From Kumudam dated 27.07.11

பேரிக்காய் தலையா’, ‘டிராக்டர் தலையா’ என்று தமிழ் சினிமாவிற்கு புதுப்புது வார்த்தைகளை உதிர்த்து நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தியவர் கவுண்டமணி. இவரது வாழைப்பழ காமெடியை நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு தானாக வரும்.தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. அவரின் சொந்த ஊர்தான் வல்லக்குண்டாபுரம்.



இங்குதான் சமீபத்தில் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படம் படமாக்கப்பட்டது. பால்காரராக நடிக்கும் விஜய், கவுண்டமணியின் வீட்டில், பக்கத்து வீடுகளில் மாட்டில் பால் கறப்பது போலவும், படமாக்கினார்கள்.

விஜய்க்கு கவுண்டமணியின் சொந்த ஊர் இதுதான் என்று ஆரம்பத்தில் தெரியாது! ஒரு காட்சியில் கவுண்டமணியின் வீட்டில் படமாக்கப்பட்ட போதுதான் தெரிய வந்தது! உடனே கவுண்டமணியின் அக்கா, அம்மா குடும்பத்தினருடன் நீண்ட நேரம் பேசிவிட்டுத்தான் சென்றார்.

நாமும் கவுண்டமணியின் அம்மா,அக்காவைச் சந்திக்க வல்லக்குண்டாபுரம் போனோம்.

திருமூர்த்தி மலைச்சாரலின் குளிர்ந்த காற்று எப்போதும் வீசிக்கொண்டே இருக்கும் கிராமம் அது. சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகள். அதில் வேலை செய்யும் கள்ளங்கபடமில்லாத கிராமத்து மனிதர்கள். இவர்களுக்கு மத்தியில்தான் கவுண்டமணியும் அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். அங்குள்ள அவரது அக்கா மயிலாத் தாள் வீட்டில்தான் சிறுவயதிலிருந்தே வளர்ந்து வந்திருக்கிறார். அவர் ஓடியாடி விளையாடிய கிராமம் அது. அங்கு நாம் சென்ற சமயம், அம்மாவால் பேச முடியவில் லை. அதனால் அக்கா மயிலாத்தாளே பேசினார்.

‘‘எங்கள் பெற்றோருக்கு நானும், சுப்பிரமணியும், இரண்டுபேர்தான். (அட! கவுண்டமணியின் சொந்தப் பெயர் சுப்பிரமணியா!) வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம். எங்கப்பா அவனை அடிக்காமல் வளர்த்தார். சின்ன வயதில் இருந்தே அவனுக்கு நாடகத்தில் நடிப்பதென்றால் கொள்ளை ப்ரியம். அதனால் எப்பப் பார்த்தாலும் பள்ளிக்கூடம் கூட போகாமல் நாடகம் பார்க்கவே சுத்திகிட்டு இருப்பான்.எங்கப்பாவும் ‘சுப்பிரமணிக்கு நாடகம் பார்க்கிறது இஷ்டம்ன்னா, அதிலியே விட்டு விடுங்கள்’ என்றதால் நாங்களும் கண்டிக்கவில்லை.

இப்பதான் சினிமாவில் இத்தனை வாய் பேசறான். சின்ன வயதில் பேசவே மாட்டான். பேசினாலும் மெதுவாகத்தான் பேசுவான். 15 வயதிலேயே ‘நானும் நாடகத்தில் நடிக்கப் போகிறேன்’ என்று விடாமல் நச்சரித்ததால் நான்தான் சென்னைக்குக் கொண்டு போய் விட்டு வந்தேன். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து, பின்னர் எம்.ஆர்.ஆர்.வாசு, ஓ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடித்த பிறகுதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினான். பாரதிராசா படத்துல நடிச்ச பிறகுதான் வெளியில் முகம் தெரியத் தொடங்கியது.



ஒருமுறை ஒரு அக்ரஹாரத்தில் நடந்த நாடகத்தில் கவுண்டர் வேடத்தில் நடிச்சான். நாடகம் முடிந்ததும் அதை வாழ்த்திப் பேச வந்தவர், ‘‘சுப்பிரமணி அருமையாக நடித்துள்ளார். கவுண்டர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே போல் ஏற்ற இறக்கத்தில் அற்புதமாக பேசி நடித்தார். அதனால் இன்று முதல் சுப்பிரமணியை கவுண்டமணி என்றே அழைப்போம்’’ என்றார். அன்றிலிருந்துதான் அவன் ‘கவுண்டமணி’யானான்.
வீட்டில் இருந்த புகைப்படங்களில் மாலையும்,கழுத்துமாக மணக்கோலத்திலிருந்த தம்பதிகளைப் பார்த்து யார் என்று கேட்டதும், ‘‘அது எங்க தம்பிதாங்க, அவன் அப்பவே காதல் கல்யாணம் தான் பண்ணிக்கிட்டான். அந்தக் கல்யாணத்தை நானும், என்ற வீட்டுக்காரரும் நடத்தி வைச்சோம்ங்க. (கணவர் பெயரைச் சொல்லவில்லை)
அவனுக்கு எம் மேலே பாசம் அதிகமுங்க. எங்கம்மான்னா அவனுக்கு உசிரு! எங்கம்மாவை ஆஸ்பத்திரிக்கு இப்பதான் கூட்டிட்டுப் போயிட்டு வந்தோம். அவங்களுக்கு உடம்பு சரியில்லாததனால்தான் அவங்களால பேச முடியல’’ என்றவர் அவரே தொடர்ந்து,

‘‘அவனுக்கு டவுன் வாழ்க்கையை விட கிராமத்து வாழ்க்கைதான் ரொம்ப பிடிக்குமுங்க.இங்க வந்தான்னா ஊரையே ஒரு ரவுண்ட் அடிச்சு விட்டுதான் வருவான்’’ என் றார்.

மயிலாத்தாளைப் போலவே வல்லக்குண்டாபுரத்தின் பெரிசுகள் பலருக்கும் கவுண்டமணியின் நினைவுகள் இன்னமும் இருக்கின்றது. ஊருக்குள் எப்போது வந்தாலும் பழைய நண்பர்களைப் பார்த்து பேசிவிட்டு வருவாராம்.அமைதியாக வயல்களில் சென்று சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு தான் சென்னைக்குத் திரும்புவாராம்!

நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்த மனிதருக்குள் ஊர்ப்பாசம் ஆழமாய் வேரூன்றி இருப்பது இந்த கிராமத்துக்குள் சென்றபோது நன்றாகவே தெரிந்தது!