-
10th April 2015, 03:16 AM
#11
Junior Member
Newbie Hubber
சமீபத்தில் எனது மாமா (அத்திம்பேர்) பாலன் மறைந்த போது அவரது நண்பர் எழுதியது."வீட்டுக்கு வாங்கோ என்றார்.மீண்டும் சந்திப்போம் என்றார். அடடா ,ஓர் அழைப்பை ஆயுள் முழுதும் அலட்சிய படுத்தி விட்டோமே என்று இருக்கிறது இப்போது. எல்லோரும் இங்கேதானே இருக்க போறோம் என நினைத்து விட்டேன். அதுதான் வருத்தமாக இருக்கிறது பாலு".
அந்த உயிர் நண்பர் தன,தன்னுடைய எழுத்துக்கள் பட்டி தொட்டியெல்லாம் சேர உதவிய தன நண்பனை காண மறு உலகம் கண்டு விட்டாரோ.??
எனக்கு ஏழு வயதில் பரிச்சயமானவர் ஜெயகாந்தன் ஆனந்த விகடன் மூலம். எனக்கு என்னவோ மொண்ணையான வெகுஜன தமிழ் எழுத்தாளர்களை பிடிக்கவே பிடிக்காது. கல்கி,நா.பார்த்தசாரதி,மு.வ ,ஜெகசிற்பியன்,அகிலன் இவர்கள் ஆகவே ஆகாது. புதுமை பித்தன், லா.ச.ரா,கு.ப.ரா, கு.அழகிரி சாமி, தி.ஜானகிராமன்,கரிச்சான் குஞ்சு,ரா.கி.ரங்கராஜன்,பாக்கியம் ராமசாமி,தேவன்,சாண்டில்யன் ,,இவர்களே என் சிறு வயது முதலான ஆதர்ஷங்கள். (பிஞ்சிலே பழுத்தாயிற்றா என சி.க முறுவலிப்பது புரிகிறது)ஜெயகாந்தன் எழுத்துக்கள் நான் பார்த்த அடிப்படை மனிதர்களோடு பரிச்சயம் தந்ததோடு மட்டுமின்றி ,எனது எழுத்து வேள்விகளுக்கு அஸ்திவாரம் இட்டது. இந்த வகையில் ஜெயகாந்தன் எனக்கொரு ஞான தந்தை.பிறகு அசோக மித்திரன்,நீல.பத்மநாபன்,அம்பை,ஆதவன்,இந்திரா பார்த்தசாரதி,பிரபஞ்சன்,என வேறு திசை கண்டது.
எப்போதுமே எனக்கு பிடித்த முதல் ஐந்து கதைகளாக நான் பட்டியலிடுபவை அசோக மித்திரனின் தண்ணீர், ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம்,தி.ஜா வின் மோகமுள், இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பால்.
அவருடைய ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்ற ப்ராயிட் சித்தாந்தத்தை மூலமாக வைத்த ரிஷி மூலம் அந்த வயதில் என்னை பொட்டில் அறைந்த மனோதத்துவ கதையாகும்.அவருடைய முன்னுரைகள் என்னை மிக பாதித்தவை.
இவர் சிவப்பு சாயத்தில் நின்று அண்ணா,கருணாநிதி முதல், அப்போது படவுலகை சீரழித்து கொண்டிருந்த ,ஏழை மக்களை பொழுது போக்கு என்ற அபினில் ஆழ்த்தி ,அவர்களை தன் நிலையில் இருந்து சுய முனைப்பில் முன்னேற்றி கொள்ள பிரயத்தனம் செய்ய விடாமல், என்னை ஆதரியுங்கள் ,எல்லார் வீட்டிலும் பாலும் தேனும் ஓடும் என்ற ரீதியில் பொய் பிராச்சாரம் நிகழ்த்தி கொண்டிருந்த சில நடிகர்களை மூர்க்கமாக எதிர்த்தார்.
நடிகர்திலகத்தின் மீது நல்ல மதிப்பு கொண்டவர். எந்தவொரு மனிதனும் வாழ்வின் ஏதாவது கணத்தில் சிவாஜி ரசிகனாக இருந்தே தீருவான். அவர் எனது எழுத்துக்களை படித்தால் எனக்கு பெருமை என்று சொன்னார். அதே போல அப்போது மாறி கொண்டிருந்த சிவாஜி நடிப்பு முறையை ,இப்படி வேண்டாமே ,மிதமாக இருக்கலாமே என்று விமர்சனமும் செய்தார்.
இவருடைய மடம் என்று அழைக்க படும் இடத்திற்கு இரு முறை சென்றிருந்தேன் பரீக்ஷா உறுப்பினராக உள்ள போது . அப்போது என் ரசனை அசோக மித்திரனை ஞான தந்தையாக வரித்திருந்த நேரம். கணையாழி,கசட தபற என்று பரிச்சயம் கண்டவுடன் ,ஜெயகாந்தன் இலக்கியத்தில் ரொம்ப ஓவர் ஆக எழுதி ரொம்ப பந்தா பண்ணுகிறார். ஒரு கீழ் ரசனைக்கும், உயர் ரசனைக்கும் கண்ணியாக மட்டுமே இருப்பவர் என கண்டு தெளிந்து விட்டிருந்தேன். 1977 முதலே பெருங்காய டப்பா .பிறகு இரண்டாயிரமாவது ஆரம்பங்களில் ஞான பீடம் பெற்றதும், அகிலன் என்பவருக்கு கொடுத்து அசிங்க பட்ட விருது சிறிதே களங்கம் துடைத்தது. ஆனால் அசோக மித்திரனுக்கு ஞான பீடம் மட்டுமல்ல ,நோபெல் விருதும் கிடைக்க வேண்டும் என்பது எனது அவா.(சிவாஜிக்கு வாழ்நாள் ஆஸ்கர் போல ). உண்மையாகவே சொல்கிறேன். ஆரம்ப காலம் முதல் இன்று வரை நோபெல் பரிசு பெற்ற அத்தனை இலக்கியங்களையும் மூல வடிவில் அல்லது மொழி பெயர்ப்புகளில் படித்தவன் என்ற வகையில் நோபெல் பரிசு பெற தகுதியான ஒரே இந்திய எழுத்தாளர் அசோக மித்திரனே.
இவர் தான் பரிசு பெற்றதற்கு தன்னை கண்டு வாழ்த்த விரும்பிய கலைஞரை அவமான படுத்திய விதமும், பின்னானில் தன வாரிசுகளின் நலனுக்காக வளைந்து கொடுத்து தன் நிலை தாழ்ந்து எல்லோரையும் சங்கட படுத்தியதும் மறக்க விரும்பும் நிகழ்வுகள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது மனபூர்வமான கண்ணீர் அஞ்சலி.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th April 2015 03:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks