-
18th September 2014, 10:43 AM
#11
Junior Member
Seasoned Hubber
கோடீஸ்வரன் - Part II
ஒரு மராத்தி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படமே கோடிஸ்வரன். வரதட்சனைக்கு எதிரான ஒரு கதை களத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றே தோன்றுகிறது. நம்முடைய விமர்சனங்களில் 50- களில் அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் முதல் 25 படங்களில் இங்கே எழுதப்பட்டவை ஒரு சில மட்டுமே. என் சிறு வயதில் நான் நடிகர் திலகத்தின் ரசிகனாக மாற ஆரம்பித்த நேரத்தில் இந்த படம்தான் அவரின் 25-வது படமாக எனக்கு சொல்லப்பட்டது. பின்னாளில் கள்வனின் காதலி 25-வது படம் என்று சொன்னார்கள். குழப்பத்திற்கு காரணம் இவை இரண்டுமே ஒரே நாளில் 13.11.1955 தீபாவளியன்று வெளியானது.
50- களில் வெளியான படம் என்றாலே இரண்டு விஷயங்கள் நம்மை சிறிது தயங்க வைக்கும். ஒன்று தூய தமிழ். ஆனால் படத்தின் முதல் காட்சியிலே பேச்சு தமிழ் இடம் பெற மனதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு சில இடங்களை தவிர படம் முழுக்க பேச்சு தமிழே இடம் பெறுவது குறிப்பிட வேண்டிய விஷயம்.
இரண்டாவது அந்த காலப்படங்களில் நொடிக்கொரு முறை இடம் பெறும் பாடல்கள். இந்த விஷயத்திலும் கோடிஸ்வரன் நமது பொறுமையை சோதிக்காமல் குறைந்த பாடல்களுடன் இருப்பது இன்னொரு சந்தோஷம்.
நடிப்பை பற்றி சொல்வதென்றால் நடிகர் திலகம் எவ்வளவு இயல்பாக பண்ணக் கூடியவர் என்பதற்கு இந்த படம் மேலும் ஒரு உதாரணம். அந்த டாக்டர் சந்தர் ரோல் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். ஊதி தள்ளி விடுகிறார். ராவ் பகதூரின் காரியதரசியிடம் நக்கலாக பதில் கொடுப்பது முதல் பெண் பார்க்க வந்து பந்தா காட்டும் டாக்டர் பசுபதியை வஞ்ச புகழ்ச்சி செய்வது, கல்யாணத்திற்கு அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு ஒவ்வொன்றும் இறந்து போன தன் மனைவியின் ஆசை என்று அள்ளி விடும் ராவ் பகதூரை கிண்டல் செய்வது, பத்மினியுடனான கவிதை பற்றிய காதல் பேச்சு, கல்யாணத்தை நடத்த திட்டம் போடும் போது ஒரே வாசகத்தை [அப்படின்னு நான் நினைக்கிறேன்] மாறி மாறி பேசுவது, கோடிஸ்வரனாக வந்து ராவ் பகதூர் முன்பு பேசியது போல அவர் மகளை மணக்க ஒவ்வொரு செலவாக சொல்லி விட்டு இதெல்லாம் என் மாமாவின் ஆசை என்று திருப்புவது இப்படி சர்வ அலட்சியமாக செய்திருப்பார்.
நடிகர் திலகத்தின் தோற்றத்தைப் பொறுத்த வரை மிக இளமையாக இருப்பார். அவர் அணிந்து வரும் சில தொப்பிகள் அழகாக இருக்கும். ஆரம்பத்தில் பீக் cap வைத்து வரும் அவர் வேறு சில காட்சிகளில் ஷெர்வானி குர்தா அணிந்து இஸ்லாமியர் அணியும் தொப்பியை போன்று [பாவ மன்னிப்பு ரஹீம் போன்று] அணிந்து வருவார். கிளைமாக்ஸ்-ல் ஆந்திர பாணி வேட்டி உடுத்தி நெற்றியில் திலகம் இட்டு வருவார். கழுத்தில் தொங்கும் கயிற்றில் கண்ணாடி, அதுவும் சைடு பிரேம் இல்லாமல் மூக்கில் மட்டும் பிடிமானம் உள்ள லென்ஸ் வைத்திருப்பார். ராவ் பகதூர் கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றும் போது மட்டுமே அவருக்கு உணர்ச்சி வசப்படும் காட்சி. அதை அமைதியாக செய்திருப்பார்.
பாடல் காட்சிகளில் அவர் ஸ்டைல் ஆரம்பித்தது உத்தம புத்திரனுக்கு பிறகுதான் என்று நினைத்தால் இந்த படத்திலேயே அசத்தியிருப்பார். டூயட் பாடலில் பிரமாதப்படுத்தியிருப்பார். அவர் எழுதிய வசந்த கானம் என்ற கவிதை தொகுப்பை தானே தன் அண்ணனிடம் கொடுப்பதாக வாங்கிக் கொள்ளும் பத்மினி வீட்டு வாசலுக்கு சென்று நின்று சற்றே திரும்பி ஒரு காதல் பார்வை வீசி விட்டு போக இடது கையில் பிடித்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி போட்டு வலது கையில் பிடித்து ஒரு நடை நடப்பார் - சூப்பர் [இந்த ஸ்டைலை கூட அப்போதே செய்து விட்டார்]. அது போல் கல்யாணத்திற்கு பிறகு தங்கையின் வீட்டிற்கு வருபவர் தங்கையும் அவள் கணவனும் பாடி மகிழ்வதைப் பார்த்துவிட்டு கேட் அருகே நின்று ஒரு போஸ், பின் சிறிது வெட்கத்துடன் பக்கவாட்டில் திரும்பி அந்த முகத்தை மட்டும் சிறிது உயர்த்தி ஒரு புன்னகை புரிவார். பிரமாதமாக இருக்கும். இந்த படத்தில் கிட்டத்தட்ட செயின் ஸ்மோக்கர் மாதிரி. பார்க்கில் நண்பனோடு பேசும் போது பத்மினி வந்து விட அப்போது அந்த சிகரட்டோடு காட்டும் ஸ்டைல், பத்மினியை பெண் பார்க்க வந்து எஸ்.பாலச்சந்தர் டான்ஸ் ஆடுவதை வாயில் புகையும் சிகரெட்டோடு சேரில் கம்பீரமாக அமர்ந்து பார்ப்பது - பெரிய கோடிஸ்வரன் என்று சொன்னதற்கேற்ப ஒயிட் கோட் சூட் போட்டு கூலிங் கிளாசோடு வாக்கிங் ஸ்டிக்கோடு சிகரட்டோடு தங்கவேலு வீட்டிற்கு வந்து நிற்பது -எப்பவுமே தான் ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை நிரூபிப்பார்.
டாக்டர் பசுபதியாக வரும் வீணை எஸ்.பாலச்சந்தர் கலக்கியிருப்பார். ஒரு செமி லூஸ் செமி வில்லன் ரோலை நேர்த்தியாக பண்ணியிருப்பார். கட்டிக்கோ தாலி கட்டிக்கோ பாடலில் இங்கிலீஷ்,இந்தி, தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வரும் வரிகளுக்கேற்ப அவர் நடனம் ஆடுவார். பாராட்டப்படவேண்டிய முயற்சி.
ராவ் பகதூர் ராமசாமியாக தங்கவேலு. சரளமாக வசனம் பேசும் முறை அவரது பிளஸ் பாய்ன்ட். இந்த படத்தின் வசனங்கள் பேச்சு தமிழில் அமைந்திருப்பது அதற்கு பெரிதும் உதவி செய்கிறது. எதுக்கும் இது வேணும் என்று அடிக்கடி மூளையை தொட்டுக் காட்டி பேசுவது அவரது ட்ரேட் மார்க் என்றால் பண விஷயத்தில் அவர் ஏமாந்ததை அதே வசனத்தின் மூலமாக அவரது உதவியாளார் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் சுட்டிக்காட்டுவது ரசிக்கும்படியாக இருக்கும்.
கண்ணனாக வரும் ஸ்ரீராமுக்கு நடிப்பில் பெரிய வேலை ஒன்றுமில்லை. இரண்டு டான்சை தவிர்த்து விட்டு பார்த்தால் பத்மினி ராகினியும் அதே ரகத்தில் சேர்த்து விடலாம். நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் பேபி சச்சு துரு துறுவென்று இருப்பார்.
தஞ்சை ராமையாதாஸ், காங்கேயன் வசனங்கள் வெகு இயல்பு. இன்றைக்கும் பயன்படுத்தப்படும் சில வசனங்கள் [சம்மன் இல்லாமலே ஏன் ஆஜர் ஆகுறீங்க] அன்றைக்கே படத்தில் இருப்பது ஆச்சரியம். ராகினி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அடிக்கும் கமென்ட் [குட்டி - சாரி good டி] இவை எல்லாம் ரசிக்கும்படி இருக்கும் [1955 என்று நினைக்கும் போது].
இசை - S V வெங்கட்ராமன்.
எனது உடலும் உள்ள காதலும்- கர்னாடிக் ராக பின்னணியில் எம்.எல்.வி பாடியிருப்பார். எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும் போது ராகினி ஆடும் பாடல்.
கானத்தாலே காதலாகி போனேன் - பத்மினியை எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும்போது பத்மினி பாடும் பாடல். ஜிக்கி என்று தோன்றுகிறது.
கட்டிக்கோ தாலி கட்டிக்கோ - அன்றைய காலக்கட்டத்தின் வழக்கத்திலிருந்து மாறி பேச்சு தமிழில் மட்டுமல்ல ஏற்கனவே சொன்னது மாதிரி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரும் இந்த பாடலை இசையமைப்பாளார் S V வெங்கட்ராமனே பாடியிருப்பார். நன்றாக பண்ணியிருப்பார்.
உலாவும் தென்றல் நிலாவைக் கண்டு - நடிகர் திலகத்திற்கு படத்தில் இந்த ஒரே பாடல்தான். அது மட்டுமல்ல ஏ எம் ராஜா பாடியிருப்பார். பத்மினிக்கு சுசீலா. நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். கொஞ்சம், கனவின் மாயலோகத்திலே பாடல் காட்சியை நினைவுப்படுத்தினாலும் [ஆனால் அன்னையின் ஆணை இந்த படத்திற்கு பின்தான் வெளியானது] அந்த ஸ்டைல் போஸ் அண்ட் நடைக்கே பார்க்கலாம்.
யாழும் குழலும் உன்னுடன் தானோ - ஸ்ரீராம் ராகினி டூயட் - ராஜா சுசீலா பாடியிருப்பார்கள்.
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே - தன் தந்தை தங்கவேலுவின் பணத்தாசையை கிண்டல் செய்து பத்மினி பாடும் பாடல்.
சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படமும் அதன் வெற்றியும் இயக்குனரை நடிகர் திலகத்தை வைத்து இந்த படத்தை எடுக்க தூண்டியிருக்கக் கூடும். குறை சொல்ல முடியாதபடி போரடிக்காமல் படத்தை கொண்டு போன முறைக்கு இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவரே.
நடிகர் திலகத்தின் சீரியஸ் படங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஒரு ஆவரேஜ் வெற்றியை மட்டுமே இந்த படம் பெற முடிந்தது. சரியான முறையில் மறு வெளியீடு செய்யப்பட்டிருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகத்தின் சாதனை படங்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டதால் அந்த வாய்ப்பும் அமையவில்லை.
-
18th September 2014 10:43 AM
# ADS
Circuit advertisement
Bookmarks