டியர் ராகவேந்தர் சார் & டியர் வாசுதேவன் சார்,

இளையதலைமுறையில் இடம்பெற்ற 'ஒரு அறை கொடுத்தால் தெரியும்' பாடலைப்பற்றிய காணொளியும் அதற்கான விளக்கப்பதிவுகளும் மிக அருமை. மிகப்பெரும்பாலோருக்குத் தெரியாத இப்படம் மற்றும் பாடல் பற்றி எழுதியிருப்பதன்மூலம் நிழலில் மறைந்திருப்பவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தங்கள் தொடர் முயற்சியில் இன்னுமொரு வெற்றி.

இளைய தலைமுறை மிக அருமையானதோர் படம். மாணவர் சமுதாயத்துக்கு தேவையான நல்ல பல கருத்துக்களைச்சொன்ன படம். அதற்காக டாக்குமெண்டரி படம் போலில்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்த படம். ஏனோ தெரியவில்லை, இந்தப்படமும் சரி அதில் இடம்பெற்றிருந்த அருமையான பாடல்களும் சரி, மக்கள் மனதில் சென்றடையவில்லை. அத்தனையும் முத்து முத்தான நல்ல பாடல்கள்.......
'இளைய தலைமுறை இனிய தலைமுறை'
'சிங்காரத்தேர் கூட திரைமூடிப் போகும்' (முந்தைய வெர்ஷன்: 'பொம்பளையா லட்சணமா'. இந்த வரிகளின்போது நமது சக ஹப்பர் ஒருவர் நினைவுக்கு வருகிறார்).
'யார் என்னசொன்னார், ஏனிந்த கோபம்'
'ஒரு அறை கொடுத்தால் தெரியும்'
'ஒருநாள் இரவு தனிமையில் இருந்தேன்'.

இப்படம் மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நான்காவது அறிவிப்பில்தான் வெளியானது. இத்தனைக்கும் தீபம் வெளியாகி போதிய இடைவெளி விட்டுத்தான் இப்படம் வந்தது. இளைய தலைமுறைக்கும் போதுமான இடைவெளி விட்டுத்தான் நாம் பிறந்த மண் ரிலீசானது. படமும் நல்ல தரமான படமாக இருந்தது. இருந்தும் ரசிகர்களைத்தவிர பொதுமக்கள் அவ்வளவாகக் கொண்டாடவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம். அப்போது வேறெதுவும் புதிய படங்கள் இல்லாததால் ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலைக்காட்சிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்படி ஆறு முறை பார்த்ததில் படம் எனக்கு அத்துப்படியாயிற்று. நடிகர்திலகம் வார்டனாக இருக்கும் ஹாஸ்டல் காட்சிகள் ரொம்பவே சுவாரஸ்யம். அதிலும் மெஸ் இன்சார்ஜ் நாயராக வரும் நாகேஷும் அவரது அசிஸ்டன்ட் பையனும் அடிக்கும் தமாஷ் ஒரு புதிய வகை. எமர்ஜென்ஸி காலத்தில் சென்சார் செய்யப்பட்டதால் சண்டைக்காட்சிகள் கொஞ்சம் அடிபட்டிருக்கும். ஒரு பக்கம் வாசுவின் வில்லத்தனம் , இன்னொருபக்கம் ஸ்ரீகாந்தின் வில்லத்தனம் நன்றாக இருக்கும்.

படத்தின் டைட்டிலில் இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு என்றுதான் போடுவார்கள். கதை வசனம் மல்லியம் ராஜகோபால். இதுவரை பார்க்காதவர்கள் இளைய தலைமுறையை கண்டிப்பாக பார்க்க வேண்டும்....