-
31st July 2012, 02:24 PM
#11
Senior Member
Veteran Hubber
நட்சத்திர கிரிக்கெட் 1973 (என் நினைவுக்கு எட்டியவரை)
அன்புள்ள ராகவேந்தர் சார் அவர்கள் பழைய நினைவுகளைப் பதிந்துகொள்ளுங்கள் என்று அனுமதியும் உற்சாகமும் அளித்ததால், நான் பள்ளி மாணவனாக இருந்தபோது சென்னை பழைய நேரு ஸ்டேடியத்தில் நடந்த 'நட்சத்திர கிரிக்கெட்' பார்த்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம் என்ற ஆவல். இது ஏதோ ஒரு பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக நடத்தப்பட்ட மேட்ச்.
அப்போது கிரிக்கெட்டுக்காக சேப்பாக்கம் ஸ்டேடியம் இருந்தபோதிலும், நட்சத்திர கிரிக்கெட் அங்கு விளையாட அனுமதிக்க மாட்டார்கள். விளையாடத்தெரியாத சில நட்சத்திரங்கள் பேட்டால் மைதானத்தை கொத்திப்போட்டு விடுவார்கள் என்ற பயமோ அல்லது வேறு காரணமோ தெரியாது. அதனால் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய நேரு ஸ்டேடியத்திலேயே நடைபெறும். கூட்டமும் நிறைய சேரும். நட்சத்திரங்கள் பிரமாதமாக விளையாடுவார்கள் என்பதால் அல்ல, எல்லா நட்சத்திரங்களையும் ஒருசேர பார்க்கலாமே என்ற ஆர்வத்தில். இப்போதுபோல அன்றைக்கு ஆளாளுக்கு விருது வழங்கும் விழா நடத்துவது என்பதெல்லாம் கிடையாது அல்லவா?. டெஸ்ட் மேட்ச் மட்டுமே நடந்து வந்த அந்தக்காலத்தில் ஒன்டே மேட்சை துவக்கியதே நமது நட்சத்திரங்கள்தான். இன்னும் சரியாகச்சொன்னால் அரைநாள் மேட்ச்தான். பகல் ஒருமணிக்குத் துவங்கி மாலை ஆறு மணிக்கு முடிந்துவிடும்.
அது ஒரு பொங்கல் தொடர் விடுமுறை. அப்போது சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் மேட்ச் நடந்து வந்தது. ஐந்து நாள் மேட்ச் நடுவே ஒரு நாள் 'ஓய்வுநாள்' என்று விடுவார்கள். சரியாக அந்த ஓய்வு நாள் பார்த்துதான் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். ஓய்வுநாள் என்பதால் இந்திய இங்கிலாந்து அணி வீரர்களும் நட்சத்திர கிரிக்கெட்டைக்காண வருவார்கள் என்று விளம்பரத்தில் அறிவிப்புச் செய்திருந்தார்கள்.
மேட்ச் நடந்த அன்று பகல் பணிரெண்டரை மணிக்கெல்லாம் நாங்கள் நண்பர்கள் க்ரூப்பாக ஸ்டேடியத்தின் உள்ளே போய் விட்டோம். டிக்கட் விலை 5 ரூ., 10 ரூ., மற்றும் 20 ரூ. அப்போதைய எங்கள் சக்திக்கு 5 ரூபாய் டிக்கட்தான் வாங்கமுடிந்தது. அதனால் கூரையில்லாத வெயில் பகுதியில்தான் அமர முடிந்தது. (பழைய நேரு ஸ்டேடியத்தில் மேற்கூரை கிடையாது. இருந்தாலும் முதல் வகுப்பு மற்றும் வி.ஐ.பிக்களுக்காக டெம்ப்ரரி ரூஃப் அமைத்திருந்தனர்). மார்கழி முடிந்த தருணமாதலால் வெயில் அவ்வளவாக உறைக்கவில்லை.
நடிகர்திலகம் ஒரு அணிக்குத் தலைவராகவும், ஜெமினிகணேஷ் இன்னொரு அணிக்குத்தலைவராகவும் அறிவிக்கப்பட்டனர். மேட்ச் துவங்கும் முன்னதாக இரு அணியினரும் தங்கள் தலைவரின் பின்னால் மைதானத்தைச்சுற்றி அணிவகுத்து வந்தனர். நடிகர்திலகம் ஒயிட் அண்ட் ஒயிட்டில் மேலே நீலநிற ஜிப் ஜெர்க்கின்ஸ் அணிந்து, வெள்ளைத்தொப்பி, கூலிங் கிளாஸ் சகிதம் கையில் கொடி பிடித்து தன் அணியினர் பின்தொடர வந்தபோது ரசிகர்கள் கைதட்டலும் விசிலும் பற்ந்தன. அதன்பின்னால் ஜெமினியும் தன் அணியினருடன் இதேபோல ஸ்டைலாக உடையணிந்து (மைனஸ் தொப்பி) வந்தார். இரண்டு அணியிலும் நடிகர் நடிகையர் என கலந்து இடம்பெற்றிருந்தனர். எந்த அணியில் யார் யார் இருந்தனர் என்பது இப்போது சரியாக நினைவில்லை.
மேட்ச் துவங்க சற்று முன்னர் இந்திய அணி வீரர்கள் மட்டும் ஸ்டேடியத்துக்கு வந்தனர். இங்கிலாந்து வீரர்கள் வரவில்லை. கேப்டன் பிஷன்சிங் பேடி, துணை கேப்டன் காவஸ்கர், விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி மற்றும் சந்திரசேகர், ஜி.ஆர்.விஸ்வநாத், பிரசன்னா, சோல்கர், பிரிஜேஷ் படேல் உள்பட அனைத்து வீரர்களும் வந்திருந்தனர். அவர்கள் வந்தபோதும் ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர். வீரர்களும் கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.
மேட்ச் துவங்கியது. ஜெமினி அணி முதலில் பேட் செய்ததாக ஞாபகம். நடிகர்கள் நன்றாக ஆடினர். நடிகைகள்தான் சொதப்பினர். பல நடிகைகள் பேண்ட், ஷர்ட் அணிந்து வந்திருந்தபோதிலும், சில நடிகைகள் சேலையுடன் விளையாட வந்து ரசிகர்களின் நகைப்புக்கு ஆளாகினர். வர்ணனையாளர்களாக இரண்டு தேர்ந்த நபர்களை நியமித்திருந்தனர். அவர்களுடன் நடிகர் 'சோ'வும் அமர்ந்து அவ்வப்போது குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஜெய்சங்கர வந்தபோது கமெண்ட்ரி செய்தவர், 'எதிரிகளின் பந்துகளை அடித்து தூள் பரத்த வருகிறார் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று அறிவிக்க ரசிகர்கள் கைதட்டினர். அவரும் பந்துகளை தடாலடியாக அடித்து பத்து ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
'அடுத்து அம்மன் அருள் பெற்று ஆட வருகிறார் ஏ.வி.எம்.ராஜன்' என்று கமெண்ட்ரேட்டர் அறிவிக்க (அப்போது அவர் அம்மன் அருள் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்) அவரும் வரும்போதே ரசிகர்களைப்பார்த்து கையசைத்தபடி வந்தார்.
பேண்ட் ஷர்ட்டுடன் ரொம்பவே பந்தாவாக அலட்டிக்கொண்டு மைதானத்துக்குள் இறங்கிய நடிகை ஜெயசித்ரா, பேட்டிங் செய்யத்தெரியாமல் மண்ணோடு சேர்த்து தரையைக் கொத்தியவாறு பேட் செய்ய, இயக்குனர் பி.மாதவன் சென்று, எப்படி பேட் செய்ய வேண்டும் என்று அங்கேயும் அவரை டைரக்ட் செய்தார்.
ரசிகர்கள் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டிருந்த அந்த நேரமும் வந்தது, 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த கைகளில் இப்போது பேட் எடுத்து ஆட வருகிறார் ராஜ ராஜ சோழன்' என்று கமெண்ட்ரியாளர் அறிவித்ததும் கைதட்டல் பறக்க ராஜ நடை நடந்து மைதானத்தில் இறங்கினார் நடிகர்திலகம். (அப்போது ராஜராஜசோழன் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தயாரிப்பில் இருந்தது). அவர் வந்தபோது இந்திய கிரிக்கெட் வீரர்களும் கைதட்டினர்.
இவரும் மற்றவர்களைப்போலவே சொத்த்ப்புவாரோ என்று சிலர் முணுமுணுத்தபோது, அவர் மின்னல் வேகத்தில் பந்துகளை பட் பட்டென்று அடித்து ஓடி ஓடி ரன்களைச் சேர்த்தார். அவர் 16 ரன்கள் எடுத்திருந்த சமயம் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் வீசிய பந்தை அடித்தபோது நடிகர் ஸ்ரீகாந்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
நாகேஷ் முதலிலேயே விளையாடி அவுட்டான பின்னர், ரசிகர்கள் மத்தியில் சோடா, கலர் விற்கத்தொடங்கினார். அவர் கையால் வாங்கவேண்டும் என்பதற்காகவே எல்லோரும் வாங்கிக்குடித்தனர். நல்ல விற்பனை.
மேட்ச் முக்கால்வாசி முடிந்திருந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் கையசைத்து விடைபெற்றனர். நட்சத்திரங்களின் கிரிக்கெட் ஆட்டத்தைப்பார்த்தால் தங்களுக்கு கிரிக்கெட் மறந்து போய்விடுமோ என்று பயந்துவிட்டார்களோ என்னவோ.
ஆறு மணிக்கு மேட்ச் முடிந்தபோது ஜெமினி கணேஷ் அணி வெற்றிபெற்றதாக அறிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாகவும் ஜெமினியே தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டார். ஸ்கோர் பற்றியெல்லாம் யார் கவலைப்பட்டது?. ஐந்துமணிநேரம் ரொம்ப ஜாலியாகக் கழிந்தது. அதுபோதும் என்ற நிலையில் ரசிகர்கள் வெளியேறினர்.
-
31st July 2012 02:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks