-
21st November 2014, 04:11 PM
#11
Junior Member
Newbie Hubber
"மூன்றெழுத்து"(Thanks to Saradha)
ராமண்ணா - ரவிச்சந்திரன் – ராமமூர்த்தி(tk) என்ற 'r' அணியின் முந்தைய படைப்பான 'நான்' திரைப்படத்தின் அபார வெற்றியைத்தொடர்ந்து, அதே போன்றதொரு வித்தியாசமான படைப்பாக வந்தது 'மூன்றெழுத்து' திரைப்படம்.
முதல்காட்சியில், மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் கப்பல். அதில் பயணம் செய்துகொண்டிருக்கும் கதாநாயகன் ரவிச்சந்திரன், கப்பல் கேண்டீனில் போய் அமர, அங்குள்ள பணிப்பெண் ஒரு புத்தகத்தைக்கொடுக்கிறாள். புத்தகத்தைத் திறக்க, டைட்டில்கள் ஓடத்துவங்குகின்றன. டைட்டில் முடிந்ததும், கப்பலில் திருட்டுத்தனமாக பயணம் செய்து வரும் ஆனந்தனைக் கப்பல் காவல்துறையினர் விரட்டிவர, அவர் ரவியிடம் உதவி கேட்டுக் கெஞ்ச, இவரும் நம்பி அடைக்கலம் கொடுக்கிறார். சென்னையில் இறங்கியதும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்து விட்டு, தந்தை மேஜரைப்பார்க்கச்செல்கிறார். எங்கே?. சிறைச்சாலைக்கு. சிறைச்சந்திப்பில் மேஜர், தான் சிறைக்கு வந்த சம்பவத்தைக்கூற....... 'ப்ளாஷ்பேக்' ஆரம்பம்......
லட்சாதிபதியொருவர் தன்னுடைய பார்ட்னருடனான பார்ட்னர்ஷிப் பிஸினஸை முடித்துக்கொண்டு, தன் மனைவி மக்களோடு ஊர் திரும்பிச்செல்ல இருந்த நேரம், பார்ட்னரிடமிருந்து தனக்கு வரவேண்டிய பங்குத்தொகை வர தாமதமாகியதால், தன் குடும்பத்தினரை விமானத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டு, தன்னிடமிருக்கும் ஐந்து லட்ச ரூபாயை (இன்றைய மதிப்பு ஐந்துகோடி) நோட்டுக்கட்டுகளாக (அப்போது அதிகபட்ச கரன்ஸி நோட்டே நூறு ரூபாய்தான், எனவே 5,000 கட்டுக்கள்) பெட்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது பார்ட்னர் 'என்னத்தே' கன்னையா தன் பரிவாரங்களுடன் வருகிறர். வீட்டில் தனியே இருப்பவரிடம், பணத்தை செட்டில் பண்ணுவதாகச்சொல்லி, எதிர்பாராத நேரம் துப்பாக்கியால் சுடுகிறார். சுடப்பட்டபோதும் அவர் கையிலிருந்த துப்பாக்கியைப்பிடுங்கி, அதைக்காட்டி மிரட்டியபடியே பணப்பெட்டியுடன் வெளியேறும் அந்தப்பணக்காரர், அப்போதுதான் தன் குடும்பத்தை விமானத்தில் அனுப்பி விட்டு திரும்பிக்கொண்டிருக்கும் தன் விசுவாசமான டிரைவரான மேஜர் சுந்தர்ராஜனிடம் பணப்ப்ட்டியை ஒப்படைத்துவிட்டு உயிரை விடுகிறார். பணப்பெட்டியுடன் காட்டுக்குள் ஓடும் டிரைவர், அதை ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிட்டு, அது எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பேப்பரில் குறிப்பு எழுதிக்கொண்டிருக்கும்போது, தன்னைத்தாக்கி பெட்டியை அபகரிக்க வரும் ஒருவனைக்கொன்று விடுகிறார். பின்னர் குறிப்பை பூர்த்தி செய்து, அதை மூன்று பகுதிகளாகக்கிழித்து, தன் நண்பர்களான ஊட்டியிலிருக்கும் அசோகனிடம் ஒரு பகுதியையும், நாகர்கோயிலில் இருக்கும் ஓ.ஏ.கே.தேவரிடம் ஒரு பகுதியையும், ஐதராபாத்திலிருக்கும் சுருளிராஜனிடம் ஒரு பகுதியையும் கொடுத்துவிட்டு, போலீஸில் சரண்டர் ஆகி சிறைக்குச்செல்கிறார்.
ஃப்ளாஷ்பேக் முடிகிறது. தான் குறிப்புக்களைக்கொடுத்த அம்மூவரின் விலாசங்களையும் ரவியிடம் மேஜர் கொடுத்து, அந்தக்குறிப்புகளை ஒன்று சேர்த்து அவற்றின் உதவியுடன் பணப்பெட்டியை எடுத்து, தன் முதலாளி குடும்பத்திடம் ஒப்படைக்குமாறு தன் மகனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். வீட்டுக்குச் செல்லும் அவர் தன்னுடன் தங்கியிருக்கும் ஆனந்தனிடம் பேச்சோடு பேச்சாக அந்த விலாசங்களைச்சொல்லி விட்டுப்புறப்படுகிறார். வந்தது வில்லங்கம். ஆம்... ஆனந்தன் யாருமல்ல வில்லன் 'என்னத்தே' கன்னையாவின் கையாள்தான். அட்ரஸைக் கைப்பற்றியதுபோல அந்த குறிப்புகளையும் கைப்பற்றுமாறு ஆனந்தனை அனுப்ப, ரவிக்கு முன்பாகவே ஒவ்வொரு இடத்துக்கும் ஆனந்தனும் போகிறார். அந்த குறிப்புகளை எப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் கைப்பற்றி அந்தப்பணப்பெட்டியை எடுக்கின்றனர் என்பதை, மூன்று மணி நேரம் படு சுவாரஸ்யமாக எடுத்திருப்பார்கள்
முதலில் அசோகனைத்தேடி தன் நண்பன் தேங்காயுடன் ரவி போவதற்குள், அசோகனை வில்லனின் ஆட்கள் கடத்தியிருப்பார்கள். அவரைத்தேடிப்போகும்போது, அசோகனின் மகள் ஜெயலலிதாவும் இவர்களோடு சேர்ந்துகொண்டு அப்பாவைத்தேடி புறப்படுவார். (அப்படிப்போகும்போது, நாளடைவில் ரவியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் விரும்பத்தொடங்கிவிடுவார்கள் என்பதை ஊகிக்காவிட்டால் நாம் தமிழ்ப்படம் பார்க்க லாயக்கில்லாதவர்கள்). ........(2)
இரண்டாவது ஆளான ஓ.ஏ.கே.தேவரோ, தன்னிடம் இருக்கும் குறிப்புக்களைத்தராமல் அடம் பிடிப்பார். அங்கே தேவரின் மைத்துனரும் தெருக்கூத்தாடியுமான நாகேஷும் இவர்களுடன் சேர்ந்துகொள்வார். ஏகப்பட்ட மின்சார வேலிகளுக்கு மத்தியில் அதைப்பதுக்கி வைத்திருப்பார். அவரை ஏமாற்றி அதை எடுக்கும் நேரம் ஆனந்தனும் அவரது ஆட்களும் வர, கடுமையாக சண்டையிட்டு, வில்லன் கோஷ்டியை மின்சார வேலிகளுக்குள் மாட்டிவிட்டு, இவர்கள் தப்பிப்பார்கள். அப்பாடா ஒரு குறிப்பு கிடைத்தது. அசோகனிடம் இருப்பதைக்கைப்பற்ற வேண்டுமே. அதைத்தேடி, அவரைப்பிடித்து வைத்திருக்கும் வில்லன் கூட்டம் தங்கியிருக்கும் இடத்துக்கு இரவில் போய்த்தேட, அவர் தன் குடுமிக்குள் மறைத்து வைத்திருப்பார். விளைவு?. அசோகனின் குடுமி கட். குறிப்பு ரவியின் குரூப் கையில்.
இதனிடையே, முதலாளியின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. முதலாளியின் மூத்த மகள் ஷீலா, ஓட்டலில் நடனமாடி சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். அதைப் பார்த்து தவறாகப் புரிந்துகொண்டு ரவி ஷீலாவைக்கண்டிக்க, அந்த வேலையையும் விட்டுவிடுகிறார். அடுத்த முறை அவர்களை ரவி சந்திக்கும்போது, அம்மாவைத்தவிர மொத்தக்குடும்பமும் பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறது. அதிர்ந்து போன ரவி அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப்போனால், அங்கே ஷீலாவின் அம்மா தற்கொலைக்கு முயற்சிப்பதைப்பார்த்து அவரைக் காப்பாற்றி, குடும்ப மொத்தத்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, பிளானின் மூன்றாவது பகுதியைப்பெற ஐதராபாத் போகிறார்.
மூன்றாவதாக ஐதரபாத்திலிருக்கும் சுருளியிடம் போனாலோ, அவர் ரவி தன் மகளான ஷ்ரீவித்யாவை ரவி ஊட்டி ஏரியில் காப்பாற்றியதிலிருந்து அவரையே நினைத்து உருகுவதாகவும், வித்யாவை திருமணம் செய்ய ரவி சம்மதித்தால் மட்டுமே குறிப்பைத்தர முடியும் என்றும் கறார் செய்ய, ரவிக்கு (ஷண்முகி கமல் பாணியில்) 'போங்கடா' என்றாகிறது. ஆனாலும், ரவி தன் முயற்சியில் வெற்றிபெற்று, அந்தப்பணப்பெட்டியை கண்டெடுத்து, வறுமையில் வாடும் முதலாளியின் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா, ரவியுடனான தன் காதலை விட்டுத்தர சம்மதிக்கிறார். (இந்த இடத்தில் ஒவ்வொருவரும் பேசுவதாக டி.என்.பாலு 'மூன்றெழுத்து வசனம்' எழுதியிருப்பார் பாருங்க... வாவ்....). இறுதியில் மனம் நெகிழ்ந்துபோன சுருளி, தன் குறிப்பைத்தர சம்மதிக்கிறார்.
மூன்று குறிப்பும் கையில் ரெடி. ஒன்றாக சேர்த்துப்பார்த்தால் 'தி.மு.க.' என்று வருகிறது. (நாகேஷ்: “ஏண்டாப்பா, உங்க அப்பா பெரிய அரசியல்வாதியாக இருப்பாரோ?”). அப்புறம் மாற்றி மாற்றி வைத்துப்பார்த்தால் வருவது 'கமுதி ‘. ஓ... அந்த ஊரில்தான் புதைக்கப்பட்டிருக்கிறதா?. அதே வரிசையில் வைத்து பிளானைத்திருப்பினால், பணப்பெட்டி எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்பதை பிளான் தெளிவாகக் காட்டுகிறது. என்ன பயன்?. திடீர் பவர் கட். மீண்டும் கரண்ட் வந்தபோது மொத்த பிளானும் மாயம். சரி, இடம்தான் தெரிந்துவிட்டதே என்று அங்கு போனால், கையில் பிளானுடன் பணப்பெட்டியை தோண்டியெடுத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் வில்லன் மனோகர் (கிளைமாக்ஸில் மட்டும் வருவார்). வழக்கம்போல கிளைமாக்ஸ் சண்டை.
அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் நவீன எந்திரங்கள் உதவியுடன் சண்டை போடுகின்றனர். ஓடிக்கொண்டிருக்கும் புல்டோஸரின் பிளேடுக்கு முன்னால், டூப் போடாமல் ரவி, வில்லன் ஆட்களுடன் புரண்டு புரண்டு சண்டை போடுவது நம் உடலை சிலிர்க்க வைக்கும். ஒருவழியாக வில்லன் கோஷ்டியுடன் சண்டையிட்டு பணப்பெட்டியைக் கைப்பற்றியாகிவிட்டது. ஆனால் அதற்குள் மெயின் வில்லன் 'என்னத்தே' கன்னையா தன் ஆட்களுடன் சுருளியின் வீட்டுக்கு வந்து அங்கிருக்கும் சுருளி, அவர் மகள் வித்யா, ஜெயலலிதா மற்றும் முதலாளியின் மொத்தக்குடும்பத்தையும் துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக வைத்து, சோபாவின் பின்னால் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டு பணப்பெட்டியுடன் ரவியின் வரவை எதிர்பார்த்திருக்க, வெற்றிகரமாக பெட்டியுடன் ரவி, தேங்காய், நாகேஷ் கோஷ்டி வர..... யாரும் எதுவும் பேசவில்லை, எல்லோரும் பிரமைபிடித்தவர்கள் போல சோபாக்களில் உட்கார்ந்திருக்க, சுற்றும் முற்றும் பார்க்கும் ரவிக்கு, சற்று தொலைவில் கிடக்கும் கன்னையாவின் அந்த ஃபேமஸான தொப்பி கண்ணில் படுகிறது....... புரிஞ்சு போச்சு. எதிர்பாராமல் மின்னல்வேகத்தில் வில்லன் கூட்டத்தின்மேல் தாக்குதல் நடத்த, கிளைமாக்ஸ் சண்டையாச்சே. சொல்லணுமா?. பயங்கரமாக சண்டையிட்டு எல்லோருடைய கையும் ஓயும்நேரம் அசோகன் போலீஸுடன் நுழைய... அப்புறம் என்ன முதலாளி மனைவியிடம் பணப்பெட்டியை ஒப்படைப்பதும், ரவியும் ஜெயலலிதாவும் ஒன்று சேர்வதும், எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதும்.... கொடுத்த காசுக்கு மேலேயே படம் திருப்தியளித்த சந்தோஷத்துடன் ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறுவதுமாக.........
"மூன்றெழுத்து"ரவிச்சந்திரனின் புகழ் மகுடத்தில் மற்றுமோர வைரம் என்றால் அது மிகையில்லை. 'மாறன்' என்ற கதாபாத்திரத்தில் வரும் அவர், படம் முழுக்க அற்புதமான பங்களிப்பைத் தந்திருப்பார். சண்டைக்காட்சிகளில் படு சுறுசுறுப்பு, பாடல் காட்சிகளில் வேகம் என்று அசரவைத்திருப்பார்.
பளபளவென்ற தங்க நிற முழு கோட், அதே நிறத்தில் தொப்பி இவற்றுடன் மெயின் வில்லனாக வரும் 'என்னத்தே' கன்னையாவை அந்தப் பாத்திரத்தில் போட்ட இயக்குனர் ராமண்ணாவின் தைரியத்தை பாராட்ட வேண்டும். அவரும் வழக்கமான வில்லன்களின் உறுமல் பாணியை விட்டுவிலகி நாசூக்கான வில்லனாக, ஆனால் செயலில் படுபயங்கரமான ஆளாக அந்த வேடத்துக்கே புதுப்பொலிவைத் தந்திருந்தார். பிற்காலத்தில் சத்யராஜ் போன்றோர் நடித்த அலட்சிய வில்லன் ரோல்களுக்கு முன்மாதிரி இவர்தான். நெடுநாளைக்குப்பிறகு ஆனந்தன் முழுப்படத்திலும் வில்லனாக வந்து நிறைய சண்டைகள் போட்டார். அசோகனின் நடிப்பை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, அந்த அளவுக்கு 'நான்' படத்தில் பெற்ற நல்ல பெயரைத் தொடர்ந்தார்.
ஜெயலலிதா மாடர்ன் உடைகளில் வந்து இளைஞர்களைக் கவர்ந்ததுடன், வித்தியாசமான நடிப்பையும் தந்திருந்தார். குறிப்பாக, பாதியில் நின்று போன நாகேஷின் வள்ளித்திருமணம் தெருக்கூத்தை, ('கொஞ்சும் கிளி குருவி மைனாவே, கூட்டமாய் இங்கு வராதே') ஆங்கில மெட்டில் தொடர்வது. மெல்லிசை மன்னர் t.k.ராமமூர்த்தி, டி.எம்.எஸ்., l.r.ஈஸ்வரி மூவரின் அபார உழைப்புக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டு.
ரவியின் படமென்றால் கதாநாயகியை டீஸ் செய்யும் பாடல் இருக்க வேண்டுமே...!. இருக்கின்றன, ஒன்றுக்கு இரண்டாக. முதல் பாடல், தங்கள் அறையில் புகுந்துவிட்ட பாம்புக்கு பயந்து ரவியிடம் தஞ்சம் புகும் ஜெயலலிதா மற்றும் தோழிகளை கிண்டலடித்து அவரும் தேங்காயும் பாடும் "இரவில் வந்த் குருவிகளா... அடி குட்டிகளா" tms மற்றும் பொன்னுசாமி பாடியது. செட்டுக்குள் படமாக்கப்பட்டது. இன்னொன்று, கிராமத்துப்பெண்களிடம் காருக்கு தண்ணீர் கேட்டு அடாவடியாக நடந்துகொள்ளும் ஜெயலலிதாவை டீஸ் செய்து "ஆடு பார்க்கலாம் ஆடு, இடையழகைப் பார்க்கும் என்னோடு" பாடல் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது.
ஓட்டல் அறையில் தங்கியிருக்கும்போது, குளிக்கும் இடத்தில் ரவியை நினைத்து ஜெயலலிதா பாடும் "காதலன் வந்தான் கண்களில் நின்றான்" பாடல் (சுசீலா) அருமையான மெலோடி.
ஏற்கெனவே நான் படத்தில் ஃபியட் காருக்குள் ஒரு டூயட் எடுத்தாச்சு. இப்போ அதைவிட சின்ன இடம் கிடைக்குமா என்று பார்த்தார் ராமண்ணா. வில்லனிடம் அகப்பட்ட ரவியையும் ஜெயாவையும், ஒரு பெட்டியில் அடைத்து லாரியில் அனுப்ப, நிமிர்ந்துகூட உட்கார முடியாத அந்தப்பெட்டியில் (tms, சுசீலா) டூயட் பாட்டு "பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி, பெட்டைக்கோழி பக்கத்திலே கட்டுச்சேவல்" அருமையான மெட்டு. அதைவிட அற்புதமான துல்லியமான ஒளிப்பதிவு. ஒரு ஒளிப்பதிவாளரின் திறமை, இம்மாதிரி சவால் பாடல்களைப் படமாக்குவதில்தான் தெரியும்.
வில்லனின் கோட்டைக்குள் நுழைய தந்திரம் செய்து அவனுடைய அடியாட்களிடம் மயங்கியது போல ஜெயலலிதா பாடும் "பச்சைக்கிளி... இச்சைமொழி... பன்னீரில் போட்டெடுத்த மாங்கனி" பாடலை l.r.ஈஸ்வரி பாடியிருந்தார்.
இத்தகைய, மனதை வருடும் பாடல்களுக்கு நடுவே நம் மனதை உருக வைப்பது ஷீலாவும், அவரது தம்பி தங்கைகளும் தெருவில் பிச்சையெடுக்கும்போது பாடும் பாடல்....
"தெய்வத்தின் கோயில் தெய்வம்தான் இல்லையே
இது மனிதனின் பூமி மனிதன்தான் இல்லையே
இவை இரண்டும் இல்லா வேளையிலே ஏழைப்பெண்கள் வீதியிலே..
..........................................
வாழ்வது எங்கள் ஆசை ஒரு மாளிகை ராணியைப்போலே
ஆண்டவன் காட்டிய பாதை, ஒரு ஆண்டியின் பிள்ளையைப்போலே"
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இப்பாடல் நம் நெஞ்சை கனக்கச்செய்யும். கந்தல் உடையுடன் குழந்தைகள் தட்டேந்தி பிச்சையெடுக்கும்போது (எப்படி வாழ்ந்த குடும்பம்) நம் கண்கள் கண்ணீரைச் சிந்தும்.
ரவிச்சந்திரன், ஜெயலலிதா, அசோகன், ஆனந்தன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், என்னத்தே கன்னையா, ஓ.ஏ.கே.தேவர், மேஜர் சுந்தர்ராஜன், மனோகர் (கௌரவத்தோற்றம்), ஷீலா, அம்முக்குட்டி புஷ்பமாலா, மாஸ்டர் பிரபாகர், 'பராசக்தி' ரஞ்சனி இவர்களோடு ஜெயலலிதாவின் தோழிகள் கூட்டம், வில்லனின் அடியாட்கள் கூட்டம் என்று படம் முழுக்க ஆட்கள் நிறைந்திருப்பார்கள்.
மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி படத்தின் அத்தனை பாடல்களையும் hit பண்ணியிருந்தார். இந்த அருமையான வண்ணப்படத்தை கொஞ்சமும் தொய்வின்றி இயக்கியிருந்தார் ராமண்ணா. கதை வசனத்தை டி.என்.பாலு எழுதியிருந்தார். (டி.என்.பாலு அடுத்த ஆண்டில் (1969) நடிகர்திலகத்தின் 'அஞ்சல்பெட்டி 520' மூலம் இயக்குனர் ஆனார். பின்னர் ரவி நடித்த 'மீண்டும் வாழ்வேன்', கமல் நடித்த 'சட்டம் என் கையில்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கினார்).
ஒரு முக்கியமான கொசுறு தகவல்: 1970-ல் தயாரிக்கத்துவங்கி 1973-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதை 'மூன்றெழுத்து' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்.
'மூன்றெழுத்து' 1968-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக, சிறப்பாக ஓடியது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st November 2014 04:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks