-
1st March 2013, 05:16 AM
#11
Junior Member
Platinum Hubber
வாத்தியார் சொன்னபடி, கல்யாணராமய்யர் கம்பெனியில் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் பேனரில், ‘‘ராணி லலிதாங்கி’’ படத்திற்கான வேலைகள் ஆரம்பமாயின. வாத்தியார் சொன்ன கதையையும், சில நாடகக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நான் எழுதிய லலிதாங்கியின் திரைக்கதைக் கோப்பை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடம் சென்றேன். காலை மணி ஒன்பது. எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷம்.
இப்பொழுது அவ்வை டி.கே.சண்முகம் சாலையும், (அப்பொழுது அதற்கு ‘லாயிட்ஸ் ரோடு’ என்று பெயர்) ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கும் ரவுண்டானாவின் அருகில் உள்ள வழக்கறிஞர் வி.பி.ராமனின் இல்லத்திற்கு அருகே உள்ள ‘தாய் வீடு’ என்று பெயர் கொண்ட சொந்த வீட்டில் எம்.ஜி.ஆர். தன் மனைவியார் சதானந்தவதி அம்மையார் மற்றும் தனது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.
சதானந்தவதி அம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார். “என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. எனவே, வி.என்.ஜானகியை மணந்து கொள்ளுங்கள். இதற்கு மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன். அவள் இந்த வீட்டில் இருக்க வேண்டாம். வேறு வீடு பார்த்து, குடிவையுங்கள்” என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து, “தாய்வீடு” இருந்த தெருவுக்கு எதிர்த்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு வி.என்.ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் வசித்து வந்தார்.
எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்ற நான், வெளியிலிருந்த அழைப்புமணியின் பொத்தானை அழுத்தினேன். உடனே திரைச்சீலையை விலக்கிக் கொண்டு பட்டு ஜிப்பா அணிந்து, அதன் இரு கைப்பகுதித் துணியை உருட்டி, முழங்கைக்கு மேலே முண்டா தெரியும்
படியாகப் பொருத்தியவாறு எலுமிச்சம் பழ நிறத்தில் ஒருவர் வெளியில் வந்தார்.
அவரது முகத்தைப் பார்த்தேன். ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மோகினி’, ‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’ போன்ற படங்களில் நான் பார்த்து ரசித்த அதே முகம்.
என் இதயத்தை எடுத்து பனிக்கட்டி மீது வைத்து, அது இளகி உருகுவது போல ஓர் உணர்வு! ஒப்பனை இல்லாமலே எம்.ஜி.ஆர். அழகாக இருந்தார்.
கும்பிட்டேன். கும்பிட்டார்.
ஒரு நொடிப் பொழுது மலைத்து மவுனமாக நின்றேன்.
அந்த மவுனத்தை அவரே கலைத்தார்.
‘‘யார் நீங்க? என்ன வேணும்?’’
‘‘வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ் கிட்டேர்ந்து வரேன். இந்த ராணி லலிதாங்கி பைலை ஒங்ககிட்டே குடுத்திட்டு வரச்சொன்னாரு.
‘‘நீங்க யாரு?’’
‘‘அவரோட அஸிஸ்டெண்ட்.’’
‘‘சரி, இரண்டு நாள் கழித்து இதே நேரத்துக்கு இங்கே வாங்க. நீங்க போகலாம்’’ என்று உள்ளே போய்விட்டார்.
திரும்பி கோடம்பாக்கம் வந்து இந்த விவரத்தை வாத்தியாரிடம் சொன்னேன்.
மூன்றாவது நாள் காலை மணி 9. எம்.ஜி.ஆர். இல்லம். அழைப்பு மணி.
எம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். கையில் லலிதாங்கி பைலுடன் சில காகிதங்கள்.
வெளிவராந்தாவில் வட கோடியில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.
ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். எதிரே என்னை உட்காரச் சொன்னார்.
பைலையும், காகிதங்களையும் மேசை மீது வைத்தார். கேட்டார். ‘‘இந்தத் திரைக்கதையை யார் எழுதினது?’’
‘‘நாடகக் கதையையும், சில குறிப்புகளையும் வாத்தி யாரு சொன்னாரு. அதை வச்சிக்கிட்டு நான்தான் எழுதினேன். வாத்தியார்கிட்டேயும் படித்து காட்டினேன். நல்லாருக்குன்னாரு. அதுக்கப் புறந்தான் ஒங்ககிட்டே கொடுக்கச் சொன்னாரு.’’
‘‘ஓகோ, சரி. லலிதாங்கி ‘ஒடியாத இடையினால் ஊர்வசியாக ஆடினாள்’ அப்படின்னு ஒரு காட்சியில் எழுதியிருக்கீங்களே. அது என்ன ஒடியாத இடை? அப்படின்னா என்ன?’’ என்று கேட்டார். அதற்கு நான் விளக்கம் சொன்னேன்.
‘‘துடி இடை, பிடி இடை, கொடி இடை, மின்னல் இடை, மெல்லிடை, சிற்றிடை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘‘இருங்க இருங்க. இப்ப நீங்க சொன்ன ஒவ்வொண்ணுக்கும் எனக்கு விளக்கம் சொல்லுங்க.’’
‘‘துடின்னா உடுக்கு. இடைன்னா இடுப்பு. உடுக்கு மாதிரி ஒடுங்குன இடுப்பு. பிடின்னா ஒரு கைப்பிடி. அந்த அளவுள்ள இறுகிய இடுப்பு. கொடின்னா பூங்கொடி போல வளைந்தாடும் தன்மையுள்ள இடுப்பு. மின்னற்கொடி போன்ற மெல்லிய இடுப்பு. இப்படியெல்லாம் பெண்களின் இடுப்பழகை கவிஞர்கள் கவிதையிலே வர்ணிச்சிருக்காங்க. அதெல்லாம் இல்லாம புதுசா இருக்கட்டுமேன்னு ஒடியாத இடை – அப்படின்னா இன்னும் கொஞ்சம் ஆடுனா, அவ இடிப்பு ஒடிஞ்சிடும். அந்த அளவுக்கு மெல்லிய இடுப்பு அப்படிங்குறதுக்காக ஒடியாத இடைன்னு எழுதினேன்.
இந்திர மன்றத்தின் நடன ராணிகள்னு சொல்லப்படுகிற ரம்பா, திலோத்தமா, மேனகா, ஊர்வசி இந்த நாலு பேர்ல, சொல்லின் ஓசை நயத்துக்காக ஊர்வசியைச் சேத்துக்கிட்டேன்.’’
– இந்த எனது விளக்கத்தைக் கேட்டு ரசித்து மலர்ந்த முகத்துடன் மேலும் என்னைக் கேட்டார்.
‘‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’’
‘‘எஸ்.எஸ்.எல்.சி.! தமிழ் நூல்கள் நிறையப் படிச்சிருக்கேன். தமிழார்வமும், தமிழ்ப்பற்றும் அதிகம்.’’
‘‘உங்க பெயரென்ன?’’
‘‘ஆரூர்தாஸ்.’’
இதைக்கேட்டதும் எறும்புக்கடி பட்டது போல – ‘‘ஆரூர்! அப்படின்னா திருவாரூர்தானே?’’
‘‘ஆமா.’’
‘‘மு.க.வைத் தெரியுமா?’’
‘‘நல்லாத் தெரியும். அவர் படிச்ச அதே பள்ளிக்கூடத்துலதான் நானும் படிச்சேன். என்னைவிட ஏழு வருஷம் பெரியவரு. முரசொலிமாறன் என் பள்ளித் தோழர்.’’
‘‘ஓ! நீங்க நம்மாளுதான். ஜானு! (ஜானகி அம்மையாரை அவர் ஜானு என்றுதான் அழைப்பது வழக்கம்) ஒரு டீ அனுப்பு’’ என்றார், சற்று உரத்த குரலில். பிறகு சொன்னார்:
கருத்து வேறுபாடு
‘‘கதை சம்பந்தப்பட்ட காட்சிகள்ள எனக்கு கருத்து வேறுபாடு இருக்கு. ஆனா, அதை நீங்க விளக்கியிருக்கிற விதமும், நடு நடுவுலே எழுதியிருக்கிற நல்ல தமிழ் வசனமும் ரொம்பப் பிடிச்சிருக்கு.’’
‘‘ரொம்ப நன்றி!” என்றேன். இதற்குள் ஒரு சிறு பணிப்பெண் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றாள். கை காட்டினார். பருகினேன். அவர் தொடர்ந்தார்:–
‘‘குறிப்பிட்ட சில காட்சிகளை நான் மாத்தி, இந்தப் பேப்பர்ல எழுதியிருக்கேன். இதையெல்லாம் நீங்க வாத்தியார்கிட்டே படிச்சிக் காட்டிட்டு, அந்தந்தக் காட்சிகளோட பொருந்தும்படியா எழுதி இணைச்சிக்கிட்டப்புறம் மறுபடியும் எங்கிட்டே வந்து படிச்சிக் காட்டணும்.’’
‘‘சரி.’’
‘‘ஏன்னா, நான் வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்கணும். அதே சமயத்துல என் கொள்கையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. நீங்க அழகான தமிழ்ல எழுதியிருக்
கிற இந்த திரைக்கதையை நான் படிச்சிப் பார்த்ததுல, உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எனக்குத் தோணுது.’’
‘‘நன்றி.’’
‘‘வாழ்த்துக்கள்! நீங்க புறப்படலாம். அப்புறம் சந்திப்போம். இடை யில் தேவைப்பட்டா கூப்பிடுகிறேன்.’’
‘‘வணக்கம்.’’
அப்பொழுது என் வயது 23. முண்டா திரண்டு இளமை முறுக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் வயது 37. ஆனால் அழகும் ஆரோக்கியமும் சேர்ந்து அவர் வயதைக் குறைத்திருந்தன.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான், முழுமை பெற்ற ஒரு கதை வசன கர்த்தாவாகி, இதே எம்.ஜி.ஆரைச் சந்தித்து கதை சொல்லப் போகிறேன். என் வசன வலையை வீசி அந்தக் கலைமானைப் பிடிக்கப் போகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் அவருடைய இந்தக் கேள்விகள் எல்லாம் இல்லாமல் நான் சொன்னதே கதை, எழுதியதே வசனம் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர் இதயத்தில் எனக்கென்று ஓர் இடம் பெற்று அவருடைய ‘அவை எழுத்தாளனாக’ ஆகப் போகிறேன் என்றெல்லாம் அப்பொழுது நான் எண்ணிப் பார்க்கக்கூட இல்லை.
வாழ்க்கை என்பது ஒரு பாய்மரக் கப்பல். காலம் என்ற காற்று வீச்சுக்கு ஏற்றவாறு அந்தந்தத் திசையில் அந்தக் கப்பல் தானாகச் செல்லும். சுக்கான் கொண்டு அந்த வாழ்க்கைக் கலத்தை இந்த உலகப் பெருங்கடலில் எவரும் செலுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. சேரும் இடம் என்பது குறிக்கோள். சேர வேண்டும் என்பது முயற்சி. சேர வைப்பது காலம்.
courtesy- thiru .aroordas
-
1st March 2013 05:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks