Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாட்டும் பரதமும்' (புதிய பதிவு)



    'தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு'

    பாடல் ஒரு முழு ஆய்வு.

    ஒரு பாடல்.ஒரே ஒரு பாடல். உச்சி முதல் உள்ளங்கால் வரை நம் ஊன் உயிரெல்லாம் கலந்து மௌனமான சிலிர்ப்பை உண்டாக்கும் சிந்தை கவரும் பாடல்.

    இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனது பாரமாகும். இனம் புரியா சோகம் நெஞ்சைக் கவ்வும். தொண்டைக்குழிக்குள் பலாப்பழம் அடைப்பது போன்ற உணர்வு. நாயகருடனும், பாடகனுடனும், இசை அமைப்பாளருடனும், கவியரசருடனும், காட்சியுடனும் இரண்டறக் கலந்து விடுவோம். பாடல் கேட்டு முடித்த பின் உணவு உண்ணப் பிடிக்காது. உறக்கத்தில் நாட்டம் இராது.


    எதிலும் நாட்டமில்லாமல் சதா தொழில் தொழில் என்று அலைந்து பணம் புரட்டும் பெரும் வியாபார நாயகன் ஒரு நடன மாது மீது சொல்லொணாக் காதலுற்று, அவளை அடைவதற்காகவே பரதம் பயின்று, போட்டியில் அவளையே வென்று பல சோதனைக்களுக்கிடையில் அவளைக் கைப்பிடிக்கும் நேரம் அந்தஸ்து கெளரவம் என்று அலையும் தந்தையின் சதியால் அவளை பிரிகிறான். காசு காசு என்று அலைந்தவன் காதலிக்காக கலை, கலை என்று அதிலேயே மூழ்குகிறான் விபச்சாரி என்று பட்டம் கட்டப்பட்டு பரிதாபமாக அந்தப் பாவை பரத நாயகனை விட்டு நீங்குகிறாள்.

    நாயகியைத் தேடித் தேடி அலைகிறான் அந்த பரிதாபத்துக்குரிய நாயகன்.தேடுகிறான்...தேடுகிறான்....காடு மேடெல்லாம் தேடுகிறான்....மலைகளிலெல்லாம் தேடுகிறான்...அவளால் தான் கற்ற பரதத்தையும், இசை ஞானத்தையும் முதலாக வைத்து தேடுகிறான். பாவை கிடைத்தபாடில்லை. அவளின்றி அவனுக்கு இனி வேறோர் உலகம் உண்டோ. 25 வயதில் அவளைத் தொலைத்து விட்டு 60 வதிலும் அவளைத் தேடுகிறான். இன்னும் தோல்விதான் அவனுக்கு. ஆனால் அவனின் காதலுக்கு அல்ல.

    இளமை போய் நரைத்திரை விழ, நடுத்தர வயதை நாயகன் அடைந்தும் முயற்சியை விடவில்லை. வருடங்கள் பறந்து வாலிபன் வயோதிகனாகிறான். பொலிவிழந்த உருவம்...களையிழந்த முகம்.. குன்றிய உடல்.. ஆனால் குன்றாத மன உறுதி. .காதல் அவனை உருக்கியது. ஆனால் அவனோ காதலை இன்னும் தன் உள்ளத்தில் இறுக்கினான். இருத்தினான். கிடைத்து விடுவாள் என்று தேடுதலை விடான்.

    இதுதான் பாடலின் சிச்சுவேஷன்.

    ‘கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்'

    என்ற தொகையறாவில் தொடங்கி

    'தெய்வத்தின் தேரெடுத்து'

    தன் தேவியைத் தேடுகிறான். தென்றலை தூதாக ஓடச் சொல்லி ஓடாய்த் தேய்கிறான்.

    நாயகன் யார்? வேறு யார். நம் நடிகர் திலகமே. சதியால் காதலியைப் பிரிந்து துயருறும் துன்ப நாயகன். நடிப்பில் நமக்கு எப்போதும் இன்பமளிக்கும் இனிய நாயகன். பிரிந்த நாயகி கலைச்செல்வி

    சால்வை அணிந்த ஜிப்பா பஞ்சகச்சத்துடன் நடிகர் திலகம் மலைப் பிரதேசங்களில் கவலை தோய்ந்த முகத்துடன் காதலியின் பிரிவுத்துயரை பாடல் வரிகளின் மூலம் பறை சாற்றும் கட்டங்களை எப்படி எழுதுவது?

    மனதில் கவலை மேகங்கள். வானில் கலைந்து செல்லும் வெண் மேகங்கள்.

    'பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு' வரிகளில் இந்த அதிசய நடிகன் காட்டும் கை பாவங்கள். வலது கை விரல்களில் நான்காவது விரலையும், சுண்டு விரலையும் சற்றே மடக்கி, நடு விரலையும், சுட்டு விரலையும் நிமிர்த்தி, கட்டை விரலை விரித்து, வளைத்து, வான் நோக்கி தலை உயர்த்தி, இடமிருந்து வலமாக காற்றில் விரல்களால் கோடு கிழிக்கும் உன்னத நடிப்பு. அந்த வரியை உச்சஸ்தாயியில் உயர்த்திப் பிடிக்கும் பாடகர் திலகம் நடிகர் திலகத்தினுடேயே இணைந்து விடுவார்.

    ஷெனாய், சிதார், வீணை, சாரங்கி வைத்து வித்தை காட்டுவார் மெல்லிசை மன்னர். மலைப் பரப்புகளில் நடிகர் திலகம் லாங் ஷாட்டில் சோகமே உருவாய் நடந்து வரும் அழகை அற்புதமாக படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர். மென் குளிரில், மெலிதான தென்றலில் சால்வை அகல, அதை சரி செய்து கொண்டு நடந்து வரும்போது சூரியனைக் கொண்டுதான் திருஷ்டி சுற்றி போட வேண்டும் இந்த நடிப்புத் திருமகனுக்கு.

    'மாமழை மேகமென்று கண்களில் இருப்பு' என்ற ஒரே ஒரு ஒற்றை வரியில் நாயகனின் மன நிலையை நம்முள் விரிய வைத்த மகா கவிஞன்.

    நடிகர் திலகத்தின் ஒவ்வொரு சைட் போஸும் ஒரு கோடி பெறும்.

    பருவ காலங்கள் மாறி மாறி வர, காதோரம் நடிகர் திலகத்திற்கு நரைக்க ஆரம்பிப்பதை காலத்தின் ஓட்டம் காட்டும்.

    கம்பனும், காளிதாசனும் தங்கள் நாயகிகளை மறந்து இவன் நாயகியை கண்டால் அவர்கள் நாயகி என்று சொந்தம் கொண்டாடுவார்களாம். அடடா! நாயகி மேல் நாயகன் வைத்துள்ள காதலை இதைவிட சிறப்பாக உணர்த்த இயலுமா?

    'சீதையைக் காண்பான்' எனும்போது நடிகர் திலகம் கையை அருள்புரிவது போல அமைதியாக காட்டும் கட்டம் கன ஜோர். 'சகுந்தலை' எனும்போது காற்றிலே திலகத்தின் கைகள் சாகுந்தலம் வரையும். மஞ்சள் நிற சால்வை பெருமை கொள்ளும். பாந்தமான நடிப்பில், தோற்றத்தில் சிகரம் நம்மை சிறையிடுவார்.

    'நாயகியே எனது காவிய எல்லை' வரிகளில் பாடகர் திலகமும், நடிகர் திலகமும் நிஜமாகவே அவரவர்கள் துறையின் எல்லைகளைத் தாண்டி அற்புதம் காட்டுவார்கள். நடிகர் திலகம் கண்களை மூடி
    சைட் போஸில் 'காவிய எல்லை'யை வாயசைப்பில் ஜாலம் காட்டும் வித்தைக்கு ஆஸ்கர் எந்த மூலை க்கு? ஒவ்வொரு இடத்திலும் ஒரு நடிகன் எப்படி நிற்க வேண்டும்,எப்படி கைகளை வைத்துக் கொள்ள வேண்டும், எப்படி பாவங்களை தேவையான சமயம் காட்ட வேண்டும் என்ற நடிப்பு நாளந்தா பல்கலைக் கழகமல்லவோ இந்த பார் போற்றும் நடிப்புச் சக்கரவர்த்தி.

    'நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை' வரிகளில் தன் தலை தொட்டு, நரை காட்டி, தன்னிரக்கம் காட்டுவார் நடிகர் திலகம். நம் இரக்கம் முழுதும் மொத்தமாக அவருக்கே போய்ச் சேரும். நம் மனம் இந்த இடத்தில் புண்பட்டு பழுதாகும்...ரணமாகும்.

    நீண்ட நெடிய, யாருமே இல்லாத வளைந்து செல்லும் ஒற்றை சாலையில் கைகளை பின்புறம் கட்டி விட்டேர்த்தியாக திலகம் நடக்கையில் நம் இதயம் பரிதவிக்கும்.

    சிதாரின் பின்னணியில் மலையருவி கொட்ட, காதல் வாழ்வை பாழ்படுத்திய தந்தை, மற்றும் காதலிக்கும், தனக்கும் வித்தை கற்றுத் தந்த குருக்கள், இவர்கள் மாலையிட்ட புகைப்படமாக மறைந்து விட்டதற்கு கா(சா) ட்சியளிக்க, காலங்கள் பறப்பதை இசைக்கருவிகள் அம்சமாக உணர்த்த, பாடகர் திலகத்தின் ஸ்வரங்கள், ஜதி கம்பீரமாக கேட்க, குழந்தையாய் ஆடும் இளம் ஸ்ரீப்ரியா இப்போது குமரியாக நடராஜர் சிலை முன் பரதம் ஆட, பாடலின் முடிவில் கழுத்தைக் கவர் செய்யும் வெள்ளைக் கலர் ஜிப்பாவுடன் முதிர் தோற்றத்தில் தாடியுடன் 'தாம் தீம் தாம் தகிடதகதிமி' ஜதி சொல்ல.....

    காலங்கள் கடக்கும் வேகத்தை இசை மூலமாகவே நமக்கு உணர்த்திவிடும் மகா இசைக் கலைஞன் சொல்லி மெல்லிசை மன்னர். அந்த மகானுக்கு தன் பாடல் வரிகளால் தீனி போடும் கவியரசன். பிரிவுத் துன்பத்தை நம்முள் நடிப்பால் விதைக்கும் நடிகர் திலகம். கர்நாடக இசையோடு இழையும் இந்த இனிய பாடலை ஒரே ஒரு வித்தகன் மட்டுமே பாட முடியும். நாயகனின் பிரிவுத் துயரை தன் குரல் மூலம் பிரித்து மேயும் பாடகர் சிகரம் டி.எம்.எஸ்.

    மனதை பிழித்தெடுக்கும் பாடல்களில் என்றும் முதலிடம் பெறும் உணர்ச்சிக் குவியல்களின் ஒருமித்த சங்கமப் பாடல். பாடல்களின் வேதம். கல்வி போல நீராலும், நெருப்பாலும், காலத்தாலும் அழிக்க முடியாத சிரஞ்சீவிப் பாடல்.



    கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்
    கால் சலங்கை போன இடம் கடவுளுக்கும் தோன்றவில்லை.....

    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

    ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
    அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
    ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
    அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
    பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
    பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
    பாடிப் பறந்ததம்மா இளங்குயில் பேடு
    இளங்குயில் பே டு

    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

    நீர் வற்றிப் போனதென்று நினைவினில் வெடிப்பு
    நெஞ்சத்தினில் தோன்றுதம்மா வசந்தத்தின் துடிப்பு
    மாமழை மேகமென்று கண்களில் இருப்பு
    மார்கழிப் பனியன்றோ அவளது சிரிப்பு
    அவளது சிரிப்பு

    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

    கம்பனைக் கூப்பிடுங்கள்
    சீதையைக் காண்பான்
    கவிகாளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
    கம்பனைக் கூப்பிடுங்கள்
    சீதையைக் காண்பான்
    கவிகாளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
    நாயகியே எனது காவிய எல்லை
    நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
    நரை விழுந்தாலும் நெஞ்சில்
    திரை விழவில்லை

    தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

    தாம் தீம் தாம்
    தகிடதகதிமி
    ததீம்தாங்கு ததீம்தாங்கு தகதிமி
    தாம் தீம் தாம்
    தகிடதகதிமி ததீம் தாங்கு ததீம் தாங்கு தகதிமி
    ததரிட தகஜுனு ததரிட தகஜுனு
    தகிட ஜூனுகு தகிட ஜூனுகு
    தகிடதகமி தகிட தஜூனு
    தகிடதனத்த தகிட தஜூனு
    தஜூம் தஜூம் தஜூம் தகிடதா

    Last edited by vasudevan31355; 11th May 2017 at 10:37 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks goldstar, adiram thanked for this post
    Likes adiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •