கோபால் சாரின் காதல் தொடர் தொடரும் வரை...
ஒரு அறை கொடுத்தால் தெரியும்...
சம்பத் வேலையில்லா பட்டதாரி. இருந்தாலும் நற்குணங்கள் நிறைந்தவன். அவனிடம் காதல் கொள்கிறாள். நாயகி. அவனோ தன் பொருளாதார நிலைமை சீரடைய வேண்டும் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு சூழல்களிலும் கவலைகளிலும் உழல்பவன். அவனுக்கும் அவளிடம் உள்ளுக்குள் காதல் இருந்தாலும் தன்னுடைய நிலைமையை அவளிடம் சொல்கிறான். நாயகியோ அதனைப் பொருட்படுத்தாமல், அவனுக்காகக் காத்திருந்தாலும் பரவாயில்லை, அவனைக் காதலிக்க வேண்டும், மணம் புரிய வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் நேருக்கு நேராய் அவனிடம் கேட்பதோடு அவனுடைய உணர்வுகளையும் சீண்டி கோபத்தை வரவழைக்கிறாள். அவனுக்குள் இருக்கும் நல்ல மனம் அந்தக் கோபத்தை மறைத்து அவளிடம் காதலைத் தூண்டி விட்டு விடும் என்று அவள் சரியாக கணித்து அதற்கேற்ப அவனை கோபத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறாள். அவனுடைய ஆண்மையின் மீதே ஐயம் எழுப்பி அவனை உசுப்பேத்தி விடுவதால் அவனும் கோபத்துடன் அவளை அறைந்து விடுகிறான். இதற்காகத் தானே ஆசைப் பட்டாய் பால குமாரா என்பது போல் அவளும் இதற்காகவே காத்திருந்தது போல் தன் காதலை வெளிப்படுத்தி மெல்ல மெல்ல அவன் மனதை கரைத்து விடுகிறாள்.
இது தான் சூழ்நிலை. காதல் பாடல்களிலும் சக்கரவர்த்தியான கண்ணதாசனுக்கு இப்படி ஒரு situation கிடைத்தால் விடுவாரா. புகுந்து விளையாடி விட்டார். ஒவ்வொரு வரியும் இரு கதா பாத்திரங்களையும் சரியான அளவில் அலசி ஆராய்ந்து எழுதப் பட்ட வரிகள். மெல்லிசை மன்னர் மட்டும் என்ன லேசுப்பட்டவரா. பாடகர்களை சக்கையாகப் பிழிந்து முழுமையான உணர்வுகளை பாடலில் கொண்டு வந்து விட்டார். அதுவும் "அந்த அறை பள்ளியறையாக இருந்தால்" என்ற வரிகளை நாயகி பாடும் போது ஒரு பொருளாகவும், "அந்த அறை பள்ளியறை ஆக இருந்தால் " என்று நாயகன் பாடும் போது வேறு ஒரு பொருளாகவும் இலக்கிய நயத்தோடு காதலைப் பிழிந்து தந்திருப்பார்கள்.
இவ்வளவு அருமையான பாடலை படம் பிடிப்பதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டு விட்டார் போலும் ஒளிப்பதிவாளர் எஸ்.மாருதி ராவ் [இப்படத்தை முதலில் இயக்கியது கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் இடையில் அவர்கள் தொடராமல் மாருதி ராவ் அவர்களே இயக்கி முடித்து விட்டதாகவும் ஒரு செய்தி அக்காலத்தில் உண்டு. அதற்கேற்றார் போல் நெடுந்தகட்டில் படத்தின் டைட்டில் கார்டில் ஒளிப்பதிவு & இயக்கம் மாருதி ராவ் என்று தான் காட்டப் படுகிறது ]. இப்பாடல் காட்சியில் இரண்டாவது சரணத்தின் போது ஒரு ஊடல் உண்டு என்ற வரிகளின் போது காமிரா பாடலின் தாளத்திற்கேற்ப ஜூம் இன் அவுட் என மாறி மாறி வருவது பாடலுக்கு உயிர் தருகிறது.
இது அத்தனையும் ஒரு சேர உயிர் பெற வைக்கிறது நடிகர் திலகம்-வாணிஸ்ரீ இணை. இந்த ஜோடி ரசிகர்களின் கனவு ஜோடியாக ஏன் விளங்குகிறது என்பதற்கு இப்பாடல் காட்சி ஓர் உதாரணம். கோபால் மட்டுமல்ல பெரும்பாலான சிவாஜி ரசிகர்கள், தேவிகாவிற்குப் பிறகு வாணிஸ்ரீ யைத்தான் நடிகர் திலகத்தின் சிறந்த ஜோடி நடிகையாக கருதுவதில் முழு நியாயமும் உள்ளது. அது ஏதோ கெமிஸ்ட்ரி, என்பார்களே, அதையெல்லாம் இந்தப் பாடலில் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
இந்தக் காட்சியை முழுமையாகப் பார்த்தால் தான் இப்பாடலின் பொருள் விளங்கும் என்கிற எண்ணத்தில் பாடலுக்கு முன் வரும் காட்சியும் பின் வரும் காட்சியும் சேர்த்தே தொகுக்கப் பட்டுள்ளன.
அதெல்லாம் சரி... அதென்ன பாட்டு எனச் சொல்லவே யில்லையே ... என்கிறீர்களா...
படம் - இளைய தலைமுறை
பாடல் - ஒரு அறை கொடுத்தால் தெரியும்
குரல்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், வாணி ஜெயராம்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - கண்ணதாசன்
http://www.youtube.com/watch?v=Qd87b...lcLpnIKC2q3h3A