Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆண்டனியின் அட்டகாசங்கள். (ஒரு கூர்பார்வை)




    'ஞான ஒளி' டைட்டில் காட்சியில் ஆண்டனியாக ஆண்டவர் மணி அடிக்கும் போதே நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்து விடுகிறது. கள்ளங்கபடமில்லாமல் அவர் கோவில் மணியின் கயிற்றை லேசாக வலது கீழ் உதட்டை பற்களால் கடித்து சிரித்தபடியே அற்புத கேமராக் கோணங்களில் இழுத்து அடிக்கும் போது நம்மை நடிப்புக் கயிற்றால் கட்டிப்போட ஆரம்பித்து விடுவார். அப்போது வீச ஆரம்பிக்கும் நடிப்புப் புயல் 'வணக்கம்' கார்ட் போடும் வரை வலுப்பெற்றுக் கொண்டே போகுமே ஒழிய கொஞ்சம் கூட ஓயவே ஓயாது. குறையவும் குறையாது.

    நடிகர் திலகத்திற்கும், விஜயநிர்மலாவுக்கும் ஏற்பட்ட குழாயடிச் சண்டையை பாதிரியார் தீர்த்து வைத்து அனுப்பியவுடன் வி .நிர்மலா பின்னாலேயே ஓடி வரும் இவர் "போறா பாரு நல்லா கோயில் காளை மாதிரி.... சும்மா லங்கு லங்குன்னு"... என்று சொல்லும்போது எதிரே ஒரு பாதிரியார் எதிர்பாராதவிதமாக வந்து விட 'டக்' கென்று கைகளைக் கோர்த்து குனிந்தபடியே ஒன்றும் தெரியாதவாறு ஒரு தோத்திர வணக்கத்தைப் போடுவார் பாருங்கள். படு நேச்சுரல்.

    ஓட்டை பிரித்து வி.நிர்மலாவை கயிறு கொண்டு தூக்கும் போது அவருக்கே உரித்தான ஸ்பெஷல் காமெடி பஞ்ச் உண்டு. (குதிரு கனம் கனக்குறா) உடனே நாய் குரைக்கும். அதற்கு இவர் அலறுவதைக் கேளுங்கள் (உங்க அப்பா கூப்பிடறாரு...உங்க அப்பா கூப்பிடறாரு). என்னா ஒரு நக்கல்!... என்ன ஒரு சூப்பரான, கண்ணுக்கு மாறுதலான ஜோடி! இருவரின் உடல் வாகும் கனகச்சிதம். கோபால் சார் சொல்வது போல தலைவர், வி.நிர்மலா ஜோடி இன்னும் சில படங்களில் சேர்ந்து நம்மை சந்தோஷப் படுத்தியிருக்கலாம்.

    (இந்த "பணமா பாசமா" புகழ் 'அலேக்' விஜய நிர்மலா தெலுங்குப் படவுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கிருஷ்ணா அவர்களின் மனைவி ஆவார். தலைவர் தெலுங்கில் நடித்த 'பெஜவாடா பெப்புலி' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இவரே! எனவே தலைவரை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.)

    சேஷாத்திரி சவப்பெட்டி வேண்டாம் என்று மறுத்தவுடன் வரும் வேகம், கோபம் டாப். பிரசவ வேதனையில் மனைவி பக்கத்தில் இருக்க முடியாமல் காசாசை காட்டி இப்படி செய்து விட்டாரே என்ற ஆத்திரத்தில் கொதிக்கும் கொதிப்பு அற்புதம். ("இதுக்குன்னு யாராவது வராமலா போயிடுவாங்க" என்று சேஷாத்திரி பெட்டியைப் பார்த்து கூறியவுடன் "அடப் போய்யா...தெரியும்...என்ற அந்த சீற்றச் சீறல்,"யாரையாவது கொன்னுதான் உள்ள போடணும்" என்ற ஆத்திரக் கடுப்பு ஆங்காரமாய் வெளிப்படும்.)

    ராணி இறந்து விட்ட சேதியை பாதிரியார் இவரிடம் சூசகமாகச் சொல்ல சொல்ல விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தும் புரிந்து கொள்ளாததுமான முக பாவங்கள்... மெல்ல சந்தேகப்பட்டு வாயிலிருந்து வரும் நம்ப முடியாத கேள்விகள்.

    (பாதிரியார்: "இப்பவே தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்கடா"....

    ஆண்டனி: தூக்கிகிட்டா?... ஏன் சாமி! ராணியால நடந்து வர முடியாதா?")

    "ராணி போயிட்டாடா" என்று பாதிரியார் இவரிடம் சொன்னவுடன் மிக மிக குளோஸ்-அப் காட்சியில் அதிர்ந்தபடியே இவர் முகத்தில் மற்ற இடங்கள் உணர்ச்சியற்ற நிலையில் அந்தக் கன்னக் கதுப்புக்கள் மட்டும் லேசாகத் துடிக்குமே... இவை யாவும் பூலோக விந்தைகள் அல்லாமல் வேறு என்ன!

    ஊரிலிருந்து மகள் வந்தவுடன் தனக்காக அவள் என்ன வாங்கி வந்திருக்கிறாள் என்று ந.தி.கேட்க, சாரதா இவருக்காக தான் வாங்கி வந்திருக்கும் பொருள்களை எடுத்துக் கொடுக்க சற்று தூரத்தில் மரப்பெட்டியின் மேல் வைக்கப் பட்டிருக்கும் சூட்கேஸை எடுக்க ஓடுவார். நடிகர் திலகம் சாரதா ஓடுவதை திரும்பிப் பார்ப்பார். திரையில் பார்க்கும் நமக்கு நடிகர் திலகத்தின் பின் பக்க உருவம் முழுமையாகத் தெரியும். அந்தக் காட்சியை நன்கு கவனியுங்கள். இடது கை பழக்கம் உள்ளவனின் மானரிசங்கள் அப்போது அச்சு அசலாக அற்புதமாக நமக்கு இவரால் காட்டப்படும் ...அதாவது இடது கையை மிக லூஸாக விட்டு உடலை ஒட்டியபடி இல்லாமல் சற்று தள்ளி வைத்தவாறு, கொஞ்சம் மேல் நோக்கித் தூக்கியபடி அதுவும் கையை ஆட்டியவாறு இருப்பார். மிகக் கம்பீரமாக இயல்பான ஸ்டைலில் நிற்பார். அந்தப் பின்பக்கக் காட்சியின் போது கூட மார்பை இடது கையால் மறக்காமல் தடவி விடுவார். மருந்துக்குக்கூட தவறு நேராது.

    ஊருக்கு வந்த மகளுடன் பாதிரியாரிடம் சென்றிருப்பார். உள்ளே போக மாட்டார். மகள் மாற்றி எடுத்து வந்த ஸ்ரீகாந்தின் இறுக்கமான பேண்ட், ஷர்ட்டை போட்டுக் கொண்டு ஒரு டையை ஏனோதானோவென்று கட்டிக் கொண்டு கூச்சப்பட்டுக் கொண்டு வெளியே நிற்பார். பாதிரியார் கூப்பிட்டவுடன் வருவதைப் பார்க்க வேண்டுமே! ("வாங்கோ... வாங்கோ துரை அவர்களே" என்று பாதிரியார் கிண்டலாகக் கூப்பிட்டவுடன் மகளிடம் "பார்த்தியா" நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல... சாமி என்னை துரைன்னு கூப்பிடுவாருன்னு" என்ற அர்த்தத்தில் சாரதாவிடம் கைகளால் சைகை செய்து பெருமிதத்தைக் காட்டுவார்)

    பரீட்சை நல்லா எழுதியிருக்கியா? என்று பாதிரியார் சாரதாவிடம் கேட்பார். அதற்கு சாரதா "ஒ...யுனிவர்சிட்டியிலேயே பர்ஸ்ட்டா வருவேன் பாதர்" என்று பதிலுரைப்பார். இந்த உரையாடலை இடது கையால் மார்பை தேய்த்தபடியே கவனித்துக் கொண்டிருக்கும் என் தெய்வம் சாரதா பதில் கூறி முடித்தவுடன் இடது கையால் வலது கையை 'சபாஷ்' என்பது போல ஒரு தட்டு தட்டுவார். ஆஹா! என்ன அற்புதமான ரியாக்ஷன்.
    மகள் யுனிவர்சிட்டியிலேயே பர்ஸ்ட்டா வருவாள் என்று சொன்னவுடன் தனக்கும் ஏற்படும் அந்தப் பெருமிதம், மகளின் படிப்பின் மேல் உள்ள நம்பிக்கை, "எம் பொண்ணு எம் பொண்ணுதான்" என்ற கௌரவ கர்வம், என்னுடைய வளர்ப்பு... வீண் போகுமா?....அனைத்தும் அந்த ஒரு கைகொட்டலிலேயே நமக்கு உணர்த்தப்பட்டு விடும். உரையாடல் செய்து கொண்டிருப்பது வேறு நபர்கள்... தான் சும்மாதான் நிற்கிறோம்... நமக்கென்ன என்று இருந்து விடாமல் அவர்களையும் கவனித்து அவர்களை மீறி இவர் காட்சிகளில் ஸ்கோர் செய்வதால்தான் உலக நடிகர்களின் குருவாகிறார். நமக்கு தெய்வமாகிறார்.

    மேற்கூறிய காட்சி தொடரும். பாதிரியார் பேசியபடியே நடந்துவந்து சாய்வு நாற்காலியில் கைப்பிடிகளைப் பிடித்தபடி அமர்வார். வயது முதிர்ந்த பாதிரியார் அமர சிரமப்படும் போது அருகில் நிற்கும் நடிகர் திலகம் சட்டென பாதிரியார் உட்கார உதவி செய்ய பாதிரியாரின் தோள்களை ஆதரவாகப் பிடித்து அமரச் செய்வார். நடிப்பில் என்ன ஒரு கவனம்! என்ன ஒரு நேர்த்தி! என்ன ஒரு அசாத்திய ஞாபகத்தன்மை! வயதானவர்கள் அமரும் போது நம்மையறியாமல் நாம் உதவி செய்ய எத்தனிப்போமே அதை இந்தக் காட்சியில் அப்படியே நேரிடையாக இவரிடம் காணலாம். (சாரதாவிற்கும் அப்படி உதவி செய்யுமாறு காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும்... hidden... புரிந்து கொள்க)

    இன்னும் அந்தக் காட்சி தொடரும். "...... ஆண்டவன் இந்தப் பயலை எனக்குக் கொடுத்தாரு... இவன் மூலமா உன்னைக் கொடுத்தாரு" என்று சாரதாவிடம் பாதிரியார் கூற நடிகர் திலகம் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பாதிரியாரின் மடியின் கீழ் சிறு குழந்தை போல அமர்ந்து லேசான சிரிப்புடன் (உள்மனதில் தான் பட்ட கஷ்டங்களை நினைத்தபடி) அவரது கைகளைப் பிடித்தபடியே அமர்ந்திருப்பார். "பாவம்... வாழ்க்கையிலே எந்தவிதமான சுகத்தையும் காணாதவன்" என்று பாதிரியார் சாரதாவிடம் சொல்லி இவரிடம் இரக்கம் கொள்ளும்போது அமைதியான விசும்பலுடன் பாதிரியாரின் கைகளை இறுகப் பிடித்து அழுத்த முத்தங்கள் கொடுத்தபடியே முத்திரை நடிப்பைப் பதித்து பார்ப்பவர் இதயங்களை இடி விழுந்தது போல கலங்க வைப்பாரே! (எப்பேர்ப்பட்ட ஆய்வாளரும் இந்த ஒரு காட்சியில் நடிகர் திலகம் நடிக்கும் நடிப்புக்கான அர்த்தத்தை விளக்கி விடுங்கள் பார்ப்போம்!). அதுதான்யா என் தெய்வம்...எவராலும் நெருங்க முடியாத நடிகர் திலகம். இந்தக் காட்சியில் நான் எத்தனை முறை கதறி இருக்கிறேன் என்பதை என்னால் கூற முடியாது. நெஞ்சடைக்க, வாயடைக்க மேற்கண்ட பாராவை எழுதுவதற்குள் பெரும்பாடு பட்டு விட்டேன். இனி எழுதத் திராணி இன்று இல்லை.

    நாளை தொடர்கிறேன்.

    இனம் புரியா மனச் சுமையுடன்
    ஆண்டனியின் அடிமை வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 4th September 2013 at 06:10 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •