Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 26

    நானே ராஜா - வில்லாளன்

    1956



    கதை - படத்தின் அறிமுக உரையின் படி

    விஜயநகர சாம்ராஜ்யம் 16ம் நூற்றாண்டில் அழியத் தொடங்கிய போது பாளையக்கார்ர்கள் என அழைக்கப்ப்ட்டவர்கள் தமிழகத்தில் குடி பெயர்ந்து அவரவர்களும் தாங்களே நானே ராஜா என முடி சூட்டி ஆளத்தொடங்கினர். இதனை அடிப்ப்டையாக வைத்து உருவாக்கப்பட்ட கற்பனைக் கதையே நானே ராஜா படத்தின் கதை. வேல்பாளையம், பனிப்பாளையம் என இரண்டு குறுநில மன்னர்களின் பகையே படத்தின் கதையாக இங்கே உருவெடுத்துள்ளது. தாரைக்காடு பனிப்பாளையத்திற்கு உதவி புரிந்து வந்த்து.

    இந்த இடத்தில் அறிமுக உரை முடிவடைந்து படம் துவங்குகிறது.

    பனிப்பாளையத்தின் அரசர் விந்தியர் (நரசிம்ம பாரதி), அரசி தேன்மொழி (ஸ்ரீரஞ்சனி), விந்தியரின் சகோதரர் தனஞ்ஜெயன். (வி.கோபால கிருஷ்ணன்). தாரைக்காட்டு இளவரசி ஊர்மிளா, தனஞ்ஜெயனைக் காதலிக்கிறாள். தனஞ்செயனும் அவளைக் காதலிக்கிறான்.

    சந்தர்ப்பவசத்தால் தனஞ்செயனைக் காணும் மாங்கனியும், அவனைக் காதலிக்கிறாள். மணந்தால் அவனைத் தான் மணப்பேன் எனத் தன் சகோதரர் வில்லாளனிடம் கூறுகிறாள். இதற்கு செங்கண்ணனும் உடந்தையாகிறான். வில்லாளன், தேன்மொழியையும் அவள் கணவனையும் சிறைபிடித்து விடுகிறான். அதன் மூலம் ஊர்மிளாவை தனஞ்செயனை விட்டு விலகச் செய்து தனஞ்செயனுக்கும் மாங்கனிக்கும் திருமணம் நடத்தி வைப்பதே அவர்களின் திட்டம்.

    மாங்கனி எவ்வளவு முயற்சித்தும் தனஞ்ஜெயன் மனம் மாறுவதாயில்லை. பழிவாங்கத் துடிக்கும் மாங்கனி, தன் சகோதரன் வில்லாளனிடம் தன் கோபத்தைக் கொட்டுகிறாள். எப்படியாவது அவனைப் பழி வாங்க வேண்டும் எனக் கூறுகிறாள்.

    அடிப்படையில் மிகவும் நல்லவனான வில்லாளன், தங்கையின் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாமல் முதலில் சம்மதிக்கிறான். அதன் ஒரு அம்சமாக, மதுபோதையில் தேன்மொழியை காம வெறியுடன் நெருங்க முயல்கிறான். அந்த போதை தலைக்கேற விக்கல் வந்து விடுகிறது. அந்த விக்கலுடன் அவளை நெருங்கப் பாட்டு பாடுகிறான். (இந்தப் பாடல் எது என சொல்லவும் வேண்டுமோ... மந்த மாருதம் தவழும் பாடலே அது). ஆனாலும் மனம் வராமல் அவளை விட்டு சென்று விடுகிறான் வில்லாளன்.

    வில்லாளன் (நடிகர் திலகம்) வேல்பாளையத்து அரசன். செங்கண்ணன் (எஸ்.வி.சுப்பய்யா) அவனுடைய தம்பி. மாங்கனி (எம்.என்.ராஜம்) இவர்களின் சகோதரி.


    வில்லாளன் மற்றும் செங்கண்ணன் இருவருமே சகோதரியின் மேல் பாசம் வைத்துள்ளவர்கள் என்றாலும் அண்ணனான வில்லாளன் நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவன் மனசாட்சியின் சொல்லை மறுக்காதவன். ஆனால் செங்கண்ணனோ எதற்கும் அஞ்சாதவன், சுயநலம் ஒன்றே அவன் குறிக்கோள். கொடுங்கோலாட்சியை நடத்த முற்பட்டு அண்ணனையே சிறை பிடிக்கிறான். இதற்கிடையே தங்கையை மணக்க மறுக்கும் தனஞ்செயனைக் கொல்ல விஷம் கலந்த பழரசத்தைக் கொடுத்தனுப்புகிறான். சந்தர்ப்ப வசத்தால் அந்த பழரசத்தை மாங்கனி அருநதி விடுகிறாள்.
    இதற்கிடையே மாறுவேடத்தில் உலவுகிறான் அண்ணன் வில்லாளன். இது தெரியாமல் வில்லாளன் இறந்து விட்டான் எனக் கூறி ஆட்சியைப் பிடிக்கிறான் செங்கண்ணன்.

    வில்லாளன் செங்கண்ணனின் தவறான போக்கைக் கண்டிக்கிறான்.

    தர்பாரில் தனஞ்செயனைக் கைது செய்து அழைத்து வரச் செய்கிறான் செங்கண்ணன். ஆனால் வருவதோ...

    அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே நடக்கும் விவாதமே இவ்வாய்விற்கான களம்.



    காட்சி 2.27.14ல் தொடங்குகிறது. தர்பாரில் தேன்மொழியை அழைத்து வருகிறாள். அவன மீது செங்கண்ணன் குற்றஞ்சாட்டுகிறான், அண்ணனை மயக்கி மதுகொடுத்து அவனை பித்தனாக்கி அலையவிட்டதாக அவள் மீது குற்றஞ்சாட்டுகிறான் செங்கண்ணன்.

    இந்தக் காட்சியில் கவியரசரின் வசனம் மிகவும் அருமையாக எதுகை மோனையாக அமைந்திருக்கும். ஒவ்வொருவராக அவளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேணடும் எனக் கூறு, செங்கண்ணன் தேன்மொழியை நோக்கி உனக்கென்ன வேண்டும் எனக் கேட்க, சட்டென்று சிறிதும் யோசியாமல் தேன்மொழி உங்களுக்கெல்லாம் மூளை வேண்டும் என உரைப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தர்பாரில் தனஞ்செயனை அழைத்து வருமாறு ஆணையிடுகிறான் செங்கண்ணன். முகமூடியுடன் அவனை அழைத்து வருகிறார்கள் சேவகர்கள் (இந்தப் படத்திலேயே இரும்பு முகமூடியுடன் வருகிறார் நடிகர் திலகம். உத்தமபுத்தினுக்கு முன்பே இதில் இரும்பு முகமூடியுடன் வருவது பலருக்கு வியப்பாக இருக்கும்).

    முகமூடியைக் கழற்றியவுடன் அங்கே அரசர் வில்லாளன் காட்சிதர, அவையில் அனைவர் முகத்திலும் வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

    இங்கே துவங்குகிறது நடிகர் திலகத்தின் மிகவும் வித்தியாசமான இயல்பான, பாத்திரத்தேற்ற நடிப்பு.

    பொதுவாக இது போன்ற தர்பார் காட்சிகளில் நடிகர் திலகம் க்ளைமாக்ஸில் வசனம் பேசும் போது அனல் தெறிக்கும், வீராவேசமாக இருக்கும்.
    ஆனால் இங்கோ ... முற்றிலும் வித்தியாசமான முறையில் அவர் இந்தப் பாத்திரத்தை அணுகியுள்ள முறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எப்பேர்ப்பட்ட நடிகரை தமிழகம் பெற்றிருக்கிறது என்று மனம் குதூகலிக்கிறது.

    காட்சி இடம் 2.32 மணித்துளி..

    முகமூடியைக் கழற்றியவுடன் நடிகர் திலகம் நிற்கும் தோரணையைப் பாருங்கள். அங்கே ஒரு உண்மையான மன்ன்னின் கம்பீரம், அந்நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை அதனால் தனக்குள்ள உரிமை அனைத்தையும் ஒரு சேர அந்த நிற்கும் தோரணையிலேயே பிரதிபலிக்கின்ற விந்தையைப் பாருங்கள்.

    கைகளைக் கட்டிக் கொண்டு தன் தம்பிபை அவர் பார்க்கும் பார்வையில், இதையெல்லாம் மீறி தன் தம்பி இப்படி நடந்து கொள்கிறானே என்கின்ற வருத்தமும் வெளிப்படுகிறது.

    ஏனடா திகைக்கிறாய், ன்ஹ.. எனக் கூறிவிட்டு முடிந்த கதை முழுக்கதையாக மீண்டும் தொடங்கி விட்டதா என்றா...என்று கூறி விட்டு ஒரு அலட்சியப் புன்னகை புரிவதைப் பாருங்கள்...

    என்றுமே சாவு கிடையாதடா நெறி கெட்டவனே என சொல்லும் போது பாருங்கள்.. அதில் ஒரு கண்டிப்பு தென்படுகிறது. ஒரு உறுதி தொனிக்கிறது. சூதும் சூழ்ச்சியும் வெற்றியடைந்து கொண்டே போனால் என்று சொல்லும் போது அதில் ஒர் எச்சரிக்கை விடுக்கும் தொனி ஒலிக்கிறது. உடன் பிறந்தே கொல்லும் வியாதியே எனக் கூறும் போது ஓரடி முன்னால் எடுத்து வைத்து உன்னால் நான் கெட்டேன் எனத் தன் தவறை உணர்ந்து வருந்துகிறார். உணர்ச்சி வசத்தில் மதியிழந்தேன் எனும் போது ஓர் ஒப்புதல், தங்கை என்ற பெயரிலே வந்த சண்டாளி அதற்கு தூபம் போட்டாள் எனும் போது அவள் மீதான கோபம் வெளிப்படுகிறது, பாளையத்தின் பெயர் மாசு பட்டது..
    தொடர்கிறார்.. ஒரே வயிற்றில் பிறந்தோம்.. ஒரே படுக்கையில் உறங்கினோம் எனத் தங்களுடைய குடும்ப உறவின் மேன்மையைக் கூறும் போது அதிலுள்ள பெருமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக தன் கால்களை சற்றே அகலப் படுத்தி இடது கையை இடுப்பில் வைத்து அதன் மூலம் அந்த கர்வத்தை எடுத்துக் காட்டுகிறார்.

    ஆனால் இப்போது இருவரில் ஒருவர் தான் இருக்க வேண்டும் என்கிற நிலை வந்து விட்டது எனும் போது வேறு வழியில்லை எதற்கும் தயார் என்கிற மனோநிலையை உணர்த்துகிறார். நிச்சயமாக நானிருக்க விரும்பவில்லை என்கிற வரியின் போது தன் தம்பிக்காக தன் உயிரையும் தரத் தயாராக இருக்கும் ஓர் பாசமிகு அண்ணனை வெளிப்படுத்துகிறார். அடுத்த வரியிலேயே நிச்சயமாக நீ இருந்தால் நாடு தாங்காது எனக் கூறும் போது பொறுப்புள்ள ஓர் தேச பக்தனாக மாறி விடுகிறார். அந்த நேரத்தில் அண்ணன் என்னடா தம்பி என்னடா தேசம் தான் முக்கியம் என்கிற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.

    இந்த நேரத்தில் தம்பியான மன்ன்ன் கோபமாக உரையாடுகிறான். அதில் வேகம் வெளிப்படுகிறது.

    ஆனால் அண்ணன் வில்லாளனோ சற்றும் நிதானம் இழக்காமல் பேசுகிறான். நானா உனக்கு அண்ணன், என்னை பகைவன் என்றழை என்கிறான்.

    வில்லாளா முடியப் போகிறது உன் வாழ்வு என ஆத்திரத்துடன் செங்கண்ணன் குரல் கொடுக்க, இல்லையடா விடியப் போகிறது பொழுது என சற்றும் தளராமல் நம்பிக்கையுடன் பதிலளிக்கிறான் வில்லாளன்.

    பைத்தியக்காரா நீ பேசுவது உன் தம்பியிடமல்ல, ஆள் பலமும் அதிகார பலமும் உள்ள செங்கண்ணனிடம் என மன்ன்ன் கொக்கரிக்கிறான்.

    இப்போது பாருங்கள் ஓர் மந்தகாச சிரிப்பு, வேல்பாளையத்து அதிபதி.. ஹ..ஹ..ஹா.. என லேசான அதே சமயம் அலட்சியமாக சிரிக்கிறார் நடிகர் திலகம். யார் கொடுத்த பட்டம், எப்போது வந்த வாழ்வு எனக கேள்வி மேல் கேள்வி கேட்கும் போது அந்த முகத்தில் தெரியும் உரிமையான அதே சமயம் அலட்சியமான உணர்வுகளை அனாயாசமாக சிரித்துக் கொண்டே அவர் வெளிப்படுத்தும் போது நம்மையறியாமல் நம் கரங்கள் கரகோஷத்தை எழுப்பத் துடிக்கின்றனவே...

    வீராதி வீர்ர்கள் வெற்றி முரசு கொட்டிய சாம்ராஜ்ய அதிபர்களே இருந்த இடம் தெரியவில்லை, என தன் இடது கையை மேலே தூக்கியவாறே ஸ்டைலாக நின்று நடிகர் திலகம் அந்த வசனத்தைப் பேசும் போது மெய் மறந்து விடுகிறோமே...ஹ.. நீ எந்த மூலை. என்று முடிக்கும் போது தியேட்டர் இரண்டாகி விடாதா... வசனம் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து இன்றும் பொருந்துகிறதே...

    ஆவேசத்துடன் கூக்குரலிடுகிறான் செங்கண்ணன், கொக்கரிக்காதே கொன்று விடுவேன் தலையை என்கிறான். உடனே வில்லாளனின் முகத்தில் இதை சட்டை செய்யாத வகையில் ஒரு சிரிப்பு...

    அதைத் தான் பார்க்கப் போகிறேனே எனக் கூறி விட்டு எதிர்பாராத வகையில் இடது கை வாளை உருவுகிறது. ஆஹா.. வாளை உருவும் ஸ்டைலுக்கும் நீதானே அதிபதி .. தலைவா..

    மன்ன்ன் பிடியுங்கள் அவனை என்றவுடன் யாருமே முன்வரவில்லை. அப்போது திரும்பிப் பார்க்கும் ஸ்டைலைப் பாருங்கள்.. என்ன ஒரு நம்பிக்கை.. என்ன ஒரு தைரியம்... வாளை இருகைகளிலும் வைத்துக் கொண்டு அவர் தரும் போஸும் அந்தப் புன்னகையும்...

    ஈடிணையில்லா ஸ்டைல் சக்க்ரவர்த்தி என்றால் அது நடிகர் திலகம் என்றல்லவா கட்டியம் கூறுகிறது..

    அவர்களெல்லாம் நன்றியுள்ள மக்கள் என்று கூறிக்கொண்டே வாளை விரல்களால் வருடும் நேர்த்தி, அனாயாசம்,,
    வா இறங்கி.. என்று கூறி வாட்போரைத் துவக்குகிறார்.

    ஆஹா தொடர்வது கண்ணுக்கு மிகப் பெரிய விருநதல்லவோ.. வாளை தலைக்கு மேலே சுழற்றி அவனை நோக்கி நடிகர் திலகம் வீசும் ஸ்டைல், அதற்கு முன் படிக்கட்டில் ஏறும் வேகம், இடது கையைத் தூக்கி வலது கையால் வாளால் போர் புரியும் உக்கிரம்,

    டூப்பில்லாமல் அந்த உலக மகா கலைஞன் வாட்போர் புரியும் போது,

    இவரையா சண்டை போடத் தெரியாதவர் எனச் சொன்னார்கள் என்று கோபம் நமக்குள்ளே கொப்பளிப்பதை மறுக்க முடியுமா..

    ....

    இந்தக் காட்சியில் என்ன விசேஷம் என்று கேள்வி எழலாம்.

    தர்பார் காட்சியில் இவ்வளவு நிதானமாக நடிகர் திலகம் வசனம் பேசி நடித்த காட்சி அதுவும் க்ளைமாக்ஸில், நானே ராஜா மட்டுமாகத் தான் இருக்க முடியும். வசனங்களை நிதானமாகவும் அதே சமயம் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவும் சொல்ல முடியும் என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம். ராஜா ராணி வேஷம், தர்பார் காட்சி என்றால் உடனே சிவாஜியின் வீரவசனம் என்ற இலக்கணத்தை வகுக்காமல் அதிலும் வித்தியாசத்தைக் கொண்டு வந்திருப்பார் நடிகர் திலகம். இதே போன்று மற்றோர் வித்தியாசமான கோர்ட் அ தர்பார் காட்சிக்கு உதாரணம் குறவஞ்சி என்றாலும் அதனுடைய பாத்திரத்தன்மை சற்றே மாறுபட்டது.

    இவ்வாய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காட்சி, மிகவும் குறுகிய நேரக் காட்சி என்றாலும் அதனுள் நடிகர் திலகம் வகுத்திருக்கும் நடிப்பிலக்கணம் முற்றிலும் புதுமையானது.

    What a casul and natural performance for this character, NT has given!

    Oh God, I feel proud for ever moment of life for having born and brought up during Nadigar Thilagam's period.

    What a subtle and subdued performance in this movie and for this character!

    ராமாயணத்தை நினைவு படுத்தும் காட்சியமைப்புகள் என்றாலும் கடைசியில் சற்றே மாற்றி அமைத்து படத்தை நன்றாக எடுத்துச் சென்றுள்ளனர் இயக்குநர்கள்.

    நானே ராஜா சிறப்பு செய்திகள்..

    இரு இயக்குநர்கள் இயக்கிய திரைப்படம்.
    டி.ஆர். ராம்நாத் அவர்களின் இசையில் பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
    குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட எஸ்.வி.சுப்பய்யா வில்லனாக நடித்த படம்.
    கவியரசர் திரைக்கதை வசனம் எழுதினாலும் ஒரு பாடல் கூட எழுதவில்லை என்பது வியப்பாக உள்ளது.
    Last edited by RAGHAVENDRA; 15th June 2015 at 11:33 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •