சிரிப்பு பாதி அழுகை பாதி

அத்தியாயம் எட்டின் இறுதி….
*
அழுகை எனப்படுவது ஏதென்றால் நெஞ்சம்
பழுதான போதில் வரும்
*
நெஞ்சம் எப்போது பழுது வரும்… துன்பத்தில்.. மீளாத் துயரில்…அப்போது என்னாகும்..கண்ணில் ஒரு காலத்தில் வைகையில் வந்த வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வரும்…
*
ஆனால் அப்படி வெள்ளமாகப் பெருக்காமல் ஆச்சர்யத்தில், அன்பை உணர்ந்த தவிப்பில் வரும் கண்ணீர் எப்படி இருக்கும்..
*
மெல்லச் சிரிப்பு வரும் – பின்னே
மேவி விழிகளினிடை
துள்ளித் துளிர்த்திடுமே ஒரு
சின்னத் துளியாக
*

அப்படி ஒரு துளி சொட்டுகண்ணீர் விடும் ந.தியின் இந்தக் காட்சி எனக்கு வெகுவாகப் பிடிக்கும்..படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னினாலும் ந.தி பாதிச் சந்திர வேஷம் ஏற்றிருப்பார்..(கண்டுபிடிச்சுட்டீங்களா)

சிரிப்பு பாதி அழுகை பாதி 9

மிகப் பெரிய இடைவேளைக்கப்புறம் தொடர்கிறது..!

*
ந.தியின் மிகப் பிடித்த பாடலொன்றில் இருக்கும் வரி..
*
கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி எனக் கேட்டிருப்பார் கண்ணதாசனின் பாடல் வாயிலாக.. ஸோ இன்பம் தருவதும் காதல்..துன்பம் தருவதும் காதல் (எவ்ளோ பெரிய கண்டுபிடிப்புடா – மன்ச்சு ஷ்ஷ்)
*
உலகத்தில் இதைப்பற்றி பேசாதவர்கள் வெகு சொற்பமே
*
மின்னலது ஊடுருவி மென்நெஞ்சில் பாய்ந்ததுபோல்
கன்னமிடும் காதலும் காண்..
*
யெஸ்.. காதல்..விதைவிட்டுச் சாகுபடி செய்யவேண்டிய அவசியமே இல்லை.. படக்கென ஒரு பார்வை, ஒரு குறுஞ்சிரிப்பு, ஒரு உரையாடல், ஒரு – வாகான நுதலில் சுருண்டு பெருமையுடன் புன்சிரிக்கும் சிறு சுருள் முடி அதன் கீழ் குறுகுறு கண்கள் எனப் பார்க்கையில், ஒரு துளி கண்ணீர், ஒரு ஒயில் நடை, ஒரு வீரச் செயல் ஆணிற்கு, ஒரு கவிதை.. இன்னும்..என்னவிதத்தில் வரும் என்றும் சொல்ல முடியாது..
*
ந.தியின் இந்தப் படத்தில் அவர் முகம்மதிய இளைஞர்..சூழலால்.. மென்மை மனம்..அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நெஞ்சம்..
*
அவர் சைக்கிளின் மீதும் மனதின் மீதும் மோதும் ஹீரோயின் ஒரு கிறிஸ்தவப் பெண்.. அந்த இளைஞரின் அமைதிப் பார்வை, அலட்டலில்லாத போக்கு, நாகரீகமான பேச்சு, மற்றவருக்கு உதவும் தன்மை என எல்லாவித நல்ல குணங்களும் பிடித்துப் போய்விட..மே ஐ கமின் என்று கேட்டுக் கொள்ளாமலேயே அவளுக்கு அந்த இளைஞன் மேல் காதல் வந்து விடுகிறது..
*
அந்த இளைஞன் யெஸ் ரஹீம் தான்..அவருக்கும் காதல் வந்துவிடுகிறது.
*
மனதிலோ..

இரவேறுது நிலவேறுது இளமையினி விழித்தே
புறந்தள்ளிடும் சலனந்தனை பொறுக்காமலே அவளை
அறந்தானென அழகாய்ப்பல விதமாய்ச்சொலி அணைத்தே
கரம்பிடித்திடும் உணர்வைவெகு கனிவாய்த்தொடுத் திடுமே

என்றெல்லாம் எண்ணம் பலவாறாய்த் தோன்றினாலும்..முடியவில்லையே..
*
காரணம்..ஜாதி.. நான் முஸ்லிம்..அவள் கிருஸ்தவப் பெண்.. சமூகம் ஏற்குமா..தவிக்கிறார் ரஹீன்..
*
அவளும் அவரை நாடி வருகிறாள்..வெகு அழகாய் வெகு இயல்பாய்ப் வெகு இனிமையாய்ப் பாடலும் வருகிறது
*
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது..
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது..
*
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் பாஷையிலே பேதமில்லையே
*
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதிக் கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
வட்ட நிலா வான்வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை ப் பெண்மனதில் போர்க்களமாகும்
*
அவள் பாடுவதற்கு ம்ம் என்று ஆமோதிக்கிறார் ரஹீம்..பாடல் இறுதியில் இருவருக்குமே இது கையறு நிலை…சமூகம்..என்றெல்லாம் தோன்றிவிட..
*
ரஹீமின் விரித்த கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்குகிறது அந்தத் தாமரை.. ரஹீமின் ஆழ்ந்த கண்களுக்குள் ஒரு வித வெறுமை படர்ந்து உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு துளி கண்ணோரம் வந்து பொங்கி..அவள் தலையில் விழுகிறது..வாவ்..
*
கண்ணோரம் ஈரமின்று காயலாச்சே
..கன்னியவள் எண்ணமதும் தெரிய லாச்சே
வண்ணமகள் சொல்லிவிட்டாள் நெஞ்சத் தீயை
..வாய்த்திடுமா அவள்கரத்தைப் பற்றும் நேரம்
பெண்ணவளே சொன்னபின்னும் தவிக்கின் றேனே
..பேதமையா பின்விளைவா என்றே உள்ளம்
எண்ணியெண்ணிப் புலம்புவதை எங்கே சொல்ல
..ஏந்திழைக்கு எப்படித்தான் சொல்வேன் மெல்ல
*

ம்ம் ரஹீமின் உள்ளத்தில் புயல் அடிக்கிறது..

..*
காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
*

ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..

*

எனில் இத்துடன் இந்தக் கட்டுரைத் தொடர் (?) ஐ முடிக்கிறேன்..
*

அடுத்து புதியதாக எழுதி வருவேன் என்று பயமுறுத்தி விடைபெறும்
*

உங்கள்
சி.க