-
26th September 2015, 12:46 PM
#11
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
சினிமா தொழில்நுட்பம்: ஷங்கர்-ராஜமௌலிக்கே சவால் விடலாம்!
‘10,000 பிசி’ படத்தில் ஒரு காட்சி | 3டி டேட்டா ஸ்கேனர்
மலை, அதன் மேலிருந்து விழும் அருவி, அதே மலையில் இரவில் காயும் நிலா, அங்கே குடியிருக்கும் ஆதிவாசிகளின் குடியிருப்பு, அங்கொரு மலைக்கோயில் எனப் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்குப் பிரம்மாண்ட செட்களை நிர்மாணித்துப் படம்பிடித்தவர் டி. ராஜேந்தர். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அவர் இயக்கிய பல படங்களின் இப்படிப்பட்ட பிரம்மாண்ட செட்களை நிர்மாணிக்கப் படத்தின் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை ஒதுக்கியதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் எதிர்பார்த்தது போலவே பாடல் காட்சிகளின் இத்தகைய செட் பிரம்மாண்டங்களுக்காகவும் அவரது படங்கள் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் ரசிகர்களை அவை கவர்ந்தாலும், அவற்றின் செயற்கைத் தன்மை இன்று அந்தப் பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது நமக்குப் புன்முறுவல் பூக்கச் செய்யலாம்.
காரணம் இன்று செட் என்பதே டிஜிட்டல்மயமாகிவிட்டது. அதாவது இன்றைய படங்களில் நாம் காணும் காட்சிகளில் வாய்பிளக்க வைக்கும் இடங்கள் பலவும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டவை. இவற்றின் சிறப்பம்சமே செயற்கைத் தன்மை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இது நிஜம்தான் என்று நம்பவைத்துவிடும் ‘மாய யதார்த்தத்தை’ நமக்கு சிருஷ்டித்துக் காட்டிவிடுவதுதான்.
இது எப்படிச் சாத்தியமாகிறது? இப்படி உருவாகும் செட்களுக்கு அடிப்படை இயற்கை + செயற்கை இரண்டையும் கச்சிதமாக இணைத்துக் காட்டும் போட்டோ ரியலிஸ்டிக் கிராஃபிக்ஸ் நுட்பம். இது பல தொழில்நுட்பங்கள் ஒன்றாக இணைந்து உருவாகும் ஒரு முறை. இதில் முக்கியப் பங்கு வகிப்பது அதிநவீன 3டி டேட்டா ஸ்கேனிங் முறை. உங்களை ஒரு படத் தயாரிப்பாளராக கற்பனை செய்துகொள்ளுங்கள். எகிப்து பாலைவனத்தில் இருக்கும் உலக அதிசயமான பிரமிட்தான் நீங்கள் தயாரிக்கப்போகும் வரலாற்றுப் படத்தின் கதைக்களம் என்று வைத்துக்கொள்வோம். அடிமைகளைக் கொண்டு பாரோ மன்னர்கள் அந்த பிரமிடைக் கட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அங்கே ஒரு அடிமையாக உங்கள் கதாநாயன் இருக்கிறார் என்பது காட்சி. இப்போது இதை எப்படிப் படமாக்க முடியும்?
ராஜஸ்தான் பாலைவனத்துக்குப் போய் பிரமிடை செட் போட்டுப் படம்பிடிக்க உங்களிடம் பட்ஜெட் இல்லையா? கவலையே வேண்டாம். இந்த இடத்தில்தான் 3டி டேட்டா ஸ்கேனிங், டிராயிங், 3டி மாடலிங், அனிமேஷன், செட் எக்ஸ்டென்ஷன்(set extension), மேச் மூவிங் (matchmoving), கேரக்டர் அண்ட் கிரவுட் ப்ளேஸ்மெண்ட்(character and crowd placement) உள்ளிட்ட பல விஷுவல் எஃபெக்ட் தொழில்நுட்பங்கள் ஒன்றாக இணைகின்றன.
இப்போது நீங்கள் தயாரிக்கும் பீரியட் படத்துக்கு வருவோம். முதலில் அதிநவீன 3டி டேட்டா ஸ்கேனர் கொண்டு, கதைக்களத்துக்குத் தேவைப்படும் பாலைவனத்தை வெறுமையாக (vacant) ‘டேட்டா கேப்சர்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக்கொள்கிறோம். அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி மிகத் துல்லியமாக முப்பரிமாண முறையில் எக்ஸ்ரேவைவிடத் துல்லியமாக இந்த லேசர் ஸ்கேனர்கள் படம்பிடித்துத் தரும்.
தற்போது 3டி முறையில் படம்பிடிக்கப்பட்ட இந்த முப்பரிமாணப் பாலைவனக் காட்சியை கம்ப்யூட்டரில் உள்ளிட்டு, அதில் அடிமைகள் வேலை செய்வதுபோலவும், பிரமிடின் முதல் அடுக்கில் தொடங்கி அது நிறைவடையும் வரை படிப்படியாகக் கட்டுமானம் செய்வது போலவும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க முடியும். சிறிய அளவில் மினியேச்சராக பிரமிடைச் செய்தும் அதை 3டி டேட்டாவுடன் இணைக்க முடியும். இதைத்தான் மேச் மூவிங் என்கிறார்கள்.
கடந்த 2008 கிராஃபிக்ஸ் மிரட்டலோடு வெளியான ‘10,000 பிசி’ திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அதில் கி.மு. பத்தாயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள் எகிப்தின் கைசாவில் அமைந்த மூன்று பிரமிடுகளைக் கட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றது. பிரமிடுகளைக் கட்டுவதற்கு அந்தக் காலத்தின் பழங்குடி மக்கள் யானை இனத்தின் முன்னோடியான நீண்டு சுருண்ட தந்தங்களைக் கொண்ட மம்மூத் யானைகளைப் பயன்படுத்துவதுபோலக் காட்சி உருவாக்கப்பட்டது.
இந்தக் காட்சிக்காக நமீபியாவின் பாலைவனம் முதலில் வெறுமையாக 3டி ஸ்கேன் செய்யப்பட்டது. பிறகு மினியேச்சராக பிரமிடு கட்டப்படுவது போன்ற 3டி மாடலின் விஷுவல் டேட்டா அதனுடன் இணைக்கப்பட்டது. 3டி முறையில் வரைந்து உருவாக்கப்பட்ட மம்முத் யானைகள் தேவையான இடங்களில் பொருத்தப்பட்டு அவை அனிமேட் செய்யப்பட்டன. பிறகு காட்சிக்கு எந்த இடங்களிளெல்லாம் மக்கள் கூட்டம் தேவைப்பட்டதோ அவை கிரவுட் ரீப்ளேஸ்மெண்ட் தொழில்நுட்பம் மூலம் நிரப்பப்பட்டது.
இந்தக் காட்சியுடன் நடிகர்கள் ஸ்டூடியோவில் க்ரீன்மேட் பின்னணியில் நடித்த லைவ் ஆக்*ஷன் காட்சி உள்ளே புகுத்தப்பட்டு முக்கிய கதாபாத்திரம் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் கம்பாசிட் செய்யப்பட்டது. கற்பனை எத்தனை பிரம்மாண்டமாக இருந்தாலும் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கான முன்தயாரிப்பு முறையில் சரியான திட்டமிடல் இருந்தால் நீங்கள் இயக்குநர் ஷங்கர், ராஜமௌலி இருவருக்கும் சவால் விடும் தரத்தை கிராஃபிக்ஸில் கொண்டுவர முடியும். அத்தகைய திட்டமிடலின் துல்லியங்களை அடுத்துப் பார்ப்போம்!
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
26th September 2015 12:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks