-
22nd January 2016, 10:10 AM
#11
Junior Member
Newbie Hubber
ராஜபார்ட் ரங்கதுரை -1973.
ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.
முதலில் கதை பயணிக்கும் திசைகள்......
ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.
ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.
ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).
ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)
இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.
அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.
ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந ்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.
அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.
தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .
தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....
நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).
அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.
ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.
இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.
பலவீனம் என்றால்,
அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .
இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.
குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.
மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.
நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.
ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
22nd January 2016 10:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks