Results 911 to 920 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தமிழன் கடமை



    ஒரு விஷயம்.

    'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அது ஒரு உலகப் பொதுமறை போல. திருக்குறள் போல. அவர் இவர் என்றில்லாமல் எல்லோரும் சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை உடையது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போற்றி வைத்துக் கொண்டாடப்படுவது. கொண்டாடப்படவும் வேண்டியது.

    நடிகர் திலகம் ரசிகளுக்கென்று பல படங்கள் உள்ளன. தெய்வ மகன், ராஜா, திரிசூலம் இப்படிப் பல. இவைகளும் பொது மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றாலும் சிவாஜி ரசிகன் என்பவன் இந்தப் படங்களின் மேல் அதிக உரிமை எடுத்துக் கொள்வான். சொந்தமும் கொண்டாடுவான்.

    கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் படங்களெல்லாம் அப்படி அல்ல. சிவாஜி ரசிகர்களையும் மீறி உலகமே கொண்டாடப்பட வேண்டிய உன்னதங்கள். கொண்டாடிய உன்னதங்களும் கூட.

    உதாரணத்திற்கு நடிகர் திலகத்தின் படம் ஒன்றையே எடுத்துக் கொள்வோம். 'திரிசூலம்' நடிகர் திலகம் நடித்த படங்களில் வசூலில் முதன்மையானது. கட்டபொம்மனை விடவும் கூட. இது அனைவரும் அறிந்தது. இப்போது ஒரே நேரத்தில் கட்டபொம்மனும், திரிசூலமும் மறுவெளியீடு காண்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்தின் பொதுவான தந்தையாக ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி குழந்தைகளை முதலில் கட்டபொம்மன் படத்திற்குதான் அழைத்துச் செல்வான். பிறகு சிவாஜி ரசிகனாக தான் மட்டுமோ அல்லது குடும்பத்தோடு சேர்ந்தோ திரிசூலம் பார்ப்பான். வசூலில் கொடிகட்டியது என்பதற்காக திரிசூலம் கட்டபொம்மனுக்கு இணையாகி விடாது.

    வசூல், ஓட்டம் இதையெல்லாம் தாண்டி ஒரு தமிழனால், அவன் சிந்திய ரத்தத்தால் நம் தமிழ்ப் பட உலகை உலக அளவில் தலை நிமிரச் செய்த ஒரு படம். உலகையே நம்மை திரும்பிப் பார்க்க வைத்த படம். இப்படி ஒரு நடிகன் ஒருவன் இருக்கிறானா என்று அனைத்து நாடுகளும் வியந்து வியந்து பார்த்த படம். விருதுகளை தமிழனுக்கு அள்ளித் தந்த படம். அந்த உன்னத நடிகனை 'இங்கு வந்து எங்கள் நாட்டுக்கு பெருமை சேர்' என்று அவரை அழைத்து அழைத்து மரியாதை அளிக்க வைத்த படம். இது யாருக்குப் பெருமை? தமிழராய்ப் பிறந்த நம் அனைவருக்கும்தானே! இந்தியனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும்தானே!

    ஜாதி, மத, இன, மொழி, ரசிக வேறுபாடுகளையெல்லாம் வேரறுத்து நம் பெருமையை அந்நியர் உணர வழிவகை செய்த படமல்லவா? இந்தப் படத்தின் வெற்றியில் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமையடைய வேண்டுமல்லவா? நம் தேச பக்தியை மீண்டும் நாம் வெளிப்படுத்த நமக்குக் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பமல்லவா?

    பிள்ளைகளிடம் கட்டபொம்மன் கதையைக் காட்டி, பாடுபட்டு எப்படியெல்லாம் சுதந்திரம் பெற்றோம் என்று சுதந்திர உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டிய படமல்லவா? ஒரு அருமையான வாய்ப்பு அல்லவா?

    தாய், தந்தை, மனைவி மக்கள் என்று குடும்பத்துடன் சென்று தலை நிமிர்ந்து, நெளியாமல், வளையாமல் பார்த்து, ஆணி அடித்தாற் போன்று அமர்ந்து கட்டபொம்மனோடு வாழ்ந்து கண்ணீரோடு திரும்பும் கௌரவத்தை இது போன்ற ஒரு சில காவியங்கள் மட்டும்தானே அளிக்க முடியும்? இன்றும் கூட குடுமபம் குடும்பமாக அரங்குகளில் கட்டபொம்மனைக் காண்கிறார்கள் என்றால் அது யாருக்குப் பெருமை? கட்டபொம்மனை சிறுமைப்படுத்துவதால் அது யாருக்கு இழிவு? தமிழர்களாகிய நமக்கேதானே? வசூல், இத்தனை நாட்கள் ஓடியதா... கூட்டம் கூடியதா... இல்லையா என்றெல்லாம் விவாதிப்பதற்கு அப்பாற்பட்ட ஒரு அற்புதக் காவியமல்லவா இது! பேதங்கள் மறந்து ஒவ்வொருவரும் அந்த வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த வீரனின் பெருமையை பறை சாற்ற வேண்டிய நேரமல்லவா? பாகுபாடுகளுக்கும், வேறுபாடுகளுக்கும் இடம் தராமல், பழி உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் நீ பெரியவன்..நான் பெரியவன் என்ற அற்ப உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் அனைவரும் உண்மையான தமிழர்களாக கட்டபொம்மனை கண்டு அவனை நினைவு கூர்வது ஒன்றே நாம் தமிழன் என்பதை உணர்த்தும். பறை சாற்றும். அதுவே கட்டபொம்மனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியும், கடமையும் ஆகும்.

    சிவாஜியின் புகழ் பரப்பவோ அல்லது இந்தப் படம் வசூலில் எல்லாப் படங்களையும் முந்த வேண்டும் என்ற சொற்ப சந்தோஷங்களுக்காகவோ இந்தப் பதிவை நான் இட வில்லை. உலகம் முழுதும் என்றோ மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்ட காவியம்தான். இப்போது ஒவ்வொரு தமிழனும் இந்தப் படத்திற்கு அளிக்க வேண்டிய பங்கைப் பற்றித்தான், முக்கியத்துவத்தைப் பற்றிதான் நட்பு ரீதியாக நினைவுபடுத்துகிறேன். அதுவே அன்றி வேறு எந்த நோக்கமும் என் பதிவில் இல்லை.

    இப்போதைய இளையதலைமுறைகளுக்கு நம் கட்டபொம்மனைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஏற்றார் போல டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு புதுப் பொலிவுடன் வந்திருப்பதால் பெரியவர்களாகிய நமக்கு இன்னொரு அருமையான சந்தர்ப்பம். பழைய படம்தானே என்று அவர்கள் சலிக்கக் கூடும். ஆனால் நம் ஒவ்வொருவரின் கடமையும் என்னவென்றால் அவர்களை அழைத்து சென்று அந்த மாவீரனின் வீர வரலாற்றை அவர்களின் நெஞ்சில் பதிய வைப்பதே ஆகும். அவர்கள் மனதில் சிவாஜி என்ற நடிகன் பதிவதைவிட கட்டபொம்மன் என்ற கருஞ்சிறுத்தைதான் பதிவான். அவர்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டுவான். அறிவை ஊட்டுவான். வீரத்தை ஊட்டுவான். நல்ல தமிழை ஊட்டுவான். தன்மானத்தை ஊட்டுவான். அடிமைத்தனத்தை விரட்டுவான்.

    அப்படிப்பட்ட பெருமை தரக் கூடிய விஷயத்தை நாம் தவற விடலாமா?

    எனவே அனைவரும் மனமாச்சரியங்கள் மறந்து அந்த மாபெரும் வீரனை குடும்பத்துடன் சென்று கண்டு தரிசித்து வாருங்கள். ஒரு தகப்பனாக பிள்ளைகளுக்குத் தன் இன்னொரு கடமையைச் செய்யுங்கள். பெருமை தானாக உங்களை வந்து அடையும்.

    இது ஒன்றே அனைவரிடமும் நான் வேண்டுவது.
    Last edited by vasudevan31355; 26th August 2015 at 11:41 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks sss thanked for this post
    Likes sss, J.Radhakrishnan, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •