-
18th May 2012, 12:49 PM
#11
Junior Member
Newbie Hubber
கணேசன் மறையலாம்; சிவாஜி மறையவில்லை
புதுமைத்தேனீ மா. அன்பழகன்
சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜி.என்.வேலுமணி தமிழ்ப் படவுலகில் சிவாஜி போன்ற பெரிய நடிகர்களை வைத்து பாலும் பழமு பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதே காலகட்டத்தில் எங்கள் டைரக்டர் பாலசந்தரும் பெரும் நடிகர்கள் இல்லாமல் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.
வேலுமணிக்கு ஓர் எண்ணம் எழுந்தது. சிறிய நடிகர்களை வைத்தே பாலசந்தரால் சிறந்த படங்களைக் கொடுக்க முடிகிறதென்றால், ஏன் சிவாஜியையும், பாலசந்தரையும் இணைத்து ஒரு படத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என வியாபாரக் கணக்கைப் போட்டார். அதற்கான முயற்சியை எடுத்து இருவரையும் இணைத்தார். அந்தப் படம்தான் 'எதிரொலி'. அந்தப் படத்தில் பணியாற்றக் கூடிய வாய்ப்பை நான் பெற்றதால்தான் சிவாஜிகணேசனுடன் பழகக் கூடிய, அவரைப் புரிந்து கொள்ளக் கூடிய, அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
சிவாஜியும், இயக்குநர் சிகரத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்தை இப்படத்தின் வாயிலாகத் தணித்துக் கொண்டார். கதையைச் சொல்ல, நடிகர் திலகத்திடம் டைரக்டர் சென்றார். ' பாலு! முழுக்கதையையும் ஏன் சொல்றீங்க. தேவையில்லை. சும்மா அவுட் லைன் மட்டும் சொன்னா போதும். உங்களுக்குத் தெரியும் எப்படி ஒரு சிறந்த படத்தை உருவாக்க வேண்டுமென்று. அதில் நீங்கள் வெற்றியும் பெற்று வருகிறீர்கள்; நான் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என்று சுருக்கமாகக் கதையைக் கேட்டுக் கொண்டார்.
இதில் என்ன சோகம் என்றால் எதிரொலி வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைத் தர வில்லை. சிவாஜி மக்கள் மனத்தில் நற்பெயருடன் நிலைகொண்ட நடிகர். கதைப்பாத்திரப்படி வழக்குரைஞர்; சந்தர்ப்பத்தால் பெட்டி கைமாறினாலும், அந்தப் பெட்டிக்குள் நிறையப் பணம் இருந்ததை உடையவரைத் தேடி ஏன் இவர் கொடுக்கவில்லை, அல்லது போலீசிடம் ஒப்படைக்கவில்லை? திருடிக்கொள்ள எண்ணி விட்டாரோ? சிவாஜிக்குத் திருடன் பட்டமா? படம் தோல்வி அடைந்து விட்டதற்கு காரணம் அப்படித்தான் சொல்லப் பட்டது.
பாலசந்தர் பெரிய டைரக்டர் என்கிற பெயர் எடுத்திருந்தாலும், திரைப்படத் திறமையும் அறிவும் நிறைந்து இருந்தாலும் அப்போது தன்னைப் பற்றிக் கொஞ்சம் குறைத்தேதான் மதிப்பிட்டுக்கொள்வார். அந்த 'காம்ப்ளெக்ஸ்' அவரிடம் இருந்தது. சிவாஜியா அவர் எவ்வளவு பெரிய நடிகர், அவரிடம் எப்படிப் போய் இந்த இடத்தில் இப்படி நடிக்க வேண்டுமென்று நான் சொல்லிக்கொடுப்பது? அவருக்குத் தெரியாதா என்று நினைத்துக் கொண்டு காட்சியை விளக்கிவிட்டு வந்துவிடுவார். ஒரு டைரக்டரும் கதாநாயகனும் எப்படியெல்லாம் உரையாடு வார்கள், உறவாடுவார்கள்? அப்படிப்பட்ட எந்த நெருக்கமும் இல்லாமலேதான் படப்பிடிப்பு நடக்கும். ஒருபுறம் துரு துருவென்று சிகரெட்டைப் பிடித்துக்கொண்டே டைரக்டர் நிற்பார்.
காட்சி தயாரானதும்,என்னை டைரக்டர் அழைப்பார்.என்னிடம்தான் அவருக்கு வேண்டிய சிகரெட் இருக்கும். அதற்காகத்தான் அழைக்கிறாரோ என்று சிகரெட்டை எடுப்பேன். இல்லை. ஷாட் ரெடி. நீ போய் சிவாஜியை அழைத்து வா என்பார். நான்தான் உதவி டைரக்டர்களிலேயே வயதிலும் அனுபவத்திலும் இளையவன். ஆகையினால் நான்தான் ஓடும்பிள்ளை. ஒப்பனை அறைக்கு ஓடிப்போய் 'அண்ணன் ஷாட் ரெடி வரலாம்' என்பேன். 'ஏண்டா லேட்?.. வா.. அந்த 'கோட்' டை எடுத்து மாட்டிவிடு' என்பார். நானும்அவ்வாறே செய்து அழைத்து வருவேன். தாமதம் என்பது ஐந்து, பத்து நிமிடம்தான்.
படப்பிடிப்பகத்துக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் வணக்கம் தெரிவிப்பார்கள். இவரும் பதிலுக்கு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டே பதிலுக்குக் கனத்த குரலில் வணக்கம் சொல்வார். டைரக்டர் அருகில் வந்து, அன்று எடுக்கப் போகும் காட்சியை விவரிப்பார். உடன் இருக்கும் உதவி டைரக்டர் பாஸ்கரன் சிவாஜி பேசவேண்டிய வசனங்களைச் சொல்வார். நன்றாகக் கேட்டு, மனத்தில் இறுத்திக்கொண்டு மெதுவாகச் சொல்லிப் பார்ப்பார்.
டைரக்டர், ஸ்டார்ட் கேமிரா சொல்லி 'ஆக்ஷ்ன் ' என்று சொன்னவுடன், எங்கிருந்துதான் வருமோ, அந்த வசன உச்சரிப்பும், அதற்கேற்ற பாவங்களும்? பார்த்துக்கொண்டிருக்கும் போது நமக்குப் புல்லரிக்கும். அவர்தான் சிவாஜி.
சிவாஜியுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து "நேரம் தவறாமை, செய்யும் தொழிலே தெய்வம்" என்கிற அவ்விரு தாரகமந்திரத்தை அறிந்துகொண்டேன். அதை இன்றும் கடைப்பிடித்தும் வருகிறேன். சிங்கப்பூரில் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நான் சரியான நேரத்திற்குச் சென்று விடுவேன். குறிப்பாக நான் முன்னின்று நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும், சரியான நேரத்திற்குத் தொடங்கி, சரியான நேரத்தில் முடித்திடுவேன். அதனால் இப்போது, அன்பழகன் நிகழ்ச்சி என்றால் சிறப்புப் பேச்சாளர் வருவதற்கு ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுவார் என சிங்கப்பூர் தமிழ் மக்களே அறிந்து கொண்டனர். அத்துடன் நான் சிங்கையில் வணிகம் செய்யும் போதும் சரியாக விடியல் ஆறு மணிக்கு முன்பே நானே கடையைத் திறந்து விடுவேன். அந்த வியாபார நேரத்தில் யாரேனும் எங்கே அழைத்தாலும் செய்கிற தொழிலை விட்டு விட்டுப் போகமாட்டேன். சிவாஜியிடம் கற்றுக் கொண்ட பாடம் என்னுடைய வாழ்க்கைக்கும் பெரிதும் பயன்பட்டது.
காலை ஏழு மணி கால்ஷீட் என்றால் பொதுவாக பணியாற்றுபவர்கள் எல்லோரும் ஏறத்தாழ ஏழுமணிபோல்தான் ஸ்டுடியோவிற்கு வந்து சேர்வோம். அதன் பின் ஏற்பாடுகளைக் கவனிப்போம். கேமிராமேனிடம் காட்சியைச் சொல்லி, விளக்குகளை நடிகர்கள் நடமாடும் இடங்களில் பொருத்தச் சொல்வோம். காட்சிக்கேற்ற உடை அணிகலன்கள், ஒப்பனை ஆகியவற்றைச் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்வோம். காட்சியில் வைக்க வேண்டிய பொருட்கள், காட்சிக்குத் தேவையான பொருட்களைச்சேகரிப்போம்.
'கண்டினியூட்டி' என்று சொல்லப்படும் தொடர்ச்சியான முன் காட்சியில் என்றோ ஒரு நாள் அதே நடிகர்கள் நடித்தபோது எடுக்கப்பட்ட படத்தை, தொடர் நடவடிக்கைக்காகப் பார்த்து வைத்துக் கொள்வோம். அதற்குள் டைரக்டர் வந்து விடுவார். அவர் ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்ப்பார். தயாரிப்பு நிர்வாகியை அழைத்து நடிகர்கள் வந்துவிட்டார்களா? என்று கேட்பார். நடிகர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாலும், "ஆன் தி வே சார் " என்று பவ்வியமாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்திடுவார். ஆக எப்படிப் பார்த்தாலும் படப்பிடிப்புக் கருவி இயங்கக் கிட்டத்தட்ட ஒன்பது மணியாகிவிடும். இப்படித்தான் பொதுவாக நடக்கும். இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.
இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை நேரத்தில் அலுவலகங்களில் எல்லாம் சுறுசுறுப்பாகப் பணிகள் நடந்ததுபோல், நடிகர் திலகம் அவர்களின் கால்ஷீட் என்றால் முதல்நாளே சம்பந்தப்பட்ட அனைவரும் பம்பரம்போல் சுழல ஆரம்பித்து விடுவார்கள். இன்னொரு செய்தி என்னவென்றால், மற்றவர்கள் பத்து கால்ஷீட்டுகளில் எடுப்பதை, சிவாஜி படப்பிடிப்பு என்றால் ஏழு கால்ஷீட்டுகளில் முடித்துவிடலாம். அந்த அளவிற்கு வேகமாக நடக்கும்.
கதாநாயகனான சிவாஜியே முழு ஒப்பனையுடன் ஏழு மணி கால்ஷீட் என்றால் சரியாக ஆறு ஐம்பத்தைந்து மணிக்குத் தயாராய் இருப்பார். இவ்வாறு வேலை செய்யும்போது எவ்வளவு மகிச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கும் தெரியுமா? அவருடன் பணியாற்றும் சக நடிகர்களும் கூடப் பயந்து கொண்டு சரியான நேரத்திற்குத் தயாராகி விடுவார்கள்.
பட்டுக்கோட்டையார் பாடி வைத்தாரே " செய்யும் தொழிலே தெய்வம் " என்று. அது சிவாஜி அவர்களைப் பார்த்துத்தான் பாடியிருப்பாரோ என்றுகூடத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு கதையின் பாத்திரமாகவே மாறிவிடுவார். காட்சிக்கு ஏற்ற மனநிலையை வரவழைத்துக் கொள்வார். அவர் நடிப்பு மிகையானது என்று வாதிடுவரும் உளர். அது ஓரளவு உண்மையாகவும் இருக்கலாம். இயல்பாக நடிப்பது என்பது ஒன்று. எதையும் மிகைப்படுத்தியே பேசியும், எழுதியும் வரும் நம் நாட்டினர் இப்படி நடித்தால்தான் 'நடிப்பு' என்றும் ஒத்துக் கொண்டார்கள். நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்படுபவர்கள், கண்ணீர் சிந்துபவர்களாலே படம் ஓடியது. சிறந்த நடிகர் என்கிற விருதினை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருக்கு அளித்தார்கள். நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்திய இன்னொரு நடிகர் இந்தியாவில் இல்லை. சிவாஜி நடித்த படங்களை இந்தியில் மீண்டும் எடுக்க முற்படும் போது, படத்தைப் பார்த்தபின் எத்தனையோ நடிகர்கள், சிவாஜி போல் தன்னால் செய்ய முடியாது என்று பயந்து ஓடிய வரலாறும் உண்டு.
நடிகர் திலகத்துடன், எதிரொலி படப்பிடிப்பு நேரத்தில் எனக்கு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. காரணம், நான் சிறியவன், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதோடு உறவுக்காரன் என்றுகூட நாங்கள் இருவரும் சொல்லிக் கொள்வோம். உங்களைக் கெடுத்தது டைரக்டர் பீம்சிங்தான் என்பேன். ஏண்டா அப்படிச் சொல்கிறாய்? என்று கேட்பார். ஆமாம். அவர்தானே உங்களைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஆஸ்திகராக்கினார். எங்கள் இயக்கத்தை விட்டு அதன்பின்தானே விலகினீர்கள். இல்லையென்றால் இன்னும் நெருக்கமாக இருப்போமல்லயா? என்று சிறுவன் என்கிற பாதுகாப்பில் பேசுவேன். சிரித்துக் கொள்வார். அப்படிக் கேட்டதிலிருந்து " நாத்திகப் பயலே " என்று செல்லமாகத் தான் என்னை அழைப்பார். அப்படி அவர் என்னை அழைத்தபோது எனக்கு அவரிடம் உள்ள நெருக்கத்தையும் அன்பையும் நினைத்து இன்றும் மகிழ்ச்சியடைகிறேன்.
கணேசன் நம்மைவிட்டு மறைந்து இருக்கலாம்; ஆனால் சிவாஜி மறைய வில்லை, என அவர் மறைந்தபோது சிங்கப்பூரில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் நான் பாடியது நினைவுக்கு வருகிறது. அதை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
.... தொடரும்...
Last edited by Gopal.s; 18th May 2012 at 01:17 PM.
-
18th May 2012 12:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks