-
23rd March 2012, 12:08 AM
#11
ஜோ,
கண்டிப்பாக நீங்கள் ஆசைப்படும் எண்ணம் நிறைவேறும். மெருக்கேற்றப்பட்ட கர்ணன் வெளியாகும் முன்னரே நடிகர் திலகத்தின் பழைய படங்களின் வெளியீட்டு உரிமையை கையில் வைத்திருப்பவர்கள் கர்ணன் எப்படி போகிறது என்று பார்த்துவிட்டு செய்யலாம் என்று இருந்தனர். கர்ணனின் இந்த இமாலய வெற்றி அவர்களின் முயற்சிக்கு வலு சேர்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் முதலிடத்தில் வைத்து பேசப்படும் படங்கள் இரண்டு. ஒன்று கட்டபொம்மன் மற்றொன்று திருவிளையாடல். இந்த இரண்டு படங்களும் மெருக்கேற்றி வெளியிடப்பட்டால் நீங்கள் சொல்வது போல் வெற்றி நிச்சயம். இந்த வரிசையில் மேலும் பல படங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தில்லானா. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது சிவந்த மண். அதே போன்று கருப்பு வெள்ளை படங்களையும் இது போன்று செய்வதற்கு விநியோகஸ்தர்கள் முன் வருவார்களாயின் பலரும் எதிர்பார்ப்பது உத்தமப் புத்திரன் படத்தைதான்.
ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் கர்ணனின் வெற்றி பழைய நடிகர் திலகத்தின் படங்களின் விநியோக உரிமையை விலை ஏற்றி விட்டு விட்டது. மெருக்கேற்றலோ டிடிஎஸ் போன்ற விஷயங்கள் செய்யாமல் சாதாரணமாக வெளியிடுவதற்கு கூட [சென்ற மாதம் தங்கப்பதக்கம் வெளியானது போல] இப்போது அதிக விலை சொல்கிறார்கள். வினியோகஸ்த நண்பர் ஒருவர் நடிகர் திலகத்தின் நல்ல வெற்றி படம் ஒன்றை வாங்குவதற்கு விலை பேசிக் கொண்டிருந்தார். சென்ற வாரம் வரை சொன்ன விலையை திடீரென்று கர்ணனின் ரிலீசிற்கு பிறகு அப்படியே கூட்டி கேட்கிறார் தற்போதைய உரிமையாளர்.
இதை சொல்லும் போது வேறு ஒரு விஷயம் கூட குறிப்பிட வேண்டும். சென்னை பகுதி திரைப்பட விநியோகஸ்தர்களின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் மீரான் சாஹிப் தெருவில் கூட நமது படங்களைப் பற்றிய ஒரு ஏளன பார்வை இருந்தது. சிவாஜி படங்களை யார் பார்ப்பார்கள் என்று கேள்வி கேட்டவர்கள் எல்லாம் புதிய பறவை, கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை திருவருட்செல்வர் போன்ற படங்களின் வெளியீட்டிற்கு பிறகு வாயடைத்துப் போனார்கள். ஒரு சிலர் அதன் பிறகும் நக்கல் செய்வதை நிறுத்தவில்லை. கர்ணன் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 10 அரங்குகளில் வெளியாகிறது என்றதும் அவர்களில் ஓரிருவர் நமது மேலே குறிப்பிட்டுள்ள வினியோகஸ்த நண்பரிடம் கேட்ட கேள்வி என்ன தெரியுமா " என்னப்பா ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு 50 பேர் படம் பாப்பாங்களா?" அதற்கு நண்பர் சொன்ன பதில் "50 பேர் இல்லை. ஒரு 60 பேர் பார்ப்போம்". அவர்கள் எல்லோரும் படம் வெளியான பிறகு நமது நண்பர் முகத்தை பார்த்தாலே தெறித்து ஓடுகிறார்களாம்.
எதற்கு சொல்ல வந்தேன் என்றால் நடிகர் திலகத்திற்கு எத்தனையோ இடங்களிருந்து எத்தனையோ எதிர்ப்புகள். இது இன்றல்ல, நேற்றல்ல கால காலமாக தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இவை அனைத்தையும் சமாளித்துதான் அவர் வெற்றிகளை அடைந்திருக்கிறார். இன்றைக்கும் கூட நடிகர் திலகத்தின் மீது வீசப்படும் கற்களின் பின்னால் உள்ள காரணத்தை பார்த்தோம் என்றால் அரசியல் கட்சி இல்லை, அதிகாரம் கையில் இல்லை, அரசாங்க பலம் இல்லை, அமைப்பு அப்படி ஒன்றும் வலுவானது இல்லை, ஜாதி மத பலம் இல்லை. இவை ஒன்றுமே இல்லாமல் அவர் அடையும் வெற்றியை அந்த குழுவால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளாதது என்னவென்றால் அவரை அன்றும் இன்றும் என்றும் நேசிக்கின்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களின் ஆதரவுதான் அவரது படங்களின் வெற்றிக்கான காரணம். நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகுதான் அவர் மேல் உள்ள அன்பு அனைவர்க்கும் அதிகமாகி இருக்கிறது. இன்றைக்கு பல ரசிகர்களுக்கும் அது அன்பு வெறியாகவே வளர்ந்திருக்கிறது.
அன்புடன்
-
23rd March 2012 12:08 AM
# ADS
Circuit advertisement
Bookmarks