Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவகாமியின் செல்வன் - ஒரு மீள் பார்வை – Part I

    நடிகர் திலகத்தின் மிக பிரபலமான படங்களை சிலாக்கிப்பதை விட அதிகம் பேசப்படாத ஆனால் தரத்தில் குறைவில்லாத படங்களைப் பற்றிய கருத்துகளை விமர்சனங்களை முன் வைப்பது என்பது எப்போதும் எனக்கு பிடித்தமான ஒன்று. அந்த பட்டியலில் சிவகாமியின் செல்வனுக்கும் இடம் உண்டு. இந்த படம் எனக்கு பிடித்துப் போனதற்கு இந்த படத்தின் “தலைப்பு” கூட ஒரு உளவியல் காரணமாக இருக்கலாம்.

    இந்த படம் வெளியானபோது.அது சந்தித்த மிகப் பெரிய சவால் இதன் மூலப்படமான ஆராதனாவோடு ஒப்பிட்டப்பட்டதுதான். 85 வருட தமிழ் பேசும்பட வரலாற்றில் இது போன்ற ஒப்பிடலை வேறு எந்த தமிழபடமும் எதிர்கொண்டதில்லை காரணம் ஆராதனா என்ற இந்திப் படம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஏற்படுத்தியிருந்த தாக்கம். ஆராதனா படத்தின் பாடல்கள் மிக மிக பிரபலம். அந்தப் பாடல்களின் சாயல் துளி கூட இல்லாமல் மெல்லிசை மன்னர் போட்டிருந்த அருமையான ட்யூன்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் ஒரிஜினல் போல இல்லை என்ற விமர்சனம் படத்தை பாதித்தது என்பது உண்மை.

    அனைவருக்கும் தெரிந்த இந்த விஷயங்களை இப்போது மீண்டும் இங்கே பதிவிட காரணம் அது போன்ற baggage எவற்றையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு இப்போது வெளியாகியிருக்கும் சிவகாமியின் செல்வன் படத்தை பார்க்கும் எவருக்கும் படத்தின் தரம் விளங்கும். அந்த அடிப்படையில் எழுதப்படும் எண்ணங்களே இந்த பதிவு.

    இந்த படத்திற்கு பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தவர்களைப் பற்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் மஸ்தான். இயக்குனர் சிவிஆரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக 70-களில் விளங்கியவர். வடநாட்டு டார்ஜிலிங்கையும் சரி தென்னாட்டு தேக்கடி மூணாறு போன்ற இடங்களின் அழகை அள்ளிக் கொடுத்த விதத்திலும் பின் இந்த இரண்டு இடங்களையும் மாட்ச் (match) செய்த விதத்திலும் படு துல்லியம்.

    மெல்லிசை மன்னரைப் பற்றி என்ன சொல்ல? வேறு ஒரு இசையமைப்பாளராக இருந்தால் ஆராதனா படத்தின் ரீமேக் என்று சொன்னதுமே வேண்டாம் என்று விலகியிருப்பார்கள். ஆனால் எம்எஸ்வியோ அந்த சவாலை ஏற்றுக் கொண்டு மிக பிரமாதமான பாடல்களை மட்டுமல்ல உள்ளத்தில் ஊடுருவி மனதின் அடித்தட்டு வரை ஒரு சோகமான சுகத்தை விதைக்கும் அந்த ஹம்மிங்கையும் தந்தார். அன்று வெளியானபோதும் சரி இன்றைக்கு 42 வருடங்களுக்கு பின்னர் கேட்கும்போதும் சரி, ஏன் இன்னும் பல ஆண்டுகள் கடந்து போனாலும் இந்த பாடல்களும் அந்த ஹம்மிங்கும் மனதில் இருந்து மறையாது.

    இந்த படத்தின் பின்னணியில் இருந்து பணியாற்றிவர்களில் கவனம் ஈர்க்கும் மற்றொருவர் ஆலகாலா என்று அன்போடு அழைக்கப்பட்ட ஏ.எல்.நாராயணன். இவர் வசனம் எழுதுவதில் வாலி என்றே சொல்ல வேண்டும். எப்படி வாலியின் பாடல்களில் எதுகை மோனை தூக்கலாக இருக்குமோ அது போன்ற ரைமிங் டயலாக் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர் இவர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை பல நடிகர்கள் தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று பார்வையாளனுக்கு தோன்ற காரணமே இவரின் வசனங்களால்தான். இதில் மிக பெரும் பலன் அடைந்தவர் ஏவிஎம் ராஜன். முதல் பகுதியில் நடிகர் திலகம் ராஜன் வாணிஸ்ரீ சம்மந்தப்பட்ட காட்சிகளிலெல்லாம் வசன முத்திரைகள் அழகாய் விழுந்திருக்கும்.

    “பிரும்ம தேவன் உனக்காகவே ஸ்பெஷலா. இவளை படைச்சிருக்கான். உங்க ரெண்டு போரையும் பார்த்தா ரவிவர்மா ஓவியத்தில் வர ராமன் சீதா மாதிரியே இருக்கீங்க. வில்லை ஒடி விவாகத்தை பண்ணிக்கோ.”

    நாயகனின் காஃப்பி மற்றும் சிகரெட் பழக்கத்தை பற்றி பேசும்போது “உங்களுக்குனு யாரும் இல்லையா” என்று நாயகி கேட்க அதற்கு நாயகன்
    “நீங்கதான் I mean நீங்களே சொல்லுங்க” என்று ஆரம்பிக்க உடனே நண்பனான் ஏவிஎம் ராஜன் இடை மறித்து “நீங்கதான் சொல்லணும்” என்று சொல்வெதெல்லாம் ரசிக்கக் கூடியவை. இது தவிர ராஜன் பேசுவதாக வரும்

    “சிரிக்கிறவ கிட்ட சின்சியாரிட்டி இருக்காதுடா”.

    “உனக்காக அழறாளானு பார்க்க வேண்டாமா”

    “இந்த பிளேன் அவ மனசிலே லாண்ட் பண்ண ஒரு ரன்வே தயார் பண்ணேன்”.

    “Perfect landing straight in to her heart “

    “ஒரு பெண்ணை பிடிக்கணுமுனா அவங்க அம்மாவுக்கு ஸ்வீட் வாங்கி கொடுக்கணும். இல்லே வேலைக்காரனுக்கு சில்லறையை தள்ளணும்.”

    போன்ற சுவையான வசனங்கள். ராஜனும் இவற்றை கெடுக்காமல் neat-ஆக present பண்ணியிருப்பார்

    வசனத்தினாலும் உடல் மொழியாலும் வசீகரிக்கும் மற்றொருவர் வழக்கம் போல் எஸ்.வி.ரங்காராவ். ஆங்கிலமும் தமிழும் கலந்து அவருக்கே உரித்தான அந்த வேகத்தில் அவர் பேசும் அழகே தனி. “என் அனுபவத்திலே உனக்கு ரெண்டு அட்வைஸ் சொல்றேன். ஒன்னு மனைவிக்கு வாக்கு கொடுத்தா அதை எப்படியாவது நிறைவேத்தியே ஆகணும். ரெண்டு மனைவிக்கு எப்போதுமே வாக்கு கொடுக்கக்கூடாது” என்று அவர் நடிகர் திலகத்திடம் சொல்லும் வசனத்திற்கு அன்றும் சரி, இன்றும் சரி காது அடைக்கும் அப்ளாஸ்.

    யார் வசனம் எழுதினாலும் சோ பேசும் வசனங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அவர் 1974-ல் பேசின வசனங்களுக்கு இன்றும் அப்ளாஸ் விழுகிறது. "காக்கா பிடிச்சாத்தான் டாக்டர்க்கு பிடிக்கும்" [கலைஞரை] "வர வர நம்ம நாட்டிலே பொம்பளைங்களுக்கு குளிர் விட்டுப் போச்சுப்பா" [இந்திராவை மனதில் வைத்து], "மத்தவங்க உளறதை நான் சொன்னா என்னை போய் உளர்றேன்னு சொல்றாங்க" இதெல்லாம் சாம்பிள்.

    சஹஸ்ரநாமம், டி.கே பகவதி, வி.எஸ். ராகவன், எஸ்.என். பார்வதி கச்சிதம். எம்.என்.ராஜம் மற்றும் மனோகர் சற்று ஓவராக பண்ணியிருந்தாலும் அன்றைய நாட்களில் அந்த கேரக்டர்களுக்கு அப்படிப்பட்ட நடிப்பு தேவையாக இருந்தது என்பதனால் பெரிதாக உறுத்தவில்லை.

    (தொடரும்)

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •