-
18th October 2011, 12:09 PM
#11
Senior Member
Veteran Hubber
1971 அக்டோபர் 18 - 'பாபு' நினைவலைகள்.....
தீபாவளியன்று நடிகர்திலகத்தின் 'பாபு' படம் ரிலீஸாகிறதென்ற பெருமிதம் தீபாவளியை பன்மடங்கு உற்சாகமாக்கியது. கள்ளமறியா, கவலையில்லா பள்ளிப்பருவம். ரிலீஸுக்கு ஒருவாரம் முன்பு ரிசர்வேஷன் ஆரம்பிக்கும்போதே, அதற்காகவே சேர்த்து வைத்திருந்த பணத்தில் வடசென்னை 'கிரௌன்' திரையரங்கில் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டேன். (முதல் வகுப்பு டிக்கட் 2ரூ 90பை. அதற்கே அந்தப்பாடு).
தீபாவளிக்கு முதல் நாள் கிரௌனில் சவாலே சமாளி 107 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய, மறுநாள் 'பாபு' ரிலீஸ். அதே தீபாவளிக்கு கிரௌன் தியேட்டரை அடுத்த ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ரிக்ஷாக்காரன் 140 நாட்களில் மாற்றப்பட்டு அங்கே 'நீரும் நெருப்பும்' ரிலீஸ் ஆகிறது. மே 29-ல் ரிக்ஷாக்காரனுக்குப்பிறகு அடுத்தபடம் அக்.18-ல்தான் வெளியாகிறது. ஆனால் இங்கே ஜூலை 3-ல் சவாலே சமாளி வெளியான பின் அக் 18-க்கு முன் இரண்டு படங்கள் (தேனும் பாலும், மூன்று தெய்வங்கள்) வந்து விட்டன. மூன்றாவதாக அக்.18-ல் பாபு)
தீபாவளிக்கு முன் டீக்கடை, பேப்பர் கடை எங்கு பார்த்தாலும் 'நீரும் நெருப்பும்' பற்றித்தான் பேச்சு. பாபு படத்தை ரசிகர்களைத்தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. (இவ்விரு படங்களோடு மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் வண்ணப்படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'யும், கே.எஸ்.ஜி.யின் பிரம்மாண்ட வண்ணப்படம் 'ஆதிபராசக்தி'யும் ரிலீஸ்). ஆக தீபாவளி ரேஸில் மூன்று வண்ணப்படங்களுக்கு மத்தியில் ஒரே கருப்பு வெள்ளைப்படமாக 'பாபு' மட்டுமே வந்தது. ரசிகர்களுக்கெல்லாம் ஒரே சோர்வு. நடிகர்திலகம் வேறு ஏதாவது பிரம்மாண்ட வண்ணப்படத்தை இந்த தீபாவளிக்கு வெளியிட்டிருக்கலாமே என்று ரசிகர்களுக்குள் பேச்சு. (அப்போது இரு பிரம்மாண்ட வண்ணப்படங்களாக ராஜாவும், தர்மம் எங்கேயும் தயாரிப்பில் இருந்தன).
எதிர் அணி படத்தைப்பற்றி என்னென்னவோ பேச்சுக்கள், எதிர்பார்ப்புக்கள், இன்னொரு வெள்ளி விழாப்படம் என்ற ஆரூடங்கள், இதற்கு முந்தைய சைக்கிள் ரிக்ஷாவையே ஓட்டத்திலும் வசூலிலும் முந்தும் என்ற கணிப்புக்கள், இரட்டை வேடமாம், ஈஸ்ட்மென் கலரில் உருவாகியிருக்கிறதாம், பிரம்மாண்ட செட்டுக்களாம், ஏகப்பட்ட நடிகர்களாம், ரொம்ப நாளைக்கப்புறம் கத்திச்சண்டக்காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம், நிச்சயம் பயங்கர வெற்றிதான்.... பாவம் கணேசனின் பாபு படம் இப்போட்டியில் சிக்கி நசுங்கப்போகிறது, அதுல அந்த ஆளுக்கு சரியான ஜோடிகூட இல்லையாம், மலைநாட்டு மங்கையில் நடித்த விஜயஸ்ரீதான் ஜோடியாம் என்றெல்லாம் ஏகடியங்கள், கிண்டல்கள், கேலிப்பேச்சுக்கள். நடிகர்திலகத்தின் ரசிகர் தரப்பில் வழக்கம்போல பொறுமை காக்கப்பட்டது.
ஆனால் எல்லா ஆர்ப்பாட்டமும் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸாகும் வரைதான். வெளியானதோ இல்லையோ நிலைமை தலைகீழாக மாறியது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் 'பாபு' வசூலில் முந்தியது. எந்தப்படம் பெரும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ அது பின் தங்கியது. நாட்கள் ஆக ஆக, 'பாபு'வுக்கும் ஆதிபராசக்திக்கும்தான் எல்லா ஊர்களிலும் போட்டியாக இருந்தது. மூன்றாவது இடத்தை ஜெய்சங்கரின் வீட்டுக்கு ஒரு பிள்ளை பிடிக்க, ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட 'பிரம்மாண்டம்' பின் தங்கி நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஓலைக்குடிசை, கைரிக்ஷா, கருப்புவெள்ளை, வெறும் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், கிழிந்த உடைகள், தாடி மீசை இவற்றோடு நடிகர்திலகத்தின் 'பாபு' போட்ட போடில் வண்ணங்கள் வெளுத்துப்போயின, பிரம்மாண்டங்கள் சரிந்தன. பாபுவுடன் போட்டியிட வந்த படம் பிரீஸ்டீஜுக்காக 50 நாட்கள் ஓடுவதே இழுபறியாகிப்போனது. பாபுவோ சர்வ சாதாரணமாக வசூலை வாரிக்குவித்தது.
இதில் எதிர் அணிக்கு இன்னொரு சோகம் என்னவென்றால், வழக்கமாக 'அவரது' படங்களைப்பொறுத்தவரை, ஓட்டத்தில் சுமாரான படங்களில் கூட பாடல்கள் பாப்புலராகி விடும். ஆனால் இப்போது அதுவும் பொய்த்துப்போனது. அப்படத்தின் பாடல்கள் எங்கும் பாப்புலராகவேயில்லை (இன்றுவரை). ஆனால் பாபுவின் 'வரதப்பா வரதப்பா', 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் அட்டகாசமாகப் பாப்புலராயின. வானொலிகளில் தினமும் ஒலித்தன. கேலியும் கிண்டலும் பேசிய வாய்கள் அடைத்துப்போயின. ரிலீஸுக்கு முன் சோர்வாகக்காணப்பட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தெம்பாக வலம் வந்தனர். 1972-ம் ஆண்டின் அட்டகாச பவனியை 1971 இறுதியில் 'பாபு' துவக்கி வைத்தது.
அக்டோபர் 18 மாலைக்காட்சிக்கு டிக்கட் வாங்கியிருந்தேன். (தீபாவளியன்றைக்கு மாலைக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தால் அது எவரெஸ்ட்டில் ஏறியது போல). டிக்கட் ரிசர்வ் செய்திருந்தாலும் கரெக்டாக காட்சி நேரத்துக்குப் போவது எனக்குப்பிடிக்காது. கியூவில் நின்று டிக்கட் வாங்குபவர்களைவிட முன்னதாகவே போய் விடுவேன். அன்று மாலை மூணரைக்கெல்லாம் கிரௌன் தியேட்டர் வாசலில் ஆஜர். வழக்கம்போல ரசிகர்க மன்றங்களால் பந்தல்கள், ஏகப்பட்ட தோரணங்கள், கொடிகள், நட்சத்திரங்கள், கட்-அவுட்களுக்கு மாலைகள் என ஏக அமர்க்களங்கள் (கிரௌன், ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தியேட்டர்களிலும்). அதுபோல இரண்டு தியேட்டர் முன்பும் தெருவையே அடைத்து ரசிகர் கூட்டங்கள். அவ்வப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் அந்த இடத்தையே இரண்டு பண்ணியது.
ஒரு வழியாக மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்தது. வெளியில் நின்ற ரசிகர்கள் அவர்களை மொய்த்து ரிசல்ட் கேட்கத்துவங்கினோம். தாய்மார்கள் பெரும்பாலோர் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தனர், ரசிகர்களும்தான். எங்களுக்குப்புரியத் தொடங்கியது. கிளைமாக்ஸ் கண்டிப்பாக சோகம் போலும். ஒரு ரசிகர் சொன்னார் 'பாசமலர், வியட்நாம் வீடு படங்களுக்குப்பிறகு இந்தப்படத்துலதான்யா நான் அழுதேன்' என்று.
மாலைக்காட்சிக்கு கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியது. அவ்வளவுதான் அதுவரை போலீஸார் கட்டுப்படுத்தி வைத்திருந்த கூட்டம் அனைத்தும் உடைபட்ட வெள்ளமென கவுண்ட்டரை நோக்கி முன்னேறியது. முன்பதிவு செய்திருந்த டிக்கட்டைக்காட்டி உள்ளே சென்றோம். விளம்பரப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது. ரசிகர்களின் பொறுமையை மேலும் சோதிக்காமல் உடனே நியூஸ் ரீல் போட்டு, அது முடிந்ததும் படத்தைத் துவக்கினார்கள். படம் துவங்கியது முதல் ரசிகர்களின் அலப்பறையும், விசிலும் கைதட்டலும் படத்தை களைகட்ட வைத்தன. இடைவேளை வரை படம் படு உற்சாகமாகப்போனது. அவர் ஸ்டைலாக முகத்தில் புன்சிரிப்புடன் ரிக்ஷா இழுத்துக்கொண்டு ஓடுவது, பாலாஜியின் அன்பில் நெகிழ்வது, இலையில் இருந்த கத்தரிக்காயை ஸ்ரீ தேவி எடுத்துச்சாப்பிட்டதும் பதறுவது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பாலாஜியின் பெருந்தன்மையில் கண் கலங்குவது, அந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் உட்கார்ந்துகொண்டு காதலி விஜயஸ்ரீயிடம் குதூகலமாகச்சொல்வது, வரதப்பா வரதப்பா பாடலின்போது ரிக்ஷாக்கானுக்கே உரிய ஸ்டைலுடன் ஆடுவது, கீசக வதம் நாடகம், விஜயஸ்ரீயின் பரிதாப மரணம், அதைத்தொடர்ந்து நம்பிராஜனுடன் சண்டை என்று படம் படு அட்டகாசம்.
இடைவேளைக்குப்பின்னர் நம்மை அப்படியே கதையில் ஒன்றவைத்து சோகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிடுவார். சௌகாரின் பாந்தமான நடிப்பு பெரும் துணையாக இருக்கும். பாபுவை உதாசீனமாகப்பேசும் தன் மகள் நிர்மலாவை கண்மண் தெரியாமல் அடிப்பதும், பின்னர் தான் பிச்சையெடுத்த ப்ளாஷ் பேக்கை நினைத்துப்பார்க்கும் நிர்மலா, மாமா என்று பாபுவைக் கட்டி அணைத்துக்கொண்டதும் தள்ளி நின்று பாசத்தில் கண் கலங்குவத்மாக சௌகாரும் தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார். கடைசியில் நிர்மலாவின் திருமணத்தின்போது அவரை தனியே சந்தித்து நாய் பொம்மையை நடிகர்திலகம் நிர்மலாவுக்குப் பரிசாகக்கொடுக்கும்போது தியேட்டரே கதறி அழுதது. தன்னைச்சுற்றி அத்தனை பேரும் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்துவது கண்டு அவர் நெகிழ்ச்சியோடு உயிரிழப்பதோடு படம் நிறைவடைய கலங்காத கண்களும் இருக்க முடியுமா?.
எங்கள் 'பாபு'வுக்கு இன்று 40 ஆண்டுகள் நிறைந்தன. இன்னும் பலநூறு ஆண்டுகள் ரசிகர்கள் இதயங்களில் சிரஞ்சீவியாக வாழ்வார்.
-
18th October 2011 12:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks