Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பாலாடை PART III

    மோகன் ஆர்ட்ஸ் என்ற பானர் வரையும் நிறுவனத்தை நடத்தி வந்த மோகன், நடிகர் எம்.ஆர்.சந்தானத்துடன் சேர்ந்து ராஜாமணி பிச்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி காலத்தால் அழிக்க முடியாத காவியமான பாச மலர் திரைக் காவியத்தை 1961-ல் நமக்கு அளித்தனர். பிறகு 1963-ல் அதே பானரில் அவர்கள் தயாரித்த படம் குங்குமம். படத்தின் திரைக்கதையை படமாகும் நேரத்தில் நேர்ந்த பிழையால் நாயகனும் நாயகியும் ஒரே தந்தைக்கு பிறந்தவர்கள் அதாவது அண்ணன் தங்கை முறை வருகிறது என்ற சந்தேகம் எழுந்ததினால் சென்சாரில் சில பல காட்சிகள் வெட்டப்பட்டது. படத்தின் சில பல காட்சிகளை ரீ-ஷூட் செய்ய வேண்டும் என்ற நிலைமை உருவானது. அனால் அந்த நேரத்தில் பெரும் பொருட்செலவில் பந்துலு தயாரித்து இயக்கி கொண்டிருந்த கர்ணன் படத்திற்காக ஜெய்ப்பூரில் முகாமிட்டிருந்தார் நடிகர் திலகம். அதை விட்டு விட்டு வந்தால் பந்துலு பாதிக்கப்படுவார் என்பதானால் தன சொந்த படம் போன்ற குங்குமத்தை அதுவும் தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் இயக்கம் என்ற போதிலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் கர்ணன் படபிடிப்பில் தொடர்ந்தார் நடிகர் திலகம். இந்த செய்திகளை இதற்கு முன்னரே நமது நடிகர் திலகம் திரியில் பேசியிருக்கிறோம். இந்த காரணத்தினால் ரீ-ஷூட் செய்யப்படாமல் குங்குமம் 1963 ஆகஸ்ட் 2 அன்று வெளியானது மேற் சொன்ன காரணங்களினால் படம் பெற வேண்டிய வெற்றியை பெற முடியவில்லை. அந்த படத்திற்கு பிறகு ராஜாமணி பிச்சர்ஸ் படம் எதுவும் தயாரிக்கவில்லை.

    இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்த எம்.ஆர்.சந்தானம்.[இயக்குனர் சந்தானபாரதியின் தந்தை] இதற்கிடையில் கமலா பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அன்னை இல்லம் படத்தை தயாரித்தார்.இது 1963-ம் வருடம் நவம்பர் 15 அன்று வெளியானது. சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படம் தயாரிக்க துவங்கி அதற்கு தங்களின் முதல் பட இயக்குனரான பீம்சிங்கை ஒப்பந்தம் செய்தார். 1965-ல் வெளிவந்த பழனி, சாந்தி திரைப்படங்களுக்கு பிறகு பீம்சிங் இந்தி படவுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இருப்பினும் இந்தப் படத்தை இயக்குவதற்கு ஒப்புக் கொண்டார்.

    அந்தக் காலத்தில் பருவ இதழ்களில் கதை தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தவர் பிலஹரி. ராமன் என்ற இயற் பெயருடைய இவருடைய கதைதான் பாலாடை. அவரே வசனம் எழுத படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் தமிழ் இந்தி என்று ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்துக் கொண்டிருந்த பீம்சிங்கால் இந்தப் படத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் படபிடிப்பு விட்டு விட்டு நடந்தது.

    கல்யாணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லாத மனைவி தன கணவனுக்கு வாரிசு வேண்டும் என்று முடிவு செய்து தன் தங்கையையும் கணவனையும் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறாள். திருமணம் முடிந்து அவர்கள் முதலிரவுக்கு செல்லும் நேரத்தில் இங்கே இவள் கர்ப்பம் என்று தெரிய வருகிறது. இந்த சுவாரசியமான முடிச்சு விழும் போது இடைவேளை. ஆடியன்ஸ் நிமிர்ந்து உட்காரும் நேரம். ஆஹா இதை எப்படி கொண்டு போகப் போகிறார்கள் என கற்பனை செய்யும் போது அந்த சுவாரஸ்யத்திற்கு ஈடு கொடுக்காமல் தடுமாறும் திரைக்கதை இறுதிவரை அப்படியே அதே பாட்டையில் பயணிக்க ஆடியன்ஸ் ஏமாற்றமடைகின்றனர். இது எதனால் நேர்ந்தது என்பது நமக்கு தெரியாத புதிர்.

    முன்பே சொன்னது போல் பிலஹரி கதை வசனம் எழுதியிருக்க பீம்சிங் இயக்கினார். பீம்சிங் இந்தியில் பிசியாக இருந்த நேரம் எனவே அவரின் associate இயக்குனர்கள் திருமலை மகாலிங்கம் பல காட்சிகளை இயக்கியதாக அன்றைய நாளில் ஒரு பேச்சு உண்டு.

    இந்தப் படத்திற்கு இசை கே.வி.மகாதேவன். பாசமலர் படத்திற்கு மெல்லிசை மன்னர்களை பயன்படுத்திய ராஜாமணி பிக்சர்ஸ் தங்களது அடுத்த படமான குங்குமம் படத்திற்கு மகாதேவனை ஒப்பந்தம் செய்தார்கள். இரண்டிலுமே பாடல்கள் பெரும் புகழ் பெற்றன. எம்.ஆர்.சந்தானம் தனியாக எடுத்த அன்னை இல்லம் படத்திற்கு மாமாவை ஒப்பந்தம் செய்தார். குங்குமம் படத்தில் மாமாவை பயன்படுத்திக்கொண்ட அந்த நெருக்கமோ என்னவோ அன்னை இல்லம் பிறகு பாலாடை ஆகியவற்றுக்கும் மகாதேவனே இசையமைப்பாளர் ஆனார்.

    நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த படங்களில் இரண்டிற்கு மட்டுமே மாமா மியூசிக்.ஒன்று படிக்காத மேதை மற்றொன்று பாலாடை.[இதே கூட்டணியில் வெளிவந்த ராஜா ராணி படத்திற்கு டி.ஆர். பாப்பாவும், பெற்ற மனம் படத்திற்கு C.ராஜேஸ்வர ராவும் இசையமைத்தனர். மற்றவை எல்லாம் மெல்லிசை மன்னர்கள்.இந்தக் கூட்டணியின் கடைசி படமான பாதுகாப்பு மட்டும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள்].

    அந்தக் காலகட்டத்தில் புராணப் படங்களிலும் சமூக படங்களிலும் [பேசும் தெய்வம் போன்றவை] வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மாமா இந்தப் படத்தில் கோட்டை விட்டிருப்பார்.

    பட்டாடை தொட்டில் கட்ட வேண்டும் என் கண்ணுக்கு - நடிகர் திலகத்திற்கு உண்மை தெரிந்தவுடன் பத்மினியிடம் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்க பத்மினி மன்னிப்பு கேட்க அந்நேரத்தில் இது எதுவும் தெரியாமல் உள்ளே வரும் கே.ஆர். விஜயா பாடுவது. இது ஓரளவிற்கு பிரபலமான பாடல். சுசீலாவின் குரல் இனிமை பிளஸ்.

    அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் - அணைக்கட்டு வேலைக்கு சென்றிருக்கும் போது அங்கே நடக்கும் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சிவாஜியும் விஜயாவும் போவார்கள். அந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பாடுவதாக வரும் பாடல். நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைலை இந்தப் பாட்டில் ரசிக்கலாம்.

    டூயட் டூயட் பாடும் முதலிரவு - நாகேஷ் மனோரமா முதலிரவில் பாடுவதாக வரும் பாடல். தாராபுரம் சுந்தர்ராஜன் பாடியிருப்பார்.

    எங்கே எங்கே எங்கே என் கண்ணுக்கு விருந்தெங்கே - படத்தில் நடிகர் திலகத்திற்கு ஒரே பாடல் இது மட்டும்தான். அதுவரை காய்ந்து கிடந்த ரசிகர்களுக்கு கைதட்ட ஆராவரிக்க ஒரு சீன். அந்த ஸ்டைல் போஸ் தனித்துவமான அந்த நடை என்று கலகலப்பாய் போகும்.

    தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக படம் 1967 ஜூன் 16-ல் வெளியானது. ஆனால் அதற்குள்ளாகவே கிட்டத்தட்ட இதே போன்ற கதையமைப்பை கொண்ட இதே நாயகனும் நாயகியும் நடித்த பேசும் தெய்வம் 1967 ஏப்ரலில் வெளியாகி வெற்றியும் பெற்று பாலாடை வெளியாகும் போது ஓடிக் கொண்டிருக்கிறது.அது மட்டுமல்ல நடிகர் திலகத்திற்கு action hero என்ற ஒரு புதிய இமேஜ் நல்கிய தங்கை படமும் 1967 மே-யில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய நேரத்தில் வெளியான பாலாடை போதிய வெற்றியை பெறாமல் போனது. மெயின் நகரங்களில் எல்லாம் ஐம்பது நாட்களை கடந்து ஓடிய பாலாடை எங்கள் மதுரை மாநகர் மீனாட்சி திரை அரங்கில் தன அதிக பட்ச நாட்கள் ஓட்டத்தை பதிவு செய்தது.

    நடிகர் திலகத்தின் படங்களைப் பொருத்தவரைக்கும் எது எப்படி இருப்பினும் அவருக்காக [மட்டும்] சில படங்களை பார்க்க நேரிடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் பாலாடை

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 31st October 2012 at 01:03 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •