-
12th November 2016, 03:29 AM
#2511
Junior Member
Newbie Hubber
Special Thanks to Barani too.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th November 2016 03:29 AM
# ADS
Circuit advertisement
-
12th November 2016, 11:49 AM
#2512
Senior Member
Veteran Hubber
'சிவந்த மண்' நினைவுகள்.......
காவியப்படமான 'சிவந்த மண்' பற்றி நான் எற்கெனவே எழுதிய பதிவின் மீள்பதிவு இது. பலர் படித்திருக்கக்கூடும். சிலர் படிக்காதிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் மீள்பதிவு செய்திருக்கிறேன். ஏற்கெனவே பதித்ததன் 'லிங்க்' பக்கம் தெரியாததால், முழுப்பதிவையும் (சிவந்த மண் வெளியீட்டு நாளை முன்னிட்டு) இங்கு தந்துள்ளேன்.
வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார்.
ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் camera angles செட் செய்த இயக்குனர் sreedhar க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்
சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.
உதாரணத்துக்கு சில:
1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.
2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.
3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.
4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.
5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.
6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.
7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.
8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.
9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.
10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')
11) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.
12) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).
13) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.
14) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".
இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....
"....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.
"......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".
"பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (இந்த இடத்தில் அவரது அந்த நாட்டிய முத்திரை).
"ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)
"இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)
இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.
இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும்.
15) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).
16) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.
17) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச் செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!).
'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
என அந்த சூழலே களை கட்டுகிறது.
('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)
இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).
எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் ஸ்ரீதருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.
1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.
சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.
அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.
குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.
அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
12th November 2016, 12:35 PM
#2513
Senior Member
Veteran Hubber
அண்ணன் ஒரு கோயில்
தமிழ்த்திரைப்படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழக மக்களால், குறிப்பாக தாய்மார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிய வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போன்று நடிகர்திலகமும், நடிகையர்திலகமும் அண்ணன் தங்கையாக நடித்த... (ஸாரி) வாழ்ந்த 'பாசமலர்' திரைக்காவியம் இன்றளவும் தமிழ்ப்படங்களில் அண்ணன் தங்கை பாசப்பிணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பாசப்பிணைப்பைக் கிண்டல் செய்யும்போது கூட, 'அடேயப்பா என்னமோ பெரிய பாசமலர் அண்ணன் தங்கை மாதிரியல்லவா உருகுறீங்க?' என்ற சொற்றொடர் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று நடிகர்திலகமும், மற்றைய கதாநாயகர்களும் நடித்த, அண்ணன் தங்கை பாசத்தை அச்சாணியாகக்கொண்ட பல படங்களும் வெற்றிக்கனியை ஈட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் வந்து மாபெரும் வெற்றியடைந்த படம்தான், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான 'அண்ணன் ஒரு கோயில்' வண்ணத்திரை ஓவியம்.
இப்படத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு. இப்படம் 1977-ம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்தது. இதற்கு சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர்தான் 1952 தீபாவளியன்று, தமிழ்த்திரையுலகின் புரட்சி கீதமாய், எழுச்சிப்பேரலையாய், சமுதாயக்கருத்துக்களை உள்ளடக்கிய காவியமாய் 'பராசக்தி' வெளிவந்து தமிழ்த்திரை வரலாற்றைத் திருப்பிப்போட்டதுடன், அதுவரை நாடக மேடைகளில் கலக்கி வந்த நடிப்புலகின் நாயகனை வெள்ளித்திரையில் காண வைத்தது. எனவே சரியாக 25 ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெற்றிநடைபோட்ட நடிகர்திலகத்தின் வெள்ளிவிழா காணிக்கையாக வந்த படம்தான் 'அண்ணன் ஒரு கோயில்'.
படத்தின் துவக்கத்தில், பெரிய மனிதன் போலத்தோற்றம் தரும் ஒருவர், தலையில் தொப்பியும், கண்களில் கண்ணாடியும், முழங்காலுக்கும் கீழே நீண்ட முழுக்கோட்டும் அணிந்து, போலீஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார். யார் அவர்? ஏன் ஓடுகிறார்?. அவர் ஒளிந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கட்டில்லா பயணியாக ஒரு பெண் ஸ்டேஷன் மாஸ்ட்டரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்திக்கு உடல்நலக்குறைவு என்று செய்தி வர, அந்தப்பெண்ணையும் அழைத்துப்போகும்போது, இவரும் கூடவே செல்ல, அந்தக்குழந்தைக்கு வைத்தியம் செய்யும்போது இவர் ஒரு டாக்டரென்று தெரிகிறது. அவருடைய கையெழுத்தைப்பார்த்ததும், அந்தப்பெண்ணுக்கு இவர் யாரென்பது பற்றி சந்தேகம் எழ, சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள அவரிடமே கேட்கும்போது அவர்தான் தன்னை மணக்கவிருந்த, சூரக்கோட்டை சின்னையா மன்றாயர் மகன் டாக்டர் ரமேஷ் என்பது தெளிவாக, தான்தான் அவரை மணக்கவிருக்கும் முரளிப்பாளையம் சேதுபதியின் மகள் ஜானகி என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.. (மணக்கவிருந்தவர் என்றால் எப்படி? பெற்றோர் நிச்சயித்த திருமணமா?. அப்படியானால் இருவரும் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டது எப்படி?. காதல் திருமணம் என்றால், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதுமே தெரிந்துகொள்ளாமல் போனது எப்படி?. என்பதற்கான விவரம் இல்லை).
தான் ஏன் இப்படி போலீஸ்கண்ணில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர் விளக்க, ப்ளாஷ்பேக் விரிகிறது....
பெற்றோரின் மறைவுக்குப்பின் தன் ஒரே தங்கை லட்சுமி (சுமித்ரா)வுக்கு தாயாக, தந்தையாக, ஏன் அவளுக்கு உலகமே தானாக வாழ்ந்துவந்தவர் டாக்டர் ரமேஷ் (நடிகர்திலகம்). அவருக்கு நல்ல நண்பனாக, மற்றும் உதவியாளராக டாக்டர் ஆனந்த் (ஜெய்கணேஷ்), மற்றும் பொல்லா நண்பனாக ரவி(மோகன்பாபு) மற்றும் அவனுக்கும் ஒரு நண்பன் (பிரேம் ஆனந்த்). அமைதியாக, அழகாக சென்று கொண்டிருந்த ரமேஷ், லட்சுமி வாழ்க்கையில் நாகம் புகுந்தது போல ரவியின் கழுகுப்பார்வை லட்சுமியின்மீது விழுகிறது.
தனது பிறந்தநாளன்று, டாக்டர் ஆனந்த் தபேலா வாசிக்க, சிதார் இசைத்தவாறு பாடும் லட்சுமியை வைத்தகண் வாங்காமல் பார்க்கும் ரவி, பாரவையாலேயே அவளை விழுங்குகிறான். பின்னொருமுறை ரவி, டாக்டர் ரமேஷைச்சந்தித்து, தான் லட்சுமியை விரும்புவதாகவும் அவளைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறும் கேட்க, அனைத்து தீய பழக்கங்களுக்கும் புகலிடமாக இருக்கும் அவனுக்கு தன் தங்கையை மணமுடிப்பதைவிட பாழுங்கிணற்றில் அவளைத்தள்ளுவது மேல் என்று நினைக்கும் ரமேஷ், திருமணத்துக்கு மறுக்க, வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்கை லட்சுமியைக்குறித்து கேவலமாக பேசும் ரவியை கன்னத்தில் அறைந்து விரட்டி விடுகிறார். அடிபட்ட பாம்பாக அலையும் ரவி, ஒரே கல்லில் இரண்டுமாங்காயாக, தான் விரும்பிய லட்சுமியை தகாத முறையில் அனுபவிக்கவும், தன்னை அவமானப்படுத்திய டாக்டர் ரமேஷைப் பழிதீர்க்கவும் சமயம் பார்த்திருக்கிறான். அந்தநாளும் வந்தது...
தன் தங்கையின் திருமணம் பற்றி, தனக்கு உறுதுணையாக இருந்து வரும் அப்பத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரிடமிருந்தோ ஒரு போன் வருகிறது, டாக்டர் ரமேஷின் தங்கை லட்சுமியை, ரவி தன்னுடைய கெஸ்ட் அவுஸுக்கு கடத்திச்சென்று, சீரழிக்க முயல்கிறான் என்று. (போன் செய்தவர் யாரென்பது கிளைமாக்ஸில் தெரியவருகிறது). காரில் பறந்துசெல்லும் ரமேஷ், காரோடு ரவியின் கெஸ்ட் அவுஸ் கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அதற்குள் லட்சுமி சீரழிக்கப்பட்டுவிடுகிறாள். கோபாவேசமாக ரமேஷ் ரவியைத்தாக்க, சண்டையின் முடிவில் ரவி துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான்.
ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தினால் லட்சுமியின் புத்தி பேதலித்துப்போய், அண்ணன் ரமேஷையே யார் என்று கேட்க, ரமேஷின் மனம் நொறுங்கிப்போகிறது. நடந்த விஷயங்கள் வெளியே தெரிந்தால் தன் குடும்ப மானம், தங்கையின் எதிர்காலம் எல்லாம் பாழாகிவிடுமென்று எண்ணும் ரமேஷ், தனக்கு மிக மிக நம்பிக்கையான நண்பன் டாக்டர் ஆனந்தின் பொறுப்பில் தங்கையை ஒப்படைத்துவிட்டு போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிறார். அப்படி போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஓடும்போதுதான், தனக்கு மனைவியாக வரவிருந்த ஜானகியை (சுஜாதா) சந்திக்கிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது....
காட்டில் சுற்றியலையும்போது, ஒரு மரத்தடி சாமியின் கழுத்தில் கிடந்த மஞ்சள்கயிற்றை எடுத்து ஜானகிக்கு ரமேஷ் தாலி கட்டிய மறுநிமிடம், போலீஸ் அவர்களை சுற்றி வளைக்கிறது. ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கணவனை எப்படியும் விடுதலை செய்வது என்ற வைராக்கியத்துடன் வக்கீல் மேஜரிடம் போக, அவரோ இந்த வழக்குக்கான காரண காரியங்களை கோர்ட்டில் சொல்லி, ரமேஷ் கொலை செய்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று நிரூபித்தால் மட்டுமே ரமேஷை விடுவிக்க முடியும் என்று கூற, சம்பவத்துக்கு ஒரே சாட்சியான லட்சுமியை கோர்ட்டில் பேச வைப்பது ஒன்றே ரமேஷைக்காப்பாற்றும் வழியென்ற எண்ணத்துடன் டாக்டர் ஆனந்தை சந்தித்து, தான் ரமேஷின் மனைவி ஜானகியென்று அறிமுகப்படுத்திக் கொள்ள, 'என்னது, ரமேஷுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று ஆனந்துக்கு அதிர்ச்சி.
ஆனால் தன் கழுத்தில் தாலியேறிய அடுத்த நிமிடமே, ரமேஷ் கையில் விலங்கேறிய சோகத்தை விவரித்த ஜானகி, தற்போது லட்சுமியைக் கொண்டு நடந்த அசம்பாவிதத்தைக் கோர்ட்டில் சொல்ல வைத்தால் மட்டுமே ரமேஷைக்காப்பாற்ற ஒரே வழியென்று சொல்ல, ஆனந்த் மறுத்துவிடுகிறார். காரணம், லட்சுமி தற்போது பழைய நினைவுகளை அறவே நினைவுக்கு கொண்டுவர முடியாத நிலையில் இருப்பதும், தன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாதென்று ரமேஷ் வாங்கிய சத்தியமும்தான். ஆனால் ஜானகியோ என்னவிலை கொடுத்தாகிலும் தன் கணவனை விடுத்லை செய்வேன் என்று ஆனந்திடம் சூளுரைத்துப்போகிறாள்.
ஜானகி போன சிறிது நேரத்தில், ‘rape’ என்ற பெயரில் ஒரு ஆங்கிலத் திரைப்பட விளம்பரம் ஆனந்தின் கண்ணில் பட, லட்சுமிக்கு பழைய நினைவு திரும்ப இப்படம் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் லட்சுமியை அழைத்துப்போகிறார். திரையில், தன் வாழ்க்கையில் நடந்து கொடுமையான சம்பவம் நடப்பதைப்பார்க்கும் லட்சுமியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருப்பு சம்பவம் நினைவுக்கு வர ஒரு கட்டத்தில் கத்திக்கதறி மூர்ச்சையாகிறாள்.
மயக்கம் தெளிந்து எழுந்ததும், தன் அருகே ஆனந்த் அமர்ந்திருப்பதையும், தன் கழுத்தில் தாலி இருப்பதையும் அறிந்து திடுக்கிடுகிறாள். ஆம், அவளுக்கு பழைய நினைவு திரும்பி விட்டது. ஆனந்த் மெல்ல மெல்ல அவளுக்கு நேர்ந்த கொடுமையையும், அதைத்தொடர்ந்து நடந்த ரவியின் கொலையின் காரணமாக அவளது அண்ணன் ரமேஷ் சிறையில் இருப்பதையும், விசாரணை நடந்து வருவதையும் எடுத்துச்சொல்ல, தனக்கு எல்லாமாக இருந்த தன் அண்ணனைக் காப்பாற்ற லட்சுமி, ஆனந்துடன் கோர்ட்டுக்குக் கிளம்புகிறாள்.
குற்றவாளிக்கூன்டில் நிற்கும் ரமேஷ், லட்சுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அவளை அழைத்து வந்ததற்காக ஆனந்தைக் கடிந்துகொள்ள, அவளோ தனக்கு நேர்ந்த கொடுமைபற்றி ஆனந்தே பொருட்படுத்தாமல், தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கும்போது தனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை, அண்ணனை காப்பாற்றுவதே தன் ஒரே எண்ணம் என்று கூற, இதனிடையே ஜானகி தன் வக்கீலிடம், இதோ இந்தப்பெண்தான் ரமேஷின் தங்கை, அவரைக்காப்பாற்றக் கிடைத்த ஒரே சாட்சி என்று சொல்ல, வக்கீல் மேஜர், லட்சுமியை பிரதான சாட்சியாக கூண்டில் நிறுத்துகிறார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை கோர்ட்டில் சொல்லியழும் லட்சுமி, இந்தக்கொலை தன் அண்ணன் செய்யவில்லை என்றும் தானே செய்ததாகவும் கூறினாலும், அரசுத்தரப்பு வழக்கறிஞர், இது எதிர்த்தரப்பு வக்கீலால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று மறுக்கிறார். அப்போது கோர்ட்டுக்குள் வரும் ரவியின் நண்பன் பிரேம் ஆனந்த் (கோர்ட் காட்சியின்போது நடிகர் பிரேம் ஆனந்துக்குப் போடப்பட்டிருக்கும் மேக்-அப் மிகவும் அற்புதம். தெய்வமகன் நடிகதிலகத்தின் மேக்-அப்பை நினைவுபடுத்தும்), லட்சுமி சொல்வது முழுக்க உண்மையென்றும், லட்சுமியை தானும் ரவியும்தான் கடத்திச்சென்றதாகவும், அவளை யார் முதலில் அடைவது என்ற சர்ச்சையில், ரவி தன் தலையில் பாட்டிலால் அடித்துக்கீழே தள்ளிவிட்டு லட்சுமியின் கற்பைச்சூறையாட முயலும்போது, தானே ரமேஷுக்கு போன் செய்ததாகவும், பின்னர் ரமேஷ் வந்து ரவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, புத்தி சுவாதீனமில்லாத நிலையில் லட்சுமியே ரவியைச்சுட்டதாகவும், தங்கையின் மானத்தைக்காப்பாற்ற ரமேஷ் கொலைப்பழியை தான் ஏற்றுக்கொண்டு நிற்பதாகவும் சாட்சி சொல்ல, ரமேஷ் விடுதலை செய்யப்படுகிறார்.
தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச்செல்லும் இப்படத்தின் துவக்கத்தில் வரும் ரயில்நிலையக்காட்சிகள் ரொம்பவே அருமையாக சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும். இரவுநேரத்தில், டாக்டர் ரமேஷ் ஒரு அறையில் ஒளிந்துகொண்டிருக்க, ரயில் வரும்நேரம் ஒரு பெண் (ஸ்வர்ணா) பாடிக்கொண்டே, ரயில் நிலையத்தில் இங்குமங்குமாக ஓடி யாரையோ தேடும் காட்சிகள் அருமையான துவக்கமாக இருக்கும். அந்தப்பெண்ணும் ரவியாக வரும் மோகன் பாபுவால் ஏமாற்றப்பட்ட பெண். அவள் ஏமாந்ததன் விளைவாக உருவானதுதான் ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்தி.
நடிகர்திலகத்தின் 'பெர்பார்மென்ஸ்'
** 'மல்லிகை முல்லை' பாடலின்போது அவர் தரும் கனிவான பார்வைப்பறிமாற்றங்கள், தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே ஸ்டைலாக நடந்துவரும் அழகு, கற்பனையில் தன்னைச்சுற்றி ஓடிவரும் மருமகப்பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணும்போது உண்மையான தாய்மாமனின் உணர்ச்சிப்பெருக்கு...
** தன்னைச்சுற்றிலும் போலீஸ் தேடல் இருந்தும், தான் வந்துதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெற்றோருக்காக, வார்டுபாய் போல வேடமிட்டு ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்து, ஆபரேஷன் முடிந்ததும், ஸ்ட்ரெசருக்குக் கீழே ஒளிந்துகொண்டே வெளியேறும்போது காட்டும் கடமையுணர்ச்சி...
** தங்கைக்கு நேர்ந்த சோகத்தை, தன் வருங்கால மனைவியிடம் சொல்லும்போது காட்டும் உணர்ச்சிப்பிரவாகம்....
** 'அண்ணன் ஒரு கோயிலென்றால்' பாடலின்போது, தன்னைப்பற்றிப்பாடும் தங்கையின் வார்த்தைகளால் கண்கள் கலங்க, அதை தங்கை பார்த்துவிடாமல் மறைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்...
** நண்பன் ஆனந்தின் கஸ்டடியில் இருக்கும் தங்கையைக் காண வந்திருக்கும்போது, சுய நினைவின்றி கிடக்கும் தங்கையைப்பார்த்து ஆனந்திடம் அவளது கடந்தகால சூட்டிகையைப்பற்றிக்கூறும்போது ஏற்படும் ஆதங்கம். 'டாக்டர், இப்படி ஒரு இடத்துல படுத்துக்கிடக்கிறவளா இவ?. என்ன ஆட்டம், என்ன ஓட்டம், என்ன பேச்சு, என்ன சிரிப்பு'.... பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்து கதறும் பாசப்பெருக்கு....
** கோர்ட்டில் கூண்டில் நிற்கும்போது, எதார்த்தமாக சுற்றிலும் பார்க்கும்போது, அங்கே தன் தங்கை வந்து நிற்பதைப் பார்த்து முகத்தில் காட்டும் அதிர்ச்சி. அரசுத்தரப்பு வக்கீல் வேண்டுமென்றே தன்மீது கொலைக்குற்றம் சுமத்தி அதற்காக ஜோடிக்கப்பட்ட காரணத்தையும் கூறும்போது, மறுபேச்சுப்பேசாமல் அவற்றை ஒப்புகொள்ளும்போது ஏற்படும் பரிதாபம்....
** கொலைசெய்யப்பட்டவனின் நண்பன் கோர்ட்டில் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கும்போது, 'இவன்தான் தனக்கு போன் செய்தவனா?' என்று முகத்தில் காட்டும் ஆச்சரியம்....
இவரது உணர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்ததன்மூலம் டெம்போ குறையாமல் படத்தை எடுத்துச்செல்ல பெரும் பங்காற்றிய சுமித்ரா, ஜெய்கணேஷ், சுஜாதா. அவற்றைப் பன்மடங்காகப் பெருக்க துணை நிற்கும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை... எல்லாம் இணைந்து படத்தை எங்கோ கொண்டு சென்றன.
கதையின் போக்கு ரொம்பவே சீரியஸாக அமைந்துவிட்டதால், 'காமெடி ட்ராக்' தனியாக சேர்க்கப்பட்டிருக்கும். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக (கௌரவத்தோற்றத்தில்) தேங்காய் சீனிவாசனும், கான்ஸ்டபிளாக ஏ.கருணாநிதியும், பாயிண்ட்மேனாக சுருளியும், கொள்ளைக்காரியாக மனோரமாவும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். டாக்டர் ரமேஷைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்ற காவல்துறை விளம்பரத்தை வைத்துக்கொண்டு சுருளி அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. அதுபோல, அப்பாவிப்பெண் போல வந்து போலியான கதைசொல்லி ஏமாற்றி கொள்ளையடித்துப்போகும் மனோரமாவும், அவளை மடக்கிப்பிடிக்கும் தேங்காயும் கூட நன்றாகவே சிரிக்கவைப்பார்கள்.
இதற்கு முன் நிறைகுடம், சிவந்தமண், எங்கமாமா, சுமதி என் சுந்தரி என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடிகர்திலகத்தின் படங்களில் நடித்து வந்த தேங்காய் சீனிவாசன், சுமதி என் சுந்தரி (14.04.1971) க்குப்பிறகு, கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடிக்கவில்லை. இதுகுறித்து தேங்காய் கூட பல்வேறு பத்திரிகைப் பேட்டிகளில் குறைசொல்லி வந்தார். இவர் மாற்றுமுகாம் அபிமானி என்பதால் நடிக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் இவரைவிட மாற்றுமுகாம் அபிமானிகளான வில்லன் நடிகர் கே.கண்ணன், ராமதாஸ் போன்றவர்கள் நடிகர்திலகத்துடன் அதிகமான படங்களில் நடித்து வந்தனர்.
காரணம் என்னவாக இருந்தபோதிலும், மிக நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர்திலகத்தின் 'மறப்போம், மன்னிப்போம்' கொள்கையின் காரணமாக, நடிகர்திலகத்தின் சொந்தப்படமான இப்படத்தில் நடித்தாலும் நடித்தார், இதிலிருந்து தேங்காய் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு வரிசையாக அத்தனை படங்களிலும் இடம்பெறத் துவங்கினார். அதிலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சொந்தப்படங்களான திரிசூலத்துக்காக காஷ்மீருக்கும், ரத்தபாசத்துக்காக ஐரோப்பிய நாடுகளுக்கும் தேங்காய் அழைத்துச்செல்லப்பட்டார். அத்துடன் பைலட் பிரேம்நாத் படத்துக்காக இலங்கைக்கும், இமயம் படத்துக்காக நேபாளத்துக்கும் சென்று வந்தார். (இவர் நடித்த "மற்றவர்கள்" படங்களில் சென்னையில் வைத்தே இவர் ரோல்களை முடித்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்).
படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்க, மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். முதல் பாடல், ரயில் நிலையத்தில், கைவிட்டுப்போன காதலனைத் தேடியலையும் ஸ்வர்ணாவுக்காக, வாணி ஜெயராம் பாடிய 'குங்குமக்கோலங்கள் கோயில் கொண்டாள கோதை நாயகன் வருவானடி' என்ற மனதை மயக்கும் பாடல். இரவுக்காட்சிக்கேற்ற திகிலூட்டும் இசையுடன் கலந்து தந்திருப்பார்.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்ட கதையாயிற்றே அதனால் பாசமலரில் இடம்பெற்ற 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்' பாடலைப்போல அமைந்த பாடல், 'மல்லிகை முல்லை பொன்மணி கிள்ளை, அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை' என்ற மிக அருமையான பாடல். தங்கையின் வருங்கால வாழ்க்கையைப்பற்றி அண்ணன் கனவுகாண, அவனது கனவில் அவள் மதுரை மீனாட்சியாக, கோதையாக, ஆண்டாளாக, சீதையாக வடிவெடுத்து வருகிறாள். பாடல், இசை மட்டுமல்ல, இவற்றைத்தூக்கி நிறுத்தும் ஒளிப்பதிவும் அற்புதம்.
தன்னுடைய பிறந்தநாளன்று, கையில் சிதார் மீட்டியவாறு சுமித்ரா பாடும், 'அண்ணன் ஒரு கோயிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ' இசைக்குயில் பி.சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. தங்கை அண்ணன் மீது கொண்ட பாசப்பிணைப்பை விவரிக்கும் ஒரு வரி.....
'கண்ணன் மொழி கீதையென்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ'
இதே பாடலை, சுயநினைவற்று இருக்கும் சுமித்ராவின் நினைவு திரும்புவதற்காக திரைக்குப்பின்னால் இருந்து ஜெய்கணேஷ் பாடுவார். அவருக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.
நடிகர்திலகமும் சுஜாதாவும் காட்டுக்குள் போலீஸுக்கு மறைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, போலீஸ் ஜீப் வந்துவிட, அவர்கள் கண்களில் படாமல் இருக்க மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட இடைவெளிக்குள் நுழைந்துகொள்ள, அங்கே இருவரும் காதல் வயப்படும்போது, பின்னணியில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் 'நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு... காதல், இன்பக்காதல்'. எஸ்.பி.பி.யும், வாணிஜெயராமும் பாடியிருந்தனர்.
நடிகர்திலகத்தின் வீடாகக் காண்பிக்கப்படும் இடம் ஊட்டியிலுள்ள அரண்மனையின் உட்புறம். இப்படத்துக்காக அக்கட்டிடத்தின் உட்பகுதி புதுப்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை பழம்பெரும் ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் செய்திருக்க, நடிகர்திலகத்தின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவரான கே.விஜயன் இயக்கியிருந்தார்.
இப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் 'எங்க வீட்டு தங்க லட்சுமி'. படம் உருவாகிக்கொண்டிருந்தபோது, இப்படத்தின் பெயர் 50 களில் ஏ.நாகேஸ்வரராவ் நடித்து பெரும்வெற்றிபெற்ற 'எங்கவீட்டு மகாலட்சுமி' பெயர் போல இருக்கிறது என்றும், மிகவும் பழங்கால டைட்டில் போல இருக்கிறதென்றும் பலரும் அபிப்பிராயம் சொல்ல, படத்தின் பெயரை மாற்றுவதென்று முடிவு செய்து என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் அவரை பாசத்தோடு 'அண்ணன்' என்று அழைப்பதாலும், படத்தின் கதையும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக்கொண்டதாலும், 'அண்ணன் ஒரு கோயில்' என்று வைக்கலாம் என்று முடிவு செய்தபோது அனைவராலும் இந்த டைட்டில் வரவேற்கப்பட்டது.
1977-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த 'அண்ணன் ஒரு கோயில்', நடிகர்திலகத்துக்கு வெள்ளிவிழா ஆண்டின் நிறைவுப்படமாகவும் அமைந்து மாபெரும் வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்தது. கீழ்க்கண்ட அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றிநடைபோட்டது.
சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
மதுரை - நியூ சினிமா
கோவை - கீதாலயா
திருச்சி - பிரபாத்
சேலம் - சாந்தி
தஞ்சை -அருள்
குடந்தை - செல்வம் (நூர்மஹால்).
வெற்றிகரமாக 100 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்த ஆண்டின் வெள்ளிவிழாப்படமாக இப்படம் அமையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கதாநாயகன் என்றால் வில்லன் வேண்டுமல்லவா?. எனவேதான் கதாநாயகனின் சொந்தப்படத்தை தடுக்க வில்லனின் சொந்தப்படம் வந்தது. ஆம், அண்ணன் ஒரு கோயில் வெற்றிகரமாக 114 நாட்களைக்கடந்தபோது, 115 வதுநாளன்று பாலாஜியின் 'தியாகம்' படம் இதே திரையரங்குகளில் ரிலீஸானது. 'அண்ணன் ஒரு கோயில்' 114-ம் நாள் விழாவோடு மாற்றப்பட்டு, 'தியாகம்' திரையிடப்பட்டது.
'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிய என் கருத்துக்களைப் படித்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
12th November 2016, 06:00 PM
#2514
Junior Member
Newbie Hubber
ஆதிராம்- தங்களின் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. தங்களோடு பேசியது என் சமீபத்திய சந்தோஷங்களில் ஒன்று.
சாரதா- இது எனக்கு பைபிள் மாதிரி நிறைய முறை படித்திருந்தாலும் ,இப்போது தங்கள் மீள்பதிவாய் பார்க்கும் போது ,புதிதான சந்தோசம் தருகிறது. சிவந்த மண்ணும்,அண்ணன் ஒரு கோயிலும் அடடா....
கார்த்திக்- நீங்கள் ரொம்ப நாள் வராதது ஒரு குறை.வாருங்கள்.
-
12th November 2016, 07:41 PM
#2515
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
Special Thanks to Barani too.
திரு. கோபால் சார் என்னையும் நினைவு வைத்து சொன்னதற்கு மிகவும் சந்தோசம் . நான் ஒன்றுமே செய்யாதவன், ரசிப்பதை தவிர. நீங்கள்,ராகவேந்தர், முரளி, ஆதவன் ரவி, சிவா, செந்தில்வேல் இவர்களுடன் ஒப்பிடும் போது.
Last edited by Barani; 12th November 2016 at 07:44 PM.
-
12th November 2016, 08:04 PM
#2516
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
சாரதா- இது எனக்கு பைபிள் மாதிரி நிறைய முறை படித்திருந்தாலும் ,இப்போது தங்கள் மீள்பதிவாய் பார்க்கும் போது ,புதிதான சந்தோசம் தருகிறது. சிவந்த மண்ணும்,அண்ணன் ஒரு கோயிலும் அடடா.
டியர் கோபால் சார்,
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. என் பதிவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் பாராட்ட மறப்பதில்லை. ஆனால் உங்கள் அற்புதமான பதிவுகளை நான் பாராட்டுவதில்லை என்ற குற்ற உணர்வு என்னை வருத்துகிறது.
தங்கள் பரந்த உள்ளத்துக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
-
12th November 2016, 09:38 PM
#2517
Junior Member
Senior Hubber
நினைப்போம். மகிழ்வோம் -132
"ஆலயமணி"
"பொன்னை விரும்பும்" பாடல்.
"இந்த மனமும் ,இந்த உறவும் என்றும் வேண்டும்
என்னுயிரே!" - இந்த வரிகளைப் பாடுகையில்
அய்யனின் முகத்தைக் கவனியுங்கள்.
தன் மீதான கரிசனத்துடன் தன்னருகே நிற்கும்
பெண், தனக்கே தனக்கென்று எப்போதும் வேண்டும் என்று கெஞ்சுதலாய் ஒரு விண்ணப்பம் எழுதும் முகம்.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th November 2016, 09:39 PM
#2518
Junior Member
Senior Hubber
நினைப்போம். மகிழ்வோம் -133
ரொம்ப காலமாக ஆசைப்பட்ட பொருள் திடீரென்று
ஒரு நாள் அளவுக்கதிகமாகவே கிடைத்து விட்டால்,
அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற
ஒரு வித குழப்பமும் மனிதனுக்கு அதிகமாகவே
வந்து விடும்.
"சொர்க்கம்"- "பொன்மகள் வந்தாள்" பாடலின்
நிறைவுப் பகுதியில் நடிகர் திலகம் இதை உணர்த்தியிருப்பார்.
ஆடலழகி உதிர்த்த பணப் பரவலிலிருந்து அள்ளி,
அள்ளி இறைப்பார்.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th November 2016, 09:41 PM
#2519
Junior Member
Senior Hubber
நினைப்போம். மகிழ்வோம் -134
"கௌரவம்"
அழைப்பின் பேரில் மோகன்தாஸ் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தைப் பார்க்க வந்திருப்பான். கண்ணன், அழைத்துச் சென்று பெரியவர் முன்
நிறுத்துவான்.
கண்ணனை சைகையால் விலகி நிற்கச் சொல்லி
விட்டு, பெரியவர் பார்க்கும் அந்த கூர்மைப் பார்வை...
வக்கீல் பார்வை...
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th November 2016, 07:58 AM
#2520
Senior Member
Seasoned Hubber
வருக வருக சகோ. சாரதா அவர்களே. தங்களுடைய பதிவுகளை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை.. நடிகர் திலகத்தின் நடிப்பைப் போல...
தொடர்ந்து பங்களிப்பைத் தருக
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks