-
6th May 2011, 12:49 AM
#11
சதீஷ்,
கல்தூண் வெளியான நேரத்தில் நான் மதுரையில் இல்லை.ஆகவே சிந்தாமணியில் ஓபனிங் ஷோ பார்க்க முடியவில்லை. ஆனால் நண்பர்கள் மூலம் அறிந்த செய்தியின்படி படத்திற்கு பெரிய அலப்பறை இருந்தது என்று கேள்விப்பட்டேன். அந்த வருடம் [1981] ஜனவரியில் பொங்கலன்று முதல் படமான மோகனப் புன்னகைக்கு அபிராமியில் ஓபனிங் ஷோவிற்கு வரவேற்பு அமர்களமாக இருந்தது. அதன் பிறகு பிப்ரவரி 21 சென்ட்ரலில் சத்திய சுந்தரம் ரிலீஸ். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாததால் ஓபனிங் ஷோ அலப்பறை கொஞ்சம் கம்மி. அமர காவியம் படத்திற்கும் நான் இல்லை. ஆனால் சரியான கூட்டம் என்று செய்தி வந்தது. இதற்கிடையில் ஒரு சின்ன விஷயம் நடந்தது. சத்திய சுந்தரம் படத்தின் மூலப் பதிப்பான தெலுங்கு படத்தில் சௌகார் நாயகியாக நடித்திருந்தார். தமிழில் நடிகர் திலகத்தின் குடும்ப டாக்டர் பாலகிருஷ்ணன்தான் rights வாங்கியிருந்தார். நடிகர் திலகம்,சௌகாரே தமிழில் நடிக்கட்டும் என்று சொல்லியிருந்தார். ஆனால் விநியோகஸ்தர்களோ விஜயாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யும்படி வற்புறுத்தவே தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டார். நடிகர் திலகமும் வியாபார விஷயம் என்பதால் தலையிடவில்லை. ஆனால் சௌகார் இதை தவறாக புரிந்துக் கொண்டு கோவம் அடைந்தார்.அந்த நேரத்தில் கல்கி இதழில் சிவாஜி சகாப்தம் முடிந்து விட்டது என்று பேட்டி கொடுத்தார். இதை பார்த்துவிட்டு ஏன் என்று தெரியாமல் வருந்திய சிவாஜி, சௌகாரை வரவழைத்து உண்மையை விளக்கினார்.
விகடனிலிருந்து வெளியே வந்து மணியன் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் இதயம் பேசுகிறது. இது யார் ஆதரவு பத்திரிக்கை எனபது அனைவருக்கும் தெரியும். அவர்கள் பத்திரிக்கை தொடங்கிய 1978 முதல் நடிகர் திலகத்திற்கு எதிராகவே செய்திகளை வெளியிட்டு வந்தனர். 1981, அதாவது கல்தூண் வெளியான காலக் கட்டத்தில் அவர்கள் புதிய தமிழ் படங்கள் வெளியாகும் போது முதல் வாரத்தில் ஞாயிறன்று ஒரு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிறோம் என்று அறிவிப்பார்கள். அந்த காட்சியில் அந்த இதழ் சார்பாக ஒரு பெட்டி வைக்கப்படும். அங்கே இருக்கும் கூப்பனில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எழுதி போடலாம். சுவையான விமர்சனங்களை பத்திரிக்கையில் வெளியிடுவார்கள். இது சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடைபெற்றது. அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த படம் கல்தூண், மதுரை சிந்தாமணி, 03-05-1981 ஞாயிற்றுக்கிழமை மதியக் காட்சி.
நடிகர் திலகத்தையும் அவரது ரசிகர்களையும் பற்றி என்னவோ ஏதோ என்று நினைத்து வந்த மணியன் அண்ட் கோவிற்கு சரியான அடியாக அமைந்தது படத்திற்கு திரண்டிருந்த கூட்டமும் அவர்கள் அரங்கில் செய்த அலப்பறையும். அதுவரை எதிர்மறையாக எழுதிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது இதழ் அந்த சிறப்புக் காட்சியை பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. "மதுரையில் இப்போதும் சிவாஜிக்கு வலிமையான ரசிகர் மன்றங்கள் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிந்தது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறார்கள்."
ரசிகர் ஒருவர் எழுதியிருந்த ஸ்லோகனும் சுவையான ஒன்று. "சரித்திரங்கள் மறைவதில்லை.சகாப்தங்கள் முடிவதில்லை." அதே போல் இந்த படத்திற்கு ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தில் ஒரு வரியும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. "திரைக்கதை பாதி வேலையை பார்த்துக் கொள்ள கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க,டைரக்டர் என்ற கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபேரஷன்தான்."
நன்றி சதீஷ். நினைவலைகளில் மீண்டும் நீந்த வாய்ப்பளித்த உங்களுக்கு. Tidbits வழங்கிய சாரதிக்கும் நன்றி
அன்புடன்
செந்தில், இப்போது நமது ஹப்பிலேயே பாலா சொன்னது போல நீங்கள் தமிழில் டைப் செய்யலாம்.
Plum எல்லாவரையும் பற்றி சொன்னீர்கள். அந்தமான் காதலி சந்திரமோகனை விட்டு விட்டீர்களே!
Last edited by Murali Srinivas; 6th May 2011 at 12:53 AM.
-
6th May 2011 12:49 AM
# ADS
Circuit advertisement
Bookmarks