https://www.facebook.com/viji.connect.5?fref=ts
Viji Connect
8 hours ago · Edited
#மறக்க_இயலா_கானங்கள் 73 : " ஆறும் அதும் ஆழம் இல்லே "

கடந்த சனிக்கிழமை மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் "சங்கீத திருநாள் " கான்செர்ட் சூடு பறக்க நடந்து கொண்டிருந்த நேரம், ஆரம்பம் முதல் குதூகலமான பாடல்களே சென்று கொண்டிருக்கிறது ... வித விதமான துள்ளல் பாடல்களே இருந்த நேரம் எல்லோரும் மேடையையே வெறித்து நோக்கி கொண்டிருக்கிறோம், இசையே உருவான கடவுளாக அந்த பிரமாண்ட மேடையில் அழகனாக இளையராஜா நின்று கொண்டிருக்கிறார், அவ்வளவு அழகான மேடையே ராஜா நிற்கும்போது இன்னமும் மிக அழகாக தோன்றுகிறது , Violin Prabhakar பிரபாகர் அண்ணாவும் , இளையராஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள், அவர்களுக்குள் சில, சில சமிக்ஞைகளுக்கு பிறகு இசை குழுவினருக்கு பார்வை பரிமாற்றங்கள் நிகழ்கிறது , எல்லோரும் தங்களை டியூன் செய்து கொள்கிறார்கள், எல்லோரும் ரெடி ஆ!! என்பது போல பிரபாகர் அண்ணா பார்வையாலேயே கேட்கிறார், எல்லோரும் ஆமோதிக்க இசைக்குழுவின் குயில்கள் அனிதா Anitha Karthikeyan , பிரியதர்ஷினி Priyu Krishnan , ஸ்ரீவர்த்தினி , NSK ரம்யா Ramya, சுர்முகிSurmukhi Raman ஆகியோரை பார்க்கிறார் , இளையராஜாவையும் பார்க்கிறார், அடுத்து எந்த பாடல், என்ன பாட்டுக்கான ஆரம்பம் ?? என நாங்கள் எல்லோரும் வியக்கிறோம் .. குயில்களை நோக்கி அவர் மூன்று முறை கையசைக்க , அந்த நான்காவது முறை கை உயரும்போது கோரஸ் குயில்களின் குரல் அலை எழும்பிய அந்த வினாடி உடம்பெல்லாம் சிலிர்த்து போனது, மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் படியான இந்த ஹம்மிங் அடுத்த வினாடி அந்த குரல்கள் நேரடியாக புறப்பட்ட நெஞ்சின் அடி ஆழத்திற்கு சென்று அங்கு போய் விவரிக்க இயலாத துயரத்தின் முடிச்சை தேடுகிறது ...

நாயனம் போன்ற ஒரு வாத்தியத்தின் ஒரு முனையின் ஊதப்படும் காற்று அடுத்த முனை வழியாக வெளிவரும்போது கிளம்பும் ராகத்தில் அந்த ஓலம் அழுகிறது Jaychaa Singaram அண்ணன் வாசிக்கும் உறுமி மேளம் அதற்க்கு ஈடு கொடுக்கும்போது சொல்லொணா துயரம் நெஞ்சை பிளக்கிறது , இசைஞானி இளையராஜா பாட ஆரம்பிக்கிறார் ...

ஆறும் அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது ஐயா அந்த பொம்பளை மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு?
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ !!!

இந்த படத்தை பார்த்ததில்லை , இந்த பாட்டின் நோக்கத்தை கேட்டதில்லை, இப்பாட்டின் சூழ்நிலை தெரியவில்லை, ஆனாலும் பாடலின் இசையும் இசைஞானியின் குரலும், அந்த வரிகளை "நச்"சென்று கொண்டுபோய் நேரடியாக நம் நெஞ்சாங்கூட்டில் அடைக்கிறது , தன் கூடு தேடி எங்கெங்கோ அலைந்து நம் நெஞ்சாங்கூட்டில் அடைந்த அந்த ஊமைக்குயில் வெளிவர வழிதேடி நெஞ்சமெங்கும் ஜன்னல் தேடி ஓடி ஓடி சுவற்றில் மோதி கீழே விழுகிறது, வெளியேற வழி தெரியாமல் அந்த சோககானம் பாடும் பூஞ்சோலைக்குயிலின் ஓலத்தை இளையராஜாவை தவிர வேறு யாரால் கூட முடியும், இப்பாடலின் இசை அந்த தத்ரூபத்தை அவ்வளவு அழகாக காட்டுகிறது , அந்த வலியை, அந்த சோகத்தை, அந்த காதலின் உண்மையை, நம்மை ஏசி விட்டு போன அந்த பெண் குயிலின் புரியாத மனோபாவத்தை புரியாமல் புலம்பும் ஒரு ஆண்மகனின் குரல் இவ்வளவு நெகிழ்ச்சியாகவா இருக்கும்??!!!...

முதல் சரணம் ஆரம்பிக்கிறது,

"மாடி வீட்டு கன்னி பொண்ணு..
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு...
ஏழைக்கண்ணை ஏங்கவிட்டு
இன்னும் ஒன்னை தேடுதம்மா!!
கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு!!
சொந்தமெல்லாம் எங்கே போச்சு?
நேசம் அந்த பாசம் அது எல்லாம்
வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே!"

வரிகளில் ஏதும் பாசாங்கு இல்லை , பாமரனின் சோகத்தை அப்படியே வெளி கொண்டுவரும் வரிகளை எப்பேர்பட்ட பாடகர் பாடினாலும் இத்தனை எளிமையாகவோ, உணர்வுபூர்வமாகவோ கிராமிய மணம் கிடைக்காது, ஆனால் ராஜாவின் குரலில் இருக்கும் ஒரு வண்ணம் வேறு யாரின் குரலிலும் கிடைக்காத ஒரு அபூர்வம், ராஜாவின் குரலில் கேட்கும்போது அப்பாடலின் தரமும், அதன் முழு நோக்கமும், நிஜ உணர்வும் ஒரு படி மேலாகவே கொண்டு பொய் நம் நெஞ்சில் ராஜா சேர்க்கிறார், ராஜாவின் குரலுக்கு எந்த நடிகர் வாய் அசைத்தாலும் அது அந்த நடிகரே, கதாபாத்திரமே பாடுவது போல ஒரு உணர்வு தோணுவது இதனால்தான், இளையராஜாவின் குரலில் இருக்கும் அதிகப்படியான உணர்வு பிரவாகமே கடைக்கோடி பாமர ரசிகன் அக்குரலை தன் குரலாக நினைத்து, கேட்டு மருகித்துடிக்கிறார்கள்,

இரண்டாம் இடை இசை ஆரம்பிக்கிறது , மீண்டும் கோரஸ் தேவதைகளின் குரல், பெண்களை வைத்து, கோபமாக ஒரு ஆண்மகன் பாடும் பாடலின் ஆரம்பம் முதல் கடைசி வரை பெண்களின் குரலே கேட்கிறது, ஆனால் அப்பெண்களின் குரல் கேட்கும்போதெல்லாம் பெண்களை நினைத்தே கோபம் வருவது ஏனோ ? என்ன மாயமோ ? நன்றாக யோசித்துப்பாருங்கள்,
அதுதான் ராஜாவின் கம்போசிங் வித்தை !! .... இந்த ஹம்மிங் பாட இயலாத அளவுக்கு சிக்கலான ஒன்று , வாயை மூடிகொண்டே பாடவேண்டும் , நெஞ்சாங்குழிக்குள் இருந்து வெளிவரும் அந்த சத்தம் மட்டுமே இசையோடு கலந்த கேட்கவேண்டும், இந்த பெண்களின் கோரஸ் பாடல் முழுவதும் வாயையே திறக்காமல் பாடும்படியான நோட்ஸ் இது , வாயை திறக்காமல் இவ்வளவு பெரிய ஹம்மிங்கை உணர்வு பூர்வமாக பாடுவது மிக கஷ்டம், அன்று முதல் இன்று வரை ராஜாவின் கோரஸ் குயில்கள் கூட ஹம்மிங்கில் கூட ஒரு துளி சுருதி தப்பாமல் பயணிக்கிறார்கள் ... அவர்கள் எல்லோரும் தங்கள் முன்னே நின்று கொண்டு இருக்கும் ராஜா தங்கள் இசைப்பயணத்தை என்றாவது ஒரு நல்லபாடல் தந்து துவக்கி வைப்பார் என்ற ஆசையோடு .. இவர்கள் பாக்கியவான்கள் ..

ஒரு இசையமைப்பாளன் ஏதோ ஒரு வாத்தியத்தை வாசிக்கலாம், ஏதாவது ஓரிரு பாடல்களை பாடலாம், தனக்கு தெரிந்த பாணியில் இசையை தரலாம் , அவ்வளவுதான், ஆனால் இந்த இளையராஜா ஒரே வருடத்தில் ஐம்பது படங்களுக்கு இசை அமைக்கிறார், பாடல் வரிகளை எழுதுகிறார், கிடார் , பியானோ முதற்கொண்டு அத்தனை வாத்தியங்ளையும் வாசிக்கிறார், கிளாசிகல், வெஸ்டர்ன் முதற்கொண்டு எல்லாவிதமான இசைகளிலும் சகல விதமான இசைத்தளங்களிலும் நின்று ராஜ பாட்டை நிகழ்த்துகிறார், அதுவும் இல்லாமல் சோகம், தாபம், காமம், கிண்டல், அன்பு, காதல் என் எல்லாவிதமான பாடல்களிலும் பொருந்தும்படி பாடுகிறார் என்றால் என்ன மனிதர் இவர்??

இவரை எந்த மஞ்சமாக்கன் கேள்வி கேப்பது, இளையராஜாவின் காலம் முடிந்துவிட்டது என எவன் சொன்னது ?
முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு இவர் இசை அமைத்த இந்தப்பாடலை கடந்த சனிக்கிழமை பாடும்போது தமுக்கம் மைதானமே நெஞ்சடைத்து போனது , கேட்க்கும் எல்லோரும் தவிக்கிறார்கள், அதுவரை குதூகல ஓலமிட்டு கொண்டிருந்த ரசிகன் மயான அமைதியில் சுண்டி போகிறான் , அவரவர் நெஞ்சில் முட்டிக்கொண்டு இருக்கும் கடந்தகால சோகங்கள் வெளிவர துடிக்க அவன் கண்ணில் நீர்த்திவலைகளோடு மேடையை பார்க்கிறான் , அப்பேர்பட்ட அழகான மேடை மறைந்து இளையராஜாவும் கோரஸ் தேவதைகளும் மட்டும் தோன்றுகிறார்கள்,

மனிதர்கள் எல்லோரும் அடக்கி வைத்திருக்கும் சோகத்தை யாரிடமாவது சொல்ல துடிக்கிறார்கள், ராஜாவின் இசை மூலமாக எல்லோரும் அந்த சோகத்தை முகம் தெரியா ஒளியிடம், காற்றிடம் தம் சோகத்தை பகிரிந்து கொள்கிறார்கள், தங்கள் சோகத்திற்கு வார்த்தையிட்டு சொல்ல தெரியாதவர்கள் எல்லோரும் ராஜாவின் குரலோடு பயணப்படுகிறார்கள், எல்லோரையும் தன சங்கீத பயணத்தில் இணைத்து கொள்ளும் இளையராஜா அந்த பயணத்தின் முடிவில் அவர்களின் சோகத்தை மட்டும் பிய்த்து எடுத்துக்கொண்டு அவர்களை ஆசுவாசபடுத்திவிட்டு அடுத்த பாடலுக்கு போய்விடுகிறார் ..

ஆண்கள் அடக்க இயலாத போது தங்கள் உற்ற நண்பர்களிடம் சொல்கிறார்கள், நெஞ்சம் புலம்புகிறது, ஒரு ஆணின் புலம்பல் இப்படிதான் இருக்கும் நானும் இப்படிதான் புலம்பியிருப்பேன்... என்றெல்லாம் மனசு கிடந்து தவிக்க முதல் இடையிசை ஆரம்பிக்கிறது , Napoleon Selvaraj அண்ணன் தொண்டையிலிருந்து கிளம்பும் காற்று அந்த புல்லாங்குழலுக்குள் சென்று வரும்போது எப்படி இத்தனை அவலமாக சோகத்தை புலம்புகிறது , இத்தனை நேர்த்தியாக ஒரு காற்று வாத்தியத்தில் கூட சோகத்தை தத்ரூபமாக வரும்படி நோட்ஸ் எழுத எவரால் இயலும் , ராஜாவை அன்றி .. ஆகையால்தான் ராஜா இசையின் தெய்வம் ஆகவே பார்க்கப்படுகிறார் , ஆனால் இப்போது இருக்கும் இசையமைப்பாளர் என்ற போர்வையில் இருக்கும் சிலுவண்டுகள் பாடல்களை கம்ப்யூட்டர் உதவியோடு பாடுகிறார்கள், அவர்கள் என்ன கத்தினாலும் கம்ப்யூட்டர் தானாகவே ஸ்ருதியை சரி செய்து கொள்(ல்)கிறது , வெட்கமில்லாமல் தங்கள் பெயர்களை போட்டு பாடகார்களாகிக்கொள்கிறார்கள், தைரியம் இருந்தால் ஒரே ஒரு முறை ராஜாவின் மேடை ஏறி ஒரு பாடலை தைரியமாக பாடி காட்டுங்கள், அவர்களே உண்மையான பாடகர்கள்,

அந்த மட்டில் எங்கள் ராஜாவின் குழுவில் இருக்கும் Senthildass Singer , Sathya, உட்பட எல்லோரும் அத்தனை பெரும் புடம் போட்ட தங்கங்கள் .. கோரஸ் தேவதைகள் குரலை பேசப்போய், எங்கெங்கோ பொய் விட்டோம் பாருங்கள் ... ஆனால் மதுரை கான்செர்டில் பாடகர்களும், இசைஞானியின் இசை வாத்திய தளபதிகளும் Shruthi Raj ,Sadasudarsanam Sada Sasi அண்ணா, ஜெயிச்சா சிங்காரம் அண்ணா , உட்பட அத்தனை பெரும் பின்னி எடுத்தார்கள் , இது போல ஒரு நேர்த்தியான இசை குழு ராஜாவை தவிர வேறு யாருக்கும் இருக்கவே இயலாது .. இவர்கள் எல்லோரும் பணத்துக்காக , வாழ்வாதாரத்துகாக வாசிப்பவர்கள் இல்லை, ராஜாவிடம் மட்டுமே தங்கள் திறமைக்கான தீனி இருக்கும் என்று நம்பும் ஆயகலை வலுனர்கள் இவர்கள் ...

தண்ணியில கோலம் போடு,
ஆடிக்காத்தில் தீபம் ஏத்து,
ஆகாயத்தில் கோட்ட கட்டு,
அந்தரத்தில் தோட்டம் போடு,
ஆண்டவனை கூட்டி வந்து
அவனை அங்கே காவல் போடு,
அத்தனையும் ந*டக்கும் அய்யா
ஆச வெச்சா கிடைக்கும் அய்யா
ஆனா கிடைக்காது நீ ஆசை வெக்கும் மாது
அவ நெஞ்சம் யாவும் வஞ்சமே!

இதைவிட ஒரு காதலன் எப்படி தன்னை ஏமாற்றிவிட்டுபோன காதலியை நினைத்து புலம்ப இயலும் , 1986 இல் வெளிவந்த "முதல் வசந்தம்" படத்திற்காக இப்பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது , அன்று முதல் இப்பாடல் ஒலிக்காத நள்ளிரவு நேரங்களே இல்லை, எங்காவது காதலி விட்டுவிட்டுப்போன ஒரு அப்பாவி காளை ஒருவன் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து இப்பாடலைக்கேட்டு கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறான், இப்பாடல் ஒலிக்காத நள்ளிரவு பண்பலை வானொலிகளே இல்லை , இதே பாடல் உமா ரமணன் Uma Ramananஅவர்களும் பாடிய ஒரு வெர்சன் இருக்கிறது, மிக மிக அருமையாக உமாவும் பாடியிருப்பார், ஆனால் ராஜாவின் மந்திரக்குரலால் பாடப்பட்ட வெர்சன் மிக பிரபலமாக இருந்தாலும் உமா ரமணன் பாடிய வெர்சனை தனித்து கேட்டு ரசிப்போரும் உண்டு,...

மதுரையில் இளையராஜா இப்பாடல் பாடி முடித்த பின் ஒரிரு நொடிகள் கழித்து தான் எல்லோரும் நினைவுக்கு வநதனர், தமுக்கமே சிலிர்த்து எழுந்து ராஜாவுக்காக கை தட்டியபோது ராஜா உதட்டோரம் ஒரு கர்வமான புன்னைகையோடு நம்மை பார்த்தார் அந்த பார்வை கூறியது.. "ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா? நான் பாட இன்றொரு நாள் போதுமா"... என்று ...!!!

அன்றைய நிகழ்ச்சியின் முக்கியமான ஐந்து பாடல்களில் இப்பாடலும் இதற்கடுத்த பாடலும் மிகபெரும் வரவேற்பை பெற்றன, அது என்ன பாடல்?? யார் பாடினார்?? என்ன அனுபவங்கள் ??.. அப்பப்பா !!! மதுரையில் நடந்த ராஜாவின் இசை கச்சேரியை பற்றி நிறைய இன்னமும் நிறைய பேச ஆசை .. ஆனால் வரும் தமிழ் புத்தாண்டு அன்று ஏப்ரல் பதினான்காம் தேதி ராஜ் டீவீயில் பாருங்கள், ராஜ் டிவியில் "சித்திரை திருநாள் அன்று நம் ராஜாவின் சங்கீத திருநாள் " . வாழ்வின் சில நேரங்கள் மட்டுமே இது போன்ற மகா உற்சவங்கள் காண கிடைக்கும் , எங்கள் பாக்கியம் அருகில் இருந்தே பார்த்துவிட்டோம், நீங்கள் எல்லோரும் ராஜ் டிவியில் பாருங்கள் ...

அடுத்தநாள் நான் எழுதும் முழு நீள கட்டுரையாக "என் வாழ்வின் சங்கீதத்திருநாள் " என்று அந்த உற்சவத்தை பற்றி எழுதுகிறேன், நீங்களும் பார்த்து விட்டால் நான் சொல்வது உங்களின் இதயதிற்க்கே வந்து சேரும் ... ராஜ்டிவியில் மீண்டும் அந்த உற்சவத்தை காண நானும் ஆவலாக காத்திருக்கிறேன் .. கண்டு களிப்போம் ....