-
24th February 2011, 05:01 AM
#11
Senior Member
Veteran Hubber
முந்தைய பதிவின் தொடர்ச்சி...
சகோதரி சாரதாவுக்கு "ராஜா"வைப் பற்றி எழுத 10 பக்கம் வேண்டும் என்றால், அடியேனுக்கு "வசந்த மாளிகை" குறித்து எழுத ஒரு தனித்திரியே தேவை. அடியேன் பூமிக்கு வந்த எட்டாவது நாளில்(29.9.1972) வெளிவந்த காவியம். அடியேன் நடத்திய (நடத்தப் போகிற) - முழுக்க முழுக்க வாழ்வியல் திலகத்தின் புகழ் பாடுகின்ற - பத்திரிகைக்கும் (வசந்த மாளிகை) பெயராக அமைந்தது. 'Hai Handsome!' என்று யாரைக் கூப்பிட முடியும் "வசந்த மாளிகை" ஆனந்தைத் தவிர. படம் முழுமையுமே - இன்பத்தில் மிதந்தாலும் சரி, துன்பத்தில் திளைத்தாலும் சரி - the most handsome heroவாகக் காட்சியளிப்பார். படத்தின் நடுவில் வரும் ஒரு காட்சியில், அவரது அறையில் நாற்காலியில் அமர்ந்தபடியே எதிரில் இருக்கும் மேஜையின் மேல் இருக்கும் வசந்த மாளிகையின் வரைபடத்தை வனப்புடன் பார்த்து, பின் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே சற்று அண்ணாந்து "வசந்த மாளிகை" என்பாரே, கோடி கொடுக்கலாம் அந்த ஒரு சீனுக்கு. மழை சோவென்று ஜோராகக் கொட்டிக் கொண்டிருக்க, ஒரு குடிசையில் சொட்ட சொட்ட ஜோடியாக நுழைவர் ஆனந்தும், லதாவும். நனைந்த முந்தானையை லதா ஒட்டப் பிழிய, ஆனந்தின் பற்கள் plumsஐ சாறு பிழியும். காதலி லதாவின் இளமையை, அழகை ஆனந்தின் காந்தக்கண்கள் சுவைத்து ரசிக்க, கண்களுக்கு போட்டியாக அவரது வாய் plumsஐ சுவைத்து மகிழும். பின்னர் அங்கு 'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக் கொள்ளி?!' (Sorry Joe) என எடுத்து அந்தக் கொள்ளிக்கட்டையால் சிகரெட்டைப் பற்ற வைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, அப்பப்பா... கொள்ளிக்கட்டையால் சிகரெட்டை ஸடைலாக பற்ற வைத்தவர் உலகிலேயே நமது ஸ்டைல் சக்கரவர்த்தி ஒருவராகத்தான் இருக்க முடியும்.
தெலுங்கில் "பிரேம நகர்(1971)" இமாலய வெற்றி என்றால், தமிழில் "வசந்த மாளிகை(1972)" விண்ணைத் தொடும் வெற்றி! இந்தியாவில் 200 நாட்களும், வெளிநாடான இலங்கையில் 287 நாட்களும் ஓடி மெகாமகாஹிட். இப்படி நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் 200 நாட்களைக் கடந்த இரண்டாவது படம் "வசந்த மாளிகை". முதல் படம், நடிகர் திலகத்தின் முதல் படம் "பராசக்தி(1952)". இந்தியாவில் 245 நாட்களும், இலங்கையில் 294 நாட்களும் ஓடியது. "வசந்த மாளிகை"யின் விண்ணை வீழ்த்திய வெற்றி, தெலுங்கு படத் தயாரிப்பாளர்களையெல்லாம் தமிழ்ப்படவுலகின் பக்கம் திருப்பியது. அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்கலானார்கள். 1931- ம் ஆண்டு தொடங்கிய தமிழ் சினிமாவிற்கு தற்பொழுது முத்துவிழா ஆண்டு [80வது ஆண்டு]. இந்த 80 ஆண்டுகளில், மறுவெளியீடுகளில், தென்னகமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் "வசந்த மாளிகை" ஓடியிருப்பதைப் போல் வேறு எந்தப்படமும் ஓடியதில்லை என அடித்துக் கூற முடியும். வெள்ளித்திரையில் மட்டுமா, சின்னத்திரையிலும் சரி, VCD-DVD விற்பனையிலும் சரி, மாளிகைக்கு நிகர் மாளிகையே. சிவாஜி அவர்களை நேரில் பார்க்காத கண்கள் இருக்கலாம். ஆனால் "வசந்த மாளிகை" திரைக்காவியத்தை திரையில் காணாத கண்கள் இருக்க முடியாது, இருக்கவே முடியாது.
ஆடல்-பாடல் இல்லாத படத்தில் நடிப்பார், காலில் செருப்பு அணியாமல் படம் முழுமையும் நடிப்பார், ஜோடியை நாடுவோரிடையே ஜோடியில்லாமல் நடிப்பார், படத்தில் பாட்டிருக்க தான் மட்டும் பாடாமல் நடிப்பார், வெறும் வேட்டி-சட்டையில் மட்டுமே மைல்கல்லை(150)த் தாண்டுவார்,
ஓரே பேண்ட்-ஷர்டிலும் படம் முழுவதும் வலம் வருவார், "நீதி(1972)"யை வாழ வைப்பதற்காக. நீதியைப் பொறுத்தவரை அதில் பங்கு கொண்ட எல்லோருமே நன்றாகச் செய்திருப்பார்கள். நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ! சிறந்த கலைஞரான சந்திரபாபு போன்றோரெல்லாம் சிதிலமடைந்துவிடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் அவருக்கு தொடர்ந்து நல்ல ரோல் கொடுக்கச் செய்திருப்பார். "நீதி" - 100 நாள் பெருவெற்றிப்படம்.
அமைதியையும், அதிரடியையும் ஓரே படத்தில் காண வேண்டுமா?! பாருங்கள் "எங்கள் தங்க ராஜா(1973)". பட்டாக்கத்தி பைரவன் அதிரடியின் உச்சம்! டாக்டர் ராஜா அமைதியின் உச்சம்! ஒரே நபர் இரு வேடங்களில் உச்சங்களைத் தொடும் போது மற்றவர்க்கு ஏது மிச்சம்?! "எங்கள் தங்க ராஜா" - 100 நாள் இமாலய வெற்றிப்படம். பாரிஸ்டர் மட்டும் சற்று தாமதித்திருந்தால், பைரவன் தனது பட்டாக்கத்தியை வெள்ளிவிழா வரை வீசியிருப்பார். ("பாரிஸ்டர் தாமதமாக வரணுமா, சொல்வது யார் பம்மலாரா, யோவ் பம்மலாரே, உடம்பு எப்படி இருக்கு?!" என பாரிஸ்டரின் மெய்க்காப்பளர் மோகனரங்கன் முணுமுணுப்பது காதில் விழுகிறது).
அகம் அழும், புறம் சிரிக்கும் : "அவன் தான் மனிதன்(1975)" ரவிகுமார். படம் முழுமையும் அவரது முகத்தில் கம்பீரமும், மிடுக்கும் சிலிர்த்தோடும். அதனூடே ஒரு மெல்லிய சோகமும் இழைந்தோடும். நூலின் மேல் நடப்பது போன்ற கடினமான கதாபாத்திரம். 'ஃப்பூ' என அதை ஊதித் தள்ளியிருப்பார் நடிகர் திலகம். இப்படம் தங்களின் மூன்றாவது பிரிவில் தான் சேர வேண்டும். ஏனெனில், இன்றளவும் பற்பல ரசிகர்கள் அவரது 288 திரைப்படங்களில் மிகவும் பிடித்த படமாக மட்டுமல்ல, தங்களுக்கு பித்து பிடித்த படமாகவும் கூறுவது இந்தப்படத்தைத்தான். 100 நாள் சூப்பர்ஹிட் காவியம் என்பதில் மாற்றுக் கருத்தும் உண்டோ!
'நன்றி' என்ற மூன்றெழுத்தின் உதாரண புருஷன் இரண்டெழுத்து "பாபு(1971)". இறைத்தன்மை கொண்ட ஒரு மனிதனின் பாத்திரத்தை, அந்த இரு தன்மைகளையும் ஒருங்கே கொண்ட அண்ணலைத் தவிர வேறு யாரால் தத்ரூபமாக சித்தரித்து காட்ட முடியும். BABU is purely a ONE-MAN SHOW. உடன் வந்த வண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கிய 100 நாள் சுப்ரீம்ஹிட்.
இந்த எளியேனுக்கு தெரிந்த ஏதோ சில தகவல்களையும் சேர்த்து, தங்களது கட்டுரைக்கு பதில் பதிவாக பதிவிட, தங்களது கட்டுரையின் மூலம் ஒரு வாய்ப்பை நல்கியமைக்கு மனமார்ந்த நன்றி!
தங்களின் அடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்!
அன்புடன்,
பம்மலார்.
-
24th February 2011 05:01 AM
# ADS
Circuit advertisement
Bookmarks