-
1st November 2014, 09:38 PM
#2551
Junior Member
Seasoned Hubber
Thanks to Mr Parthasarathy
நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பாற்றல்:-
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி பலர் பலவிதமாக ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரியில், நாமும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.
எந்த ஒரு சிறந்த கலைஞனும் ஒரு படைப்பினைத் தரும்போது, முதலில், தன்னை அந்தக் கட்டம் மற்றும் கணத்துக்குள் தன்னுடைய மனதை மட்டும் நுழைத்துக் கொண்டு, அதுவாகவே பாவித்து, தன்னுடைய அனுபவம், அறிவு மற்றும் திறமை மூலம், ஒரு படைப்பினைத் தர முயற்சிக்கிறான். இந்த internalisation பரிபூரணமாக அமையப் பெற்ற உன்னதக் கலைஞன் உலகில் நடிகர் திலகம் ஒருவரே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவருக்கு நடிப்புக் கலை என்பது கலைமகள் அருளிய வரம். அவரிடம் இருந்த spontaneity இதனை நிரூபிக்கும். இருப்பினும், தன்னுடைய வாழ் நாளில் கடைசி வரை, எப்போதும், தன்னுடைய கலையை அவர் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார் - பல வித முறைகள் மூலம். இதில், மிக முக்கியமானது அவரது ஆழ்ந்த, கூர்ந்து நோக்கி அணுகும் திறன். எந்த ஒரு விஷயத்தையும், அவர் மேம்போக்காக அணுகாமல், நூறு சதவிகித பரிபூரணத்துவத்துடன் தான் அணுகிக் கொண்டு வந்திருக்கிறார். இதனால் தான், அநேகமாக அவருடைய எல்லா படங்களும் கனமாகவே இருக்கும். இலேசான படங்கள் (so called light movies) அவரிடமிருந்து மிகவும் குறைவு தான்.
சில நாட்களுக்கு முன்னர், நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள், "அன்னை இல்லம்" படத்தில் ஒரு (இல்லை இது மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகள்) காட்சியைத் தரவேற்றியிருந்தார். இந்தக் காட்சியில், நடிகர் திலகம் முத்துராமன் வீட்டிற்கு வந்து, உண்பதற்கு அமர்ந்து எம்.வி.ராஜம்மா அவர்களைப் பார்த்து (அவருடைய சுமங்கலித் தோற்றத்தைப் பார்த்து), பக்கத்தில், அவருடைய கணவருக்காக வைக்கப் பட்டிருக்கும் இலையையும் பார்த்து, 'அம்மா! உங்களது இந்த சுமங்கலிக் கோலம் சீக்கிரம் போகப் போகிறது' என்று நினைத்து வெதும்பி, எதுவும் சொல்லாமல், வெறும் முக பாவனைகளின் மூலம் அந்த சோகத்தைக் காண்பித்து அங்கிருந்து சென்று விடுவார். (எம்.வி. ராஜம்மா அவருடைய கணவர் எஸ்.வி. ரங்கா ராவ் உயிருடன் தான் இருக்கிறார் என்று வலுவாக நம்பி எப்போதும், அவருக்காக ஒரு இலையைப் போட்டு அதில், உணவு வகைகளை எப்போதும் பரிமாறி வைப்பார், என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து சேர்ந்து உண்டு மகிழ்வார் என்ற நம்பிக்கையில்!. எம்.வி ராஜம்மாவிற்கு, ரங்காராவ் கூடிய சீக்கிரம் மரண தண்டனை பெற்று இறக்கப் போகிறார் என்று தெரியாது. இது நடிகர் திலகத்துக்கும் தேவிகாவுக்கும் மட்டுமே தெரியும்.). அடுத்து, வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி, இப்போது, வாய் விட்டுக் கூறிக் கதறுவார், தேவிகாவிடம்! முதல் இரண்டு காட்சிகளில் ஒரு சிகை அலங்காரத்துடன் வரும் நடிகர் திலகம், அடுத்த காட்சியில், வேறொரு சிகை அலங்காரத்துடன் வருவார். அதாவது, முதல் இரண்டு காட்சிகளில் நீளமாக இருக்கும் கிருதா உடனே வரும் அடுத்த காட்சியில், சிறியதாக இருக்கும். ஆக, அடுத்தடுத்து வரும் இந்த மூன்று காட்சிகளில், முதல் இரண்டு காட்சிகளும், மூன்றாவது காட்சியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் இரண்டு காட்சிகளுக்கும் அடுத்த காட்சிக்கும் இருக்கும் அந்த உணர்ச்சிமயமான தொடர்பு சிறிதும் குறைந்திருக்காது. சரிய்யா, அவர் நுணுக்கமான நடிகர் என்று இப்போது தானே சொன்னீர், அதனால், அவருக்கு இருக்கும் நுணுக்கமான அறிவினாலும், ஈடுபாட்டினாலும், அவரைப் பொறுத்த வரை இது சுலபம் என்று நீங்கள் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன்.
இப்போது, அதே படத்தில் இடம் பெற்ற வேறொரு காட்சியைப் பார்ப்போம்.
இந்தக் காட்சி, முந்தைய காட்சியைப் போல பெரிய உணர்ச்சிக் குவியலான காட்சியல்ல. முந்தைய காட்சி படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும். இந்தக் காட்சியோ, படத்தின் நடுவில் வரும்.
நடிகர் திலகமும், முத்துராமனும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல, பக்கத்தில் ரங்கா ராவுக்காக ஒரு இலை போடப்பட்டு உணவு பரிமாறப் பட்டிருக்கும். அப்போது தான், முதன் முதல், அந்த வீட்டில் நடிகர் திலகம் சாப்பிடுவார். அப்போது தான், அவருக்கு அந்த இலையின் முக்கியத்துவம் தெரியும். எம்.வி. ராஜம்மாவின் பண்பை வியந்து பாராட்டி (எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே!), அவர்களை தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்னும் போது, எம்.வி. ராஜம்மா அவரிடம் "கண்டிப்பாக வருகிறோம். கல்யாண சாப்பாட்டிற்கு, வடை பாயாசத்துடன்" என்பார். அதற்கு, நடிகர் திலகமோ, "வடையாவது பாயாசமாவது, இங்கு உங்கள் வீட்டில், அந்த விருந்து, எனக்கு முன் வரப் போகிறது" என்று சொல்லி, முத்துராமனுடைய காதலைப் பற்றிக் கூறி, அந்தப் பெண் நல்ல நிறம், செக்கச் செவேரென்று இருப்பாள் என்று கூறி, மேலும் சில சம்பாஷணையுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள் தான் வரும். இந்தக் காட்சியில், துவக்கத்திலிருந்து நீளமான கிருதாவுடன் வரும் நடிகர் திலகம், "அந்தப் பெண் செக்கச் செவேரென்று இருப்பாள்" என்று கூறும் அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டும், சடாரென்று, சிறிய கிருதாவுடன் காட்சி தருவார்! இது க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். உடனே, மறுபடியும் அந்த சம்பாஷனை தொடரும் போது, பழைய நீள கிருதாவுக்கு மாறி விடுவார்! இத்தனைக்கும், முந்தைய காட்சியைப் போல, வேறு வேறு காட்சிகளல்ல இந்தக் காட்சி. தொடர்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் எம்.வி. ராஜம்மா நடிக்கும் காட்சி. இரண்டு வேறு வேறு காட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் படும் போதே (எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் கழித்து தான் எடுக்கப் பட்டிருக்கும்), தொடர்பு காட்டுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நிலைமை இப்படியிருக்க, ஒரே நேரத்தில் எடுக்கப் பட்ட, நாம் மேலே கூறிய இந்தக் காட்சியில், தொடர்ந்து வரும் இரண்டு நிமிடங்களில், ஒன்றே முக்கால் நிமிடம் ஒரு ஒப்பனை, நடுவில், சில நொடிகள் மட்டும் வேறொரு ஒப்பனை; உடனே, கடைசி சில நொடிகளில் வேறொரு ஒப்பனை! இதுவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் பட்ட காட்சிகள். அப்படி என்றால், எந்த அளவிற்கு, நடிகர் திலகம் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், முனைப்பும், முயற்சியும் செய்திருக்கிறார்!!
இது போல், பல படங்களில் காணலாம். ஆனால், அவை எல்லாம் வேறு வேறு காட்சிகளாய் வரும். உதாரணத்திற்கு, புதிய பறவையில், வரும் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முதல் சரணம் பூராவும், படம் தொடங்கும் போதே எடுக்கப் பட்டிருக்கும். வேறொரு நீள கிருதாவுடன் வருவார். பல்லவியிலும், அனு பல்லவியிலும், இரண்டாவது சரணத்திலும், படம் நெடுகிலும் வரும் சிறிய கிருதாவுடன் வருவார். ஆரம்பத்தில், ஊட்டி ரேஸ் கோர்ஸில், சரோஜா தேவியுடன் பேசும் ஒரு காட்சியிலும், அடுத்தடுத்து, இதே போல், வேறு வேறு கிருதாக் கோலங்களில் வருவார்.
நடிகர் திலகம் 1953-லிருந்து, 1987 வரை, தொடர்ந்து, மூன்று ஷிப்டுகளில், நடித்துக் கொண்டே இருந்தார். வருடத்திற்கு ஆறு, ஏழு படங்களில் (சில வருடங்கள் நீங்கலாக - 1965, 1966, 1977, மற்றும் சில வருடங்கள்) நடித்துக் கொண்டு! வேறு வேறு கெட்டப்புகளில், வேறு வேறு பாத்திரங்களில், ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலங்களில்! அப்படி இருந்தும், காட்சித் தொடர்பினைத் (continuity) தொடர்ந்து நூறு சதவிகிதம் கடைப்பிடித்தார். இப்போதெல்லாம், ஒரு நடிகர் ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார், நன்றாக concentrate செய்து நடிப்பதற்கு! இன்னும் சொல்லப் போனால், வட நாட்டின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார் அவர்கள், அந்தக் காலத்திலேயே, ஒரு நேரத்தில், ஒரு படம் தான் நடித்தார், மேற்கூறிய காரணத்துக்காக!
வேறு வேறு காட்சிகள் என்றால், ஓரளவு நடித்து விடலாம். ஒரே காட்சியில், இரண்டே நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வசனக் காட்சியில், இடையில், ஒரு சில நொடிகள் மட்டும் வேறு ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் போது கூட, எப்படி அவரால் பரிபூரணத்துவத்தைக் காட்ட முடிந்தது? இத்தனைக்கும், அப்போதெல்லாம் நேரடியாக பேசி நடித்தாக வேண்டும். இப்போது போல தனி ட்ராக் எல்லாம் கிடையாது! எல்லாம் அந்தக் கலைக் கடவுளுக்கும், அவரை தமிழ் நாட்டிற்கு ஈந்த அந்தக் கலைமகளுக்கும் தான் வெளிச்சம்!!
நடிகர் திலகத்தின் பாடல் கட்டுரைகளினூடே, இந்த சிறிய பதிவை இட சந்தர்ப்பமளித்த திரு. வாசு மற்றும் திரு. வெங்கிராமுக்கு நன்றிகள்.
இந்தக் காட்சி பற்றி சொல்லி, திரு. ராகவேந்திரன் அவர்களிடம் கேட்டு, மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, அவரிடம் உதவும்படிக் கோரிய போது, அவரும் உடனே, எனக்கு அந்தக் காட்சியை மட்டும், என்னுடைய சொந்த மெய்லுக்கு அனுப்பினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
திரு. ராகவேந்திரன் அவர்களே, எனக்காக ஒரு முறை அந்தக் காட்சியைப் பதிந்து, கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சை நிறையச் செய்யுங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2014 09:38 PM
# ADS
Circuit advertisement
-
2nd November 2014, 08:27 AM
#2552
Senior Member
Seasoned Hubber
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91
தேவையில்லாத விமர்சனம்...
தினமலரின் விஷமத்தனம் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. ஏம்பா.. தமிழனை நீங்கள் பாராட்டா விட்டாலும் பரவாயில்லை.. இப்படியெல்லாம் இன்னுமா புண்படுத்துவீர்கள்.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட தமிழுணர்வே இல்லையா...பகுத்தறிவிற்கொப்பாத விஷயத்தையெல்லாம் மீண்டும் மீண்டும் கிளறுகிறீர்கள்... சிவாஜி ரசிகர்கள் இளிச்சவாயர்கள் என எண்ணுகிறீர்களா.. அல்லது அவர்தான் இல்லையே என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம் என்கின்ற எண்ணமா...
தினமலரின் உள்நோக்கம் புரியவில்லை..
இல்லாத சென்டிமென்டை ஏன் மீண்டும் மீண்டும் எழுதுகிறீர்கள்.. காழ்ப்புணர்ச்சியின் மறுபெயர் தான் தினமலரா...
அல்லது தாங்களே சொல்லிக் கொடுக்கிறீர்களா..
ஒரு பக்கம் அவரைப் பற்றிய அவருடைய கட்டுரையின் பிரசுரம்..
மறு பக்கம் அவரைப் பற்றிய மூடநம்பிக்கையை உருவாக்கும் விமர்சனம்
இந்த இரட்டை வேடம் தினமலருக்குத் தேவையா..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 1 Likes
-
2nd November 2014, 08:57 AM
#2553
Junior Member
Newbie Hubber
எத்தனை பெரியார் வந்தாலும் ,தமிழ் நாட்டில் பகுத்தறிவு மலர செய்வது கடினம் என்பதையே இது உணர்த்துகிறது. அப்படியானால்,சிவாஜி சம்மந்த பட்ட எந்த விஷயம் நுழைந்தாலும் ,அது மெகா ஹிட் ஆகிறதே திரைபடங்களில்?(சந்திரமுகி,சிவாஜி,ஜிகர்தண்டா படங்களின் மெகா வெற்றி).அது எப்படியாம்?
வெற்றியின் பின்னால் மோப்பம் பிடித்து அலைந்து ,மனசாட்சி துறந்து,கொள்கைக்கும் வாழ்வுக்கும் சம்மந்தமற்று பொய் மனிதனாக வாழ்ந்து மடிவதுதான் உன்னத வாழ்க்கையா? அதிர்ஷ்டத்தின் உன்னதமா?இதைத்தானா இந்த சமுகம் எதிர்பார்க்கிறது?
உண்மை மனிதனாக,தன் மனசாட்சி படி தேசிய உணர்வு,இறை நம்பிக்கை,கலாசார குடும்ப வாழ்வு ,என்று வாழ்ந்த சிவாஜி என்ற தமிழன் தந்த அறிவு ,திறமை,நம்பிக்கை,உழைப்பு,உண்மை ,நேர்மை என்ற நல்லாயுதங்கள் போதும் எங்களுக்கு. உலகை வெல்வோம்.
இது தோல்வி என்றால், கம்பனும்,,கட்டபொம்மனும் ,பாரதியும்,பகத்சிங்கும் ,நேதாஜியும்,வ.வு.சியும்,சுப்ரமணிய சிவாவும்,புதுமை பித்தனும்,கலைவாணரும், காமராஜரும்,கண்ணதாசனும் வாழ்க்கையில் தோற்றவர்களே. செண்டிமெண்ட் சரியில்லாதவர்களே.அப்பாடா ,என்ன பகுத்தறிவு? அது சரி ,ஒரு எம்.எல்.ஏ வாக கூட ஆகாதவருக்கு, இவ்வளவு கவனிப்புகளா?
தன் திறமையால் ,உலகத்தையே நம் பக்கம் திருப்பிய ஒரு மாமேதையை,நாம் மதிக்கும் லட்சணம் இது.
தின மலர், தின விஷ விருட்சமாவதை இது உணர்த்துகிறது.
-
Post Thanks / Like - 3 Thanks, 2 Likes
-
2nd November 2014, 08:57 AM
#2554
Senior Member
Seasoned Hubber
Last edited by RAGHAVENDRA; 2nd November 2014 at 08:59 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd November 2014, 10:31 AM
#2555
Junior Member
Newbie Hubber
நவராத்திரி-03/11/1964.
பராசக்தியுடன் வந்து தீபாவளிக்கு உன் ஒலியினால் ஒளியூட்டியவனே,
நவராத்திரிக்கும் ஒரு தீபாவளியிலேயே ஒளி கூட்டினாய் ,
தீபாவளி இறுதி வரை நீ தந்த மரியாதைக்கு பதில் செய்தே வந்தது.
பண்டிகையோ,தெய்வங்களோ,தொழில்களோ,உன்னத மனிதர்களோ ,
நீ நினைவுறுத்திய பின்பு தான் ஒளி வட்டம் பெற்றது,பெற்றனர்,
.
ரசங்களின் உணர்வுகள் உணர்வு பெற்ற நாள் இது
அற்புதம் தன் அற்புதத்தை உணர்ந்தது. பயம் பயந்தது,
சிருங்காரம் நயந்தது ,வீரம் உரம் பெற்றது ,காருண்யம் இன்னொரு பௌத்தம் கண்டது,
காதல் காதலிக்க தொடங்கியது, அருவருப்பு தன்னையே அருவருத்தது,
நகை நகைக்க துவங்கியது, அமைதி பேரமைதி கண்டது,
ரௌத்ரமோ ,ரௌத்ரம் கண்டு , மாண்டே போனது ,
தொட்டு தடவாமல்,காமம் கலக்காமல், நீ தந்த ,பிரிவின் துயர் தீர்ந்த ஆயாச அழைப்பு ,
அவசர அழைப்பு ,காதலியின் கேசத்தை மட்டுமா கோதியது , பல கோடி உள்ளங்களை கொத்தியதே?
நம் மண்ணின் கலைகளை,ஒரே காட்சியில் ,கூத்தாடி ,
பல்லாயிரம் ஆண்டுகளின் கலை சரிதம்,சிலம்பு கூட உரைத் ததில்லையே?
கட கட வேட்டை சிரிப்பு ஒன்றே ,எதனையும் ஓடி விடாமல் வேட்டையாடி விட்டதே ?
தோள் கண்டார் தோளே கண்டார் ,உன் குலுக்கலை கண்டார்?
சும்மா சுட்டதில் விழுந்தவை எத்தனை எத்தனை இதயங்கள் ?
இரவினில் ஆடி வட்டமிடும் விழிகள் கண்டார் ,
உன்னையறிய நீ என்ன ஒரே மனிதனா? வெளி நாட்டான் ஒருவன் ,உன்னை
பலரென்று பகர்ந்ததே சான்று ,அடி-முடி அறிய முடியா ,மண்ணும் விண்ணும் அளந்த
எங்கள் தமிழ் கடவுளே, உனக்கு மட்டுமே பணியும் என் சிரம் .
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
2nd November 2014, 10:37 AM
#2556
Junior Member
Diamond Hubber
today morning 11.00 hrs sunlife channel telecast punniya boomi movie watch and enjoy

Originally Posted by
raghavendra
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
2nd November 2014, 12:38 PM
#2557
Junior Member
Veteran Hubber
புண்ணியபூமி (1978) : நடிக மன்னர் மன்னனே.....யாருக்காக இது யாருக்காக!
இன்றுவரை இந்தியத்திரைவானில் புகழ் மங்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கும் வட இந்திய நடிகைகள் மதர் இந்தியா நர்கிஸ் மற்றும் அனார்கலி மதுபாலா மட்டுமே. நர்கிசின் விருது வென்ற நடிப்பில் உருவான மதர் இந்தியா (1957) தமிழில் தன்னுடன் பலபடங்களில் நடித்த கதாநாயகி வாணிஸ்ரீக்கு முதன்மை தரவேண்டிய நன்றிக்கடன் வேண்டி நடிகர்திலகம் அவரது கணவராகவும்(ராஜ்குமார் ஏற்ற பாத்திரம்) மகனாகவும் (சுனில்தத் ஏற்ற பாத்திரம்) இரட்டை வேடங்களில் நடித்துச் சிறப்பு சேர்த்த இரண்டாவது படம் (சிவகாமியின் செல்வனை தொடர்ந்து). காலம் கடந்து வெளிவந்து எதிர்பார்த்த வெற்றிவாய்ப்பை ஓரளவு நிறைவு செய்த படம்). நர்கிசின் நடிப்பில் மேன்மை பெற்ற மதர் இந்தியா புண்ணியபூமியாக மெருகேற்றப்பட்டு பெருமை பெற்றது நடிகர்திலகத்தின் ஆளுமை நிறைந்த நடிப்பினால்!Our Tributes to Nargis!!
Last edited by sivajisenthil; 2nd November 2014 at 12:43 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
2nd November 2014, 02:07 PM
#2558
Junior Member
Seasoned Hubber
Watch Anbukkarangal NT's Super Hit Movie in Sun LIfe today at 7.00 pm
-
2nd November 2014, 03:03 PM
#2559
Junior Member
Seasoned Hubber
Thanks to Mr Neyveli Vasudevan
அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.
நேற்று 'சிவந்த மண்' நினைவலைகள் என்றால் இன்று நம் அண்ணன் நம்மிடையே ஒரு கோயிலாய் வலம் வந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்து விட்டது. ஆம்... இன்று 'அண்ணன் ஒரு கோயில்' வெளியான நாளல்லவா! 77-ல் வெளியான அவன் ஒரு சரித்திரம், தீபம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் காவியங்களுக்கு அடுத்து 10-11-1977-ல் தித்திக்கும் தீபாவளித் திரை விருந்தாக 'அண்ணன் ஒரு கோயில்' ரிலீஸ். முந்தைய படங்களான இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் ஆகியவை சுமாராகப் போன நிலையில் சற்று சோர்வடைந்திருந்த நம் ரசிகர்களுக்கு தடபுடலாய் தலைவாழை தீபாவளி விருந்தளித்து அனைவையும் திக்குமுக்காடச் செய்தார் அண்ணன் (ஒரு கோயிலாய்). அண்ணனுக்கு சொந்தப்படம் வேறு. 74-ல் வெளிவந்த தங்கப்பதக்கத்திற்குப் பிறகு 77-ல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிக் காவியம். மிகுந்த எதிர்பார்ப்பு இந்தக் காவியத்திற்கு. கோபால் சார் சொன்னது போல் தீபாவளி நமக்கு ராசியாயிற்றே. அதுவும் நம் சொந்த பேனர் வேறு. அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்து அசுரத்தனமான வசூல் சாதனை புரிந்தது 'அண்ணன் ஒரு கோயில்'.
கடலூரில் நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ். நாம் பிறந்த மண்ணும் அதே தியேட்டரில்தான் ரிலீஸ். ஆனால் மூன்று வாரங்களே தாக்குப் பிடித்தது. அதற்கு முந்தைய படமான 'இளையதலைமுறை' கடலூர் துறைமுகம் கமர் டாக்கீஸில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஓடி பின் நியூசினிமா திரையரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டது. எனவே மூன்று படங்களுமே தொடர்ந்து நியூசினிமாவில் ரிலீஸ். அதுமட்டுமல்ல. இளையதலைமுறைக்கு முந்தைய படமான தீபமும் இங்குதான் வெளியாகி வெற்றி சுடர் விட்டு பிரகாசித்தது. எனவே நியூசினிமா எங்களுக்கு கோயில் ஆனது. அங்கேயே 'அண்ணன் ஒரு கோயில்' வெளியானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நியூசினிமா கடலூர் அண்ணா மேம்பாலத்திற்கு அதாவது பழைய கடிலம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள தியேட்டர். வழக்கம் போல ஒன்பதாம் தேதியே தியேட்டர் திருவிழாக் கோலம் காண ஆரம்பித்து விட்டது. கொடிகளும் தோரணங்களுமாய் தியேட்டர் முழுக்க ஒரே அலங்கார மயம். அண்ணன் அழகான கண்ணாடி அணிந்து ஒயிட் கோட் சூட்டில் அற்புதமாய் (சுமித்ரா பாடும் "அண்ணன் ஒரு கோயிலென்றால்" பாடலில் அணிந்து வருவாரே... அந்த டிரஸ்.) நிற்கும் கண்கொள்ளா கட்- அவுட். அண்ணனின் முழு உடலையும் கவர் பண்ணும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய மாலை. ஜிகினாத் தாள்கள் மின்னும் அண்ணன் படங்கள் ஒட்டிய அழகழகான கண்ணைப் பறிக்கும் ஸ்டார்கள். தியேட்டரின் வாயிலே தெரியாத அளவிற்கு கீழே தூவப்பட்ட தென்னங் குருத்துகள். பழைய கடிலம் பாலம் இருமருங்கிலும் நடப்பட்ட ஆளுயர பச்சைத் தென்னங் கீற்றுகள். தியேட்டரினுள்ளே வைப்பதற்கு ரசிகர் குழாம் செய்து வைத்துள்ள வாழ்த்து மடல்கள் (கண்ணாடி பிரேம் போட்டு அலங்கரிக்கப்பட்ட தலைவர் ஸ்டில்களுடன் கூடிய படங்கள்) என்று அதம் பறந்து கொண்டிருக்கிறது. இரவு ஒருமணி தாண்டியும் அலங்காரங்கள் செய்வது நிற்கவே இல்லை. படம் எப்படி இருக்குமோ.என்று ஒவ்வொருவரும் ஆவல் மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறோம். படப்பெட்டி இரவே வந்து விட்டதாக வேறு தியேட்டர் சிப்பந்திகள் கூறி விட்டார்கள். அலங்காரங்கள் முடிந்து தியேட்டரை விட்டு போகவே மனமில்லை. ஆனால் மழைக் காலமானதால் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்து விடப் போகிறது என்று வேண்டாத தெய்வமில்லை. அலங்காரங்கள் அனைத்தும் ஒரு நொடியில் பாழ்பட்டுப் போகுமே என்று அனைவர் முகங்களிலும் கவலை ரேகை. நல்லவேளையாக வேண்டியது வீண் போகவில்லை. சிறு தூறல்களுடன் வந்த மழை நின்று விட்டது. பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். சில தீவிரவாதிகள் வீட்டுக்கே போகவில்லை. செகண்ட் ஷோ முடிந்ததும் சைக்கிள் ஸ்டான்டிலேயே பழைய போஸ்ட்டர்களைத் தரையில் விரித்து அலங்காரங்கள் செய்த அசதியில் படுத்து குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.
வீட்டை அடையும்போது சரியாக அதிகாலை இரண்டரை மணி. தூக்கம் வருமா... கண்களிலும், மனம் முழுவதிலும் அண்ணனே நிரம்பி வழிகிறார். சிறிது நேர தூக்கத்திலும் கோவில் கோவிலாக கனவு வருகிறது. அம்மாவிடம் சொல்லி ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பச் சொல்லிப் படுத்தேன். நான்கு மணிக்கு நான் அம்மாவை எழுப்பிவிட்டேன். "ஏண்டா.. தூங்கினா என்ன" என்று அம்மா செல்லக்கடி கடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று. விறுவிறுவென சாஸ்திரத்திற்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அது சரியாக தலையில் ஊறக் கூட இல்லை... சுட்டும் சுடாததுமான வெந்நீரில்(!) திருக்கழு(கு)க்குன்றம் கழுகு போல கழுகுக் குளியல் குளித்துவிட்டு, அம்மா போட்டுத் தந்த காபியை (சு)வைத்து விட்டு, ஆறுமணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். "ஏண்டா! தீபாவளி அதுவுமா சாப்பிட்டுட்டு போகக் கூடாதா," என்று அம்மா கோபித்துக் கொண்டார்கள். இது இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை. தலைவர் பட தீபாவளி ரிலீஸ்களின் அத்தனை தீபாவளிக்கும் இதே கூத்துதான். "சாமியாவது கும்பிட்டு விட்டுப் போ"..என்று அவசர அவசரமாக வடை சுட்டு, தீபாவளி பலகாரங்களை இலையில் வைத்து, எனக்காகவே ஒரு அவசர படையலை முன்னாடியே அம்மா போட்டு விடுவார்கள். ஏதோ பேருக்கு சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஒரே ஓட்டம். இது என் கதை மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களுக்கும் இதே கதைதான்.ஆறரை மணிக்கெல்லாம் தியேட்டரில் அனைவரும் ஆஜர். புதுத் துணியெல்லாம் கிடையாது. யார் அதையெல்லாம் பார்த்தார்கள்?... பின் முந்தைய இரவு செய்த அலங்காரங்களையெல்லாம் ஒரு தடவை கரெக்ட் செய்து பின் தலைவரைப் பற்றிய பேச்சும், படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சும்தான். தீபாவளி அன்று ஐந்து காட்சிகள். முதல் காட்சி ரசிகர் ஷோ காலை ஒன்பது மணிக்கு. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அப்படியே இருமடங்கு விலை. தலைவர் படம் அச்சடித்த அட்டை ஒன்று கொடுப்பார்கள். ஒவ்வொரு கிளாஸுக்கும் தகுந்தவாறு அட்டையின் நிறம் மாறும். கவுண்ட்டரில் டிக்கெட் கிடையாது. ஒரு வாரம் முன்னமேயே டிக்கெட் காலி. நேரமாக ஆக கூட்டம் திருவிழா போல கூட ஆரம்பித்து விட்டது.
எங்கு நோக்கினும் ரசிகர்கள் தலைகள்தான். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியாகி விட்டது. சும்மா ஆட்டம் பாம்களாக வெடித்துத் தள்ளுகிறது. அனைவரும் காதுகளைப் பொத்திய வண்ணமே இருக்கிறார்கள். புஸ்வானம் மத்தாப்புகளாய் சிதறுகிறது. சரவெடிகள் சரமாரியாய் கொளுத்தப்படுகின்றன. எங்கும் தலைவரை வாழ்த்தும் 'வாழ்க' கோஷம் தான்.ஆயிரம்வாலாக்களும், ஐயாயிரம் வாலாக்களும் தியேட்டர் வாசலைக் குப்பையாக்குகின்றன.
அரங்கினுள் நுழைய மணி அடித்தாயிற்று. அனைவரும் 'நான் முந்தி... நீ முந்தி'... என்று கேட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கிழிப்பவரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம். செகண்ட் கிளாஸ் சீட்களின் வரிசையான மூன்று ரோக்களை வெளியிலிருந்து வரும் நண்பர்களுக்காக கயிறு கட்டி மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது...(அராத்தல் குரூப் என்று எங்கள் குரூப்புக்கு பெயர்) அனைத்து ரசிகர்களும் பலூன்களை பறக்க விட்டுக் கொண்டே உள்ளே நுழைகின்றனர். கிடுகிடுவென தியேட்டர் ரசிகர்கள் தலைகளால் நிரம்பி வழிகிறது. திரையருகே சில வானரங்கள் பட்டாசுகளை சரம் சரமாய் கொளுத்திப் போட தியேட்டர் சிப்பந்திகள் கடுப்பாகி ஓடோடி வந்து பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என தடுக்கின்றனர். தியேட்டர் முன் மேடை முழுவதும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் துவங்க பெல் அடித்து விளக்குகள் அணைக்கப்பட்டு முதல் 'நல்வருகை' ஸ்லைடில் என்.எஸ். கிருஷ்ணன் முகமலர்ந்து சிரித்து அனைவரையும் வரவேற்கிறார். பின் தியேட்டரின் 'புகை பிடிக்காதீர்கள்'...'முன் சீட்டின் மீது காலை வைக்காதீர்கள்'... 'தினசரி நான்கு காட்சிகள்'... 'தீபாவளியை முன்னிட்டு ஒருவாரத்திற்கு ஐந்து காட்சிகள்'... என்று சம்பிரதாய ஸ்லைடுகள் போட்டு முடித்த பின்னர் நம் ரசிகர்களின் "இப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று பல்வேறு ஸ்டைலான போஸ்களில் அண்ணன் நிற்கும் ஸ்லைடுகள் போடப்பட்டவுடன் சும்மா விசில் சப்தம் காது சவ்வுகளைப் பதம் பார்த்து விட்டது. சரியாக முப்பத்தைந்து நன்றி ஸ்லைடுகள். ஸ்லைடுகள் முடிந்ததும் உடனே படத்தைப் போட்டு விட்டார்கள். 'அண்ணன் ஒரு கோயில்' சென்சார் சர்டிபிகேட் போட்டவுடன் சும்மா அதம் பறக்கிறது. பின் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்று போட்டதுதான் தாமதம்....ரசிகர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஒரே குதிதான். அண்ணன் ஒரு கோயில் என்று நெகடிவில் சிகப்பும் பச்சையுமாய் கோவில் கோபுரம் ஒன்று சுற்றுகையில் தேங்காய்கள் உடைபட்டு நொறுங்கும் சப்தம் முதல் வகுப்பு வரை கேட்கிறது. டைட்டில் வேறு அற்புதமாய் இருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தின் உச்சம். ('டைட்டில் பார்க்க வேண்டிய ஒன்று' என்று 'ராணி' வார இதழ் கூட விமர்சனத்தில் சிலாகித்து பாராட்டி எழுதியது.) டைட்டிலிலேயே தெரிந்து விட்டது படம் பிய்த்து உதறப் போகிறது என்று. டைட்டில் முடிந்தவுடன் எம்.எஸ்.வி.யின் அற்புதமான ரீ-ரிகார்டிங்கில் காட்டுப்பகுதியில் போலீஸ் வேட்டை நாய்கள் "லொள்..லொள்".. என்று குரைத்து காவலர்களுடன் துரத்த, லாங்க்ஷாட்டில் ஒரு உருவம் பரபரவென ஓடிவர, அனைவரும் இருக்கையை விட்டு தன்னையறியாமல் எழுந்து விட, தொப்பி அணிந்து, கண்ணாடிசகிதம் நம் அண்ணன் முழங்கால் வரையிலான வயலட் கலர் ஓவர்கோட்டுடன் ஓட்ட ஓட்டமாக, வேர்க்க விறுவிறுக்க, திரும்பி திரும்பிப் பார்த்தபடியே கோரைப் புற்களை கைகளால் விலக்கி விலக்கி ஓடி வர... விறு விறுவென அப்படியே நம்மைப் ப(தொ)ற்றிக்கொள்ளும் சீன் முதல் காட்சியிலேயே களைகட்டி விடும். சஸ்பென்ஸ். திரில் என்றால் அப்படி ஒரு திரில். ஒரு த்ரில்லர் மூவிக்குண்டான அத்தனை விஷேச அம்சங்களோடு விறுவிறுப்பு என்றால் முதல் பதின்மூன்று நிமிடங்களுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பு. படம் பிரமாதப்படுத்தப் போகிறது என நிச்சயமாகி விட்டது. பின் நடந்ததையெல்லாம் சொல்ல திரியின் சில பக்கங்கள் போதாது. தலைவர் ஏன் போலீசிடம் இருந்து ஓடிவருகிறார்?... அடுத்து என்ன? என்று ஆவல் மேலிட ஒரே பரபரப்பாகவே எல்லோரும் காணப்பட்டார்கள். பேய்ப்பட பாடல் போல 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட" பாடல் வேறு ஆவலை அதிகப்படுத்துகிறது... நிச்சயமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. பின் தலைவர் சுஜாதாவிடம் சொல்லும் தலைவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள்... தலைவர், சுமித்ராவின் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு காட்சிகள்...அருமையான "அண்ணன் ஒரு கோவிலென்றால்", "மல்லிகை முல்லை"பாடல் காட்சிகளில் ரம்மியமாக அருமையான காஸ்ட்யூம்களில் அண்ணன் வந்து அசத்துவதையும், மீண்டும் ஒரு பாசமலரைக் கண்டு கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தமும், பூரிப்பும் ஒன்று சேர, அனைவரையும் பாசமெனும் அன்பு நூலால் கட்டி போட்டுவிட்டார்கள் நடிகர் திலகமும், சுமித்ராவும். உயிரான தங்கையை வில்லன் மோகன்பாபு கெடுக்க முயலும்போது பதைபதைத்து படுவேகமாக காரில் வந்து மோகன்பாபுவை அண்ணன் சின்னாபின்னப் படுத்தும் போது தியேட்டர் குலுங்கியது. பின் சஸ்பென்சை மறைத்து மோகன்பாபு சுடப்பட்டு சாயும் போதும், அண்ணனையே தங்கை தன் நிலை மறந்து யாரன்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து அண்ணனின் தலை பல கூறுகளாகப் பிளப்பது போன்ற காட்சிகளிலும் அப்படி ஒரு நிசப்தம். பின் தங்கையை பிரிந்து வாடி சுஜாதாவிடம் கதறும் போதும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தங்கையைப் பார்த்து ஜெய்கணேஷிடம் அண்ணன் புலம்பும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் தியேட்டரில் பூகம்பம் வெடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்... அப்பப்பா.. என்ன ஒரு ஆரவாரம்!... அந்த ஆரவாரத்தையே தூக்கிச் சாப்பிடும் கடவுளின் நடிப்பு...துடிப்பு...தங்கையின் குணநலன்களை விவரித்து, விவரித்து சிரித்து அழுதபடியே என்ன ஒரு புலம்பல்! ("அப்பப்பப்பா... ஒரு இடத்துல படுத்துக் கெடக்கறவளாஅவ! என்ன ஆட்டம்... என்ன ஓட்டம்... என்ன பாட்டு.... என்ன சிரிப்பு ...என்ன")... என்று வியந்தபடியே அண்ணாந்து அழுகையில் அரங்கு குலுங்கியதே....
அந்தக் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு ஓங்காரக் கூச்சலிட்டனர் ரசிகர்கள். இடைவேளையின் போது எல்லோர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்...படம் டாப் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தையே கூறினர். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பட்டை கிளப்பியது. ரசிகர்கள் தம் பங்கிற்கு செய்த ஆரவாரம் சொல்லி மாளாது. தேங்காய் மனோரமா நகைச்சுவைக் காட்சிகளும் நன்கு ரசிக்க வைத்தன. அதைவிட காட்டில் போலீஸ் வேட்டையின் போது பெரிய மரக்கட்டைகளுக்கு மத்தியில் தலைவரும்,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்! சீரியஸான காட்சிகளுக்கு நடுவே எல்லோரையும் நிமிர வைத்து வசியம் செய்த பாடல். (சற்று ஓவராக இருந்தால் கூட) இப்படியாக படம் முழுதும் ஒரே அட்டகாச அலப்பரைகள் தான். படமும் படு டாப். சஸ்பென்ஸ், திரில், பாசம், காதல், தியாகம் என்று எல்லாக் கலவைகளையும் மிக அளவாக அழகாகக் கலந்து, எல்லாவற்றுக்கும் மேல் வித்தியாசமான நடிகர் திலகத்தை நம்மிடையே உலாவ விட்டு படத்தை அட்டகாசமாய் இயக்கியிருந்த இயக்குனர் விஜயனுக்கு ஜெயமான ஜெயம். இறுதியில் படம் சுபமாய் முடிய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவம். அனைவரும் "அண்ணன் வாழ்க" என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன், பெருமிதத்துடன், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசத்துடன் வெளியே வந்தோம்.
வெளியே வந்து பார்த்தால் ஐயோ! கூட்டமா அது... புற்றீசல் போல அவ்வளவு கூட்டம்... நீண்ட வரிசையில் கியூ... பழைய ஆற்றுப்பாலத்தில் தியேட்டரிலிருந்து கியூவளைந்து வளைந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கியூ நிற்கிறது. போலீஸ் வேன் வந்து கூட்டத்தை லத்தியால் பிளக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம். மழை வேறு வந்து விட்டது... கூட்டம்...ம்ஹூம்... நகரவே இல்லை... அடுத்த ஷோ ஆரம்பித்தாகி விட்டது.... டிக்கெட் கிடைக்காதவர்கள் அப்படியே கியூவில் மனம் தளராமல் மறுபடி அடுத்த ஷோவிற்காக நிற்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வீட்டிற்கு போகவே இல்லை... அங்கேயே பொறை ரொட்டியை வாங்கிக் கடித்துக் கொண்டு கிடைத்த டீயைக் குடித்துக் கொண்டு (தீபாவளி அதுவும் அருமையான வகைவகையான பலகாரங்களும், அருமையான மட்டன் குழம்பும், சுழியான் உருண்டைகளும், இட்லி, தோசைகளும் வீட்டில் காத்துக் கிடக்க இங்கே நெய் வருக்கியும் டீயும்...தேவையா!) டிக்கெட் கிடைக்குமா என்று அலைஅலையாய் தவிக்கும் மக்கள் வெள்ளம்... படம் அட்டகாசமாய் வெற்றிபெற்றுவிட்டது என்ற சந்தோஷத்தில் தலைகால் எங்களுக்கு புரியவில்லை. பின் அடுத்த ஷோவிற்கு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்து விட்டு மூன்றாவது காட்சியையும் பார்த்து ரசித்தோம். பின் தினமும் தியேட்டரில்தான் குடித்தனமே. நாங்கள் நினைத்தது போலவே அருமையாக ஓடி வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் மீள் தொடர்வெற்றிகளுக்கு அடிகோலிய பெருமையையும் சேர்த்துப் பெற்றது 'அண்ணன் ஒரு கோயில்'.
-
2nd November 2014, 03:10 PM
#2560
Junior Member
Seasoned Hubber
Courtesy: Mr Neyveli Vasudevan
பக்த துக்காராம். (1973)
ஒரு அபூர்வ காவியத்தின் அலசல்.
(நம் பகுதி மட்டும்)
பக்த துக்காராமின் (நாகேஸ்வரராவ்) புகழ் பொறுக்காமல் அந்த கிராமத்தின் பெரிய மனிதன் போர்வையில் உலாவும் வஞ்சகன் மும்பாஜி (நாகபூஷணம்) துக்காராமுக்கு பலவகையிலும் தொல்லைகள் அளித்து வருகிறான். தான் வணங்கும் பாண்டுரங்கனின் அருளால் துக்காராமுக்கு வரும் மலை போன்ற சோதனைகள் யாவும் பனி போல விலகி விடுகின்றன. இறுதியில் மும்பாஜி ஒரு சதித்திட்டம் தீட்டி கிராமத்தின் பாண்டுரங்கநாதர் கோவிலில் உள்ள பாண்டுரங்கனின் விக்கிரகத்தை இரவோடு இரவாக திருடி, மறுநாள் துக்காராமரின் போலி பக்தியாலும், பகவானுக்கு துக்காராம் அபச்சாரம் செய்ததாலும்தான் துக்காராம் மேல் உள்ள கோபத்தினால் கடவுள் விக்கிரகம் மறைந்து விட்டது என்று கதை கட்டுகிறான். அதுமட்டுமல்லாமல் ஊர்மக்களை நம்பவைக்க பாண்டுரங்க சுவாமியே துக்காராமின் மீது பழி சொல்வது போல அசரீரி ஒலிக்குமாறு ஏற்பாடு செய்து துக்காராமுக்கு கெட்ட பெயர் உருவாக்குகிறான். துக்காராமை குற்றவாளியாக்கி மராட்டிய மன்னர் 'சத்ரபதி' சிவாஜியிடம் துக்காராமுக்கு தண்டனை அளிக்குமாறு வேறு வேண்டுகோள் விடுக்கிறான் மும்பாஜி. ஆனால் சிவாஜி துக்காராமை நேரடியாகவே விசாரணை செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வந்து துக்காராமை விக்கிரகம் காணாமல் போனது பற்றி விசாரணை செய்கிறார். துக்காராம் தான் குற்றத்திற்கு காரணமல்ல என்று சிவாஜியிடம் எடுத்தியம்புகிறார். துக்காராமின் உண்மையான பக்தியும், அவர் நன்னடத்தையும் சிவாஜி அறிந்ததே. இருப்பினும் விக்கிரகம் மறுநாளைக்குள் உரிய இடத்தில் வந்து சேர வேண்டும்... இல்லையென்றால் துக்காராமுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளித்து விடுகிறார் சத்ரபதி. துக்காராமனின் மனைவி தன் கணவர் குற்றவாளி அல்ல என்று சிவாஜியிடம் மன்றாடுகிறாள். துக்காராம் சிவாஜி முன்னிலையிலேயே பாண்டுரங்கனை மனதில் நிறுத்தி மனமுருகி பாடி வேண்ட மறைந்து போன விக்கிரகம் தெய்வ அருளாலும், துக்காராமின் உண்மையான பக்தியாலும் உரிய இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை ஆகிறது. துக்காராமின் உண்மையான பக்தியை சிவாஜியும், ஊர்மக்களும் உணர்கிறார்கள். அவரை மகான் என்று பூஜிக்கிறார்கள். துக்காராம் புனிதமானவர் என்று முன்னமேயே தனக்குத் தெரியும்... என்றாலும் ஊர்மக்கள் அதனை உணர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் துக்காராமிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டதாக சிவாஜி கூறுகிறார்.
இதற்கு நடுவில் மும்பாஜி சிவாஜியின் பரம வைரிகளான முகலாயர்களிடம் சிவாஜி கிராமத்தில் கோவிலில் தனியாக இருப்பதாகவும், சிவாஜியை சிறை பிடிக்க இதுதான் தக்க தருணம் என்றும் சிவாஜி இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறான். முகலாயப் படை சிவாஜியை பிடிக்க புறப்பட விஷயம் சிவாஜிக்கு தெரிந்து விடுகிறது. அடுத்த கணமே சிவாஜி போருக்குத் தயாராகக் கிளம்ப, துக்காராம் தம் மன்னரின் நன்மை கருதி சிவாஜியைத் தடுக்கிறார். சிவாஜியோ கோவிலில் போர் நடந்து ரத்தக்கறை படிய வேண்டாம் என்று கிளம்ப எத்தனிக்க, துக்காராமோ பாண்டுரங்கனின் அருளால் அப்படி எதுவும் நிகழாது என்று உறுதியளித்து சிவாஜியை போகவிடாமல் தடுத்து விடுகிறார். பின் சிவாஜிக்கும், நாட்டிற்கும் வரவிருக்கும் பேராபத்தை தடுத்து ஆட்கொள்ளுமாறு மனமுருகி பாண்டுரங்கனிடம் வேண்டிப் பாடுகிறார் துக்காராம். முகலாயர் படை கோவிலில் நுழைந்து சிவாஜியைப் பிடிக்க, பாண்டுரங்கனின் அருளால் முகலாயர்கள் பிடிக்கும் சிவாஜி ஊர்மக்களில் பலபேராக உருமாறி முகலாயர்களைத் திகைக்க வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிவாஜியைப் பிடிக்க வரும் முகலாயர்களின் குதிரைப்படையை பாண்டுரங்கநாதரே சிவாஜி உருவெடுத்து, குதிரையில் சென்று எதிர்கொண்டு, பல எண்ணற்ற சிவாஜிக்களாக பெருகி முகலாயர்களை சின்னாபின்னாப் படுத்துகிறார்.
கோவிலில் இருக்கும் 'சத்ரபதி' சிவாஜிக்கு இவ்விஷயம் தெரியவர, துக்காராமரின் உண்மையான பக்திதான் கடவுள் தன் உருவங்களில் வந்து முகலாயர்களிடம் போரிட்டு தன்னையும், தன் நாட்டையும் காப்பாற்றியதற்கு காரணம் என கண்கூடாக உணர்கிறார். துக்காராமை தன் குருவாக ஏற்றுக் கொண்டு தனக்கு "இந்த நாடு வேண்டாம்...துக்காராமுக்கு தொண்டு செய்து வாழ்வதே இனி தனது விருப்பம்" என்று கூற, துக்காராமோ "மன்னன் தனது கடமையில் இருந்து தவறக் கூடாது... வீரனுக்கு கைவாளே தெய்வமாகும்... நாட்டு மக்களை பாதுகாப்பாதே மன்னனது உண்மையான பணி' என்று சிவாஜிக்கு அறிவுரை கூறி அனுப்புகிறார்.
மராட்டிய மன்னன் 'சத்ரபதி' சிவாஜியாக 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன். படம் முடியும் தருவாயில் கடைசி பதினைந்து நிமிடங்களில் 'சிவாஜி'யின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பிக்கிறது. எந்த வேடத்திற்கும் பொருத்தமான நம் நடிகப் பேரரசருக்கு இந்த 'சத்ரபதி' சிவாஜி வேடம் பொருந்தும் அழகு இருக்கிறதே! அது ஒரு தனி ஸ்பெஷல்தான் போங்கள். சும்மாவா பெயர் வைத்தார் பெரியார் 'சிவாஜி' என்று! அந்த உடையலங்காரமும், கழுத்தை அலங்கரிக்கும் முத்து மாலைகளும், தலையை அலங்கரிக்கும் அந்த 'சிவாஜி' ஸ்பெஷல் தலைப்பாகையும், உடையோடு சேர்ந்த கம்பீர நடையும், முகத்தில் கண நேரங்களில் தோன்றி மறையும் கணக்கில்லா உணர்வு பாவங்களும் சொல்லி மாள முடியாதவை.
மும்பாஜி துக்காராம் பெயரைச் சொல்லி சபையில் குற்றம் சுமத்தும் போது முகத்தைக் கேள்விக்குறியாக்கி, "துக்காராம்?"!!! என்று வினவ ஆரம்பிப்பதில் இருந்தே சிவாஜி சாம்ராஜ்யம் தொடங்கி விடுகிறது. துக்காராமின் மீது பழி கூறும் போது நம்ப முடியாமல் ,"நான் கேட்டது ஒன்று...நீ சொல்வது ஒன்று" என்று மும்பாஜியிடம் திகைக்கும் இடம் அருமையான அற்புதம். மும்பாஜி,"விக்கிரகம் மறைந்து போய் விட்டது," என்று கூறும் போது ,"என்ன விக்கிரகம் மறைந்து போய் விடுமா?!!! என்று ஏக ஆச்சர்யக் குறிகளுடன் பண்டிட்ஜியை 'சிவாஜி' நோக்குவது அம்சம். பின் விசாரணை மேற்கொள்ள கோவிலுக்கு வரும் போது நடந்து வரும் நடை இருக்கிறதே... நயமான நடை... (பக்தியுடன் கோவிலுக்கு வருவதைக் காட்ட வீர நடையை கொஞ்சம் தளர்த்தி சற்றே வீரமும், அமைதியும், பக்தியும் கலந்த நடையை இந்த இடத்தில் மிக வித்தியாசமாகக் காட்டியிருப்பார். கோவிலுக்கு செல்லுமுன் மிக அழகாக காலணிகளைக் கழற்றிவிட்டு செல்வார்.) விக்கிரகம் மறைந்து போனதை துக்காராமிடம் விசாரிக்கும் போது அதில் அதிகார தொனி அதிகமில்லாமலும் பார்த்துக் கொள்வார். எதிரே தாம் விசாரணை செய்வது ஒர் அப்பழுக்கில்லாத இறைவனடியார்... அவரிடம் மேற்கொள்ளக்கூடிய விசாரணை மிக மரியாதையானதாக இருக்க வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வு அதில் மிகச் சரியாகத் தெரியும். துக்காராமை 'சிவாஜி' உற்று நோக்குகையில் அவர் கண்களில் ஒரு தீட்சண்யமான ஒளி குடிகொண்டிருப்பதைக் காண முடியும். கண்களில் அப்படி ஒரு பிரகாசம் தீபமாய் ஜொலிக்கும் .நெற்றியில் இடப்பட்டுள்ள பிறைபொட்டு அவருக்குள்ளிருக்கும் வீரத்தை விவேகமாய் வெளிப்படுத்தியபடியே இருக்கும். துக்காராம் மெய்மறந்து பாண்டுரங்கனை பாடித் தொழுது கடவுளின் சிலை மறுபடி அதே இடத்தில் காணப்பட்டவுடன் 'சிவாஜி' யின் கண்களின் ஒளி மேலும் பிரகாசமாய் தீவிரமடையும். "இந்தப் புனிதமானவன் நிரபராதி என்றும், மகா பக்தர் என்றும் நாமறிவோம்....ஆனால் உலகமறிய வேண்டும்... அது குறித்தே இன்று இந்த கடின பரிட்சையை வைக்க வேண்டி வந்தது" என்று துக்காராமனின் மனைவி அஞ்சலிதேவியிடம் கூறும் போது நீதி நெறி தவறாத மன்னனின் மனநிலைமையை நியாயாதிபதியாய் அற்புதமாய் உணர்த்துவார் நடிகர் திலகம் 'சிவாஜி'
முகலாயர்கள் தன்னை சிறை பிடிக்க வருகிறார்கள் என்று ஒற்றன் மூலமாக செய்தி வந்தவுடன் அதுவரை சாந்தமாய் இருந்தவரிடம் வீரம் கொப்பளித்துக் கிளம்பும். "நாமே சென்று அவர்களை எதிர்ப்போம்... வெற்றியோ அல்லது வீர மரணமோ தெரிந்து கொள்வோம்" என்று முழக்கமிட்டு கிளம்பும் வேகம் இருக்கையை விட்டு நம்மை எழுந்து விடச் சொல்லும். பின் துக்காராம் சாந்தப்படுத்தும் போது,"என்னைத் தடுக்காதீர்கள்... திடீர்ப் போராட்டங்கள் நமக்கும், நம் வாளுக்கும் பழக்கம்தான்...ஜெய் பவானி!" என்று சிங்கமாய் கர்ஜிக்கும்போது 'சத்ரபதி' சிவாஜி மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் கொரில்லாப் போரை அந்த கர்ஜனை ஞாபகப்படுத்தும். அதற்கு துக்காராம் "தங்கள் தெளிவும், துணிவும், வீர பராக்கிரமும் எனக்கும் தெரியும்" என்று இவரிடம் கூறும் போது வீரமும், பெருமிதமும் ஒன்று சேர மீசையை ஒரு முறுக்கு முறுக்குவார் பாருங்கள்...தன் வீரத்தின் மீது தான் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை முகத்தில் அப்படியே பட்டவர்த்தனமாய் நர்த்தனமாடும்... பின் துக்காராம் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மீண்டும் அமைதியானவுடன் கடவுள் சிவாஜி அவதாரமெடுத்து குதிரையில் காட்டில் பயணிக்கையில் நடிகர் திலகம் குதிரையேற்றம் செய்தபடி வரும் காட்சிகள் அமர்க்களமோ அமர்க்களம். (இந்த இடத்தில் உடையின் நிறம் ரோஸ் கலருக்கு மாறியிருக்கும்... அவ்வளவு பொருத்தமாக அந்த உடையும், உடையின் நிறமும் நடிகர் திலகத்திற்குப் பொருந்தியிருக்கும்.) பொதுவாகவே நடிகர் திலகத்தின் குதிரையேற்றத்தைக் காணக் கண்கோடி வேண்டும். (உத்தம புத்திரன், மருத நாட்டு வீரன், படித்தால் மட்டும் போதுமா... இப்படிப் பல) அதிலும் இந்தக் குறிப்பிட்ட காட்சியில் ஒரிஜினல் சத்ரபதியே வந்து விட்டாரோ என்று அதிசயிக்கும் அளவிற்கு அற்புதமாக குதிரை சவாரி செய்து அசத்துவார். அதுவும் நெருக்கமான இரண்டு மரங்களுக்கு இடையே குதிரையை வெகு லாவகமாக ஓட்டியபடி வரும் அழகே அழகு. பின்னர் என்ன! ஒரே அதகளம்தான். எதிரிகள் தன்னைச் சுற்றி குதிரைகளில் சூழ்ந்து கொள்ள வாளை உருவியபடி நடுவில் புரவியில் அமர்ந்தபடி வாளால் எதிரிகளை வெட்டி வீழ்த்துவது அதியற்புதம். நடுநடுவில் ஹா ஹா ஹா,..என்று ஓங்காரமிட்டு வெற்றிக்களிப்பில் சிரித்தபடியே முகலாய வீரர்களைப் பந்தாடுவது செம தூள். ஒரு சிவாஜி பல சிவாஜிக்களாய் மாறி (matrix பாணியில்) சண்டையிடும் போது காமெராக் கோணங்கள் அற்புதம். மிக பிரமாதமாய் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சி. (லொக்கேஷன் வேறு நெஞ்சையள்ளும்) நடிகர் திலகத்தின் கம்பீரத்தாலும், ஈடு சொல்ல முடியாத அவருடைய ஈடுபாட்டாலும் இந்த சண்டைக்காட்சி அவருடைய சண்டைக்காட்சிகளில் ஒரு மணிமகுடம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு சமயமும் சண்டையிட்டபடியே குதிரையை அவ்வளவு அற்புதமாகத் திருப்புவார். நடிகர் திலகம் குதிரையில் அமர்ந்து அதை நாம் பார்க்கும் சுகமே அலாதி. ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் இந்தப் படம் நடிகர் திலகம் சத்ரபதியாய் நமக்குக் காட்சியளிக்கத் தொடங்கியவுடன் விறுவிறுப்பின் எல்லைகளை நோக்கி வீறுநடை போட ஆரம்பித்து விடுகிறது. ஒரு கால் மணி நேரம்... அதுவும் நன்றிக்கடனுக்காக நடித்துத் தோன்றிய கௌரவத் தோற்றம்தான்.... ஆனால் நடிகர் திலகமாய் நம் கண்களுக்குத் தெரியாமல் முழுக்க முழுக்க மராட்டிய மாமன்னன் 'சத்ரபதி' சிவாஜியாகத்தான் இப்படத்தில் ஆளுமை புரிகிறார் நடிகர் திலகம். அந்த சில நிமிடங்களில் தன் தனிப்பட்ட 'சிவாஜி' முத்திரையால் நம்மை சிலிர்க்க வைத்து விடுகிறார் நடிகர் திலகம். (இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது. தமிழ் டப்பிங்கில் நடிகர் திலகம் தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் கொடுத்திருந்தார். அதனால் இக்காவியம் இன்னும் உயிரோட்டமாய் இருந்தது)
பக்த துக்காராம் 'சிவாஜி'யால் மாபெரும் வெற்றி க(கொ)ண்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!
Bookmarks