நண்பர்களே,
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
நடிகர் திலகத்தைப் பற்றி விமர்சிப்பதைத் தவிர்த்தல் நலம்.
கோபால் சொன்னது போல் அவர் தொடாத விஷயமே நடிப்பில் இல்லை. காமிரா, எடிட்டிங், என திரைப்படத்துறையின் ஒவ்வொரு நுணுக்கமும் அறிந்த கலைஞன். அவரவருடைய சுதந்திரத்தில் அவர் தலையிட விரும்பாத காரணத்தால் தான் சில தவிர்த்திருக்க வேண்டிய படங்கள் உருவாகக் காரணமானார்.
எங்கோ அடிமட்டத்தில் இருந்த தமிழ் சினிமா ரசனையை வலுக்கட்டாயமாக மேலே இழுத்து வந்து உச்சாணிக் கொம்பில் அவர் உட்கார வைத்ததால் தான் நம்மால் இன்று தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய பரிமாணங்களை பல்வேறு கால கட்டங்களில் காண முடிகிறது.
வணிக நோக்கில் அவர் நடித்த படங்கள் வசூல் பிரளயம் ஏற்படுத்தியவை என்பதைப் பலமுறை அவர் நிரூபித்து விட்டார். என்றாலும் அவர் அதனையே கருதாமல் தமிழ் சினிமாவை மேல் நோக்கி ஏற்றிச் சென்றதால் தான் நம்மால் பீம்சிங் போன்ற உன்னத இயக்குநர்களைக் காண முடிந்தது. பின்னாளில் பல இயக்குநர்கள் இவர்களை ரோல் மாடலாகக் கொண்டதும் அதனால் தான்.
தன்னுடைய மொத்த படங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை அளவிற்கு அவரை வைத்து இயக்கிய இயக்குநர்கள் பணியாற்றினார்கள். ஒரு சில இயக்குநர்களின் படங்களைத் தவிர பெரும்பாலான இயக்குநர்களின் படங்களில் அவருடைய நடிப்பில் வித்தியாசம் நிச்சயம் தென்படும். அந்த ஒரு சில இயக்குநர்களின் படங்களிலும் ரசிகர்களுக்கான சில காட்சிகள் போக பெரும்பாலான காட்சிகளில் அவர் நடிப்பில் ஒரு கோட்டுக்குள் இருக்கும்.
உடை விஷயம், உடல் விஷயம் என சில படங்களை இங்கு ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தனர். அவை எண்ணிக்கையில் மிக சொற்பமே. இன்னும் சொல்லப் போனால் அவை வணிக ரீதியாக வெற்றி பெற்றவை. ஒரு கலைஞன் கலைக்கு தன்னை அர்ப்பணிப்பது மட்டுமின்றி வணிக ரீதியாகவும் அதனை எதிர்கொள்ள வேண்டும். அதைத் தான் அவர் செய்தார்.
வயதுக்கு ஒவ்வாத இளம் நடிகையருடன் நடித்தார் என்பது அவருக்கு மட்டுமே பொருந்தக் கூடிய விஷயமல்ல. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கலைஞர்களை யாராலும் கூற முடியாது.
பாலு மகேந்திராவின் லட்சியப் படமாக நடிகர் திலகத்துடன் அவர் இணைந்து பணியாற்ற முற்பட்டதும் அவரும் அதற்கு இசைவளித்ததும் கிட்டத்தட்ட படம் துவங்கும் வரையில் போய் பின்னர் நின்று போனதும் நமக்கு துரதிருஷ்டமே. சந்தர்ப்ப வசத்தால் தன் மகளையே ஒரு விலைமாதாக அந்த விடுதியிலேயே சந்திக்க நேரிடும் ஓர் தந்தையின் கதை அப்படத்தின் கரு.
ஒரு சில படங்களை வைத்து அவரை விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
சினிமாவுக்கு வந்த புதிதிலேயே தன் வயதிற்கு மீறி தந்தை பாட்டன் போன்று முதியவராக நடித்தவர் நடிகர் திலகம்.
அவருடைய பங்களிப்பின்றி தமிழ்த்திரையுலகம் புதிய உச்சங்களைக் கண்டிருக்காது என்பதே உண்மை.
பின்னாளில் பல புதிய கலைஞர்கள் புதிய பாதையில் பயணிக்க சாலை அமைத்தவர் நடிகர் திலகம். அவர் இருந்த தைரியத்தில் தான் ஸ்ரீதர் பீம்சிங் போன்ற பல இயக்குநர்கள் புதிய விஷயங்களை சினிமாவில் கொண்டு வந்தார்கள்.
இது அன்புத் தம்பி கமல் அவர்களின் திரி என்பதால் இதற்கு மேல் இப்பதிவை நீட்டிக்க விரும்பவில்லை.
படித்ததற்கும் வாய்ப்பிற்கும் உளமார்ந்த நன்றி.
Bookmarks