Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பழனி - ஒரு மீள் பார்வை

    நடிகர் திலகத்தின் பல்வேறு படங்கள் அவை நாம் பலமுறை பார்த்த படமாக இருப்பினும் கூட ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதோ ஒரு விஷயம் அதில் புதைந்து கிடப்பது நமக்கு தெரிய வரும் அந்த அனுபவத்தை நம்மில் பலரும் அனுபவித்து உணர்ந்திருப்போம். அண்மைக் காலமாக அதிலும் நமது பிலிம் சொசைட்டியின் சார்பில் நடத்தப்படும் மாதந்திர திரையிடலில் இதை அதிகமாகவே உணர்கிறோம். ஒரு வேளை பெரிய திரையில் ஒத்த ரசனையுடைய மக்கள் கூட்டதோடு படத்தை பார்க்கும்போது படத்தில், நடிப்பில் உள்ள நுணுக்கங்கள் புரிந்துக் கொள்ளப்பட்டு ரசிக்கப்ப்படும்போது அது தரும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கிளர்ச்சியும் மனதுக்கு அதன் ரசனைக்கு ஒரு சுகானுபவமாகவே மாறி விடுகிறது. சென்ற ஞாயிறன்று நடைபெற்ற பழனி திரைப்படத்தின் திரையிடலிலும் நமக்கு அதே அனுபவம்.

    அப்பாவி கதாபாத்திரங்களை நடிகர் திலகம் ஏற்பது ஒன்றும் புதிதில்லை. பல்வேறு காலகட்டங்களில் அவர் இந்த பாத்திரங்களை செய்திருக்கிறார். படிக்காத மேதை, பழனி, காளிதாஸ், ராமன எத்தனை ராமனடி என்று நீளும் அந்த பட்டியல். ஆனால் ஒவ்வொன்றிலும் பிரமிக்கத்தக்க வித்தியாசங்களை காட்டியிருப்பார்.

    தன் வாழ்க்கையையே விவசாயத்திற்கும் தன் குடும்ப உறவுகளுக்கும் அர்பணித்த ஒரு அப்பாவி மனிதனாக நம் முன் வாழ்ந்து காட்டுகிறார் நடிகர் திலகம். பண்ணையாரை முழுமையாக நம்பி அவர் சொல்படி எல்லாம் ஆடுவதை சினிமாத்தனம் இன்றி வெளிப்படுத்தியிருக்கும் விதம் எடுத்து சொல்லப்பட வேண்டியது.

    எல்லோரையும் நம்புவது, எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வது [இப்ராமு என்று அவர் கூப்பிடும் அழகே அழகு], தன் அக்கா மகளை பற்றி தப்பாக பேசி விட்டார்கள் என்று செய்தி வர கோபமாக வீட்டிற்குள் நுழைந்து அவளை கூப்பிட என்ன மாமா என்று கள்ளங்கபடமில்லாமல் சிரித்துக் கொண்டு வந்து நிற்கும் தேவிகாவை பார்த்தவுடன் கண் கலங்க பார்க்கும் அந்த பார்வை [அந்த ஒரு காட்சி போதும் என்பார் நண்பர் சாரதி] முரட்டுத்தனமாக பாயும் தன் தம்பிகளை ஒவ்வொரு முறை அடக்கும்போதும் காட்டும் அந்த மெய்யான பாசம், விவசாயத்தின் மாண்பை ஒவ்வொரு முறையும் விளக்கமாக சொல்லும் அந்த பொறுமை, பட்டணத்தில் ஊர்க்காரனை கண்டு அவன் நிலைமைக்கு பரிதாபப்படும் இரக்கம், தம்பிமார்கள் பட்டணத்தில் மோசம் போய் விட்டார்கள் என்றவுடன் வரும் இயலாமை கலந்த் விரக்தி, தான் தெய்வமாக நினைத்த பண்ணையார்தான் தன் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணம் என்று தெரிய வ்ரும்போது வெளிபடுத்தும் கோபம், தன் குடும்பத்தை ஊரிலிருந்து விலக்கி வைத்து விட்டார்கள் என்றவுடன் ஏற்படும் சித்த பேதலிப்பு, இறுதிக் காட்சியில் ஊரே ஒன்று திரண்டு பண்ணையாரை கொல்ல முற்படும்போது அவர்களை தடுத்து நிறுத்தி பேசும் நியாயம் என்று படம் முழுக்க பழநியாக வாழ்ந்திருக்கிறார் நடிகர் திலகம். ஒரு காட்சியில் கூட சிவாஜி கணேசன் வெளிப்படாமல் பழனி மட்டுமே கண்ணுக்கு தெரியும் அதிசயம்.

    இன்றைய நாள் போல் ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன்தான் அடுத்த படம் என்றிருந்தால் கூட அதே Body language-ஐ தக்க வைக்கலாம். ஆனால் 10 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது கூட அதிலும் ஒன்றிலிருந்து மற்றொன்று முழுமையாக வேறுபட்டு நிற்கும் பாத்திரங்களை செய்யும்போது கூட முதல் காட்சியிலிருந்து முடிவு வரை பாத்திரத்தின் அதே tone -ஐ நிலை நிறுத்துகிறார் என்று சொன்னால் அவன்தான் நடிகன்! எத்துனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம் அவன் மட்டும்தான் நடிகன்! அதுவும் கதாநாயகனாக 100 படங்களை நடித்து முடித்து No 1 ஆக விளங்கும் காலகட்டத்திலும் அள்ளி முடிந்த தலைமுடி கசங்கிய வேட்டி சட்டை என்ற ஒரே costume. ஜோடியில்லாமல் கனவுக் காட்சி வைத்து டூயட் பாடாமல் இமேஜ் பார்க்காமல் நடித்த மனிதனை எத்துனை புகழ்ந்தாலும் தகும்!

    துள்ளலும் குறும்புமாக தேவிகா மனம் கவர்கிறார். முரட்டுத்தனமான கிராமத்தான் வேடம் என்பது எஸ்எஸ்ஆரின் cup of tea. சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் பண்ணையார் பாத்திரத்தில் பாலையா கச்சிதமாக பொருந்துகிறார் என்றால் கதையோடு ஒட்டி வரும் கணக்குப் பிள்ளையாக நாகேஷ் பின்னுகிறார். இவர்களை ஒப்பிடும்போது எம்.ஆர். ராதா கொஞ்சம் off colour என்றே சொல்ல வேண்டும். முத்துராமன் ஓகே. ஆச்சரியமாக அந்த எமிலி பாத்திரத்திற்கு புஷ்பலதா பாந்தமாக பொருந்துகிறார். முதல் தம்பியாக ஸ்ரீராம், அவர் மனைவியாக வந்து குடும்பத்தை பிரிக்கும் வில்லியாக எஸ்.ஆர். சிவகாமி, இப்ராஹிம் வேடத்தில் பாலசுப்ரமணியன்(?), ஒரே காட்சியில் வந்தாலும் இருமிக் கொண்டே நான் பழைய பட்டாளத்துககாரன் என கெத்து பேசும் OAK தேவர் அனைவரும் perfect match!

    படத்தின் மிக பெரிய பலங்களில் ஒன்று எம்.எஸ்.சோலைமலையின் தெளிந்த நீரோடை போன்ற down to earth வசனங்கள். "பூனை தன் வாயிலே எலியை கவ்வி பிடிக்கறதுக்கும் தன் குஞ்சுகளை கவ்வி பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குப்பா", "எவ்வளவு பணம் காசு இருந்தாலும் உயிருக்கு பயந்து ஓடும்போதே அவன் தோத்துட்டான்பா" " தப்பு செஞ்சவன் கடைசியிலே எங்க வந்து நிக்கிறான் பார்த்தியா" " “நாமெல்லாம் உணவு தான்யம் உற்பத்தி செய்யறவங்க அதையெல்லாம் விட்டுவிட்டு நாமெல்லாம் பட்டணத்துக்கு போய்ட்டா யாருப்பா மக்களுக்கு சோறு போடுவாங்க" இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    இதை தவிர மதிப்புக்குரிய அண்ணா என்ற எஸ்எஸ்ஆரின் personal agenda வசனங்கள் வேறு. நடிகர் திலகத்தின் படம்தானே யார் வேண்டுமானாலும் தங்கள் இஷ்டத்திற்கு பேசலாம் என்பதுதானே வாடிக்கையாக இருந்திருக்கிறது.

    படத்தின் மற்றொரு பலம் மெல்லிசை மன்னர்கள் கவியரசர் கூட்டணியில் வந்த பாடல்கள். ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் போன்ற உழவின் பெருமையை சொன்ன பாடல் அதற்கு முன்பு வந்திருக்கிறதா என்பது சந்தேகமே!

    சரணத்தில்

    மண்ணிலே தங்கம் உண்டு

    மணியும் உண்டு வைரம் உண்டு

    கண்ணிலே காணச் செய்யும்

    கைகள் உண்டு வேர்வை உண்டு

    நெஞ்சிலே ஈரம் உண்டு

    பாசம் உண்டு பசுமை உண்டு

    பஞ்சமும் நோயும் இன்றி

    பாராளும் வலிமை உண்டு

    தேர் கொண்ட மன்னன் ஏது

    பேர் சொல்லும் புலவன் ஏது

    ஏர் கொண்ட உழவன் இன்றி

    போர் செய்யும் வீரன் ஏது


    போன்ற வரிகளெல்லாம் புல்லரிக்க வைப்பவை. அது மட்டுமல்ல, அன்றைக்கு தமிழ் திரை இசையில் மும்மூர்த்திகளாக வலம் வந்துக் கொண்டிருந்த டிஎம்எஸ் பிபிஎஸ் மற்றும் சீர்காழி ஆகியோரை முதன்முதலாக ஒன்றாக பாட வைத்த பெருமையும் இந்த பாடலுக்கு உண்டு.

    எஸ்எஸ்ஆர் தேவிகா ஜோடிக்கு இரண்டு பாடல்கள். சீர்காழி சுசீலா இணைவில் வட்ட வட்ட பாறையிலே பாடல் கிராமீய இனிமை என்றால் டிஎம்எஸ் சுசீலா குரல்களில் உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா பாடல் ஸ்மூத் மெலடி. அதிலும் சரணத்தின் முடிவில் சுசீலாவின் ஹம்மிங் தேனிசை.

    அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க பாடல் ஜல்லிக்கட்டு காட்சியின்போது. இதிலும் எஸ்எஸ்ஆரை புகழும் சேடபட்டி சிங்கக்குட்டி போன்ற வரிகள் உண்டு

    படத்தின் இரண்டு தத்துவப் பாடல்கள் தன் இரண்டு தம்பிகள் தன் பேச்சை கேட்காமல் ஊரை விட்டு போகும்போது நடிகர் திலகம் பாடும் பாடல் இதயம் இருக்கின்றதே தம்பி. ஆனால் எல்லாவற்றிருக்கும் சிகரம் வைத்தாற்போன்ற பாடல்தான் அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல்.

    மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து போவது என்பது தவிர்க்க முடியாதது. அந்த அனுபவங்கள்தான் ஒருவனை புடம் போடுகின்றன. வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவித்த கண்ணதாசன் அதை பாட்டில் வடித்தபோதுதான் நமக்கு பல காவியப் பாடல்கள் கிடைத்தன. அவற்றில் முன்னணியில் நிற்கும் பாடல்களில் ஒன்று இந்த அண்ணன் என்னடா பாடல். இதை எழுதுவதற்கு கண்ணதாசனுக்கு எந்த காரணம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அதன் மூலம் நமக்கு கிடைத்த வரிகளோ? அதிலும் . .

    மனித ஜாதியில் துயரம் யாவுமே

    மனதினால் வந்த நோயடா


    என்ற வரியும்

    பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின்

    பந்த பாசமே ஏனடா?

    பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்

    அண்ணன் தம்பிகள்தானடா


    என்ற வரிகளின் போது அவை திரையில் ஒலித்து 50 வருடத்திற்கு பின்னும் இன்றும் படம் பார்க்கும் மனிதர்கள் கைதட்டுகிறார்கள் என்றால் அதல்லவா காலத்தை வேண்டு நிற்கும் படைப்பு! அதல்லவா கவிஞனின் திறமைக்கு பரிசு! இன்றைக்கும் உறவு முறைகளுக்குள் இருக்கும் சிக்கல்கள் அப்படியேதான் இருக்கின்றன என்பதும் வெளிப்படுகிறது அல்லவா!

    படம் முடிந்த பிறகு பலரும் வந்து இப்படிப்பட்ட படங்களையெல்லாம் பெரிய திரையில் மீண்டும் பார்க்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று சொன்னபோது உண்மையிலே உள்ளம் நெகிழ்ந்து போனது. நாம் பார்ப்பது ஒரு வகை சந்தோஷம் என்றால் இது போன்ற வார்த்தைகள் நமக்கு கிரியா ஊக்கிகள்.

    வழக்கம் போல் சின்ன பதிவு நீண்டு போய் விட்டது. பொறுமையாக படித்த அனைவர்க்கும் நன்றிகள் பல்!

    அன்புடன்

  2. Thanks adiram, eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •