முரட்டு முனியனும் மூர்க்கன் மணியனும்
முட்டாள் முத்துவும் மூன்றாம் மாடியில்
மச்சு வீடு கட்டும் தச்சர் மூன்று பேரும்

முனியன் சொன்னான் மதிய வேளையில்!
இன்னிக்கும் என் டப்பாவில் குழம்பு சாதம்
என்ன புழைப்பு ! பட்டது போதும்
இது போல் நாளை பட்டை சாதமெனில்
எகிறி குதித்திடுவேன் இங்கிருந்து தரைதனில்

மணியன் தூக்கிலோ இன்றும் புளி சாதம்
மன்னிக்க மாட்டேன்! மனைவியா அவள்?
நாளைக்கும் புளியெனில் நானும் குதித்துடுவேன்

முத்துவின் டப்பாவில் இன்றும் மோர் சாதம்
மாட்டேன் மாட்டேன் நாளைக்கும் மோரென்றால்
நான் என்ன மாங்கா மடையனா?
நாலு மாசமா மாறவில்லை ! குதிப்பேன் நானும்!

மறு நாளும் வந்தது மதியம் அமர்ந்தனர் மூவரும்
முனியன் டப்பாவில் குழம்பு சாதம் ! வெறுத்தான்
மாடியிலிருந்து குதித்தான் மறுநாளே மடிந்தான்

மணியன் தூக்கினில் பச்சை புளியின் வாசம்
மாடியிலிருந்து குதித்தான் மறுநாளே மடிந்தான்

முத்துவின் டப்பாவிலோ இன்றும் மோர் சாதம்
மாடியிலிருந்து குதித்தான் மடிந்தான் மறுநிமிடம்

மடியுமுன் கொடுத்தனர் இருவர் மரணவாக்குமூலம்
முனியனும் மணியனும் மனைவி தான் காரணம்

மூவரின் ஈமச்சடங்கு மூன்றாம் நாள்
முனியனின் மனைவி மல்லிகா முறிந்தாள்
மோசம் போனேனே உன் மனம் அறியாமல் !
மாமா ! மணக்க கறி சோறு மாற்றியிருப்பேனே !

மணியனின் மனைவி மேனகா மறுகினாள்
மச்சான்! உன் மனசுகேத்த மாதிரி மீன் குழம்பு
மாங்கா தொக்கு கொடுக்காமல் போனேனே!

முத்துவின் மனைவியோ மௌனமாய் நிற்க
மயானத்தில் மற்றவர் அவளை முறைக்க
மறுத்தாள் அவள்! நானில்லை நானில்லை காரணம்!

மடையன் அவன் மறைவுக்கு அவனேதான் காரணம் !
முட்டாள் கணவன் ! டிபன் பாக்ஸில் அனுதினமும்
மோர் சாதம் அவனே தான் கட்டிப்பான் !