-
20th August 2014, 08:55 AM
#10
Senior Member
Diamond Hubber
வசிகரிக்கும் நடை ராஜாராம்! தொடர்ந்து எழுதுங்க ..
நாடோடித் தென்றல் படத்தை நானும் எனது பள்ளி நண்பன் ஒருவனும் மயிலாடுதுறை கோமதி தியேட்டரில் கண்டு களித்தோம். பனிரெண்டாம் வகுப்பு முடிந்து நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்களுக்காக மயிலாடுதுறைக்கு வந்து சென்று கொண்டிருந்த காலக் கட்டம். இளையராஜா- பாரதிராஜா அதுவும் ஒரு பீரியட் படம். படைப்பாளிகளுக்காகவே திரைப்படம் பார்க்கும் பழக்கம் அரும்பிக் கொண்டிருந்த பருவம் அது.
பாடல்கள் முன்னரே வெளியாகி எங்கு சென்றாலும் மணியே மணிக்குயிலே, யாரும் விளையாடும் தோட்டம், சந்தன மார்பிலே பாடல்கள் காற்றில் கரைந்து கொண்டே இருந்தன. வைரமுத்து இல்லாத இடத்தை ராஜாவே ஆக்ரமித்து பாடல்கள் முழுவதையும் எழுதியிருந்தார். தியேட்டரில் பத்து பதினைந்து நபர்கள்தான் இருப்பார்கள் மொத்தமாகவே எங்களையும் சேர்த்து. பால்கனியில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தோம். முதல் இருபது நிமிடங்களுக்கு எங்களால் படத்தோடு ஒன்றமுடியவில்லை. காரணம் திரைக்கு மிக அருகே அமர்ந்திருந்த ஒருவர் படத்தை ஒன்றுக்கு மேற்பட்ட படத்தை பார்த்திருப்பார் போல. ஒவ்வொரு வசனத்தையும் திரையில் வருவதற்கு முன்னரே மிகவும் சத்தமாக எழுப்பிக் கொண்டிருந்தார். பால்கனியிலிருந்து ஒருவர் பொறுமையிழந்து கீழே இறங்கி திட்டிவிட்டு வந்தபிறகே எல்லோராலும் பின்னணி இசை, வசனங்களோடு ஒன்ற முடிந்தது.
நீங்கள் குறிப்பிட்டிருந்த மூக்கு குத்தும் காட்சியின் பின்னணி இசை காவியமான ஒன்று. பாடல்கள் மட்டுமே படத்தின் தூணாக இருந்ததை உணர்ந்த போதுதான் பாரதிராஜாவும் கமலைப் போலவே (விக்ரம்) சுஜாதாவின் கதையை படமாக்கி மோசம் போய்விட்டாரே, இவருக்கு செல்வராஜ் போன்றவர்கள்தான் லாயக்கு என நினைத்தேன்.
இன்றைக்கும் இப்படத்தை இப்படி சிலாகித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் இசைஞானியின் பாடல்களும், பின்னணி இசையும் மட்டுமே. கார்த்திக்கும் நடிப்பில் சொதப்பியிருப்பார். நடிப்பு என்றால் என்ன விலை எனக் கேட்டும் ரஞ்சிதா ஒரு புதுமுகம். ஜனகராஜ் பாண்டியன் யாருக்குமே சொல்லிக் கொள்வதுபோல அழுத்தமான காட்சிகள் இல்லை.
படத்தோடு பார்க்கும்போது 'ஏலமலை காட்டுக்குள்ள' பாடல் எங்கேயோ கொண்டு சென்றது. மலேசியா வாசுதேவன் குரல் விஸ்வரூபம் எடுத்த பாடல் அது. ஏக்கமான அதே நேரத்தில் இயலாமை, சோகம் என பலவித உணர்ச்சிகளை கொட்டி செதுக்கியிருப்பார். ஒரு கணம் ஒரு யுகமாக - பாடலில் ராஜா தனது டூயட் பாடல்களின் புகழ்பெற்ற இணை குரலான ஜானகியோடு சேர்ந்திருப்பார். மணியே மணிக்குயிலே - ராஜா ஆரம்பித்துக் கொடுக்க மனோவும், ஜானகியும் சிறப்பாக பாடி முடித்திருப்பார்கள். பள்ளி முடிந்து கல்லூரி சென்றபிறகும் அடிக்கடி எல்லோராலும் கேட்டு ரசிக்கப் பட்ட பாடல். (அதுவும் விடுதியில் இரவு நேரங்களில்) "சந்தன மார்பிலே" - மனோ-ஜானகி குரல்களில்.. ஜானகிக்கு கிடைத்த மூன்று பாடலுமே ஒன்றுக்கொன்று வேறுபடும் உணர்வு பாடல்கள். பன்முகத் திறமைக்கே பிறந்த பாடகி அல்லவா அவர்.. எல்லாவற்றிலும் முத்திரை பதித்திருப்பார். மால்குடி சுபா - அப்போதைய நேரத்தில் நவீன, வசிகரிக்கும் குரல். மேற்கத்திய வகைப் பாடலான (படத்தில் மேற்கத்திய பெண் பாடுவது) ஆல் த டைம் மூலம் ராஜா சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்திருப்பார்.
அடைமொழி என்னவோ இயக்குனர் இமயம். ஆனால் இமயத்தின் படைப்பை இந்த நொடிவரை தாங்கிப் பிடிப்பதே ராஜாதான்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks