன் பாணியில் மெருகேற்றியிருப்பார்.

    படத்தின் தலைப்பிற்கேற்ப கதாநாயகன் கண்ணன்தான். முதல் இரண்டு காட்சிகளில் சாதாரணமாக வரும் அவர், அனாதை இல்லத்திலிருந்து வெளியேறி கடைத்தெருவில் திருடனிடம் சண்டை இடும் காட்சியிலிருந்து அந்த Body Language அப்படியே மாறும். டாக்டர் வீட்டிற்கு வரும் அவரை பார்த்ததும் அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் டாக்டர், அவரை தவிர்க்க முயற்சிக்க,கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து ஒரு கட்டத்தில் டாக்டரின் கழுத்தை நெரிப்பார். [என் தாய் தந்தையார் யார்னு தெரிஞ்சுக்க நான் எதையும் செய்ய தயங்க மாட்டேன்]. அதற்கு முன் தான் அந்த காலை உதைத்து, முடிகற்றை முன்னால் வந்து விழ,ஆட்காட்டி விரலை சுட்டி " டாக்டர்" என்று கத்துவது.[ தியேட்டர் அலறும் என்பதை சொல்லவே வேண்டாம்].

    பிறகு டாக்டர் வீட்டில் அடைக்கலம். அங்கே மாடியில் எப்போதும் சிதாரும் இசையுமாக இருப்பவர் ஒரு நாள் இரவு சொல்லாமல் கொள்ளாமல் தன் தாய் தந்தையரை பார்க்க வீட்டிற்கு போகிறார்.

    முதலில் தாய். படுத்திருக்கும் தாயின் கால்களுக்கு பூக்களை அர்ச்சனை செய்து விட்டு கண்ணீர் துளியை காணிக்கையாய் சிந்தும்போது, தாயன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனை கண் முன்னே நிறுத்துவார்.

    அடுத்து தம்பி அறை. அதில் நுழைபவர் அங்கே மாட்டியிருக்கும் இளம் பெண்ணின் கவர்ச்சி படத்தை பார்த்து விட்டு ஒரு வெட்கம் கலந்த ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார் (இருட்டாக தெரியும் முகத்தில் அந்த இரண்டு கண்கள் மட்டும் வெளிச்சம் உமிழும்). அடுத்து தம்பியின் சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தின் அழகை ரசிப்பார்,( மாசு மருவில்லாத கன்னத்தை தன் விரல்களால் தடவும் அழகு).

    அடுத்து டேபிளின் மேல் இருக்கும் போட்டோ-வை எடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் அணிந்திருக்கும் முழுக்கை சட்டையின் வலது மணிக்கட்டு பாகத்தை வைத்து துடைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, சூப்பர். தீடீரென்று தம்பி வந்து விட தன்னை பார்த்து திருடன் என்று சத்தம் போட அவனை அணைத்துக்கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு, சத்தம் கேட்டு அனைவரும் வந்து விட தாய்,தந்தை மற்றும் தம்பியை ஒரு சேர பார்க்கும் அந்த நேரம், அந்த முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.

    அதை டாக்டரிடம் போய் பாட்டாக வெளிப்படுத்தும் விதம். பாடலின் நடுவே வேக வேகமாக படி ஏறிவிட்டு அதே வேகத்தில் இறங்குவார். ஆரவாரம் அலை மோதும் (இதையே 10 வருடம் கழித்து திரிசூலத்திலும் செய்திருப்பார்). ஒவ்வொருவரை பற்றியும் பாடலில் சொல்லும்போது அந்த முகத்தில் வந்து போகும் உணர்ச்சிகள். கை அசைப்புகள். "விதி எனு நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது" எனும்போது அந்த இடது கை மட்டுமே சைகை காட்டும். "தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே" என்ற வரியின்போது காமிரா லோ ஆங்கிளிலிருந்து அவரை பார்க்க இரண்டு கைகளையுமே தலைக்கு மேல் தூக்கி உள்ளங்கைகள் தரையை பார்க்க ஒரு போஸ் கொடுப்பார். கேட்க வேண்டுமா கைதட்டலுக்கு.

    அடுத்து தாயை கோவிலில் வைத்து பார்க்கும் காட்சி. தூணுக்கு பின்னால் மறைந்து நின்று பார்க்கும் அந்த கண்கள் அதில் தெரியும் அந்த உணர்ச்சிகள் [ " என் வயிறெல்லாம் என்னவோ செய்யுதே" என்று பண்டரிபாய் சொல்லும் வசனம் படம் பார்க்கும் எல்லோருக்குமே பொருந்தும்).

    இதற்கு நடுவில் டாக்டரின் பெண் தன் இசையால் ஈர்க்கப்பட்டு மாடிக்கு வந்து பேச அதுவரை வாழ்க்கையில் அனுபவித்திராத ஒரு உணர்வு - ஒரு பெண்ணின் சிநேகம். அது மனதுக்குள் திறக்கும் ஜன்னல். தன் முகத்தை எங்கே பார்த்துவிடுவாளோ என்று மறைத்து கொண்டு, அவள் சென்றவுடன் ஓடி சென்று அவள் நின்ற அந்த பால்கனி கைப்பிடியை பிடித்து முழங்காலிட்டு அவள் சென்ற திசையையே பார்த்து சிரிப்பாரே, கிளாஸ்.

    தந்தை கொடுத்த பிளாங் செக்கை டாக்டர் கொண்டு கொடுக்கும் காட்சியிலும் அந்த பாத்திரத்தின் சிறப்பு தன்மை வெளிப்படும். எனக்கு தெரியாம வெளியே போறே என்று சொல்லும் டாக்டரிடம் " இந்த கிளியை யாரும் பிடிக்கவும் முடியாது! புரிஞ்சிக்கவும் முடியாது" என்பார். அதற்கு டாக்டர் " பிடிக்க முடியாது-னு சொல்லு ஒத்துகிறேன். ஆனால் புரிஞ்சுக்க முடியாது-னு சொல்லாதே! உங்கப்பா உன்னை புரிஞ்சிக்கிட்டார்" என்கிறபோது " என்ன சொல்றீங்க டாக்டர்"-னு கேட்டு விட்டு உடனே அதற்கான பதிலையும் சொல்வார்." கோவிலிலே எங்கம்மாவை பார்த்தேன். எதையுமே கணக்கு போட்டு பார்க்கிற எங்கப்பவோட வியாபார புத்தி இதையும் முடிச்சு போட்டு கண்டு பிடிச்சிருக்கும்" என்பார்.

    டாக்டர் " என்ன கண்ணா இன்னிக்கு நல்ல டிரஸ் போட்டிருக்கே"
    கண்ணன் " உடல் தான் வெள்ளையா இல்லை. உடையாவது வெள்ளையாக இருக்கட்டுமே-னு தான்" .

    அழகா இல்லாத ஆண்களை பெண்கள் விரும்புவார்களா என்று கேட்கும் கண்ணனிடம் டாக்டர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒதேல்லோ நாடகத்தை பற்றி சொல்ல, அவர் கையை பற்றி கொண்டிருக்கும் கண்ணன் இரும்பு பிடியாய் இறுக்க, வலி தாங்காமல் கையை உருவிக்கொண்டு " ஆமாம், இதெல்லாம் நீ ஏன் கேட்கிறே?" என்று வினவ, கண்ணன் " மண்ணை தோண்டி தங்கம் இருக்கா வைரம் இருக்கா-னு தேடற மாதிரி இதயங்களை தோண்டி அன்பு இருக்கா பாசம் இருக்கா-னு பார்க்க தோணுது டாக்டர்" என்று சொல்லிவிட்டு சிரிக்கும் அந்த சிரிப்பு!

    தந்தையை போலவே வேறு ஒரு குணாதிசியமும் காட்டுவார். தன்னை சந்திக்க வரும் சங்கரிடம் "பையன்-னு தெரிஞ்சுமா சுட்டிங்க" ? என டாக்டர் கேட்க இல்லை என்பதை ஒரு முக சுளிவிலே காட்டுவார் தந்தை. அதே முகபாவத்தை தந்தையை பார்க்க வரும் கண்ணனும் வெளிப்படுத்துவார். முதல் குழந்தை ஆண் குழந்தைனா பெத்தவங்க ரொம்ப அன்பு செலுத்துவாங்களாமே என்று மகன் கேட்க, உண்மைதான் என்று தந்தை சொல்ல முன்பு தந்தை காண்பித்த அதே முகபாவத்தை காண்பித்து "இல்லை பொய்" என்பார்.

    ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த ஸ்டைல், அந்த முக பாவம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. சுருக்கமாக சொன்னால் ஒரு அசாதாரண நடிப்பு, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

    அடுத்து விஜய்
    பாகம் 3
    நாள் 07.04.2008

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post291219

    விஜய் என்ற விஜயன் - தெய்வ மகன்

    இரண்டாவது மகன். அவனது தாயை பொருத்த வரை ஒரே மகன். மிக மிக செல்லமாக வளர்க்கப்பட்ட மகன். பொதுவாகவே செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பணக்கார வீட்டு பையன் போல் இல்லாமல்(ராஜேஷ் இங்கே குறிப்பிட்டது போல்) பயந்த சுபாவம் கொண்ட அம்மா செல்லமாக வளர்ந்த ஒரு மேல்தட்டு பிள்ளை.

    கதையை பொறுத்தவரை சங்கர் மற்றும் கண்ணன் பாத்திரங்கள் முக தழும்புடன் காட்சியளிக்க, அதற்கு நேர்மாறாக பால் வடியும் முகத்தோடு அழகாக தோன்றுபவர். இந்த பாத்திரத்தை நடிகர் திலகம் வேறு மாதிரி வித்யாசப்படுத்தியிருப்பார். அதாவது ஒரு பெண்மை கலந்த நளினத்தை இந்த பாத்திரத்தில் நாம் பார்க்கலாம். இதன் Body Language வேறுப்பட்டதாக அமைந்திருக்கும். நகத்தை கடிப்பது, நடையில் ஒரு பெண்மை [தன் ஒரிஜினல் ராஜ நடையில் ஒரு சின்ன மாற்றம் செய்திருப்பார். சாரதா இங்கே சொன்னது போல இடுப்பை வளைத்து ஒரு நடை], ஆங்கிலம் கலந்த பேச்சு தமிழ் என்று விரியும்.

    இந்த பாத்திரத்தை பொறுத்தவரை லுக் மட்டுமல்ல, படத்திற்கு தேவையான காதல் மற்றும் இளமை காட்சிகளுக்கும் இவர்தான் பொறுப்பு. கதையின் அடிநாதம் பெற்றோர் - மகன் பாசப்பிணைப்பு. அந்த மெயின் ரூட்டில் வராமல் ஆனால் அந்த கதையோடு பின்னி பிணைந்தவாறே பார்ப்பவர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுவார். இவரை வைத்துதான் பட கிளைமாக்ஸ் நடக்கும்.

    நான் ஏற்கனவே இந்த திரியில் பலமுறை சொன்னது போல், இந்த படம் வெளி வந்த காலக்கட்டத்தில் (1969) நடிகர் திலகத்தின் படங்களும் ஒரு Entertainment Based-ஆக மாறி கொண்டிருந்த காலம். ஆகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்ய வேண்டும். அதற்கும் இந்த பாத்திரம் பயன்பட்டது.

    அவர் அறிமுகமாகும் அந்த தூண்டில் காட்சியிலிருந்து அமர்க்களம் ஆரம்பமாகிவிடும். முதலில் கவனிக்க வைப்பது அந்த பேச்சு. நுனி நாக்கு ஆங்கிலம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான வார்த்தைகளுக்கு கூட ஆங்கிலத்தையே பயன்படுத்துவார். அவர் எந்த அளவிற்கு கேரக்டர் study செய்வார் என்பதற்கு இந்த ரோல் ஒரு உதாரணம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஒரு சில காட்சிகளை சொல்லலாம். சாதரணமாக வீட்டில் ஒரு திருடனை பார்த்தவுடன் கூட " Thief!Thief" என்றுதான் சொல்லுவார். நம்பியாரிடம் "ஏன்டா, என்னை threaten பண்ணறே? " என்பது, "Thirsty-யாக இருக்கு. ஐஸ் வாட்டர் கொடுங்கடா" என்பது. அம்மாவிடம் (அப்பா இருப்பது தெரியாமல்) "டாடி ஒரு ஜப்பான் பொம்மை. கீ கொடுத்தால் ஆடும்" என்பது, முதலில் JJ-விடம் நடிக்கும் போது ஒவ்வொரு பொய்யிலும் மாட்டிகொள்வது.

    தந்தையிடம் நேருக்கு நேர் நின்று பேச அச்சப்படும் கேரக்டர். வளைந்து நெளிந்து அம்மாவின் பின்னால் ஒளிந்து பேசுவது ரசனையான காட்சி. பிஸினஸ் பண்ண பணம் வேண்டும் என்று கேட்பதில் கூட ஒரு ஸ்டைல் (Just a Lakh and Fifty thousand). ஹோட்டல் என்பதைக்கூட ஹோடேல் என்னும் ஆங்கில பாணி உச்சரிப்பு. ஹோட்டலில் நடந்த திருட்டை சரி செய்வதற்காக அப்பாவிடம் பணம் கேட்க வரும் காட்சி. அதில் உணர்வுகளை எப்படி நிமிட நேரத்தில் மாற்றி காட்டுவார். பணம் கேட்கும்போது தயக்கம், தந்தை கோபப்படும்போது பின் வாங்கும் பயம், பிளாங் செக்கை பார்த்தவுடன் உடன் சந்தோஷம், அதற்கு நன்றியாக ஒரு Flying Kiss என்று கலக்கியிருப்பார். தன் ஹோட்டலில் டப்பாங்குத்து ஆடும் JJ-வை அவர் பார்க்கும் பார்வை, பளார் என்று அறைந்துவிட்டு அறைக்கு கூடிக்கொண்டு போய் சத்தம் போடும்போது ஒரு காதலின் possessiveness வெளிப்படும். அந்த காட்சியில் மட்டுமல்ல JJ பார்க்-இல் கண்ணன் பற்றி பேசும் போது வரும் கோபத்திலும் அது தெரியும், ("எனக்கு முன்னாடியே யாரோ ஒருத்தன் புல் புல் தாரா நல்லா வாசிப்பான்னு சொல்லிட்ருக்கே").

    மற்ற இரண்டு கதாபாத்திரங்களும் உணர்வு பூர்வமாக நம்மை கலங்க வைப்பார்கள் என்றால் விஜய் நம்மை மயங்க வைப்பார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •