Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நெஞ்சிருக்கும் வரை'



    தெய்வமே!

    என் 'நெஞ்சிருக்கும் வரை' உங்கள் நினைவிருக்கும்.

    இதோ உங்கள் நினைவு நாளில் உங்களுக்கு நான் செலுத்தும் நினைவாஞ்சலி.

    தனக்குச் சேர வேண்டிய சொத்துக்களுக்காக வழக்குப் போட்டு அது வெற்றி பெறும் கட்டத்தை அடைகிறான் ஏழை சிவராமன் என்கிற சிவா. அவனுக்கு ஆதரவு கொடுத்த ஆருயிர் நண்பன் ரகுவிற்கோ செய்தி கேட்டு தாளாத மகிழ்ச்சி. இன்னொரு ஃபிரெண்ட் பீட்டருக்கோ பீறிட்ட உற்சாகம்.

    எல்லாவற்றுக்கும் மீறிய எல்லை தாண்டிய அமைதி, சந்தோஷம் அந்த ஏழைப் பெண் ராஜிக்கு. ஏனென்றால் அவளின் காதல் தெய்வம் சிவா அல்லவா!

    வறுமையைத் தவிர வேறு ஒன்றும் அறியாத அந்தக் குடிசையே குதூகலிக்கிறது சிவாவுக்குக் கிடைக்கப் போகும் சீர்மிகு வாழ்வை நினைத்து. கள்ளம் கபடமில்லாத அன்பு ஆத்மாக்கள். தூய உள்ளங்கள்.
    ராஜியின் அப்பா உட்பட. (அந்த பழைய வீட்டின் ஓனர்.)

    அனைவரிடமும் விடை பெற்று வழக்கின் முடிவுக்காக ஊருக்குக் கிளம்புகிறான் சிவா தன் உயிருக்குயிரான காதலியை நண்பன் ரகுவின் கண்காணிப்பில் விட்டுவிட்டு. ரகு முன்னம் ராஜியை உள்ளூர ஒருதலையாய்க் காதலித்தவன் என்றாலும் ராஜியின் விருப்பம் சிவா மீதுதான் என்பதைத் தெரிந்து கொண்டு, உணர்ந்து கொண்டு, குழம்பாமல் தெளிந்து விட்டவன். மனதை சமநிலைப் படுத்திக் கொண்டவன். ஆனால் நோயாளி நண்பன் பீட்டரின் இ(ழ)றப்பு இன்னொரு தாங்க முடியாத இன்னலாய், இடியாய் அவன் நெஞ்சில் இறங்கியது

    இப்போது ராஜியும் தன் தந்தையை இழந்து தவிக்கும் போது ரகு மட்டுமே அவளுக்கு உற்ற துணையாய், அவளுடைய உடன்பிறவா சகோதரனாய், அவளை தன் தங்கையாக நினைத்தே அவளைப் பாதுகாக்கிறான். ஊருக்குச் சென்றிருக்கும் சிவா திரும்ப வந்து ராஜியைக் கல்யாணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கையோடு அந்த அண்ணன் தங்கையின் வாழ்க்கை நகர்கிறது. சிவாவுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள் ராஜி.

    ஊருக்குச் சென்ற சிவா கேஸில் ஜெயித்து பெரிய நிலைக்கு உயர்கிறான். அவனுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் லட்சக்கணக்கில் திரும்ப கிடைக்கின்றன. கிளாஸ் பாக்டரி, எஸ்டேட், ஆபீஸ், வேலை ஆட்கள் என்று எட்டாத உயர் நிலை அடைகிறான்.

    ஆனால் சிவா ராஜியை மறந்தவன் இல்லை. ராஜியைப் பார்க்க, அவளை மணக்க, அவளுக்கு வாழ்க்கை தர பெங்களூரில் இருந்து சென்னைக்குக் காரில் பறக்கிறான். தன்னை ஆதரித்த அந்தக் குடிசையை, அந்தக் குடிசையில் உள்ள அன்பு இதயங்களைக் காணச் சென்றால்? விளைவு வேறுவிதமாக மாறிப் போகிறது.

    அங்கிருக்கும் காலிகளாலும், தேவையற்ற வதந்திகளாலும் ரகு, ராஜியை சந்தேகப்படும் சூழ்நிலை சிவாவுக்கு ஏற்படுகிறது. சூழல்கலும் அதற்கு சாதகமாய் பொருந்த, சந்தேகப் பேய் சந்தர்ப்பம் பார்த்து அவனுள்ளே வசதியாக நுழைந்து கொள்ள, தான் ரகுவாலும், ராஜியாலும் ஏமாற்றப்பட்டோம், வஞ்சிக்கப்பட்டோம் என்ற தவறான முடிவெடுத்து, மனப்புழக்கத்துடன் திரும்ப பெங்களூரே சென்று விடுகிறான் சிவா ராஜியை சந்திக்காமலேயே.

    இங்கே சென்னையில் ரகு சிவாவிடமிருந்து எந்த பதிலும் இல்லையே என்று தவித்து ஊர்க் காலிகளின் பொய் பிரச்சாரங்களில் மனம் நொந்து, அவர்களை அடித்து நொறுக்கி, அங்கிருக்கப் பிடிக்காமல் ராஜியை அழைத்துக் கொண்டு சிவாவை சந்திக்க பெங்களூர் வருகிறான்.

    சிவாவோ ராஜி, ரகு இருவரும் தனக்கு துரோகம் செய்வதாக தப்புக் கணக்குப் போட்டு, தாள முடியாத ஆத்திரத்திலும், துயரத்திலும் மூழ்கி இருக்க, ராஜியை லாட்ஜில் அறை எடுத்துத் தங்க வைத்துவிட்டு, சிவாவின் ஆபிஸைக் கண்டு பிடித்து அவனைச் சந்திக்க வருகிறான் ரகு.

    இப்போது ரகு, சிவா என்ற பெயர்களை மறந்து விடுங்கள். நடிகர் திலகம், முத்துராமன் இருவரையும் அந்தப் பெயரில் வைத்துப் பாருங்கள்.


    இனி நெஞ்சம் நிறைந்தவரின் நெற்றியடி அசைவுகள்.

    ஆபீஸில் பிஸியாக பிஸினஸ் பேசிக் கொண்டிருக்கும் முத்துராமனிடம் நடிகர் திலகம் அவரைச் சந்திக்க வந்திருப்பதாக ஆபிஸ் பாய் வந்து சொல்ல, முத்துராமன் முகத்தில் அதிர்ச்சி. மேனேஜர் மாலி சந்திக்க மறுக்கும்படி சொல்ல, எதிர்பாராமல் 'வணக்கம் சார்' என்று சொல்லியபடி நடிகர் திலகம் அங்கு வந்து நிற்பார்.

    மாலி 'ஏன் உள்ளே வந்தே?' என்று மிரட்டியவுடன் கைகளால் சைகை செய்து நிறுத்தி, நடிகர் திலகம் அவரைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் 'நான் ஐயாவுடன் பேச வந்தேன்' என்று அலட்சியமாக நடந்து முத்துவிடம் வருவார்.

    சொந்த விஷயம் பேசப் போவதாகக் கூறி அங்கிருப்பவர்களை வெளியே போகும்படிக் கேட்டுக் கொள்வார். எல்லோரும் போய் விட்டவுடன் டைப் மிஷின் மட்டும் அடிக்கப்படும் சப்தம் கேட்டு நேராக டைப்பிஸ்ட்டை நோக்கிச் சென்று,

    'Madam! Will you kindly go out for five miniutes?'

    என்று வெகு அழகாக ஆங்கிலத்தில் போகச் சொல்லிக் கேட்பார். டைப்பிஸ்ட் எழுந்தவுடன் 'தேங்க் யூ' என்று அழகாகக் கைகளை நீட்டியபடி அவரை வெளியே அனுப்புவார். முகத்தில் எந்தச் சலனமும் இருக்காது. பின் கதவைத் தாளிட்டுவிட்டு, அப்படியே அங்கிருந்து மகிழ்ச்சிக் கைகொட்டி, முகம் மாற்றி, நிறைய சிரிப்புடன், நட்போடு ஓடிவந்து, முத்துராமனின் டேபிளின் மீது 'ஜம்'மென்று சந்தோஷமாக உட்காருவார். முத்துராமனின் நிலை சொல்லி பெருமையுடன் சந்தோஷப்பட்டு கொள்வார். ('டேய் சிவா! உண்மையிலேயே எதிர்பார்க்கவே இல்லைடா!) உடலைக் குறுக்கி, கைகளை விரத்த நிலைகளில் வைத்து, முத்துவின் முன்னேற்றம் கண்டு, அதைச் சொல்லி பூரித்துப் போகும் உடல்மொழி காட்டுவார்.



    'பட்ணத்துல உன்னைப் பார்த்ததுக்கும், இப்ப உன்னைப் பார்க்குறதுக்கும்'

    என்று சொல்லி கைகளைக் கொட்டி,

    'ஓ...மை குட்லக்! ஆளே கம்ப்ளீட்டா மாறிட்டடா' (முத்துராமன் மார் மீது ஒரு அலட்சிய செல்லத் தட்டு தட்டுவார்.)

    என்று வலதுகால் மேல் தூக்கிப் போட்டிருக்கும் இடது கால் முட்டி மீது கைகளை அணைத்துக் கட்டிக் கொள்வார். (வலதுபுற தோள்பட்டையில் ஷர்ட் கிழிந்திருக்கும்) உதடுகள் கடித்து சிரிப்பை சிறகடிக்க வைப்பார். முத்துராமனின் ஏகபோக நிலை கண்டு பூரிப்பும், அவர் முன்னேற்றம் கண்டு பெருமிதமும், வியப்பும், ஆச்சரியமும், சந்தோஷமும், அது தவிர அவர் மீது கொண்ட நட்பும் ஒரே சேர தன் அங்கங்களில் அங்கே சங்கமிக்க வைத்து சரித்திரம் படைப்பார் நடிப்புலக சாதனை சக்கரவர்த்தி.

    வந்த விஷயத்தை சொல்லுமாறு முத்துராமன் முகம் கொடுத்துப் பேசாமல் கடுகடுக்க,

    அப்படியே கையை விசிறி,

    'டேய்! என்னடா பணக்கார பாணியிலே பேசி என்னை பயமுறுத்தப் பாக்குற?

    உன்னுடைய நடிப்புல நான் ஒன்னும் ஏமாற மாட்டேன் தம்பி!' (கட்டை விரல் ஆடி அப்படியே சவால் விடும் சவால்.)

    என்று போடுவாரே ஒரு போடு பார்க்கலாம்!

    (நடிப்பிலே அவரை ஏமாற்ற இன்னொருத்தரா? முடியுமா? செம டைமிங் டயலாக்)

    'கொஞ்சம் இறங்கி பழைய நிலைமைக்கு வாடா ஃ பூல்' (இரண்டு கைகளையும் 'அடங்கு' என்பது போல மேலிருந்து கீழாக அசைத்துக் காட்டுவார்)

    அப்படியே கண்கள் அலைபாயும். விழிக்கும். முழிக்கும். சுருங்கும். விரியும். மிரட்டும். அடக்கும். கெஞ்சும். கொஞ்சும்.

    'முதல்ல இந்த இடத்தை விட்டு இறங்கு கீழே'

    என்று முத்துராமன் அதட்டியவுடன்,

    சிரிப்பு அப்படியே அடங்கி கொஞ்சமாக இவரின் முகம் மாறும். அமைதி அதிர்தலில் பணிவாகவே எழுந்திருப்பார்.

    'சிவா! என்னடா?'

    குரல் அப்படியே உள்ளே போகும்.

    கே.ஆர் விஜயாவைப் (ராஜி) பற்றி பேச்சு வரும். ஞாபகப்படுத்துவார்.

    'யாரையும் ஏத்துக்க நான் தயாரா இல்ல... ராஜியை நான் மறந்தாச்சு... மறந்தாச்சு'

    முத்துராமன் சொன்னவுடன் 'காரணம்?' என்று தீர்க்கமாகப் பார்ப்பார்.

    'உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை' இது முத்துராமன்.

    அடுத்த செகண்ட் வினாடி கூட தாமதியாமல்



    'தப்ப முடியாது' என்று நிறுத்தி (ஆட்காட்டி விரல் சுட்டி மிரட்டும் தொனி காட்டுவார்)

    'காரணத்தை சொல்லித்தான் தீரணும்'

    என்பார்.

    'அவளை நான் வெறுக்கிறேன்' என்பார் முத்துராமன்.

    உடனே,

    'இம்பாஸிபிள்'

    என்று அழுந்தத் திருந்த சொல்வார் நடிகர் திலகம்.

    இடி போல வார்த்தை இப்போது வந்து இறங்கும்.

    "அது அவ்வ்வளவு சுலபமில்லே! ஒரு பெண்ணைக் காதலிக்கிறது.... அவ உள்ளத்தில ஆசையை வளர்க்கிறது... ஆயிரக்கணக்கான வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறது... இதெல்லாம் சில பணக்கார வாலிபர்களோட பெர்மனெண்ட் விளையாட்டுகள்டா... அந்தக் கூட்டத்துல நீயுமா சேர்ந்துட்டே?!"

    ஆத்திரமாய் வார்த்தைகள் வந்து விழும். கைகள் இரண்டையும் மூடியபடி வைத்திருப்பார். பார்வை முத்துராமன் மேல் கோபமாய் ஏறி இறங்கியபடியே இருக்கும்.

    அப்படியே சற்று அடங்கி ராஜி நிலை குறித்து அமைதியாக விளக்குவார்.

    'இப்போ உன்னை நம்பித்தான் அவ இங்கே வந்திருக்கா'

    என்ன சொல்லப் போகிறான் தன் ஆருயிர் நண்பன்? என்று முத்துராமனை நோக்கியபடி அவரிடமிருந்து பதிலை பரிதாபமாக ஆவல்மிக எதிர்பார்ப்பார்.

    ராஜியின் பரிதாப நிலையை அந்தக் கைகள் முத்துராமனுக்கு விளக்கப் பாடுபடும். முகத்தில் அந்த சமயம் இரக்க நிலை மேலோங்கும். அதில் ராஜியின் நல்வாழ்வு வேண்டி போராட்டம் துவங்க ஆரம்பித்திருப்பது தெரியும்.

    'என்னை நம்பியா? என் பணத்தை நம்பியா?'

    என்று முத்துராமன் ஏகத்துக்கும் ஆரம்பிக்க,

    'சட்'டென்று கொஞ்சமும் தாமதியாமல் அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காதவராய்

    'டோன்ட் டாக் ரப்பிஷ்'

    என்று முழங்கி,

    முத்துராமன் பின் புறம் நிற்பவர் அவரின் இடது பக்கம் வந்து, தன் கைகளால் அவர் தோளைத் திருப்புவார். முறைப்பு அநியாயத்துக்கு இருக்கும்.

    'அப்படியெல்லாம் வாய் கூசாம பேசாதே!' (ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பார்)

    தாங்க மாட்டாமல் அடங்கிப் பொங்குவார்.

    அடுத்த கணம் சிங்கம் தன் ஒரிஜினல் கர்ஜிப்பைக் காட்டும். குரல் உச்சத்தில் கம்பீரத்தை அங்கு கொண்டு வந்து நிறுத்தும். குலை நடுங்க வைக்கும்.

    "என்னடா பெரிய பணம்?! இந்தப் பணத்தை வச்சுகிட்டு என்னடா சாதிச்சிடப் போற?... மெட்ராஸுக்கு வரும் போது நீ எப்படிடா வந்தே?.. இந்த பணத்தையெல்லாம் எதிர்பார்த்துதான் அவ உன்னைக் காதலிச்சாளா? கொஞ்சம் மனிதத் தன்மையோடு சிந்திச்சிப் பாரு"

    (கைகளைக் குறுக்கி இதயம் சுட்டிக் காட்டுவார்)

    என்று கோபத்துடன் பதறுவார்.

    அடடா! என்ன மாடுலேஷன்! குரல் ஏற்ற இறக்கங்கள் யாரும் வர்ணிக்க முடியா விந்தைகள். சட்டென்று தென்றல் வீசும். படாரென புயல் உருவாகும். வார்த்தைகள் மென்மையாகும். அப்படியே சடாரென தடித்து எழும்பும். இவை அனைத்திற்கும் முகமும் சரிசமமாக இணைந்து கை கொடுக்கும். எங்கே எந்த சமயம் எது நடக்கும் என்று கடவுளுக்குக் கூடத் தெரியாது.

    முத்துராமன் சற்று முன்னாடி வர, சைட் போஸில் அங்கேயே நின்றபடி நடிகர் திலகம் அவர் பக்கம் திரும்புவார். முகம் வெறுப்பின் உச்சம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கும். மீசை தோதாய் அதை உணர்த்தும்.

    'நல்லா சிந்திச்ச பிறகுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ரகு! என்னோட நேரத்தை வீணாக்காதே!"

    என்று முத்துராமன் சொன்னதுதான் தாமதம்...

    அடுத்த வினாடி அப்படியே நடிப்புப் பிரளயம் நடத்துவார்.

    சட்டென்று,

    'ஏய் லுக்'.

    இடது கை ஆட்காட்டிவிரல் முத்துவின் இடது புற நெஞ்சில் அப்படியே துப்பாக்கி போலப் பதியும். கண்களை ஒரு செகண்ட் மூடியிருப்பார்.

    'எனக்குத் தேவை உன்னுடைய ஒரே நிமிஷம்
    உன்னுடைய ஒரே பதில்'

    இறுதியாக உறுதி நிலைக்கு வந்து விடுவார் இனி வேலைக்கு ஆகாது என்று. .

    நண்பன் மேல் பார்வையைத் தீர்க்கமாக வைத்தபடி, விழிகள் முரட்டுத்தனம் புரிந்தபடி, ஆட்காட்டி விரலை அவன் நெஞ்சில் வைத்தபடி அடுத்த கேள்வி ஒன்று கேட்பார்.

    ஸ்டைல் என்பது பொதுவாக சந்தோஷத்தின் போது அனைவரும் செய்வது.

    ஆனால் இந்த மனிதர் கேட்கும் கேள்வியிலேயே... அதுவும் கோபத்தின் போது ஸ்டைலைக் காட்டும் விதம் எவர் நினைத்துப் பார்க்க முடியும்?

    அதுவும் இப்போது கேள்வி ஆங்கிலத்தில்.

    'ஆர் யூ கோயிங் டு மேரி ராஜி ஆர் நாட்?'

    'ராஜியைக் கல்யாணம் செய்துக்கப் போறியா இல்லையா?'

    விழிகள் எங்கே வெளியே வந்து விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு இப்போது இன்னும் பெரிதாகி அகன்றிருக்கும். (என்ன கண்கள் சாமி அது! கோலி குண்டு போல, வெண்ணெய் உருண்டை போல் உருண்டு, திரண்டு). வன்மம் கொப்புளிக்கும். உறுதி பாம்பன் பால சங்கர் சிமெண்ட்டை விடவும் அதிகமாய் இருக்கும். எண்ணி வந்த செயலை முடிக்காமல் போகக் கூடாது என்ற வெறி ஓங்க ஆரம்பித்திருக்கும். ('இனி 'மயிலே மயிலே' என்றால் இறகு போடாது' என்ற முடிவுக்கு வந்திருப்பார்.)

    'முடியாது'----- முத்துராமன்.

    இவர் ஆணித்தரமாக,

    'முடியும்... ராஜியை நீ கல்யாணம் செய்துக்கத்தான் போற!'

    முத்துராமன் முடிவெடுக்கும் முன் இவர் முடிவெடுத்து விடுவார்.

    'மிரட்டலா?'

    என்று முத்துராமன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே,

    "இல்லை... உன்னுடைய அயோக்கியத்தனத்துக்கு சவால்"

    பதில் பட்டென்று வந்து விழும்.

    'இந்த அறையை விட்டு வெளியே போறியா இல்லையா?'

    என்று முத்துராமன் கத்தியவுடன்



    அதுவரை வாய் மூலம் வாக்குவாதங்களை நிகழ்த்தியவர் அப்படியே செய்கை மூலம் முத்துராமனின் கோட்டைக் கொத்தாக பிடித்துத் தூக்கி அருகில் உள்ள டேபிளில் கிடத்துவார் முரட்டுத்தனமாக.

    'போறேன்..உன்னை இதே இடத்துல பிணமாக்கிட்டு நான் நேரா தூக்கு மேடைக்குப் போறேன். நான் எதுக்கும் துணிஞ்சவன்னு உனக்குத் தெரியுமில்லே!

    டேய் சிவா!

    (கொத்தாக கோட்டைப் பிடித்திருந்தவர் வலது கையை விடுத்து முத்துராமனின் கன்னத்தில் ஒரு குத்து குத்தி திரும்ப கோட்டைப் பிடிப்பார்)

    சாவைப் பார்த்து சிரிக்கிறவண்டா நான். உன்னுடைய பணம், அந்தஸ்து, செல்வாக்கு, அடியாட்கள் யார் வந்தாலும் சரி! (தலையை பக்கவாட்டில் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்புவார் எவன் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்ற அர்த்தத்தில்)

    'இந்தப் பிடியிலிருந்து நீ தப்பவே முடியாது. (பிடியை இறுக்குவார்) இப்ப நீ சரின்னு சொல்லல?' ....

    ஆத்திரத் தாண்டவம் ஆடி விடுவார்.

    "ஓ..அந்த அளவுக்குத் துணிஞ்சிட்டியா நீ?" என்று முத்துராமன் ஒரு முடிவுக்கு வந்து எழுந்தவுடன், கோட்டிலிருந்து 'விருட்'டென்று கைகளை எடுப்பார் வேகமாக. செம ஸ்பீட்.

    முத்துராமன் சற்று முன்வந்து நிற்பார். தலைவர் தலையைத் திருப்பியபடி முறைத்தவாறு அங்கேயே நிற்பார்.

    'இப்போ நான் என்ன சொல்லணும்?'

    முத்துராமன் கேள்வி இது.

    'ராஜியைக் கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லணும் '.

    தலைவர் கட்டளை இது.

    சொல்லும்போது இடது கையை இடுப்பில் செம கம்பீரமாக வைத்தபடி சொல்வார்.

    "அவ்வளவுதானே!'----முத்துராமன்.

    'அடுத்த வாரத்துக்குள்ள அது நடக்கணும்'

    நடிப்பின் ஆண்டவர் ஆணையிடுவார். கட்டளையிடுவார்.

    'பிறகு?'

    அதே போஸில்,

    "அவ சந்தோஷமா வாழறத நான் பார்க்கணும்"

    என்று அப்படியே நிற்பார்.

    'உன் இஷ்டப்படியே செய்யிறேன். நவ் யூ கேன் கெட் அவுட்'

    முத்து சொன்னவுடன்

    அப்படியே ஒரு சிறிய வெறிச் சிரிப்பு, வெற்றிச் சிரிப்பு, எதிர்பார்த்த பதில் வந்ததே என்ற சிறு திருப்திச் சிரிப்பு இவர் முகத்தில் வந்து படர்ந்து போகும்.

    இடுப்பில் கைவைத்தபடியே அதே போஸில் பின்னோக்கி நகர்ந்து வருவார். முத்துராமனின் முகத்திற்கு நேராக பக்கவாட்டில் நின்றபடி,

    'இதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காதே?!'

    என்று முறைத்தபடி கேட்பார்.

    முத்துராமன் இவர் நிலைமை புரிந்து,

    "மாற்றத்தான் விட மாட்டியே?"

    என்று நிர்க்கதியாய் நின்று, விரக்தியாய் வெறுப்பு உமிழ,

    அப்படியே இந்த மனிதர்... இல்லை இல்லை...தெய்வம்



    நாக்கால் கீழுதட்டின் இடது ஓரத்திலிருந்து வலது ஓரம் வரை துழாவி, வெறி காட்டி

    'நௌ யூ ஆர் ரியலைஸ்'

    என்று மறுபடி முத்து மார்பில் விரல் குத்தி,

    'இப்ப உணர்ற! இல்ல!'

    என்று வன்முறை காட்டி நண்பனை உணரச் செய்த பெருமையோடு சற்றே தலையாட்டி,

    'வர்றேன்' என்று செல்பவர்

    முத்துராமன் சற்று யோசித்து,

    "ஆனா ஒரு நிபந்தனை"

    என்று குரலிட்டவுடன்



    அப்படியே 'சர்'ரென்று, 'சரக்'கென்று திரும்பி, இடது காலை தள்ளி வைத்து, வலது முழங்காலை சற்று மடக்கி, கைகளை லூஸாக ஆடவிட்டு, காமெராவின் கீழ் ஆங்கிளிலிருந்து என்னையும், முரளி சாரையும், இந்த உலகத்தையும் வாய்பிளக்க வைத்த அந்த அற்புத போஸ் கொடுப்பாரே!

    என் இதய தெய்வம், மனித தெய்வம், எங்கள் குலவிளக்கு, எங்கள் சாமி, எங்கள் உயிர்

    எங்களை விட்டுப் பிரிந்த தினம். நினைக்க நினைக்க மனம் ஆறுதல் அடையவில்லை. அழுகையும், ஆத்திரமும், துக்கமும் பெருகுகிறதே தவிர காலையில் இருந்து குறைந்தபாடில்லை.

    கலைக் கடவுளே!

    நீ இல்லாமல் நாங்கள் இல்லை.

    தெய்வமே! உங்களுடன் எங்களையும் அழைத்துக் கொள்.

    இதற்கு மேல் எழுத திராணியோ, சக்தியோ, தெம்போ எனக்கு மனதிலும் இல்லை... உடலிலும் இல்லை.

    மன்னிக்கவும்.
    Last edited by vasudevan31355; 21st July 2015 at 08:25 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •