-
21st August 2012, 04:43 PM
#911
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
'ரமலான் ஈத்' பண்டிகையையொட்டி தாங்கள் பதித்திருந்த பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை. குறிப்பாக 'பாவமன்னிப்பு' விளம்பரங்கள் இரண்டும் அட்டகாசம். (துவக்கி விட்டீர்கள், தொடர்ந்து அப்படத்தின் 50-வது நாள், 100-வது நாள், வெள்ளிவிழா விளம்பரங்கள் வரை, தங்களிடம் இருக்கும் பட்சத்தில், பதிவிட்டு அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்).
'கப்பலோட்டிய த்மிழன்' மறு வெளியீட்டு விளம்பரங்களும் அசத்தல் ஆவணங்கள். அப்படத்துக்கு 1976-ல் எமர்ஜென்ஸி காலத்தின்போதுதான் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தை முழு கட்டணத்திலேயே அரங்கு நிறைந்த காட்சியாக கண்டுகளித்த அனுபவம் எனக்கு.
1961 தீபாவளியன்று வெளியான இக்காவியம், அதன்பின்னர் என் நினைவுக்கெட்டிய காலம் வரை மறு வெளியீட்டுக்கு வராத நேரம். அந்த ஆண்டு வெளிவந்த மூன்று 'பா' வரிசைப் படங்களும் அடிக்கடி தியேட்டர்களில் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த போதிலும், ஏனோ கப்பலோட்டிய தமிழன் வரவில்லை. முதல் வெளியீட்டில் கிடைத்த ரிசல்ட்டைப்பார்த்து விநியோகஸ்தர்கள் பயந்தார்களோ என்னவோ தெரியவில்லை. அதன் காரணமாகவே இப்படத்தின் மீது அதிக ஆவலும் எதிர்பார்ப்பும் எகிறிப்போயிருந்தது.
இந்நிலையில் எனது பள்ளிமாணவப் பருவத்தின்போது 1972-ஜூன் மாதம் திடீரென்று தினத்தந்தியின் கடைசிப்பக்கத்தில் 'வெள்ளிக்கிழமை முதல் சித்ராவில்' என்று தலைப்பிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தின் கால்பக்க விளம்பரம் வந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிகள் அகன்றன. எவ்வளவு நாள் காத்துக்கிடந்த வாய்ப்பு என்று மனம் குதூகலித்தது. விளம்பரத்தில், கட்டம் போட்ட கைதி உடை மற்றும் தொப்பியுடன் நடிகர்திலகம் கீழே கிடக்க, ஒரு பெரிய பூட்ஸ் அணிந்த கால் (கால் மட்டும்தான்) அவரை மிதிக்க உயர்ந்திருப்பது போல விளம்பரமிட்டிருந்ததைப் பார்த்து மனம் எகிறியது. நண்பர்கள் கூடிப்பேசினோம். எப்படியும் முதல்நாளே பார்த்துவிட வேண்டுமென்று மனம் துடித்தது. ஆனால் கையில் காசு இல்லை. அதனால் வெள்ளிக்கிழமை போக முடியவில்லை. நண்பர்கள் சிலர் 'எப்படியும் சுற்றியடித்து நம்ம ஏரியா (வடசென்னை) தியேட்டருக்கு வரும் அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றனர். ஆனால் எனக்கு பொறுமையில்லை. இங்கே வரும் என்பது என்ன நிச்சயம்?. ஒருவேளை வராமல் போய்விட்டால்?. வந்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா?. (அப்போதெல்லாம் படம்பார்க்க தியேட்டரை விட்டால் வேறு வழி கிடையாது).
சனிக்கிழமை காலை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் விளம்பரத்தைக்காட்டி, படம் பார்க்க பணம் கேட்டேன். (ஒரு மகன் தந்தையிடம் தைரியமாக சினிமாவுக்கு பணம் கேட்கும் அளவுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே வந்த தரமான படங்களில் ஒன்றல்லவா இக்காவியம்). படத்தின் விளம்பரத்தைப்பார்த்ததும் அவரும் மறுபேச்சுப் பேசாமல் மூன்று ரூபாயை எடுத்துத்தந்தார். (அப்போது முதல் வகுப்பு டிக்கட் 2.60 ). மீண்டும் விளம்பரத்தைப்பார்த்து எந்த தியேட்டர் என்று உறுதி செய்து கொண்ட அவர், 'இந்தப்படத்துக்குத்தானே போறே?. போய்ட்டு வந்ததும் என்கிட்டே டிக்கட்டைக்காட்டணும்' என்று கண்டிஷன் போட்டார். (பைத்தியக்கார அப்பா, அவரே போகச்சொன்னாலும் இந்தப்படத்தை விட்டு வேறு படத்துக்குப்போக மாட்டேன் என்பது அவருக்குத்தெரியவில்லை).
பிராட்வே பஸ் ஸ்டாப்பில் ஏறி மவுண்ட்ரோடு தபால் நிலையத்தில் இறங்கினால் 25 பைசா டிக்கட். அதுவே பாரீஸ் வரை நட்ந்துபோய் அங்கு ஏறி, Hindu பத்திரிகை அலுவலகம் முன்பு இறங்கினால் டிக்கட் 15 பைசா. சிறிது தூரம் நடந்தாலும் பரவாயில்லையென நாங்கள் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தோம். மாலைக்காட்சிக்கு நேரமாகிவிட்டதால், ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்றால், சித்ரா தியேட்டரின் வாசல்கேட்டில் மாட்டியிருந்த ‘Housefull’ போர்டு எங்களை வரவேற்றது. எங்களுக்கு, குறிப்பாக எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நான் டிக்கட் வாங்கியபின் இந்த போர்டை மாட்டியிருந்தால் என்னைவிட சந்தோஷப்படுபவர் யாரும் இல்லை.
வந்ததற்கு எந்தப்படத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று வந்திருந்த நண்பர்கள் உடனடி முடிவெடுத்து, 'சென்னை கங்கை'யின் மறு கரையிலிருந்த கெயிட்டி தியேட்டருக்கு ('குறத்தி மகன்' என்று நினைக்கிறேன்) பார்க்கப்போய்விட்டனர். ஆனால் கப்பலோட்டிய தமிழனைத்தான் பார்க்கவேண்டும் என்று வந்திருந்த நான் மட்டும், கேட்டுக்கு வெளியே கொஞ்சம் நேரம் நின்று, காம்பவுண்டுக்கு மேலே இருந்த தட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு பிரம்மாண்ட போஸ்ட்டர்களையே சிறிது நேரம் ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்து விட்டு மீண்டும் 15 பைசா டிக்கட்டில் வீடு திரும்பினேன்.
பெரிய வால்வு ரேடியோவில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்த அப்பா சற்று ஆச்சரியமாக தலையைத்தூக்கி, 'ஏண்டா, போகலையா?' என்று கேட்டார். 'போனேன்பா, நாங்க போகமுன்னாடியே ஃபுல் ஆயிடுச்சு' என்றதும், 'சரி அப்போ நாளைக்குப்போ' என்றவர் சட்டென்று 'வேணாம், நாளைக்கு இன்னும் கூட்டமாயிருக்கும். திங்களன்னைக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் போ' என்றார். பணத்தை திருப்பி வாங்கிக்குவாரோ என்று பயந்த எனக்கு குதூகலமாயிருந்தது. எனக்கென்னவோ, தன் மகன் எப்படியாவது இந்தப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று அவரும் ஆர்வமாக இருந்தது போலத்தோன்றியது.
திங்கள் மாலை பள்ளிவிட்டு வந்ததும் தாமதிக்காமல் நான் மட்டும் தனியாக பஸ்ஸில் போனேன். பின்னே, நண்பர்கள்தான் இருந்த காசுக்கு 'குறத்திமகன்' பார்த்துவிட்டனரே. பாலத்தைக்க்டக்கும்போதே தென்பட்ட கூட்டம் மீண்டும் பயத்தைக்கிளப்பியது. இருந்தாலும் கிட்டே போய்ப் பார்த்தபோது சற்று தைரியம் வந்தது. சற்று முன்னமேயே சென்றுவிட்டதால் 2 ரூபாய் டிக்கட்டே கிடைக்கும்போல இருந்தது. சித்ரா தியேட்டரில் 2 ரூபாய் டிக்கட் எத்தனை என்று போர்டில் பார்த்து, அதில் பாதியை பெண்களுக்கு கழித்துவிட்டு, கியூவில் நின்றவர்களை தோராயமாக எண்ணிப் பார்த்ததில், டிக்கட் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது. கவுண்ட்டர் திறந்ததும், வழக்கம்போல பிஸ்த்தாக்கள் ஒரு பத்துபேர் வரிசையில் நடுவில் நுழைந்தனர். அச்சத்துடன் நெருங்கிப்போக, டிக்கட் கிடைத்து விட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே உள்ளே போகாமல், எனக்குப்பின் இன்னும் எத்தனை பேருக்கு டிக்கட் கிடைக்கிறதென்று பார்த்துக்கொண்டிருக்க, ஐந்தாறு பேர் வாங்கியதும் கவுண்ட்டர் அடைக்கப்பட்டது. நல்லவேளை 'வஸ்தாதுகள்' இன்னும் ஒரு ஐந்து பேர் நுழைந்திருந்தால் என் கதி அவ்வளவுதான். உள்ளே போய் சீட்டில் கர்சீப் போட்டுவிட்டு, வெளியே வந்து முதல் வகுப்பு பக்கம் போனால், அதுவும் ஃபுல். கடைசி கிளாஸ் டிக்கட் முடிந்ததும் திங்களன்றும் ‘Housefull’ போர்டு போட்டார்கள். சந்தோஷத்துக்குக் கேட்கணுமா?. நிறையப்பேர் இந்தப்படத்தை எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.
படம் துவங்கியதும் ரொம்ப உணர்ச்சி மயமாகப்போனது. ஆரம்பத்தில் கைதட்டியதுதான். அதன்பிறகு கைதட்டலுக்கெல்லாம் வேலையில்லாமல் அனைவரும் படத்தோடு ஒன்றிப்போனார்கள். ஆனால் கலெக்டர் வின்ச் துரை (எஸ்.வி.ரங்காராவ்) யிடம் நடிகர்திலகம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைக்குறிப்பிட, வின்ச்துரை அதிர்ச்சியுடன் சிதம்பரனாரைப் பார்க்கும்போது அங்கே வ.உ.சி. முகம் மறைந்து கட்டபொம்மன் தெரியுமிடத்தில் கைதட்டலால் தியேட்டரே அதிர்ந்தது.
ஆனால் ஜெமினிகணேஷ் ஏற்றிருந்த மாடசாமி ரோலுக்கு தேவையில்லாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதிக சீன்களும், ஒன்றுக்கு இரண்டாக டூயட் கொடுத்ததும் அந்த வயதில்கூட எனக்குப்பிடிக்கவில்லை. படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் போலத்தோன்றியது.
ஒரு விஷயம் சொன்னால் உங்களில் பெரும்பாலோருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். படத்தின் சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டபோது, Kappalottiya Thamizhan (Part Colour) என்று சர்ட்டிபிகேட்டில் இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து விட்டு, படம் துவங்கியதும் அதை மறந்து போனேன். ஆனால் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனிக்காக கப்பலை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் அந்த வரலாற்று நிகழ்வில், கரையிலிருக்கும் திரண்ட கூட்டத்தோடு, பாரதியும், சுப்பிரமணிய சிவாவும் பாட, வ.உ.சி. கப்பலில் கையசைத்துக்கொண்டே வரும் "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல் மட்டும் கேவா கலரில் எடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.
அதன்பிறகு இதுவரை கப்பலோட்டிய தமிழன் படத்தை குறைந்தது 25 முறையாவது பார்த்திருப்பேன். ஆனால் அந்தப்பாடலை கலரில் பார்த்தது அந்த ஒருமுறை மட்டுமே. அதன்பிறகு பார்த்ததபோது படம் முழுக்க கருப்புவெள்ளையில்தான். 1972-ல் முதன்முறையாக நான் பார்த்தபோது திரையிடப்பட்ட அந்த பிரிண்ட், அநேகமாக 1961-ல் படம் ரிலீஸானபோது உருவாக்கப்பட்ட பிரிண்ட்டாக இருக்கலாம். அதன்பிறகு எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்கள் அனைத்தும் கருப்புவெள்ளையில்தான் எடுக்கப்பட்டது.
வ.உ.சி. சிறைக்குச்செல்லும்போதே கண்களில் நீர்கட்டத்துவங்கி விட்டது. சிறையில் வழங்கப்படும் உணவின் வாடை தாங்காமல், அப்படியே வைத்து விட்டு, ஓட்டைவிழுந்த தகரக்குவளையிலிருந்து தண்ணீர் குடிக்க எடுக்கும்போது, தண்ணீர் முழுவதும் ஓடி, குவளை காலியாக இருக்கும் காட்சியில் கண்ணீர் வடியத்துவங்கியது. செக்கடியில் அவர் கழுத்தில் மாடுகளின் கழுத்தில் பிணைக்கும் சங்கிலியை மாட்டி, சிறைக்காவலன் அவரை அடித்து செக்கிழுக்கச்செய்ய, இவரும் கால்கள் தரையில் இழுபட செக்கிழுக்கும் காட்சியில் கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டேன். என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை. தியேட்டர் முழுவதும் கேவல்கள், விசும்பல்கள்.
(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அதே நிலைதான்).
படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன.
-
21st August 2012 04:43 PM
# ADS
Circuit advertisement
-
21st August 2012, 06:22 PM
#912
Junior Member
Seasoned Hubber
Excellent Mr.karthik - wonderfully narrated - taken all of us with you to our childhood days. I shed more tears in reading your narration than what I did it in theatre . Thanks once again for a rewinding ...
-
21st August 2012, 07:54 PM
#913
Senior Member
Diamond Hubber
கார்த்திக்
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
21st August 2012, 08:04 PM
#914
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
பைத்தியக்கார அப்பா, அவரே போகச்சொன்னாலும் இந்தப்படத்தை விட்டு வேறு படத்துக்குப்போக மாட்டேன் என்பது அவருக்குத்தெரியவில்லை.

super malarum ninaivugal karthik...
-
21st August 2012, 08:11 PM
#915
Senior Member
Diamond Hubber
அச்சில் ஏறும் இலக்கியங்களுக்கு எள் முனையளவும் குறைவில்லாத எழுத்து .அருமையான நடை கார்த்திக்
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
21st August 2012, 08:22 PM
#916
Senior Member
Seasoned Hubber
அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை.
பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வாக்கியம்
நெஞ்சை நெகிழச் செய்யும் சிலாக்கியம்
கார்த்திக்.
உங்கள் எழுத்தைப் படிப்பது எங்கள் பாக்கியம்....
தாங்கள் கூறியது போல் வெள்ளிப் பனி மலையின் பாடலில் மட்டும் வண்ணத்தில் திரையிட்டது இன்றும் நினைவில் நிழலாடுகிறது. முதல் வெளியீட்டில் பார்க்க முடியவில்லை எனக்கும். ஆனால் 1964ல் சென்னை மெரீனாவில் உள்ள விளையாட்டுத் திடலில் மீன் வளக் காட்சி நடைபெற்றது. அங்கு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொம்மலாட்டம், கரகாட்டம் போன்றவற்றோடு அன்றாடம் திரைப்படத் திரையீடும் உண்டு. அப்படி ஒரு நாள் நான் பார்த்தது தான் கப்பலோட்டிய தமிழன். திறந்தவெளியில் அந்தப் படத்தை மாலை நேரத்தில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அப்போது திரையிடப் பட்ட பிரதியில் தான் அந்தப் பாடல் வண்ணத்தில் ஒளி பரப்பானது. தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு அந்தப் படத்தைப் பார்த்தீர்களோ, அதற்கு நேரெதிராக வீட்டுக்கு அருகாமையில் இலவசமாக அந்தப் படத்தை நான் பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் அப்போது சிறு வயது. அதே கப்பலோட்டிய தமிழன் படத்தை ஓடியன் திரையரங்கில் நன்கு தீவிரமாக முற்றி விட்ட சிவாஜி ரசிகனாக டிக்கெட்டை முண்டியடித்துக்கொண்டு வாங்கியதும் கூட்டத்தோடு ஆரவாரத்தோடு பார்த்ததும் கிட்டத் தட்ட தங்களுடைய அனுவங்களே. இருந்தாலும் அந்தப் படத்திற்காக தாங்கள் பட்ட கஷ்டங்கள் தங்களுக்கு மட்டுமல்ல படித்த அனைவரின் கண்களையும் ஈரமாக்கியிருக்கிறது என்பது திண்ணம்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st August 2012, 09:29 PM
#917
Senior Member
Devoted Hubber
"(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அதே நிலைதான்).
படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன. "
Mr.karthik sir,
Excellent! Excellent! Excellent!
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
21st August 2012, 09:38 PM
#918
அற்புதம் என்ற ஒரு வார்த்தையை தவிர வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை! தொடருங்கள் கார்த்திக்.
அன்புடன்
-
21st August 2012, 09:46 PM
#919
அன்பு நண்பர் கார்த்திக் அவர்களுக்கு,
மனதை கசக்கிப் பிழிந்து விட்டீர்கள் உங்களுடைய உண்மையான எழுத்தின் மூலம், ஏனென்றால் அந்தப் படத்தை எப்பொழுது பார்த்தாலும் எனக்கும் அதே நிலை தான்.
எல்லாவற்றிர்க்கும் முத்தாய்ப்பாக, வயதான சிதம்பரனராக வரும் ஒவ்வொரு காட்சியும் சொல்லில் அடங்காதது.
நன்றிகள், எங்கள் எல்லோருடைய உள்ளத்திலும் இந்த உணர்ச்சிகளைத் தட்டிவிட்டதில்.
ஆனந்த்
-
21st August 2012, 09:52 PM
#920
Senior Member
Diamond Hubber

டியர் கார்த்திக் சார்,
ரியலி ஒன்டர்புல். அனுபவித்துப் படித்து மகிழ்ந்தேன். தெள்ளத் தெளிவான நீரோடை போன்ற நடை. அந்த இளம் பிராயத்திலேயே கப்பலோட்டிய தமிழனைக் காண வேண்டும் என்ற தணியாத தங்கள் தாகம்... டிக்கெட் கிடைக்காவிட்டாலும் வேறு படம் பார்க்கும் எண்ணம் இல்லாமல் வீட்டுக்கு திரும்பிய பிடிவாதம்... மறுபடி புதிய உத்வேகத்துடன் ஒருநாள் விட்டு மறுநாள் மறுபடியும் விடா முயற்சியுடன் காவியத்தை கண்ட வேகம்... க.தமிழன் மீதுள்ள மோகம்...மோகத்தினால் நெஞ்சம் முழுக்க ஏற்பட்ட சோகம்.. அனைத்து அனுபவங்களும் அற்புதம்.
நேற்று கூட அருமை பம்மலார் அவர்களும் நானும் கை பேசியின் வழியே கப்பலோட்டிய தமிழனில் நடிகர் திலகத்தின் நடிப்பு ராஜாங்கத்தைப் பற்றி நெக்குருக உரையாடிக் கொண்டிருந்தோம். அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இதயத்தின் மேல் இமயமலையை தூக்கி வைத்தாற்போன்ற பாரம் ஏற்படுவது நிஜம். நேற்று முழுப்படத்தையும் பார்த்து முடித்ததற்கு அப்புறம் தான் தெரிந்தது (பலமுறை பார்த்திருந்தாலும் கூட) நடிகர் திலகம் தான் நடித்த கேரக்டர்களில் தனக்குப் பிடித்த கேரக்டராக ஏன் கப்பலோட்டிய தமிழனைச் சொன்னாரென்று!
அருமையான பதிவுக்கு அகம் மகிழ்ந்த நன்றிகள் சார்..
Bookmarks