-
24th December 2011, 03:10 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
'ராஜபார்ட் ரங்கதுரை' மேளாவின் தொடர்ச்சியாக தாங்கள் அளித்திருக்கும் முத்தான மூன்று விமர்சனப்பதிவுகளுக்கும் நன்றி. அதென்னமோ தெரியவில்லை. அக்காலப்பத்திரிகைகள் விமர்சனம் என்றால் சரியாக ஒரு பக்கத்துக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று நியதி வைத்திருந்தன போலும். அதனால் நிறைய பாராட்ட வேண்டிய விஷயங்களை விட்டு விட்டனர். பாடல்களைப்பற்றி குறிப்பிட்டவர்கள் மெல்லிசை மன்னரைப்பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடவில்லை (எந்த விமர்சனத்திலும்) என்பது வருத்தமளிக்கிறது. ஏற்கெனவே நமது திரியில் குறிப்பிட்டது போல, மெல்லிசை மன்னரும் அக்கால மீடியாக்களால் வஞ்சிக்கப்பட்ட ஒருவர்.
பெரியார் அவர்கள் நமது நடிகர்திலகத்தைப் பாராட்டிய பத்திரிகைச்செய்தியின் ஒரிஜினல் பதிப்பு நிச்சயம் காணக்கிடைக்காத பொக்கிஷங்களில் ஒன்று. வரலாற்றைத் திரும்பத்தோண்டியெடுக்கும் தங்கள் பணி மகத்தானது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுநாளை, நமது நடிகர்திலகம் வழங்கிய 'பொம்மை' இதழ் கட்டுரையின் மூலமாகவே நினைவு கூர்ந்தது மிகவும் அருமையான ஒன்று. தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த நட்பின் ஆழத்தை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நலம் பெற வேண்டி அனைத்து மத ஆலயங்களிலும் நடிகர்திலகம் பிரார்த்தனை செய்ததையும், மக்கள் திலகத்துக்கு தன் சிறுநீரகம் ஒன்றை அளிக்க நடிகர்திலகம் பதிவு செய்திருந்ததை, அப்பல்லோ மருத்துவமனை இயக்குனரே சொல்லியிருப்பதையும் படித்தபோது என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. எப்பேற்பட்ட மனிதர் நம் நடிகர் திலகம். அதை இன்றைய தலைமுறையும் அறியசெய்த தாங்களல்லவோ அவரது உண்மையான பக்தர்.
பொருத்தமான நேரத்தில் பொருத்தமானவற்றைத் தேடியெடுத்து பொருத்தமான வகையில் அள்ளி வழங்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
-
24th December 2011 03:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks