Results 1 to 10 of 65

Thread: படித்துறை

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    From his blog. Hilarious. For the most part.

    படித்துறை. சில சுவாரஸ்யங்கள்

    நான் சொன்ன திரைக்கதையை படமாக்க ஆர்யா முடிவு செய்தபோது படத்துக்கான டைட்டிலை நான் அவருக்குச் சொல்லவில்லை. காரணம், அப்போது எனக்கே டைட்டில் என்னவென்று தெரியாது. அதன் பிறகு முழுவதுமாக எழுதப்பட்டிருந்த திரைக்கதையைப் படித்துப் பார்த்தபோது படித்துறை என்ற தலைப்பு அந்தக் கதைக்குச் சரியாக இருக்கும் என தோன்றியது. தமிழ்நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி ஓடுகின்ற திருநெல்வேலியைச் சுற்றியே கதைக்களம் அமைந்திருப்பதாலும், மனித வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கும் வகையில் ஒரு குறியீடாகவும் இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதை நான் சொன்னவுடன் ஆர்யா மறுப்பேதும் சொல்லாமல் ஆமோதித்தார். இளையராஜா அவர்களிடம் இந்தத் திரைக்கதையைச் சொன்னபோதும் நான் முதலில் இந்தத் தலைப்பைச் சொல்லவில்லை. பாடல் பதிவின் போது திடீரென நினைவுக்கு வந்தவராய் கேட்டார். ஆமா, என்ன டைட்டில் வச்சிருக்கே?. அப்போதுதான் அவருக்கு இன்னும் டைட்டிலைச் சொல்லவில்ல என்பதே என் மரமண்டைக்கு உறைத்தது. படித்துறை என்றேன். பிரமாதம்யா என்றார். ஆனால் எனது உதவி இயக்குனர் ஒருவருக்கு இந்த டைட்டில் பிடிக்கவில்லை. முதலில் தனக்கு இந்தத் தலைப்புக்கான அர்த்தம் புரியவில்லை என்றார். பிறகு யூத்துக்கு இது போய் சேராது என்று கவலைப்பட்டார். இரண்டாவது காரணத்தை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் முதல் காரணம், எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. காரணம், படித்துறை என்ற தலைப்பு தனக்கு புரியவில்லை என்று சொன்ன அந்த உதவி இயக்குனர் ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி. Yes. Tamil MA. இந்தக் கவலையுடன் எனது வாத்தியார் பாலுமகேந்திரா அவர்களைச் சந்தித்தேன். கடுமையான கோபத்துடன் வாத்தியார் சொன்னார். படித்துறைங்கிற இந்த டைட்டிலை மட்டும் நீ மாத்தினே, நான் உன்னை அடிப்பேன். அப்பாடா என்றிருந்தது.

    பிரசாத் ஸ்டூடியோவில் பாடல்பதிவு நடந்து கொண்டிருந்தது. இளையராஜா அவர்களின் மேனேஜர் சுப்பையா திருநெல்வேலிக்காரர். வாத்தியாரிடம் உதவி இயக்குனராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே எனக்கு பழக்கம். எனது முதல் படம், அதுவும் திருநெல்வேலியிலேயே படமாக்கப் போகிறேன் என்பது குறித்து அவருக்கு ஏக குஷி. வருவோர் போவோரிடமெல்லாம் எங்க ஊர்ப்படம்லா என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது வேறு ஏதோ ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் இளையராஜா அவர்களைப் பார்க்க வந்திருந்தார். திருமண வரவேற்பு மேடையில் புகைப்படம், வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் புதுமாப்பிள்ளை போல இருந்தார். உடம்பை இறுக்கிப் பிடிக்கும் சஃபாரி உடையில், பத்தில் எட்டு விரல்களில் மோதிரங்கள் அணிந்திருந்தார். கால்களில் ஷூஸ் போட்டிருந்ததால் கால் விரல்களை என்னால் கவனிக்க முடியவில்லை. சுப்பையா அந்தத் தயாரிப்பாளரை நேரே என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். எங்க குடுமபத்துல பாலா அண்ணனுக்கு அப்புறம் வந்திருக்க வேண்டியவரு. கொஞ்சம் லேட்டாயிடுச்சு. ஸார்தான் ம்யூசிக்கு. ஷூட்டிங் பூரா எங்க ஊர்லதான். படம் பேரு பாசறை என்றார். உடனே அந்த சஃபாரி தயாரிப்பாளர் முகம் மலர்ந்து பாசறை. ஃபர்ஸ்ட் கிளாஸ் டைட்டில் ஸார். விஷ் யூ ஆல் தி பெஸ்ட் என்று என் வலது கையை தன் இரண்டு முரட்டுக்கரங்களாலும் பிடித்து அழுத்தினார். வலி தாங்க முடியவில்லை. சிரித்தபடி தேங்க்ஸுங்க என்று சமாளித்தேன்.

    படப்பிடிப்புக்காக திருநெல்வேலிக்குப் போய் இறங்கினோம். நான் பிறந்து வளர்ந்த ஊர்தான் என்றாலும் படப்பிடிப்புக்கான சாத்தியங்களுக்காக வேறு ஒரு கண் கொண்டு திருநெல்வேலியைப் பார்க்க வேண்டியிருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அதாவது திருநெல்வேலி ஊருக்குள் எங்கேயுமே படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது என்றார்கள். நிலைகுலைந்து போனேன். அங்கு அப்போதிருந்த கமிஷனர் ஒரு வடநாட்டுக்காரர். என்ன சொல்லியும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. திருநெல்வேலி ஊரை வெறும் லொக்கேஷனாக பயன்படுத்திய எத்தனையோ படங்களுக்கு படித்துறை படப்பிடிப்புக்கு முன்புவரை அனுமதி கொடுத்திருந்தார்கள். ஆனால் அசல் திருநெல்வேலியை, அதன் மனிதர்களை படமாக்க நினைக்கும் ஒரு தாமிரபரணிக்காரனுக்கு அவனது சொந்த மண்ணில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. சரி, பரவாயில்லை என்று கிளம்பி திருநெல்வேலியின் எல்லையைத் தாண்டிய வெளிப்புறங்களிலேயே படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டோம். இரண்டாம் நாள் அடுத்த குண்டு விழுந்தது. படித்துறை படத்துக்காக நாங்கள் ஒப்பந்தம் செய்திருந்த கதாநாயகி படப்பிடிப்புக்கு வர மறுத்து விட்டார் என்று சொன்னார்கள். மூன்றாவது நாளிலிருந்து அந்தப் பெண் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்த எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தப் பெண்ணிடம் தொலைபேசியில் பேசினேன். அவரது மேனேஜருக்கும், அவருக்கும் ஒத்துவரவில்லையாம். அந்த மேனேஜரால் தான் ஒத்துக் கொண்ட படங்களில் இனி நடிப்பதாக இல்லை என்று சொன்னார். உங்களை சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள். இதற்கு பதிலாக உங்களின் அடுத்த படத்தில் பணம் வாங்காமலேயே நடிக்கிறேன் என்றார். கேமெராவையேப் பார்த்திராத புதிய மனிதர்களை படித்துறை படத்துக்காக தேர்வு செய்து வைத்திருந்தோம். இந்தப் பெண்ணின் காட்சிகளைப் படமாக்கும் போது அந்த புதியவர்கள் வேடிக்கை பார்த்தால் ஓரளவு சினிமா பிடிபடும் என்பது எங்கள் எண்ணமாக இருந்தது. இப்போது அந்தத் திட்டத்தில் மண். மறுநாளிலிருந்து நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த காட்சிகளுக்கு பதிலாக அந்தப் புதிய மனிதர்களை படமாக்க முடிவு செய்து படப்பிடிப்பைத் தொடர்ந்தோம். ஒருபக்கம் லொக்கேஷன் பிரச்சனை. மறுபக்கம் புதுமுகங்களை வேலை வாங்குவதில் உள்ள சிரமம். இதற்கிடையே புதிய கதாநாயகியையும் தேடிப் பிடிக்க வேண்டும். படப்பிடிப்பின் இடைவேளை நேரங்களில் இணையம் மூலமாக புதிய கதாநாயகியைத் தேடும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஆர்யா நிறைய புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பிக் கொண்டிருந்தார். அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் அவர் சரியாக இருப்பார் என்று தோன்றியது. ஆர்யாவை அந்தப் பெண்ணிடம் பேசச் சொல்லிவிட்டு படப்பிடிப்பைத் தொடர்ந்தோம்.

    அதிகாலையில் ஒட்டுமொத்த யூனிட்டையும் கிளப்பிக் கொண்டு திருநெல்வேலியின் வெளிப்புறத்துக்குச் சென்று ஒரு இடத்தில் எல்லோரையும் இருக்கச் செய்து சாப்பிடச் சொல்லிவிட்டு லொக்கேஷன் பார்க்கக் கிளம்புவோம். அரைமணிநேரத்துக்குள் ஒரு இடத்தை தேர்வு செய்து, அதில் இந்தக் காட்சியை எடுத்து விடலாம் என்று முடிவு செய்து படப்பிடிப்பை நடத்தினோம். இதற்கிடையில் சென்னையில் இருந்த அந்தப் புதிய கதாநாயகிக்கு தொலைபேசியிலேயே முழுக் கதையையும் சொல்லி சம்மதிக்க வைத்தேன். ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதையில் நடிக்கவிருக்கும் அந்தக் கதாநாயகியை, இயக்குனரான நான் பார்க்காமலேயே அவர் என் படத்துக்குக் கதாநாயகியானார். ஏதோ ஒரு தைரியத்தில் இந்த முடிவை எடுத்தேன். ஆர்யாவுக்கு என் மேலும், அந்தப் பெண்ணுக்கு நான் சொன்ன கதையின் மீதும், எனக்கு என் உதவியாளர்களின் ஒத்துழைப்பின் மீதும் நம்பிக்கை இருந்ததாலேயே இது சாத்தியமாயிற்று.

    திருநெல்வேலியின் பழமையான தியேட்டர்களுள் ஒன்றான லட்சுமி தியேட்டர் இப்போது இயங்கவில்லை. மதிய உணவுக்காக எங்களுக்கு அதை திறந்து கொடுத்திருந்தார்கள். நானும், நண்பர் அழகம்பெருமாளும் உணவருந்திவிட்டு எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உட்பட பழைய பெரும் நடிகர்கள் நடித்த திரைப்படங்களை திருநெல்வேலி மக்களுக்குக் காண்பித்து பரவசப்படுத்தியிருந்த லட்சுமி தியேட்டரின் அவ்வளவு பெரிய பழைய திரைக்கு முன் உள்ள காலியான, உடைந்த, தூசியடைந்த இருக்கைகளில் உட்கார்ந்திருந்தோம். அப்போது சென்னையிலிருந்து படித்துறை படத்தின் கதாநாயகி ஜீன்ஸும், ஆண்பிள்ளைச் சட்டையும், உயர்குதிகால் செருப்பும் அணிந்தபடி நேரே அழகம்பெருமாளிடம் வந்து வணங்கி ஸார், நீங்கதானே டைரக்டர்? என்று கேட்டார்.
    *
    ஆற்றங்கரையில் நண்பர்கள் அனைவரும் தலையிலிருந்து பாதம் வரை எண்ணெய் தேய்த்துக் கொண்டு, குளிப்பதற்குமுன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது மாதிரி ஒரு காட்சி. இதில் நடித்த இளைஞர்களின் நால்வர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தினமும் ஷவரில் குளித்துப் பழக்கப்பட்டவர்கள். வாழ்க்கையில் முதன்முறையாக எண்ணெய் தேய்த்து ஆற்றில் குளித்தார்கள். அது ஒரு நீண்ட காட்சி. காலையிலிருந்து மாலைவரை படம்பிடித்தோம். அன்று முழுவதும் அந்த இளைஞர்கள் அனைவரும் உடம்பு முழுக்க எண்ணெயுடன் இருந்ததால் மறுநாள் எல்லோருடைய உடம்பும் புண்பட்டு சின்னச் சின்னக் கொப்பளங்கள் வந்து சிரமப்பட்டுவிட்டனர். நல்ல வேளையாக அந்தக் காட்சியில் எந்தவொரு ஷாட்டும் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் அன்றைக்கே எடுத்து விட்டோம். ஏதேனும் மிச்சம் வைத்திருந்து இன்னொரு நாள் எடுத்திருந்தால் பையன்கள் இரவோடு இரவாக சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு லாரி பிடித்திருப்பார்கள்.

    படித்துறை திரைக்கதையில் ஒரு அறுபது வயதுக்கார கதாபாத்திரத்துக்காக திருநெல்வேலியைச் சேர்ந்த கஜேந்திரன் என்ற மனிதரை நடிக்க வைத்தோம். லாலா என்றழைக்கப்படும் அவர் ஒரு டிரைவர். மனதளவில் வெகுளி. அவரிடம் உள்ள ஒரே பிரச்சனை, தனக்கு தெரியாதது இந்தவுலகில் எதுவுமே இல்லை என்ற அவரது நம்பிக்கைதான். அது மூடநம்பிக்கை என்பது அவரைச் சந்தித்த சில மணித்துளிகளில் அவரே நமக்கு உணர்த்திவிடுவார். காட்சிக்குத் தேவையான வசனங்களை உதவி இயக்குனர்கள் அவருக்குச் சொல்லி முடிக்கும் முன்னரே அவராக பேச ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் பிரம்மாஸ்திரம் என்று அவர் சொல்ல வேண்டும். எனது இணை இயக்குனர் பார்த்திபன் எவ்வளவோ முறை கெஞ்சிப் பார்த்தும் லாலா மீண்டும் மீண்டும் பிரம்ம சாஸ்திரம் என்றே சொல்லிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்துக்கு மேல் பார்த்திபன் பொறுமை இழந்து கடும் கோபம் கொண்டார். விளைவு, முன்மண்டை வீங்கிவிட்டது. லாலாவுக்கல்ல. விரக்தியின் விளிம்புக்குச் சென்ற பார்த்திபன் வசனப் பேப்பரை தூக்கி எறிந்து விட்டு, சுவற்றில் மடேர் மடேர் என்று முட்டிக் கொண்டார்.

    இன்னொரு காட்சியை சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்டில் நள்ளிரவு பன்னிரண்டரை மணிக்கு எடுத்துக் கொண்டிருந்தோம். உணர்ச்சிபூர்வமான காட்சி அது. நடிகர்கள் அனைவரும் கண்களில் கிளிசரின் போட்டு கலங்கி நடித்துக் கொண்டிருந்தனர். காட்சியை விளக்கிவிட்டு வந்து மானிட்டரில் உட்கார்ந்திருந்தேன். காட்சியின்படி வெளிநாட்டுக்குக் கிளம்பிச் செல்லும் ஒரு கதாபாத்திரத்திடம் லாலா வந்து மாப்ளே, கவலப்படாம போயிட்டு வா என்று சொல்ல வேண்டும். கண்களில் கண்ணீருடன் அந்த இளைஞனும், வழியனுப்ப வந்த மற்ற இளைஞர்களும் காத்து நிற்க, தளர்ந்த நடையுடன் வந்து லாலா அந்த இளைஞனின் கைகளை ஆதரவாகப் பற்றியபடி, மாமா என்றார். கையை உதறிவிட்டு அந்த இளைஞன் சிரித்தபடி ஓட, மற்றவர்களும் கிளீசரின் கண்ணீரையும் மீறி வெடித்துச் சிரித்தனர். கட் என்றேன். காமிராமேனைக் காணோம். காமிராவை விட்டு இறங்கி கீழே உட்கார்ந்து வயிற்றைப் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.
    ஒருநாள் காலையில் சேரன்மகாதேவியில் ஒரு இடத்தில் யூனிட் ஆட்கள் எல்லோரையும் அஸெம்பிள் செய்துவிட்டு லொக்கேஷன் பார்த்துக் கொண்டிருந்தோம். இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதி அது. இடுப்பில் சாரம்(கைலி) அணிந்திருந்த ஒரு மனிதர் என்னருகில் வந்து, மகனே, என்னை ஞாபகம் இருக்காலெ? நாந்தாலெ சாகுல் சித்தப்பா என்றார். சிறுவயதிலிருந்தே எங்கள் குடுமபத்தோடு ஒட்டி உறவாடிய எங்கள் குடும்ப நண்பரவர். நான் பார்த்து பலவருடங்கள் ஆகியிருந்தது. அடையாளம் தெரிந்து கொண்டு சித்தப்பா என்றேன். எவ்வளவு சங்கடப்பட்டு இந்தப் படத்தை எடுக்கே! எல்லாம் கேள்விப்பட்டேன். கவலப்படாதே. நல்லதே நடக்கும். இன்ஷா அல்லா என்றார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Replies: 0
    Last Post: 10th June 2011, 10:26 PM
  2. Replies: 4
    Last Post: 16th May 2011, 05:30 PM
  3. Replies: 0
    Last Post: 29th April 2011, 02:27 AM
  4. Replies: 0
    Last Post: 15th March 2011, 05:53 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •