Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    புதிய பதிவு

    நடிகர் திலகத்தின் 'one of the best' பாடல் பதிவு. ('நான் பட்ட கடன்')

    அல்லது

    கவிஞர் வாலி அவர்களின் நினைவு சிறப்புப் பதிவு




    வாலி அவர்கள் நடிகர் திலகத்திற்காக எழுதியுள்ள பல பாடல்கள் கண்ணதாசனின் பாடல்களுக்கு இணையாக அற்புதமாகவே இருக்கும். 'மாதவிப் பொன் மயிலாள்' ஒன்று போதுமே! ('இரு மலர்களி'ல் அனைத்துப் பாடல்களுமே வாலிதான்) நடிகர் திலகத்தின் படங்களுக்கு பாடல் வரிகளால் அர்ச்சனை செய்யும் 'இரு மலர்களாக' கண்ணதாசன் அவர்களும், வாலி அவர்களும் அவருடைய நடிப்பிற்கு பாடலாசிரியர்கள் என்ற முறையில் தீனி போட்டனர். அந்தப் பாடல்களின் வரிகளை அப்படியே உள்வாங்கி நம் திலகம் ஒப்புயர்வற்ற தன் நடிப்பால் அவ்வரிகளி மெருகேற்றி நம் அனைவருக்கும் அமிர்த விருந்து அளித்துக் கொண்டே இருக்கிறார்.

    வாலி பாடல்களில் பழைய பாடல்கள் நிறைய உண்டு. அவற்றை இங்கே சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நடிகர் திலகத்திற்கு பின்னாளில் அவர் எழுதி பட்டி தொட்டியெங்கும் பட்டை கிளப்பிய ஒரு 'விஸ்வரூப'ப் பாடலை இன்று வாலியின் நினைவு தினத்திற்காகவும், தினம் தினம், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி நம் நெஞ்சை விட்டு நினைவகலாதிருக்கும் நடிகர் திலகத்திற்காகவும் இங்கே காண்போம்.

    06.11.1980 அன்று வெளியான 'விஸ்வரூபம்' படத்தில் நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ்.பாடிய 'திலக'ப் பாடல். இந்த பாடல் வரிகள் எழுதியதற்காக வாலிக்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

    இந்த வரிகளுக்கு தன் மெல்லிசையால் உயிர் கொடுத்து இன்றுவரை நம் காதுகளில் ரீங்காரமிடச் செய்த மெல்லிசை மன்னருக்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

    பாடலுக்கேற்றவாறு உருக வைக்கும் நடிப்பைத் தந்து நம் கண்களில் கண்ணீர் நிறையச் செய்த நம் 'கண்மணி' க்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

    இவ்வளவு அழகிய பாடலை மைசூர் அரண்மனையிலும், அதன் பின்னணியிலும், ஒற்றைக்கல் நந்தி கோவிலிலும் ஒளிப் படமாக்கிய ஒளிப்பதிவாளர் விஸ்வநாதராய் அவர்களுக்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

    இப்பாடல் காட்சியை உயிரோட்டமாய் எடுத்து உன்னதமாக நம் உள்ளங்களில் உலாவச் செய்த 'தெய்வ மகனி'ன் இயக்குனர் ஏ சி டி க்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

    நடிகர் திலகம் திரையில் நடித்தால் தானும் அது போலவே பாடல் ரிக்கார்டிங் அறையில் ஓரளவிற்கு நடித்துப் பாடினால்தான் அந்த சிங்கப் பசிக்கு தன் குரலால் தீனி போட முடியும் என்று உணர்ந்து பாடும் 'பாடகர் திலக'த்திற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

    ஆமாம்!

    'நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
    அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
    செல்வம் ஆயிரம் இருந்து'

    கிராமத்தில் அமைதியாய் விவசாயம் பார்த்து, ஏர் பிடித்து, உழவு செய்த அப்பாவி நாயகன் தன் அன்பு மனைவியுடன் காலக் கொடுமையால் தங்கையை இழந்து, பட்டணம் வந்து கெட்டு, கடத்தல் கூட்டத்தில் சேர்ந்து அல்லது சேர்க்கப்பட்டு, அல்லல்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் கள்ளக் கடத்தல் தொழிலின் 'டான்' ஆகிறான். அப்போதும் அவனுக்கு நிம்மதி இல்லை ஆசை மகனே அவனை 'டான்' என்று வெறுத்து ஒதுக்குகிறான்.

    ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். ஆனால் அவன் மனையாள் மட்டும் அவனுடைய சுக துக்கங்களில் பங்கு கொண்டு அவனே தெய்வமென வாழ்கிறாள். மலை போனற மணாளன் வெறும் மணல் மேடாய் குன்றிப் போகாமல் இருக்க இறைவன் தந்த வரம் அவன் மனைவி சாவித்திரி.

    அவள் தன் கணவனிடம் இதுவரை எதுவுமே கேட்டதில்லை. உலகையே கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவான். ஆனால் அவள் ஆசைப்பட்டாளில்லை. அவளுடைய உலகமே அவன் ஒருவன்தான்.



    அவன் வாழ்க்கையில் பட்ட துன்பங்களின் காரணமாக கடவுள் நம்பிக்கை வெறுத்து கோவில் செல்லாமல், கோபுரம் பார்க்காமல் கோபமாய் இருப்பவன் இறுதியில் மனைவியின் பொறுமை அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவனை அவளுடனேயே கோவிலுக்கு கூட்டிச் செல்கிறது. அவனுக்கு நன்றாகத் தெரியும் மனைவியைத் தவிர தன்னை உண்மையாக நேசிப்பவர்கள் யாருமில்லையென்று. அவன் தொழில் எப்போதும் அவனை 'காலி' பண்ணைக் காத்திருக்கிறது. அதையும் அவன் உணர்ந்தே இருக்கிறான்.

    மனைவி கோவிலில் என்றும் கேட்காத திருநாளாய் அவனிடம் பூ வாங்கித் தரச் சொல்லி கேட்கிறாள். ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு. பூ விற்கும் பெண்மணியிடம் சென்று தன் 'பூவை'க்காக பூ வாங்குகிறான். நூறு ரூபாயும் அதற்காக நீட்டுகிறான். பூக்காரி 'சில்லறை இல்லை' என்று சொன்னவுடன் கொஞ்சம் சிதறுபவன் 'இதுவரை எதுவும் கேட்காத மனைவி இன்று என்னிடம் பூ கேட்டிருக்கிறாள் அவளுக்கு வாங்கிக் கொடுத்தே தீர வேண்டும்' என்று பூக்காரியிடம் சொல்ல, அந்த பெரிய மனது பூக்காரி 'நீங்க பணமே கொடுக்க வேண்டாம்....இந்தாங்க பூ...மனைவிக்கு வச்சு விடுங்க' என்று சொல்லி பெருந்தன்மையுடன் பணம் வாங்காமல் நகர, சற்றும் அதை எதிர்பாராதவன் 'இந்தக் கடனை நான் எப்படி தீர்க்கிறது?' என்று தனக்குள் புலம்பிக் கொள்கிறான்.

    பூக்காரியால் அவனுக்கு அப்போது உண்டான 'கடன்' என்ற வார்த்தை தன் வாழ்க்கையில் எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அவன் என்ன ஆரம்பிக்கிறான். தன் வாழ்வில் இதுவரை தீர்க்க இயலாத கடன்களை பற்றி நினைக்க ஆரம்பிக்கிறான். அவன் பட்ட கஷ்டங்களைவிட அவன் பட்ட கடன்கள்தான் அவன் மனதில் நிழலாய் இப்போது ஓடுகிறது. ஆனால் அது காசு வாங்கிய கடன் அல்ல...'பெத்த கடன், வளர்த்த கடன், குரு கடன், மனைவி கடன்' என்று அது மனைவியின் மேல் படரும் அன்பான, வாஞ்சையான பார்வையுடன் அருமையான பாடலாக அவனிடமிருந்து வெளிப்பட ஆரம்பிக்கிறது.

    நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து

    நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
    அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
    செல்வம் ஆயிரம் இருந்து

    பெத்த கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு
    என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு
    பெத்த கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு
    என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு
    கல்வி கற்ற கடன் குருவினிடம் சேர்ந்து கிடக்கு
    இதில் மற்ற கடன் அனைத்துமென்ன அமைதியிருக்கு

    நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
    அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
    செல்வம் ஆயிரம் இருந்து

    என் கைப்பிடித்திவள் வந்தாள் வந்த கடன் தீர்ப்பேனோ
    என் காவலுக்கிவள் நின்றாள் நின்ற கடன் தீர்ப்பேனோ
    என் கைப்பிடித்திவள் வந்தாள் வந்த கடன் தீர்ப்பேனோ
    என் காவலுக்கிவள் நின்றாள் நின்ற கடன் தீர்ப்பேனோ
    ஹோ,,,,,,ஓ
    என் தேவைகள் இவள் தந்தாள் தந்த கடன் தீர்ப்பேனோ
    பல சேவைகள் இவள் செய்தாள் செய்த கடன் தீர்ப்பேனோ

    நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
    அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
    செல்வம் ஆயிரம் இருந்து

    என் தாய் போல் பிழை பொறுத்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
    ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
    என் தாய் போல் பிழை பொறுத்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
    ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
    ஹோ,,,,,,ஓ
    எந்தக் கடலிலும் மிகப் பெரிது நல்ல மனைவியின் சேவை
    அதை அடைத்திட எண்ணும் போது பல பிறவிகள் தேவை

    நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
    அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
    செல்வம் ஆயிரம் இருந்து



    வாலியை நினைவுகூறும் போது நடிகர் திலகத்தை மறந்து விட இயலுமா? முடியுமா? வாலி வணங்கிய 'ராமனை'க் கூட மறக்கலாம்...நம் கணேசரை மறக்க முடியுமா?

    இந்தப் பாடலில் ஆண்டவன் அடக்கி வாசிக்கும் அற்புதங்கள் நிகழுமே! பாடலின் ஒவ்வொரு 'கடனை'யும் அவர் பாடி கலங்கும் போது கல்பட்டது போல நம் நெஞ்சங்களும் கலங்குமே! அவரோடு சேர்ந்த ஒரு கடன் பட்ட கணவனாய் நாமும் மாறி விடுவோமே! மனைவியின் இத்தனை கால பொறுமையும், சகிப்புத் தன்மையும் அவர் முகம் காட்டும் அந்த 4 நிமிட பாவங்கள் பார்ப்போரிடம் அப்படியே பதியுமே! மனைவியை வெறுப்பவன் கூட ஒரு முறை இந்தப் பாடலில் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் திருந்திப் போவானே!

    வாக்கிங் ஸ்டிக் வைத்து வகைவகையான பாடல்களை வாகாக நடித்துத் தந்த நடிக தெய்வம் இதிலும் அதை நடிக்க வைக்கிறதே 'செல்வம் ஆயிரம் இருந்தும் என்ன பயன்?...கிடக்கிறதே ஆயிரம் கடன்' என்று கலங்கும் உள்ளத்துடன், கனத்த இதயத்துடன் காட்டும் முகபாவங்கள் அளவெடுத்து தைத்த நடிப்புச் சட்டையாக நம் நாடி நரம்பெல்லாம் சென்று நிறைகிறதே!

    'செல்வம் ஆயிரம் இருந்து; எனும் போது முகத்தில் காட்டும் சிரிப்போடு கலந்த சலிப்பு.. வேதனை...இடையிசையில் சுஜாதாவுடன் கடந்த கால நினைவுகளை வேதனையுடன் அசை போட்டவாறு வரும் அலட்டாத நடை,.. அப்படியே சைடில் நடந்து வரும் மனைவியை ஒரு வினாடி பார்க்கும் அந்த கருணைப் பார்வை...(அடிப்பாவி மகளே! இத்தனை நாள் என்ன சுகத்தை நான் உனக்கு கொடுத்தேன்? என்னிடம் என்ன இன்பம் கண்டாய்?..எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எனக்காக இப்படி ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போய்க் கிடக்குறியே') 'ஹோ' என்ற விரக்தியில் தலை தூக்கும் தவிப்பு... அவருக்கே உரித்தான 'நான் பட்ட கடன்' எனும் போது செய்யும் தலையாட்டல்...பொங்கும் அழுகையை கட்டுப்படுத்தி அவள் பக்கம் கை நீட்டி 'ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள்... அந்தக் கடன் தீர்ப்பேனோ' என்று அவள் மீது பொய்க் கோபம் காட்டி பொருமும் சோகம்... 'எந்தக் கடலிலும் மிகப் பெரிது நல்ல மனைவியின் சேவை... அதை அடைத்திட என்னும் போது பல பிறவிகள் தேவை' என்று 'அவள்மீது பட்ட கடனை அடைக்கவே முடியாது' என்ற அன்புப் பெருக்கில் விக்கி அழும் கடன்காரக் கணவனின் பச்சாதாப பரிதாப நிலை என்று பாடல் முழுதும் படுபாந்தமாக கடன் தீர்க்க முடியாத கணவனாக மனைவி மேல் மாறாத அன்பு செலுத்தும் கணவனாய், கண்ணியவானாய் கலக்கி எடுக்கிறார் நடிகர் திலகம். கிராமங்களில் மோட்டார் பம்ப் இறக்கையில் வாய்க்காலில் தெள்ளது தெளிவாக ஒரே சீராக ஓடும் தண்ணீர் போல சிறப்பான நடிப்பை வழங்கி தாய்க்குலங்களில் நெஞ்சில் மட்டுமல்ல...நம் அனைவர் நெஞ்சங்களிலும் நிறைகிறார் திலகம். அந்த மூன்று நிமிட நேரத்தையும் நம் வாழ்க்கையின் தருணங்களாக ஆக்கி, நம்மை அவருடன் இணைத்து, அவர் சோகங்களை நமக்கு 'கடன்' கொடுத்து, நம் வாழ்க்கையின் கடன்களையும் நினைத்துப் பார்த்து விடச் செய்கிறார். இது அவரால் அன்றி வேறு எவரால் முடியும்?



    சுஜாதா நடிகர் திலகத்தின் மனைவி சாவித்திரியாக பாந்தம்தான். இருந்தாலும் திலகத்தின் முன் சம்திங் மிஸ்ஸிங் ஆனா மாதிரி தெரியும். பேலன்ஸிங் பண்ண கொஞ்சம் கஷ்டப்படுவார். ஆனால் அது சுஜாதாவின் குற்றம் அல்ல. திலகத்தின் மீதுதான் குற்றம். ஏனென்றால் பாடலின் முழு ஆக்கிரமிப்பும் அவரே. அவருக்கப்புறம்தான் வரிகள், இசை, பாடகர்கள், நடிகர்கள் என்று விமர்சிக்கவே முடியும். இந்தப் படாலில் மட்டுமல்ல...எந்தப் பாடலிலும்.

    (இன்னொன்று..இந்த மாதிரி மனைவி மேல் அன்பு கொண்டு கொட்டும் பாடல்கள் திலகத்திற்கு பல உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு ஜோடி. ஒவ்வொரு ஜோடிக்கும் வேறு வேறு மாதிரி பக்குவ நடிப்பு)

    பத்மினியுடன் வயதான காதலைக் காட்டினால் அங்கு நிலைமையே வேறு. பத்மினி கண்ணில் நீர் வழிந்தால் நிஜமாகவே இவர் நெஞ்சில் உதிரம் கொட்டி விடும். நெருக்கத்தோடு ஆழம் அதிகமாகும். செல்லக் கோபமும் கண்டிப்பும் பதமினியிடம் நைசாக காட்டப்படும். நெருக்கத்தைவிட உரிமை அதிகமாக இருக்கும்.'பாலக்காட்டு அப்பாவி ராஜா' இளமையில் பாடும் போது பார்க்கலாம். அதே முதுமையில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் போது வேரென இருந்து வீழ்ந்து விடாமல் தாங்கிப் பிடிக்கும் பத்மினி மனைவியின் மடி ஆறுதல் தரும் இடமாய் இருக்கும்.

    இதில் '50 லும் ஆசை வரும்' என்று ரிஷிமூலம் பார்க்காது 'புன்னகை அரசி'யுடன் திலகம் குதூகலம் கொண்டு பாடும் போது சிறுவயதுக் காதலன் தோற்பான். 'ஓ..மை டியர் டாக்டர்' என்று குறும்பு கொப்பளிக்க அதே புன்னகை அரசியுடன் 'ஜெனரல்' பாடும் போது கணவன் மனைவியின் அந்தரங்கம் அன்னியோன்யம் அருமையாக வெளிப்படும். காமக் குறும்பு கொப்பளிக்கும்.. விஜயா என்றால் நெருக்கமும், நேசமும் வேற மாதிரி. ('புருஷன் பொண்டாட்டின்னா சிவாஜி, கே.ஆர்.விஜயா மாதிரி இருக்கணும்' என்று பலர் சொல்லக் கேட்டு ரசித்திருக்கிறேன்)

    சுஜாதாவுடன் இம்மாதிரிப் பாடல் என்றால் விஜயாவுடன் இருப்பது போல் அவ்வளவாக நெருக்கம் பிளஸ் ஓட்டுதல் இருக்காது. ஆனால் மாறாக ஒரு இரக்கம் இருக்கும்...ஒரு கருணை இருக்கும். கண்ணியம் இருக்கும். 'நினைவாலே சிலை செய்து' காதலி சுஜாதாவுக்காக 'அந்தமானில்' வைத்தாரே! ஆனால் ரொம்பப் பெருந்தன்மை காட்டுவார் இப்பாடல் போலவே.

    நடுத்தர வயது பாடல் என்றால் ஸ்ரீவித்யாவுடன் வேறு மாதிரி இருக்கும். கை கோர்த்து விரல்கள் பிடித்து, ஒரு சிறு முத்தம் பதித்து, அழகான நடை நடந்து வருவதோடு 'இமய'த்தின் காதல் முடிந்து போகும். ('கங்கை, யமுனை இங்குதான் சங்கமம்.')

    இப்படி தன்னுடன் நடிக்கும் நாயகிகளுக்குத் தகுந்தவாறும் மாற்றி மாற்றி 'நடிப்பரசன்' நடிப்பில் நங்கூரம் பாய்ச்சுவார். இது சும்மா உதாரணத்திற்கு கொஞ்சமே...நிறைய எதிர்பார்த்தீர்களானால் பதிவின் நீளம் அதிகமாகிவிடும்.)

    'மெல்லிசை மன்னரி'ன் இசையைப் பற்றிக் குறிப்பிடத்தான் வேண்டும். பாடலின் வரிகள் முடியும் போது பின்னணியில் விடாமல் ஒலிக்கும் கிடாரின் ஒலி இனிமையோ இனிமை. பாடகர் திலகம் நடிகர் திலகத்தின் குரலை தன்னுடையதாக்கி வழக்கம் போல வளமை காட்டுவார்.

    மனைவியின் மீது கணவன் பட்ட கடன்களை மாண்புடன், பண்புடன், பாங்குடன் எடுத்துச் சொல்லும் அருமைப் பாடல். சக்கை போடு போட்ட ஹிட் பாடல். பழைய ஹிட் பாடல்களுக்கு கொஞ்சமும் குறையாத சவால் விடும் சாகசப் பாடல். சாகா வரம் பெற்ற பாடல். சரித்திர நாயக்கரின் பாடல். பொதுவான ரசிகர் அல்லாது குறிப்பாக 80 களின் நடிகர் திலகத்தின் இளம் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை கோலோச்சும் மிகப் பிரபலமான பாடல்.

    Last edited by vasudevan31355; 18th July 2017 at 10:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •