-
2nd June 2011, 04:06 AM
#11
Senior Member
Veteran Hubber
ராகவேந்தர் ஒரு ரசிகவேந்தர் [தொடர்ச்சி...]
- விழாவின் உச்சமாக ரஷ்ய கலாசார மையத்தின் பெரிய அகன்ற ஒளித்திரையில் இந்திய சுதந்திர முழக்கம் ஆரம்பமாகிறது. ஆம், தேசிய திலகத்தின் தேசிய திரைக்காவியங்களிலிருந்து காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு சுதந்திர-குடியரசு தின அணிவகுப்பு போல அட்டகாசமாக அணிவகுத்து வருகின்றன.
- உச்சத்தின் ஆரம்பமே உச்சக்கட்ட காட்சிதான். சக்தி கிருஷ்ணசாமியின் வளமான வசனங்களை சகல சக்தியையும் கொடுத்து இனி இவ்வுலகில் இவர் போல் எவரும் முழங்க முடியாது என்கின்ற ஆர்ப்பரிப்புடன் அடலேறுவாக முழங்குகிறார் கட்டபொம்மன். பேனர்மென்னின் பயமுறுத்தலுக்கு கிஞ்சித்தும் பிடி கொடுக்காமல் சிங்கமென சீறிப்பாய்கிறார் வீரபாண்டியனார். IPL எல்லாம் என்ன, VPK Climax Evergreen Edge-of-the-seat Thriller.
- முதல் முழக்கமிட்ட தேசிய தமிழ்ச் சிங்கத்துக்குப் பின் வனப்புடன் வருகிறார் கப்பலோட்டிய தமிழ்த் தங்கம் வ.உ.சி. ஊசிமுனை இடம் கூடத் தரமாட்டேன் என்று தடம் பதித்த வெள்ளயனை அவன் இடம் நோக்கி அனுப்ப வங்கக்கடலில் கப்பல் ஓட்டுகிறார் வ.உ.சி. 'வெள்ளிப்பனிமலையின் மீதுலவுவோம் அடிமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்' என மகாகவியின் பல்லவி வெற்றிமுரசாக முழங்க, தொடர்ந்து மேலும் கப்பல்கள் வாங்கி வெள்ளையனின் வாணிபத்தை படுக்கச் செய்து அவனை அவனது நாட்டுக்கு விரைந்து அனுப்பி வைக்கப் போவதாக முழங்குகிறார் சிதம்பரனார். சிதம்பரனாராகவே வாழ்ந்து காட்டியுள்ள சிவாஜி பெருமானார் கூடு விட்டு கூடு பாயும் வரம் பெற்று வந்தாரோ !
- 'இன்கிலாப் ஜிந்தாபாத் ! ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் !' என அடுத்து வேங்கை போல் வருகிறார் ரங்கதுரை தனது ராஜபார்ட் பகத்சிங்கிற்காக. Soundக்கு ராஜன் பின்னணியில் முழங்க அதற்கு முன்னணியில் ஏக பாவங்களையும் கொடுத்து எந்த அணியும் தனதே என்கிறார் நடிப்புக்கு ராஜன். அடுத்து வெள்ளைய ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளம்ப திருப்பூர் குமரனாகிறார் நமது ரங்கதுரை. அவர் பெருந்தலைவர் புகழ் பாடும் போதெல்லாம் அரங்கமெங்கும் பெருத்த கரவொலி. பகத்சிங்கோ, கொடி காத்த குமரனோ, ராஜபார்ட் ரங்கதுரையை உள்ளிருந்து உருவாக்கியது ராஜபார்ட் சிவாஜிதுரையாயிற்றே !
- அடுத்து வருகிறது சினிமா பைத்தியம்; ஆனால் நமக்கோ அதில் வரும் சிவாஜி மீதே பைத்தியம். வாஞ்சியாக சிவாஜி வீறு கொண்டு வருகிறார்; ஆஷ் குளோஸ். கப்பலோட்டிய தமிழனின் வாஞ்சி பாலாஜி சினிமா பைத்தியத்தில் ஆஷ் ஆகி வாஞ்சி சிவாஜியால் குளோஸ் ஆகிறார். கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழனையும் எத்தனை எத்தனையோ முறை காண வாய்ப்புக் கிட்டியது போல் வீரவாஞ்சியை காண வாய்ப்பு கிட்டாததால் அரங்கமே இந்தக் காட்சியின் போது Spellbound.
- நாம் பிறந்த இந்த மண்ணின் விடுதலை வேள்விக்கு வித்திட்டதற்காக மண்ணின் மைந்தர் சந்தனத்தேவன் தூக்குக் கயிற்றை முத்தமிடும் சமயத்தில் பாரதம் சுதந்திரம் அடைந்திருக்கின்ற தூக்கலான செய்தி தெரிவிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார் அவர். அப்பொழுது அங்கிருக்கும் அதிகாரியிடம் அவர் முகம் காட்டும்/பேசும் பாவங்கள்...அப்பப்பா.....!!! பார் போற்றும் கணேசனார் பாரத மண்ணில் பிறந்தது பாரத சமுதாயம் செய்த பாக்கியம் !
- விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மாவீரனின் காட்சியில் தொடங்கி விடுதலைப் போர் நிறைவு கண்டு சுதந்திரம் அடைவதாக காட்சியிலேயே interval கொடுத்து மிக நேர்த்தியாக தொகுத்திருந்த நமது ராகவேந்திரன் சாரின் திறனுக்கு எத்தனை சபாஷ் வேண்டுமனாலும் போடலாம். சுதந்திரம் கிடைத்துவிட்டது. பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க என்ன செய்ய வேண்டும் என்கின்ற அறிவுறுத்தல்களாக அடுத்தடுத்த காட்சிகள் மிளிர்கின்றன.
- பாரதத் 'தாயே உனக்காக' நான் என்கிறார் அண்ணல். அன்பார்ந்த அண்ணலே உனக்காக நான் என்கிறது அரங்கின் அன்பு நெஞ்சம் ஒவ்வொன்றும் ! கணவனாக கலைக்குரிசில் மனைவி பத்மினியிடம் காதல்மொழி பேசுகின்ற போதும் சரி, படிகளில் வீரனுக்கான கெட்டப்புடன் இறங்காத கம்பீரத்தோடு இறங்கி வரும்போதும் சரி, வெற்றி அல்லது வீரமரணம் என முழங்கி பாரியாளிடமிருந்து விடைபெற்று பாரதத்தைக் காக்க வீறுகொண்டு கிளம்பும்போதும் சரி, போர்க்காயமுற்று படுத்தபடியே சிவகுமாரிடம் பேசும்போதும் சரி, நடிகர் திலகம் நவரசத்திற்கும் திலகம் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறார்.
- நமது இரத்தத்தில் தேசியத்தைக் கலந்த திலகத்தின் நா நவில்கிறது 'பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே கனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே'. பாடலின் சில முக்கிய வரிகள் மட்டும் இக்காட்சியில் வருகிறது. நேருவைக் காட்டும் போது நம்மவர் காட்டும் பூரிப்பு, பரவசம் ஆஹா..! ஆஹா..! ஆசிய ஜோதி அண்ணலை ஆக்டர் என்றுதான் அழைப்பார். சரியான கணிப்பு, இவரை விட்டால் வேறு யார் ஆக்டர் !!
- பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கு விலாஸமாக விளங்கும் பாடல் காட்சி பாரத ஜோதியின் பாவத்தில். 'இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு, எல்லா மக்களும் என் உறவு, எல்லோர் மொழியும் என் பேச்சு, திசை தொழும் துருக்கர் என் தோழர், தேவன் ஏசுவும் என் கடவுள்'. திரையில் தேசியத்தை கோலூச்ச இவரை விட்டால் வேறு யார் ! பாடலின் இறுதியில் உணர்ச்சி மேலோங்க அவர் 'வந்தே மாதரம்' எனப் பாடி முழங்கும் போது அதே உணர்ச்சி நமக்கும் மேலிட 'வந்தே மாதரம்' என நாமும் முழங்குகிறோம்.
- சிறந்த விருந்தின் முடிவில் ஐஸ்கிரீம் சுவைப்பது போல், இந்த தேசியக் கலை விருந்தின் சிகரமாக வருகிறது 'சிந்துநதியின்மிசை நிலவினிலே'. மகாகவியாக மகாநடிகர், டி.எம்.எஸ்., விஸ்ராம், கேமரா வள்ளல் கர்ணன், கே.எஸ்.ஜி. என இந்தப் பாடலில் பரிமளிக்கும் ஒவ்வொருவருமே இதற்கு கை கொடுத்த தெய்வம். மராட்டியரோ, மலையாளியோ, கங்கைப்புரத்தவரோ, காவிரிமைந்தரோ, இமயம் முதல் குமரி வரை, ஆல்ப்ஸ் முதல் அண்டார்டிக் வரை, எப்பிரதேசத்து வேடத்தையும் இந்நடிப்புப் பிரதேசம் தருவித்தால் மயங்காதார் யார் கண்டு மகிழாதார் யார் !
- ரசிகவேந்தர் ராகவேந்தரின் அபரிமிதமான ஆற்றலில் ஒவ்வொரு காட்சிக்கும் தகுந்த முன்னுரைத் தகவல்களோடு அம்சமாக தொகுத்தளிக்கப்பட்ட தேசிய திலகத்தின் காவியக்காட்சிகள் நமது இரத்த அணுக்களில் நாட்டுப்பற்றை ரீசார்ஜ் செய்தது என்று கூறினால் அது மிகையன்று ! அரைமணி நேரத்துக்கும் மேலாக அன்னை பூமி குறித்தே நினைவுகளை செலுத்த வைத்த தேசிய திலகத்திற்கும் அவரது ரசிக திலகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
- முரளி சார், பார்த்தசாரதி சார், கிருஷ்ணாஜி, அடியேன் என ஹப்பர்களும், செல்வி கிரிஜா, திரு.ராமஜெயம், திரு.முரளி, திரு.கான், திரு.நவீன் என எண்ணற்ற அன்புள்ளங்களும் இன்னும் பலரும் களித்து மகிழ்ந்த இவ்விழா எளிய விழாவாக நடைபெற்ற போதிலும் இனிய விழாவாக மிகுந்த மனநிறைவைத் தந்தது என்பது மறுக்க முடியாத ஒன்று !
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 4th June 2011 at 03:10 AM.
pammalar
-
2nd June 2011 04:06 AM
# ADS
Circuit advertisement
Bookmarks