-
8th July 2013, 01:00 AM
#11
கோபால்,
ரோஜாவின் ராஜாவிற்கு ஒரு பாராதானா? இன்னும் எழுதியிருக்கலாமே! ஒரு சில விஷயங்களை தொடாமலேயே போய் விட்டீர்களே!
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் பாடல் பற்றி காட்சி பற்றி சொல்லலாம். படம் 1972 -73 காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு அப்போதே இந்த பாடல்கள் எல்லாம் பிரபலமாகி விட்டன. காப்பி -கானடா ராக கலவையில் அமைக்கப்பட்ட பாடலான அலங்காரம் (correct தானே?) இலங்கை வானொலியையும் விவித் பாரதியையும் தத்தெடுத்துக் கொண்டது. பாடல் வரிகளில் கவியரசர் விளையாடியிருப்பார். ஆனால் சற்றே இலக்கிய தரமாக அமைந்த வரிகள்!
கொத்தோடு பூ தந்த பன்னீர் மரம்
பொன்மாலை பெண்ணிற்கு மஞ்சம் தரும்
நீரோடு விளையாடி போகின்ற தென்றல்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்!
அது போல் இரண்டாவது சரணத்தில்
எங்கேனும் பூபந்தல் மேளங்களோடு
கல்யாண தமிழ் பாடி நடமாடுவோம்.
என்று எழுதியிருப்பார். படம் வெளிவந்த பிறகு அன்றைய நாட்களில் தினமணி கதிர் வார இதழில் கண்ணதாசன் கேள்வி பதில் வந்துக் கொண்டிருந்த நேரம். அப்போது ஒரு வாசகர் இந்த வரியை குறிப்பிட்டு பொதுவாக கல்யாணங்களில் வடமொழிதானே பயன்படுத்தப்படும். நீங்கள் கல்யாண தமிழ் என்று எழுதியிருக்கிறீர்களே அதற்கு என்ன பொருள் என்று கேட்க கவியரசர் அதற்கு பதில் அளித்திருந்தார்.
அது போன்றே மறக்க முடியாத பாடல் ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான். அந்த காட்சியும் மிக நன்றாக வந்திருக்கும். தன காதலிதான் உயிர் நண்பனுக்கு பார்த்திருக்கும் பெண் என்று தெரிந்தவுடன் நடிகர் திலகம் அதை வெளிப்படுத்தும் பாங்கு இருக்கிறதே! அது அற்புதம். வாணிஸ்ரீயும் தன் பங்கை நிறைவாக செய்திருப்பார். கவியரசர் இந்தப் பாடலிலும் புகுந்து விளையாடியிருப்பார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு ராமாயண காவியத்திலிருந்து மேற்கோள் எடுத்து அழகாய் பயன்படுத்தியிருப்பார்.
மணிமுத்து மாணிக்க மாடத்திலிருந்து ஜானகி பார்த்திருந்தாள்
அவள் மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனை தேடி நின்றாள்
என்ற வரியில் ஆரம்பித்து சரணத்தின் இறுதியில்
அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே
என்று முடிப்பார்.
அதே போன்று
மன்னவரெல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்
ஜானகி கலங்கி விட்டாள்
ஜானகி கல-- ங்கி விட்டாள்
என்று சற்றே விம்மிய குரலில் பாட [நமது இசையரசி சுசீலாவை விட இனிமையான குரல் வேறு எதாவது இருக்கிறதா என்ன?] மேஜர் முறைக்க, சுகுமாரி தோளில் கை வைக்க உடனே சுதாரித்துக் கொண்டு வாணிஸ்ரீ பல்லவியை பாடி முடித்து விட்டு மாடிக்கு எழுந்து போகும் காட்சி! பாடல் முழுவதும் நடிகர் திலகம் கண்களாலே உணர்வுகளை, அதாவது ஒரு புறம் உயிராக காதலித்த பெண், மற்றொரு புறம் வாழ்வளித்த நண்பன் என்ற அந்த இரண்டு தவிப்புகளையும் கண்களிலேயே உணர்த்திய காட்சியும் கூட அல்லவா அது!
அந்தக் காட்சிக்கு முன்னால் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று சொல்லும் சுகுமாரியிடம் நீ போய் டிரஸ் பண்ணிக் கொண்டு உட்கார் என்று கத்தும் இடத்திலும் தியேட்டரில் நடந்தை வீட்டில் தனிமையில் உட்கார்ந்து மிமிக்ரி பண்ணுமிடத்திலும் [சார், நீங்க சிக்லெட் சாப்பிடறீங்களா] வாணிஸ்ரீ கிளப்பியிருப்பார்.
தியேட்டர் சிக்லெட் காட்சி அமர்களமாக இளமை குறும்போடு அமைக்கப்பட்டிருக்கும். வீரராகவன் படம் முடிந்து படியிறங்கும் நடிகர் திலகத்திடம் சொல்லும் என் வயசு என்ன தெரியுமா என்று கேட்டு இப்படி சிக்லெட் கொடுத்து கொடுத்துதான் இப்படி ஆகி விட்டது என்று வழுக்கையை தடவி காட்டும் காட்சிக்கு தியேட்டரில் செம response இருக்கும்.
நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிலும் காதல் தோல்வியினால் மன நிலை பாதிக்கப்பட்டு அதன் பிறகு ஏற்படும் தாயின் மரணம். அந்தக் காட்சியில் தரையில் விழுந்து கிடக்கும் தாயைப் பார்த்து அடடே போயிட்டியா செத்து போயிட்டியா என்று கேட்கும் காட்சி எல்லாம் பிய்த்து உதறியிருப்பார்.
இந்த காட்சியைப் பற்றி சொல்லும்போது இது படமாக்கப்பட்ட நேரம் நினைவிற்கு வருகிறது. இந்தக் காட்சி 1973 ஜூன் மாதம் இறுதியில் படமாக்கப்பட்டது. அன்றைய நாட்களில் நவசக்தி நாளிதழில் ஞாயிறன்று சினிமா செய்திகள் இடம் பெறும். அந்த வாரம் வெளி வந்த நவசக்தி சினிமா பக்கத்தில் அழாமலே அழ வைத்த சிவாஜி என்ற தலைப்பில் இந்தக் காட்சியைப் பற்றி விவரித்து அது படமாக்கப்பட்ட போது அன்றைய தினம் செட்டில் இருந்தவர்கள் எப்படி கண் கலங்கினார்கள் என்பதை எழுதியிருந்தார்கள்.
அதற்கு அடுத்த சனிக்கிழமைதான் ஜூலை 14. அன்று நியூசினிமாவில் எங்கள் தங்க ராஜா ஓபனிங் ஷோ பார்ப்பதற்காக டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு தியேட்டருக்கு வெளியே நிற்கும் போது என்னுடன் வந்த என் கஸின் நண்பர்கள் மற்றும் சக ரசிகர்களிடம் இதைப் பற்றி கூற அவர்கள் சரியான் தகவலை சொல்லும்படி சொல்ல என் கஸின் என்னை சொல்ல சொன்னதும் நான் படித்தவற்றை அபப்டியே சொன்னதும் அது அப்படியே பரவி தியேட்டருக்கு உள்ளே போய் ஸீட்டில் உட்கார்ந்த பிறகும் படம் ஆரம்பிக்கும் வரை அதை ஒவ்வொருவருக்கும் பல முறை திருப்பி திருப்பி சொன்னதும் அதை கேட்டு விட்டு படத்தை பற்றிய எதிர்பார்ப்பில் பலரும் சந்தோஷப்பட்டது இப்போதும் பசுமரத்தாணியாக நினைவில் இருக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் திலகத்தை பார்க்க ஜோடியாக செல்லும் AVM ராஜன் வாணிஸ்ரீ நடிகர் திலகத்தை மட்டுமல்ல பார்வையாளர்களையும் சற்றே குழப்புவார்கள்.[இந்த உத்தியை பல வருடம் கழித்து Sp.முத்துராமன் புதுக் கவிதை படத்தில் ரஜினி சரிதா ஜோடியை வைத்து செய்திருப்பார்]. இந்த மருத்துவமனை காட்சியில் ஜனகனின் மகளை பாடல் slowவாக ஒலிக்க நடிகர் திலகம் சிவப்பு மையில் கோணல் மாணலாக பேப்பரில் தீட்டும் psychiatry touch உள்ள காட்சிகளை எல்லாம் கே.விஜயன் நன்றாகவே கையாண்டிருப்பார்.
ஓட்றா ஓட்றா பாடல் மற்றும் நாளை நீ மன்னவன் பாடல் எல்லாம் ரொம்பவே பிரசித்தம். ரோஜாவின் ராஜா பாடல் மற்றுமே படம் வந்த போதுதான் பலருக்கும் தெரிந்தது. சாம்ராட் அசோகன் வேறு பாணியில் எடுத்திருப்பார்கள் அது போனஸ்.
1976 டிசம்பர் 25 சனிகிழமை அன்று மதுரை சிந்தாமணி மற்றும் மினிப்ரியா அரங்குகளில் வெளியானது. இரண்டிலும் பார்த்தேன்.மிகவும் பிடித்திருந்தது. அவன் ஒரு சரித்திரம் மற்றும் தீபம் வெளியீடுகள் மட்டும் குறுக்கிடவில்லையென்றால் படம் பெரிய அளவிற்கு போயிருக்கும். என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72 போன்றே இந்தப் படமும் late ஆகாமல் குறிப்பிட்ட காலத்தில் வந்திருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.
1977 ஜனவரி பிலிமாலயா இதழில் இந்தப் படத்தை பற்றி மிகவும் சிலாகித்து விமர்சனம் எழுதியிருந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி குறிப்பிடும் போது கண்ணாடியை கழட்டாமலே கண்ணீரை துடைக்கும் லாவகம் நடிகர் திலகத்தை விட்டால் யாருக்கு வரும் என்று எழுதியிருந்தார்கள். மேலும் பாடல்களை பற்றி சொல்லும்போது கண்ணதாசன் பாடல் விஸ்வந்தன் இசையில் சௌந்தரராஜன் பாடி நடிகர் திலகம் நடிக்கும் போது பழைய சிவாஜி பட இனிமை திரும்பி வந்தது போல் இருக்கிறது என்று எழுதியிருந்தார்கள். அந்த நாட்களில் படங்களின் விமர்சனத்தின் முடிவில் படத்தைப் பற்றிய ஒரு குறியீடாக ஒரு பூவின் பெயரை குறிப்பிடுவது பிலிமாலயா பத்திரிக்கையின் வழக்கம். இந்தப் படத்திற்கு குல்மொஹர் என்று குறியீடு செய்திருந்தார்கள். அது எதைக் குறிக்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சி அதற்கு பிறகு வந்த இரண்டு மாத இதழ்களில் ஜீனியஸ் பதில்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
கோபாலின் பதிவிற்கு ஒரு சின்ன பின்னூட்டம் இட நினைத்து தொடங்கியது ஒரு பெரிய பதிவாக அமைந்து விட்டது. பழைய nostalgic நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றி கோபால்!
அன்புடன்
-
8th July 2013 01:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks