-
12th November 2012, 11:13 PM
#11
வாசு அவர்களே
நன்றி. நீங்கள் மட்டுமென்ன? அண்ணன் ஒரு கோவில் முதல் நாள் நிகழ்வை அப்படியே படம் பிடித்து கொண்டு வந்து பதிவிட்டு அசத்தியிருக்கிறீர்கள். ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? எங்கள் மதுரையிலும் நியூசினிமாவில்தான் படம் வெளியானது. எங்கள் ஊர் ரசிகர்களும் இளைய தலைமுறை மற்றும் நாம் பிறந்த மண் சரியாக போகாத காரணத்தால் சற்று டல்லாக இருந்த நேரம். அதற்கேற்றார் போல் படத்திற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த எங்க வீட்டு தங்க லட்சுமி பெயரும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை கிளப்பியிருந்த நேரம் [சொந்த படத்துக்கு பெயரை பார்த்தியா].ஆனால் பெயர் மாறிய உடன் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்கள்.
படம் வெளி வந்த நேரம் தமிழகத்தில் அரசியல் மற்றும் சமூக சூழல் normal-ஆக இல்லை. 1975-ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை விலக்கி கொள்ளப்பட்டு 1977 மார்ச் மாதம் பொது தேர்தல் நடத்தப்பட்டு இந்திரா காந்தி அம்மையார் ஆட்சியை இழந்து ஜனதா ஆட்சி ஏற்பட்டு மொரார்ஜி தலைமையில் மத்திய ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரம். தமிழகத்திலும் ஒன்றரை வருட குடியரசு தலைவர் ஆட்சிக்கு பின் 1977 ஜூன்-ல் சட்டசபை தேர்தல் நடைப்பெற்று அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நேரம்.
இரண்டு வருட அவசர நிலையின் போது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்ததால் அமைதியாக இருந்த இந்தியா மீண்டும் ஒரு போராட்ட சூழலை சந்தித்தது.பல தொழிற் சங்கங்களும் மாணவர்களும் ஒன்றின் பின் ஒன்றாக போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் மட்டும் அதற்கு விதி விலக்காக முடியுமா என்ன?
இங்கேயும் பல போராட்டங்கள். சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கலவரம் ஒரு புறம் என்றால் மதுரையில் 1977 அக்டோபர் 6 அன்று மதுரை கல்லூரி [Madura College] வளாகத்திலும் அமெரிக்கன் கல்லூரி வளாகத்திலும் நடைபெற்ற மாணவர் போலீசார் மோதல்கள் இந்தியாவெங்கும் கவனம் ஈர்த்தன. கல்லூர்ரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
மத்தியில் ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட ஷா கமிஷன் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போது வேறொரு வழக்கில் இந்திரா காந்தி அம்மையார் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆரம்ப முகாந்திரம் [Prima Facia] இருக்கிறது என்று சொல்லி விட அந்த காரணத்தை வைத்து அக்டோபர் மாதம் முதல் வாரம் இந்திரா காந்தி அம்மையார் கைது செய்யப்பட இது நாடெங்கும் பெரிய அதிர்வுகளை உருவாக்கியது. பல இடங்களில் கலவரம் மூண்டது. இதன் காரணமாக இந்திரா அம்மையார் ஜாமீனில் விடுதலையானார். உடனே இந்தியாவெங்கும் சுற்றுபயணம் செய்ய கிளம்பினார் முதலில் நாக்பூர் சென்ற அவர் அக்டோபர் 29 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்திற்கு விஜயம் செய்வதாக முடிவானது.
தமிழகத்திற்கு வருகை தரும் இந்திராவிற்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டத்தை தி.மு.க.அறிவிக்க மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டது. பலரும் அச்சப்பட்டது போலவே அக்டோபர் 29 அன்று மதுரை வந்த அன்னை இந்திரா அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் வன்முறை வெடிக்க திறந்த காரில் ஊர்வலம் வந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை நெடுமாறன் அவர்களும் என்.எஸ் வி சித்தன் அவர்களும் இரு புறமும் அரணாக நின்று காக்க அவர் உயிர் தப்பினார்.மதுரை திருச்சி மற்றும் சென்னை என்று இந்திரா அம்மையார் சென்ற அனைத்து ஊர்களிலும் பெரிய கலவரம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட அது மேலும் வன்முறைக்கு வழி கோலியது.
இந்த பிரச்சனைகள் போதாதென்று அந்த நேரத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மிக சக்தி வாய்ந்த புயலாக மாறியது.அது தமிழகத்தை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற நிலையில் அது திசை மாறி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் என்னும் நகரத்தை அக்டோபர் 31 அன்று தாக்கி கரையை கடந்தது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் இந்தியாவை தாக்கிய இயற்கை சீற்றங்களில் இது பேரழிவை ஏற்படுத்திய ஒன்றாகும். புயல் ஆந்திராவை தாக்கினாலும் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஏராளமான உயிர் சேதம் மற்றும் பொருட் சேதமும் ஏற்பட்டது. இந்த புயல் நிவாரண நிதிக்காக தமிழக அரசே பல ஊர்களிலும் நட்சத்திர கலை விழாவை நடத்த, அந்த விழாவில்தான் நடிகர் திலகம் சாம்ராட் அசோகனாக மீண்டும் மேடை கண்டார்.
அண்ணன் ஒரு கோவில் வெளியான நேரத்தில்தான் [நவம்பர் 10] மேற் சொன்ன நிகழ்வுகள் எல்லாம் நிகழ்ந்தன. ஒரு புறம் மாணவர் மற்றும் தொழிற்சங்கத்தினர் போராட்டம், மறு புறம் அரசியல் வன்முறைகள் இவை போதாதென்று இயற்கையின் சீற்றம். ஆக அமைதி இல்லாத இப்படிப்பட்ட ஒரு அரசியல் சமூக சூழலில், ஒரு நேர்மறையான சூழல் நிலவிய நேரத்தில் வெளியான படம் அண்ணன் ஒரு கோவில். நடிகர் திலகத்தை பொறுத்தவரை எந்த சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர். இதையும் எதிர்கொண்டார்.
இப்போது ஆரம்பித்த இடத்திற்கு வருகிறேன். படத்தின் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும். ஆனால் எங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு சின்ன தயக்கம். அந்த வருடத்தில் அதுவரை வெளிவந்த அவன் ஒரு சரித்திரம், இளைய தலைமுறை மற்றும் நான் பிறந்த மண் ஓபனிங் ஷோ போயிருந்தோம். ஆனால் அவை சரியான வெற்றி பெறவில்லை.அதே நேரத்தில் நாங்கள் ஓபனிங் ஷோ போக முடியாமல் miss பண்ணிய தீபம் சூப்பர் வெற்றியை பெற்றது. ஆகவே மாலைக் காட்சி போகலாம் என்று முடிவு செய்தார்கள்.ஒப்புக் கொள்ள கஷ்டமாக இருந்தது. ஆனால் படத்தின் வெற்றிக்காக விட்டுக் கொடுத்து விட்டோம்.
ஒரு சில நண்பர்கள் காலையில் வீட்டில் பூஜையில் கலந்து கொள்ள இது போன்ற எதுவும் இல்லாத நாங்கள் இரண்டு நண்பர்கள் காலை 10.30 மணி காட்சிக்கு சென்ட்ரல் சினிமாவில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார், ஸ்ரீகாந்த், Y.விஜயா நடித்த பெண்ணை சொல்லி குற்றமில்லை படத்திற்கு போனோம். உடல் சென்ட்ரலில் இருந்தாலும் மனம் நியூசினிமாவில்தான் இருந்தது. இந்த படம் முடிந்து வெளியே வரும்போது நமது படம் சூப்பர் என்ற ரிபோர்ட் வந்து விட்டது.
மாலை காட்சிக்கு அப்படி ஒரு கூட்டம். நியூசினிமா அமைந்திருப்பது அகலம் குறைந்த ஒரு சின்ன தெருவில்.அங்கே எனக்கு தெரிந்தவரை நடிகர் திலகத்தின் படங்களுக்கு எப்போதும் கூட்டம் அலை மோதும். அதிலும் முதல் வாரம் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நீந்தி சென்று அரங்கில் நுழைந்தோம். படத்தைப் பற்றி நீங்கள் [வாசு]சொல்லி விட்டீர்கள். ஆகவே நான் அதை விட்டு விடுகிறேன். ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் ஸ்வர்ணா, ஆவி போல் பாடும்போது நடிகர் திலகம் உள்ளே வெய்டிங் அறையில் அமர்ந்திருந்து சிகரெட் அடிப்பார். வெகு நாட்களுக்கு பிறகு அவரின் சிகரெட் ஸ்டைல் அதிலும் வளையம் வளையமாக புகை விடும் காட்சியில் தியேட்டர் அதிர்ந்தது. பின் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து காட்சிகளுக்கும் அதே response-தான்.
நண்பர் கோபால் குறிப்பிட்டது போல் அதன் பின் தொடர்ச்சியாக வந்த நமது வெற்றிகளுக்கு அடித்தளமிட்டது தீபம் மற்றும் அண்ணன் ஒரு கோவில்தான். அவை ஏற்படுத்திய சாதனைகள் பற்றி குறிப்பாக மதுரையில் நிகழ்ந்த சாதனைகளைப் பற்றி முன்பு ஒரு முறை நான் நமது திரியில் பதிந்திருந்தேன்.அது மீண்டும் இதோ
மதுரையைப் பொறுத்த வரை அந்தக் காலகட்டத்தில் இது எப்படிப்பட்ட சாதனை என்று பார்ப்போம். 1977 நவம்பர் 10 தீபாவளியன்று நியூசினிமாவில் வெளியான அண்ணன் ஒரு கோவில் மதுரையில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடியது. அதாவது முதல் 30 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல். படம் 77 நாட்களை கடந்த போது 1978 ஜனவரி 26 அன்று சினிப்ரியா அரங்கில் அந்தமான் காதலி வெளியானது. அந்தமான் காதலி தொடர்ந்து 130 காட்சிகள் ஹவுஸ் புல். அதாவது முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அந்த நேரத்திலும் அண்ணன் ஒரு கோவில் வெற்றிகரமாக ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களை பிப்ரவரி 17 அன்று கடக்கிறது.
அந்தமான் காதலி முதல் 39 நாட்களின் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல் என்று சொன்னோம். படம் 37 நாட்களை கடந்த போதே மார்ச் 4 அன்று தியாகம் மதுரை சிந்தாமணியில் ரிலீஸ் ஆகி விட்டது. அதற்கு பிறகும் அந்தமான் காதலி ஹவுஸ் புல். தியாகம் வெளியாகி 14 நாட்களில் என்னைப் போல் ஒருவன் தங்கத்தில் ரிலீஸ்.
குறிப்பிட வேண்டிய விஷயம் படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்தது பற்றி. அதுவரை தங்கம் திரையரங்கில் முதல் வார வசூலில் சாதனை புரிந்திருந்த எங்க மாமா மற்றும் நீதி படங்களின் வசூலை வெகு எளிதாக கடந்த என்னைப் போல் ஒருவன் மதுரை தங்கத்தில்
முதல் 7 நாட்களில் பெற்ற வசூல் - Rs 80 ,140 .69 p.
தங்கத்தின் சரித்திரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமையும் 5 காட்சிகள் திரையிடப்பட்ட என்னைப் போல் ஒருவன் மதுரையில் முதல் பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் புரிந்தது.
http://www.nadigarthilagamsivaji.com...Others/034.jpg
என்னைப் போல் ஒருவன் முதல் பத்து நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்யும் போது தியாகம் 24 நாட்களை கடந்திருந்தது. அந்த 24 நாட்களில் நடைபெற்ற 80 காட்சிகளும் ஹவுஸ் புல். அதே நாளில் அந்தமான் காதலி வெற்றிகரமாக 61 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
1978 மே 5 அன்று அந்தமான் காதலி சினிப்ரியாவில் 100 நாட்களை வெற்றிகரமாக கொண்டாடும்போது சிந்தாமணியில் தியாகம் 63 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த 63 நாட்களில் நடைபெற்ற 207 காட்சிகளும் ஹவுஸ்புல். அதே நாளில் என்னைப் போல் ஒருவன் 49 நாட்களை கடந்து 50 -வது நாளில் அடியெடுத்து வைக்கிறது.
இது போதாதென்று நடிகர் திலகம் தெலுங்கில் நடித்த ஜீவன தீரலு என்ற படம் வாழ்க்கை அலைகள் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யபட்டு 1978 ஏப்ரல் 14 அன்று மதுரை மீனாட்சியில் வெளியாகி அதுவும் ஓடிக் கொண்டிருக்கிறது,
இது போன்ற ஒரு சாதனை அதற்கு முன்பும் செய்யப்பட்டதில்லை. அதற்கு பின்னும் முறியடிக்கப்படவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் யார் யாரோ என்னவெல்லாம் சொன்னாலும் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் மதுரையில் அவரது தியேட்டர் சாதனைகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து வர வேண்டும் என்பதும் காலத்தின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட சரித்திரம்.
அன்புடன்
-
12th November 2012 11:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks