முப்பெரும் ஜோதி

திருமயிலையில் திவ்யமான 'இல்லற' ஜோதி

இன்று 31.7.2011 ஞாயிறு மாலை, சென்னை மயிலாப்பூரில் உள்ள, நான் பயின்ற பள்ளிக்கூடமான, பெண்ணத்தூர் சுப்ரமண்யம் உயர்நிலைப்பள்ளியின் [P.S. HIGHER SECONDARY SCHOOL], விவேகானந்தா ஹாலில் உள்ள மினி திரையரங்கில் [நான் படிக்கும் போது இந்த இடம் வகுப்பறைகளாக இருந்தது], "VINTAGE HERITAGE" அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட கலையுலக ஜோதியின் "இல்லற ஜோதி" காவியத்தைப் பார்த்தது மெய்சிலிர்க்கும் அனுபவம். அதுவும் நமது மேன்மைமிகு திரித்திலகங்கள் ராகவேந்திரன் சார், முரளி சார், பார்த்தசாரதி சார் ஆகியோரோடு பார்த்ததில் அளவிலா மகிழ்ச்சி. இந்த வெளியீடு குறித்து பட விவரங்களுடன் ஏற்கனவே நமது திரியில் தகவல் அளித்த ராகவேந்திரன் சாருக்கு முதற்கண் நன்றி. 1990லிருந்து இருபது ஆண்டுகளாக பம்மலில் வசித்தாலும், 1980களில் மயிலாப்பூரில் இருந்ததை மறக்கவே முடியாது. அனைத்தும் திரும்பவும் பெற முடியாத பள்ளி நாட்கள் ஆயிற்றே ! பள்ளியினுள்ளே நுழைந்ததுமே ஒரு முப்பது வயது குறைந்ததாக நினைந்தேன். 1982 ஜூனிலிருந்து 1989 ஏப்ரல் வரை [ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை], பள்ளியில் பயின்ற நாட்களெல்லாம் நினைவுத் திரையில் விஸ்வருபமெடுத்தன. பள்ளிக்கு எதிர்முனையில் உள்ள ஒரு சந்துத்தெருவில் வியாழக்கிழமைதோறும் கபாலி, காமதேனு அரங்குகளில் வெள்ளி முதல் என்ன படம் என்று போஸ்டர் ஒட்டுவார்கள். அதனை ஒவ்வொரு வியாழன் மாலையும் பள்ளி முடிந்ததும் பார்த்து விட்டு அந்த வாரம் நடிகர் திலகத்தின் படம் என்றால், ஞாயிறு மேட்னி நிச்சயம், எனது மாமாவுடனோ / எனது அன்னை மற்றும் அன்னையாரின் குடும்பத்தினருடனோ பார்த்து விடுவேன். அன்று மாலைவேறு சென்னைத் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் படம் இருந்தால் எனக்கு ஜாக்பாட் அடித்தது போல் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல் எனது படிக்கும் அட்டவணையையும் சரி செய்து கொள்வேன். [mr_karthikகைப் போல் அடியேனும் படிப்பில் சுட்டி என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்]. இப்படிப் பற்பல நினைவலைகளில் நீந்திக் கொண்டே இருந்தேன் "இல்லற ஜோதி" படம் தொடங்கும் வரை. இனி இக்காவியத்திற்கு வருவோம்:

"இல்லற ஜோதி", நமது நடிகர் திலகத்தின் 11வது திரைக்காவியமாக 9.4.1954 வெள்ளியன்று தமிழ்ப் புத்தாண்டையொட்டிய வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்தது. நல்லதொரு வெற்றியை அடைந்த இக்காவியம் அதிகபட்சமாக மதுரையில் 'சிந்தாமணி' திரையரங்கில் 63 நாட்கள் ஓடியது. [முரளி சார் சட்டைக்காலர் தானாகவே உயர்கிறது பாருங்கள், கூடவே கோல்ட்ஸ்டாருக்கும் தான்!]. ராகப்பிரவாகம் திரு.சுந்தர் அவர்களின் தமிழ்ப்பிரவாகமான முன்னறிவிப்போடு திரைக்காவியம் பெரிய திரையில் உன்னதமாக ஓடத் தொடங்கியது. முதல் படத்திலேயே முந்நூறு படங்களில் நடித்த அனுபவத்தைக் காட்டியவர், 11வது படத்தில் ஓராயிரம் படங்களில் நடித்திருந்த நடிப்பு முதிர்ச்சியைக் காண்பித்தார் என்று குறிப்பிட்டால் அது மிகையன்று. அவரது ஒவ்வொரு திரைக்காவியமுமே ஓராயிரம் திரைப்படங்களுக்குச் சமம் என்பது வேறு விஷயம். ஒரு படைப்பாளியாக [கவிஞன்-எழுத்தாளனாக] தனது பாத்திரத்தை செவ்வனே படைத்திருந்தார். அவரது அறிமுக சீனே அமர்க்களம். அவரது வீட்டு மாடி அறையில் அவர் குரல் மட்டும் கேட்கும். தனது படைப்பை தனிமையில் லயித்து உரக்க முழங்கிக் கொண்டிருப்பார். கீழே இருக்கும் அவரது பெற்றோர் [சிகேசரஸ்வதி-கேஏதங்கவேலு], மாடியில் பிள்ளையின் குரல் ஓங்கி ஒலிக்கிறதே என்றவர்களாய் படிகளில் ஏறிச் சென்று அறைக்க்தவைத் தட்ட, திறந்து அவர்களுக்கும், நமக்கும் ஒரு திவ்ய தரிசனம் அளிப்பார் பாருங்கள், பார்த்துக் கொண்டே இருக்கலாம். என்னே ஒரு Screen Presence ! படம் முழுவதும் நம்மவரின் காஸ்ட்யூம் கலக்கல். ஒரு படைப்பாளிக்கேற்ற ஒரு Pant, Full Hand Shirt மற்றும் அதன் மேல் Sweater போல் ஒரு Half Jacket. இந்தக் காஸ்ட்யூமில் தலைவர் Smart & Cute ! [எந்தக் காஸ்ட்யூமில்தான் அவர் நன்றாக இருக்க மாட்டார். எல்லாவற்றிலுமே அவர் சிறப்பாகத் தான் இருப்பார்]. மனைவியாக ஸ்ரீரஞ்சனியும், காதலியாக பத்மினியும் அமைய இருவருக்குமே தோற்றத்தில் பொருத்தமாக - Convincingஆக - இருப்பதே அவரது ஸ்பெஷாலிட்டி. NTயின் படைப்புத்திறனால் ஈர்க்கப்பட்ட பத்மினி அவரிடம் இதயத்தை பறிகொடுக்க, மணமான மனோகரும் [NT பாத்திரப் பெயர்] மனதை 'கப்'பென்று பப்பியிடம் மாற்றுகிறார்.

அனார்க்கலி-சலீம் ஓரங்க நாடகத்தின் தொடக்கமாக வரும் 'களங்கமில்லா காதலிலே' பாடல் இசையமுதம். ராகதேவன் ராமநாதன் அவர்களின் இசையில், ராஜா-ஜிக்கி குரல்களில், சிவாஜி-பத்மினி நடிப்பில், கண்ணதாசனின் வைர வரிகள் ஜொலிஜொலிக்கின்றன. NT & NP made for each other romantic pair என்பதனை இப்பாடல் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது. படம் முழுவதற்கும் கவியரசர் வசனம், இந்த ஓரங்க நாடகத்திற்கு மட்டும் கலைஞர் வசனம். [கௌவரத் தோற்றமேற்கின்ற NT, கதாநாயகனையே தூக்கி சாப்பிட்டுவிடுவது போல், கௌரவமாக வரும் கலைஞர் இப்படத்தில் கவியரசரை வசனப்பந்தயத்தில் Photo-Finishல் மிஞ்சுகிறார் ; மகேஷ் சார் கோபித்துக் கொள்ள வேண்டாம்]. படத்தின் இன்னொரு ஹைலைட் பாடல் பத்மினிக்காக பி.லீலாவின் குரலில் ஒலிக்கும் 'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே'. ராமநாதன் ஸ்வரப்பிரவாகத்தில் விளையாட, லீலா அதற்கு குரல் கொடுத்து தூக்கிவிட, நாட்டியப் பேரொளியின் நடனமும், நடிகர் திலகத்தின் வாத்திய இசையும் நம்மை இருக்கையோடு கட்டிப் போடுகிறது. இப்பாடலில் பத்மினி ஆட, கற்பனையாக அவருக்கு இருபுறமும் NTக்கள் அமர்ந்து, இடதுபுற NT வீணை வாசிப்பதாகவும், வலதுபுற NT வயலினில் வெளுத்துக் வாங்குவதாகவும் காண்போருக்கு செம Treat. படத்தின் கிளைமாக்ஸில், பத்மினியுடனான தனது காதலை அங்கீகரிக்கும் தியாகச்சுடராக தனதருமை மனைவி இருப்பதை உணர்ந்த மனோகர், தன் காதலைத் துறந்து, "இல்லற ஜோதி"யான ஸ்ரீரஞ்சனியுடன் இணைகிறார் என படம் திருப்திகரமாகவே நிறைகிறது. படத்தின் ஆங்காங்கே வரும் தங்கவேலு-சரஸ்வதி சரவெடிகள் சீரியஸான படத்தில் சிரிப்புக்கும் பஞ்சம் வைக்காமல் திகழ்கிறது. ராகதேவனின் BGM பிரமாதம். ஹார்மோனியத்தையும், வயலினையும் இழையோடச் செய்கிறார். நடிகர் அசோகன் நம்மவருடன் நடித்த முதல் படம் இது. பத்மினியின் முறைமாப்பிள்ளையாக அளவான பாத்திரத்தில் அளவோடு செய்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி படத்தின் Emotional touch என்றால் பத்மினி Romantic-cum-emotional brilliance. 'இரு மாதருடன் நம்மவர்' என்ற Themeல் பின்னாளில் வெளியான எத்தனையோ படங்களுக்கு இப்படம் முன்னோடி. மொத்தத்தில் சகோதரி சாரதாவிற்கு மிகவும் பிடித்த எடுப்பான, துடிப்பான, கனக்கச்சிதமான, ஸ்வீட்டான சிவாஜியின் திவ்யமான "இல்லற ஜோதி"யை, நான் பயின்ற பள்ளியில், நமது ஹப் நண்பர்கள் புடைசூழ பார்த்து மகிழ்ந்தது எனக்கு ஒரு LIFETIME RECHARGE !

திரையிட்ட "VINTAGE HERITAGE" அமைப்பிற்கு இதயபூர்வமான நன்றிகள் !


மகாலட்சுமியில் மகோன்னத 'மகர' ஜோதி

இன்று 31.7.2011 ஞாயிறு மாலை பெரம்பூர்-ஓட்டேரி பகுதி கிடுகிடுத்திருக்கிறது. பாரிஸ்டரின் வழக்காடு தொடங்குவதற்கு முன், 'மகாலட்சுமி' அரங்கம் இருக்கும் நெடுஞ்சாலை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பரவசப்படுத்தும் பதாகைகள் என்ன, வாலாக்களின் விண்ணதிரும் சப்தங்கள் என்ன, மாலை அலங்காரங்கள் என்ன, மஹாதீபாராதனை என்ன என அந்த ஏரியாவே அமர்க்களப்பட்டிருக்கிறது. சில மணித்துளிகள் போக்குவரத்து ஸ்தம்பித்ததைக் கூறவும் வேண்டுமோ! பின்னர் உள்ளேயும் உச்சக்கட்டக் கொண்டாட்டம் தான் ! சற்றேறக்குறைய அரங்கம் நிறைந்திருந்ததாகவும் எமக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களுமே [ஜுலை 29,30,31], ஒவ்வொரு காட்சியும், நல்ல கூட்டத்தோடு நடைபெறுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மகோன்னத மகர ஜோதியை மகாலட்சுமியில் தரிசித்துக் கொண்டாடிய ரசிக மன்னர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !

இத்தகவல்களை சுடச்சுட வழங்கிய அன்புள்ளங்கள் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், திரு.பி.கணேசன் அவர்களுக்கும் கனிவான நன்றிகள் !


நெல்லைச்சீமையில் ஆட்கொள்ளும் 'அருட்'ஜோதி

'சென்ட்ரல்' அரங்கை ஒட்டிய சாலை இன்று [31.7.2011 : ஞாயிறு] மாலை, விளம்பரம் தேடா வள்ளல் ரவிக்குமாரின் திக்விஜயத்தால் திக்குமுக்காடியிருக்கிறது. அவ்வழியாக போவோர்-வருவோர் அனைவருக்கும் மற்றும் அரங்கில் இருந்தவர்களுக்கும் லட்டுகளும், பால் கோவா கேக்குகளும் அன்புள்ளங்களால் அளிக்கப்பட்டிருக்கின்றன. 2000 வாலா முழங்க, கட்-அவுட்டுக்கு மலர் மாலை அலங்காரங்கள் நிரம்பி வழிய, மஹாதீபாராதனை மகத்தான முறையில் காட்டப்பட்டிருக்கிறது. காட்சியின் போதும் அதிக அளப்பரையாம். எல்லாப் பாடல் காட்சிகளுக்கும் கூரை கிழிந்திருக்கிறது. குறிப்பாக 'ஜெலிதா வனிதா' பாடல் காட்சியில் ஆரவாரம் உச்சாணிக் கொம்பைத் தொட்டிருக்கிறது. மாலைக் காட்சிக்கு கணிசமான அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்திருக்கிறது. ரவிக்குமாரின் அருட்ஜோதியில் ஆட்கொள்ளப்பட்டு அன்புள்ளங்கள் ஆர்ப்பரித்திருக்கின்றனர் !

ஸ்வீட்டான இச்செய்திகளை வழங்கிய அன்புள்ளம் திரு.சிவாஜி எஸ்.முத்துக்குமாருக்கு நன்றி முத்தாரங்கள் !


பக்தியுடன்,
பம்மலார்.