Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    மனோகரனை பற்றி வாசு சாரின் மகோன்னத பதிவு

    மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!?

    அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் விடும் அழகைப் பெற்றிருந்தார் இந்த அற்புத மனிதர். கூடவே திரையலகில் மிகுந்த அனுபவத்தையும் கண்டிருந்தார் இந்த அதிசய மனிதர்.

    "வஞ்சகம் வாழ்ந்தது கிடையாது....கொடுமை நிலைத்ததில்லை... இதோ பார்... உன் பொருட்டு விழா நடைபெறுகிறது விழாவிற்கு நீ வந்துதான் தீர வேண்டும்"

    என்று மந்திரி சத்யசீலர் மனோகரனிடம் கூறும் காட்சியில் நடிகர் திலகம் அறிமுகம். வீரமாக நடந்து வரும் கால்கள் மட்டுமே காண்பிக்கப்படும். அரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் அத்துணை பேரின் கைதட்டல் ஓசை நடிகர் திலகத்தை மனோகரனாய்ப் பார்க்கையில் விண்ணைப் பிளந்து முறிக்கும். கூனனும் நிமிர்ந்து உட்கார்ந்து மனோகரனைப் பார்த்து வியந்து உறைந்து போவான். அப்படி ஒரு கம்பீரம். மனோகரன் என்ற வார்ப்படத்தில் இருந்து வார்த்து எடுக்கப்பட்டது போல அப்படி ஒரு வேடப் பொருத்தம்.

    நாடகத்திற்கு மந்திரி அழைக்கும் போது அவரிடம் அங்கே வசந்தசேனை வருவாள் என்ற கோபத்தைக் காட்டி சீறுவாரே ஒரு சீறு. எதிர்பாராமல் தாய் பத்மாவதி அங்கே வந்து 'மனோகரன் கட்டாயம் நாடகத்திற்கு வருவான்' என்று திட்டவட்டமாகக் சொல்ல, செய்வதறியாது ஒருகணம் திகைத்து நின்று தாய் சென்றவுடன் மந்திரி சத்யசீலரை முறைப்பாரே ஒருமுறை! எந்த கல்லூரியில் இப்படியான நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

    நாடகத்தை மகாராணி பத்மாவதியார் பார்த்து அது தன் கதையைப் பிரதிபலிப்பதாக உணர்ந்து கண் கலங்கி, தன்னையறியாமல் தன் தனயன் தோள்களில் கைவைக்க, தாயின் கை ஸ்பரிசம் பட்டவுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் தாய் கலங்குவதை திடீரெனக் கவனித்து தாய் பக்கம் திரும்பி "என்னம்மா?" என்று விவரம் புரியாதவராய் கள்ளம் கபடமில்லாமல் வாஞ்சையுடன் கேட்பாரே! எந்தப் பள்ளிக் கூடத்தில் இப்படிப்பட்ட வியத்தகு நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

    வசந்தசேனையின் அக்கிரமங்களைப் பொறுக்க மாட்டாமல் தாயிடம் கோபமாக "உத்தரவு கொடுங்கள்! உருத்தெரியாமல் ஆக்குகிறேன் அந்த ஊர் கெடுப்பவளை" என்று கர்ஜிப்பாரே! எந்த சிங்கத்திடம் இப்படிப்பட்ட உறுமலை உறுமக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?

    "பாண்டியன் முத்துவிசயன் மீது போர் தொடுத்து வா" என்று அன்னை ஆணை பிறப்பித்தவுடன், "விடை கொடுங்கள்! வெற்றி மழை பொழிய வைக்கிறேன். வீணன் முத்துவிசயனின் விலா எலும்பை நொறுக்குகிறேன்" என்று முழங்குவாரே! எந்த இடியிடம் இப்படி முழக்கமிடக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?

    போரில் பாண்டியனை வென்று கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் பாண்டியன் பெற்ற பைங்கிளி விஜயாள் பழிதீர்க்க போர்வீரன் போல ஆண்வேடம் தரித்து மனோகரனைக் கொல்ல வந்து கையும் களவுமாகப் பிடிபட்டு மாட்டிக் கொள்ள, விஜாயாளிடம் "பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்துவிசயன் ஆட்சியிலே முதலிடம் போலும். ஓடிப்போ! உயிரைக் காப்பாற்றிக் கொள்" என்று நடிகர் திலகம் நையாண்டி செய்வாரே! எந்த பல்கலைக் கழகத்தில் இந்த நையாண்டி நடிப்பை படித்து முடித்தார் நடிகர் திலகம்?

    கொல்ல வந்தது மங்கை என்று அறிந்ததும் அவள் அழகில் மெய்மறந்து "வளையல் ஏந்தும் கைகளிலே வாள்" என்று ஆச்சர்யம் கலந்த புன்னகை பூத்தபடி நடிக வேந்தன் கூற "நீர் வீரரானால் என்னை ஜெயித்தபிறகு பேசும்" என்று விஜயாள் வீரத்துடன் பேச, நடிகர் திலகம் கண்களில் காதல் கொப்பளிக்க கொஞ்சு மொழியாளிடம்,"வேல்விழி மாதரிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது இளவரசி" என்று போதையுடன் கூறுவாரே! எந்த இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

    பௌத்யாயணன் கையும் களவுமாக பிடிபட்டு மனோகரனைக் கொல்ல தன்னை அனுப்பியது வசந்தசேனைதான் என்று ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட, கோபக்கனல் தலைக்கேற, நடிக மன்னவன் வாளை எடுத்துக் கொண்டு சேனாவைக் கொல்ல புறப்பட, தாய் சாந்தப்படுத்தி 'வாளை உறையில் போடு' என்று அன்புக் கட்டளையிட, விழிகள் வெளியே பிதுங்க கோப இமயத்தைத் தொட்டு விட்டு பின் வாளை உறையில் போடும் வேகம். எந்த புயலிடம் இப்படிப்பட்ட வேகத்தைக் கற்றுக் கொண்டார் இந்த நடிப்புப் புயல்



    பாண்டியனைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்தும் தாய் அமர வேண்டிய அதே இரத்தின சிம்மாசனத்தில், அதுவும் கொலு மண்டபத்தில் அனைவர் முன்னிலையிலும் சேனா என்ற பேய் அமர்ந்து, அதுவும் தனக்கு வெற்றிமாலை சூட்ட வரும் போது அவமானத்தால் கொந்தளித்து, வாளை உருவி, அவளைக் கொல்லப் போக, சத்யசீலர் தாயின் கட்டளையை மனோகரனிடம் ஞாபகப்படுத்த, ஒரு வினாடியில் மந்திரி சத்யசீலர் பக்கம் திரும்பி புயல் போல் சீறி, மறு பக்கம் தடுக்கும் நண்பன் ராஜப்பிரியன் பக்கம் திரும்பி கோபம் கண்ணை மறைக்க அவனை வேகமாய் ஒரு அறை அறைந்து, அடுத்த கணம் தானே உயிர் நண்பனை அறைந்து விட்டோமே திகைத்து நின்று, ஒரு வருத்த தொனியை முகத்தில் ஒரு நொடியில் பாதி நேரத்தில் பிரதிபலித்துவிட்டு, பின் மீண்டும் கோபத்துடன் புலிப்பாய்ச்சலில் புவி அதிர நடப்பாரே! எந்த குரு இப்படியெல்லாம் நடிக்க வேண்டும், நடக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு சொல்லிக் கொடுத்தது?

    பின் ஆத்திரத்துடன் தாயாரிடம் சென்று 'வஞ்சகி சேனா அமர்வதற்கா பல உயிர்களை பலி கொடுத்து இரத்தின சிம்மாசனத்தை மீட்டு வந்தேன்'? என்று நெஞ்சு குமுறப் பொங்குவதும் நடிகர் திலகம் யாரிடம் கற்ற பாடம்?

    காதலர்கள் கூடிக் கொஞ்சும் வசந்த விழாவில் கூட அரண்மனையில் நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் பொருமுவதும், அங்கே மன்னனுடன் வரும் வசந்தசேனா வேசி மகன் என்று தன்னை இழித்துரைத்ததும் புயல் வேகம் கொண்ட புலியாக சீறி கட்டாரியை எடுக்க, தந்தையான மன்னன் தடுக்க, "நீர் உன் மனைவியின் மானத்தை காப்பாற்றா விட்டாலும், நான் என் தாயாரின் மானத்தை காப்பாற்றியே தீருவேன்" என்று தன்மானச் சிங்கமாய் சிலிர்ப்பதும் இந்த நடிப்பின் பல்கலைக் கழகத்திற்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா?

    மறுபடியும் தாயிடம் ஓடோடி வந்து தாயின் கட்டளையை மாற்றும்படி கெஞ்சுவதும், "வீரன் கோழையாவதா.... துடிக்கும் தோள்கள் துவண்டு போவதா?" என்று தாயின் கட்டளையை நினைத்து நினைத்து பொங்குவது எந்தப் பாடத் திட்டத்தில் நடிகர் திலகம் படித்தது?

    தமிழ்த் திரையுலகம், தென்னிந்தியத் திரைப்பட உலகம், இந்தியத் திரைப்பட உலகம், ஏன் உலகத் திரைப்பட உலகமே உலகுள்ளவரை மறக்க முடியாத அளவிற்கு நம் மனோகரன் நடிகர் திலகம் நடிப்பில் சாதனை படைத்த இரு காட்சிகள்.

    முதலாவது.

    அரசவை தர்பாரில் கொலு மண்டபத்தில் நீதி விசாரணையின் போது.



    மகாராணி பத்மாவதி சிறை செல்ல வேண்டும். மனோகரன் வசந்த சேனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது மதி கெட்ட மன்னன் கட்டளை.

    மாதா அமைதியுடன் 'காரணம் கேட்டு வா' என்று மைந்தனைப் பணிக்கிறாள். இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நான்கு வீரர்கள் நான்கு புறமும் சங்கிலிகளைப் பிடித்திருக்க மனோகரனான நடிகர் திலகம் அடலேறு போல கொலு மண்டபத்தில் நுழைகிறார். கொஞ்சம் இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள். பார்த்தவர்கள் ஒருமுறை திரும்ப நினைவு படுத்திக் கொள்ளுங்கள். பார்க்காத இளம் தலைமுறையினர் இந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். தமிழ்த்திருநாடு பெற்ற தவப்பயனின் காரணமாக நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம் நடிகர் திலகம் பிணைக்கப்பட்ட சங்கிலிகளுடன் அரசவையில் கொலு மண்டபத்தில் ஆண் சிங்கமாய் வீர நடை போட்டு வருவதை உலகம் மறக்க இயலுமா? அந்த இடத்தில் வேறு ஒருவரை கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா? ஆஹா! என்ன ஒரு வீரம்! என்ன ஒரு கம்பீரம்!

    மன்னன்: உன்னை ஏன் அழைத்திருக்கிறேன் தெரியுமா?

    நடிகர் திலகம்: திருத்திக் கொள்ளுங்கள். அழைத்து வரச் சொல்லவில்லை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்

    இப்படி நடிகர் திலகம் முழங்கும் போது திரை அரங்குகளின் கூரைகள் ஏன் பிய்த்துக் கொண்டு போகாது? ஏன் நம் சப்த நாடியும் ஒடுங்காது? ஏன் உலகம் வியந்து போற்றாது இந்த யுகக் கலைஞனை?

    'நீ நீதியின் முன் நிற்கும் குற்றவாளி' என்று மன்னன் பழி சுமத்தியவுடன்,

    "அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல! பிரஜைகளில் ஒருவனாகவே கேட்கிறேன். கொலை செய்தேனா?... கொள்ளை அடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலைதான் செய்தேனா? குற்றமென்ன செய்தேன் கொற்றவனே! குற்றம் என்ன செய்தேன்?" என்று சண்டமாருதமாய் சபையோர்களின் பக்கம் திரும்பி நான்கு புறமும் முழங்குவாரே எம் நடிப்பின் மன்னவர்!

    'குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்' என்று சபையோர் சப்தமிட்டவுடன் 'இது உங்களுக்கு சம்பந்தமில்லாதது' என்று கொற்றவன் அல்ல அல்ல கொடுங்கோலன் கூறியவுடன் "சம்பந்தமில்லாதது சபைக்கு வருவானேன்?" என்று நெஞ்சு நிமிர்த்தி இந்த கட்டிளங்காளை கணேசன் கர்ஜித்ததில் வீர உணர்வு பெறாதவரும் உண்டோ!

    "கோமளவல்லி..கோமேதகச் சிலை... கூவும் குயில்... குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை, கொடிய நாக்கை என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு அதை எதிர்த்தால் உம்மையும், உமக்குப் பக்க துணையாக வந்தால் அந்த பட்டாளத்தையும் பிணமாக்கி விட்டு, சூனியக்காரிக்கு ஆலவட்டம் சுற்றியவர்களை சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டேன் என்று சுழலும் வாளுடன், சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்பு கேட்க வேண்டும்... நிறைவேற்றட்டுமா அந்த உத்தரவை? தயார்தானா? தயார்தானா?"

    என்று நடிகர் திலகம் 'இடி'யென முழங்கும் போது நம் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறி, ரத்த நாளங்கள் சூடேறி, நாமும் மனோகரனுடன் சேர்ந்து வசந்தசேனாவை வஞ்சம் தீர்க்க முடியாதா என்று நினைக்காமல் இருக்க முடியுமா? கோழை கூட வீரனாகி கொடுமையை எதிர்க்கச் செய்யும் வீர நடிப்பை வாரி வழங்கிய இந்த நடிப்பு வள்ளலை என்ன சொல்லித்தான் புகழ்வது?

    பின் அன்னை பத்மாவதி கொலுமண்டபத்துக்கு வந்து 'மன்னனின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்று மனோகரனிடம் நெஞ்சை இரும்பாக்கிக் கூற, நடிகர் திலகம் பெரும் அதிர்ச்சியுற்று "நானா சாக வேண்டும்" என்று விம்ம ஆரம்பிப்பாரே! அது மட்டுமல்லாமல் தாயின் கட்டளைப்படி வாளை கீழே போட்டு விட்டு "மன்னிப்பும் கேட்கட்டுமா" என்று சிறு குழந்தை போல முகவாட்டம் காட்டி அழுவாரே! இந்த நடிக மேதையை எப்படிப் பாராட்டி மகிழ்வது?

    பின் அட்சயனாக மாறி அமைதியான நடிப்பைக் காண்பிக்கும் மாற்றம். தன் கண்ணெதிரிலேயே தன்னை அழிக்க வசந்தசேனை திட்டம் தீட்டும்போது எதுவுமே தெரியாதது போல நிற்கும் பாந்தம், தன்னைக் கொண்டே மன்னனை அந்த சதிகாரி கைது செய்ய வைக்க இருதயம் பிளக்கும் சோகத்தை வெளிக்காட்டாமல் வெளிக்காட்டும் அற்புத முகபாவங்கள் என்று அசத்தும் இந்த நடிப்பின் அட்சயபாத்திரத்தை எப்படி வர்ணிப்பது?

    இரண்டாவது

    இறுதியான இறுதிக் கட்ட காட்சி.

    அரண்மனையில், ஆலமரம் போன்ற தூணில் சங்கிலிகளால் நடிகர் திலகம் கட்டப்பட்டிருப்பார். வசந்தசேனையும், உக்கிரசேனனும் சாட்டையால் அடித்து துன்புறுத்துவார்கள். உக்கிரசேனன் கடைசியாக உன் குழந்தையை முத்தமிட்டுக் கொள்' என்று குழந்தையை மனோகரனான நடிகர் திலகத்திடம் நீட்டுவான். நடிகர் திலகம் குழந்தையை முத்தமிடுவதற்கு முன்னாலேயே குழந்தையை 'வெடு'க்கென்று இழுத்துக் கொள்வான். இப்படியே மனோகரனை குழந்தையை முத்தமிட விட முடியாமல் சித்ரவதை செய்வான் உக்கிரசேனன். அப்போது குழந்தையை இறுதியாக ஒருதடவையாவது முத்தமிட்டுவிட வேண்டும் என்ற ஆசை, துடிப்பு, ஆர்வம் அதே சமயம் இயலாமை, கட்டி வைக்கப்பட்டிருக்கிறோமே என்ற அவமானக் குறுகல் என்று அத்தனை உணர்ச்சிகளும் நடிகர் திலகத்திடம் நர்த்தனம் புரியும்.

    இறுதியில் துரோகிகளின் கொட்டம் தாங்க மாட்டாமல் கண்ணாம்பா மகன் மனோகரனுக்கு இட்ட கட்டளையை நீக்கி 'பொறுத்தது போது பொங்கி எழு' என்று ஆணை பிறப்பித்தவுடன் காட்டாற்று வெள்ளமென நடிகர் திலகம் தூணில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலிகளை அறுக்கக் காட்டும் வீரம், வேகம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. தாய் அங்கு மைந்தனுக்கு தன் வீர முழக்கங்கள் மூலம் எழுச்சியையும், வீரத்தையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்க, தாயின் ஒவ்வொரு வசனத்திற்கும் கைகளையும், கால்களையும் உதறி உதைத்து கட்டவிழ்க்கப் போராடும் போராட்டம், ஒவ்வொரு முறையும் தன் முழு உடல் பலத்தையும் காட்டி சங்கிலிகளை அறுக்க முயல்வது (இதில் மறக்காமல் ஒன்று செய்வார். ஒவ்வொரு முறையும் சங்கிலிகளை அறுக்க மிகுந்த பிரயாசைப்பட்டு துடிதுடித்து சிறிது நேரம் நின்று உடல் அசதியைக் காண்பிப்பார். மிகச் சிறிய வினாடி ஓய்வு இடைவெளி விட்டு மீண்டும் சங்கிலிகளை அறுக்க போராடுவார். அச்சு அசல் அப்படியே போராட்டத்தையும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளையும் கூட அற்புதமாகக் காட்டுவார். அந்த இடைவெளி ஓய்வும் அருமையாக இருக்கும்) பின் தூண்களைத் தூள் தூளாக்கி உடைத்து சிங்கமென எதிரிகளை துவம்சம் செய்வது இன்னும் அற்புதம்.

    இப்படியாக நடிகர் திலகத்தின் மனோகரன் சாம்ராஜ்யம் படம் நெடுக பரவிக் கிடக்கிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவனும் மனோகரனாய்த்தான் அரங்கை விட்டு வெளியே வருவான். மனோகரன் பேசிய வசனங்கள் அனைத்தையும் ஒவ்வொருவனும் மனனம் செய்து பேசியபடியே வருவான். அந்த அளவிற்கு நடிகர் திலகம் மனோகரனாய் தன் அசகாயசூர, தீர,வீர நடிப்பால், தன்னுடைய தெளிவான வீர உச்சரிப்பு வசனங்களால் பார்ப்பவர் அனைவர் நெஞ்சிலும் நங்கூரம் போட்டு பதிந்திருப்பார்.

    எப்படி வீரபாண்டியக் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்றவுடன் நடிகர் திலகம் நம் கண் முன்னும், நெஞ்சிலும்,நினைவிலும் நம்மைக் கேட்காமலேயே வந்து நிற்கிறாரோ அதே போல மனோகரா என்றாலும் நம் மனக் கண்ணில் சட்டென்று தெரிபவர் அதே நடிகர் திலகம் தானே!

    இது யாருக்குக் கிடைத்த வெற்றி? நடிப்புக்குக் கிடைத்த வெற்றி, நடிகனுக்குக் கிடைத்த வெற்றி, கலைக்குக் கிடைத்த வெற்றி, கலைமகளுக்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி, உலகிற்கே கிடைத்த வெற்றி!

    எனவே இந்த வெற்றித் திருமகன் மனோகரனுக்கு இல்லை.... இல்லை... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். அவர் பிறந்த காலத்தில் நாமும் பிறந்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று கர்வம் கொள்ளுங்கள்.

    வாழ்க எங்கள் மனோகரனின் புகழ்!
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •