நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? எதிரியை நோக்கிய வாள் வீச்சும், கொஞ்சும் உன் தமிழ் பேச்சும், அந்த சிரிப்புக்கு இடையே ரசிகனின் மூச்சும் இருந்ததை, யார் தான் மறப்பார்? "நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணம், ஒருவர் மனதிலே ஒருவரடி,' அது, எம்.ஜி.ஆர்., என்ற மக்கள் தலைவனின் திருவடி.

பெயரில் கூட, அவருக்கு சுமை வேண்டாம் என்பதால் தான், எம்.ஜி.ராமச்சந்திரனை, எம்.ஜி.ஆர்., ஆக்கியது தமிழகம். "நமக்கென்று யார் வருவார்... கேட்பதை இங்கு யார் தருவார்...' என, தமிழகம் தனித்திருந்த போது, திரையில் பார்த்த நாயகன், தரையில் இறங்கி வந்தார், மக்கள் திலகமாக!நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ பார்க்கவில்லை, வெகுஜனம்;

எங்கள் வீட்டு பிள்ளையாக, கலங்கரை விளக்கமாக, ஒளி விளக்காக, எங்கள் தங்கமாக, ஆசை முகமாக, ஆனந்த ஜோதியாக, இவ்வளவு ஏன், "ஆயிரத்தில் ஒருவனாகவே...' பார்த்தது. தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். எம்.ஜி.ஆர்., என்ற சரித்திரத்தை படிக்க, புத்தகம் தேவையில்லை; அவர் நடித்த படங்களும், பாடல் வரிகளுமே போதும்."இதயம் எனது ஊராகும், இளமை எனது தேராகும், மான்கள் எனது உறவாகும், மானம் எனது உயிராகும், தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம், மலர்கள் முத்தம் தரலாம், அதில் மயக்கம் கூட வரலாம்,' இந்த வரிகள் போதும், அந்த மாமனிதனின் எண்ணங்களை அறிய. "சிரித்து வாழ்ந்த போதும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாத...' அந்த சிவப்பு மனிதனின் கரங்கள், கட்டி அணைத்த கருப்பு மனிதர்களின் தோள்கள், எத்தனை! மக்களை மதிக்க தெரிந்த அந்த குணம் தான், "நமக்கென்று ஒருவன்;

அவனே நமக்கு இறைவன்,' என, எம்.ஜி.ஆர்., நினைவுகளை நம் மனதிலே, நிலை நிறுத்துகிறது.. காலத்தை வென்ற மனிதனை, காலன் வென்றதும், தகர்ந்தது தமிழக மக்கள் மனம். திரைக் காட்சியிலும், அரசு ஆட்சியிலும் மக்களோடு மக்களாய் வாழ்ந்த, அந்த மூன்று எழுத்து நாயகனை, இன்றும் நம் மூச்சில் சுமக்கிறோம்.

"வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்?; சரித்திரம் சொல்கிறது, அதுவே எம்.ஜி.ஆர்.,"என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து, போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து, என்னை அடைய... வந்தாலும் வருவாண்டி...' என காத்திருக்கும் கூட்டம் தனி!
courtesy - dinamalar