'நீதி' நினைவலைகளில் எங்களையும் மூழ்கச் செய்த கார்த்திக் சாருக்கு நன்றி. 'ராஜா' வை எந்த அளவுக்கு மறக்க முடியாதோ அந்த அளவுக்கு நீதியையும் மறக்க முடியாது.
புதுமையான கதைக்களம் கொண்ட அற்புதமான இந்தப் படத்தை ரீமேக் படம் என்று நம்ப முடியாத வகையில் நடிகர் திலகமும்,சி.வி.ராஜேந்திரன் அவர்களும் தங்கள் அபாரத் திறமையால் இமயத்தின் உச்சியில் தூக்கி நிறுத்தி இருப்பார்கள்.
ஒரு சராசரி லாரி டிரைவருக்குரிய குடிகாரன்,(அதுவும் சாராயம்) பெண் பித்தன்,முரடன், அடிதடி கேஸ் என்ற அத்தனை குணங்களையும் கண் முன்னே கொண்டு நிறுத்துவதாகட்டும்..
"சாராயம் என்னைக்கு பொறந்ததோ அன்னைக்கு பொறந்தவண்டா நான்" என்று ஜம்பம் அடித்துக் கொள்வதாகட்டும்,
"வாத்தியாரே! மெதுவாப் போங்க... லாரி நெறைய புல்லா லோடு இருக்கு" என்று கிளீனர் கூற, "அத்தேறிக் கழுத! லாரி மட்டுமாடா லோடு, உங்க வாத்தியாரும்(!) லோடு தாண்டா" என்று பீற்றிக் கொள்வதாகட்டும்....
லாரியில் ராமுவை அடித்துவிட்டு நீதி மன்றத்தில் "அத்தேறிக் கழுத! நான் போற ஸ்பீடுக்கு எந்தப் பய என்ன புடிக்க முடியும்?" என்று சவுண்ட் விட, நீதிபதி அதற்கு சத்தம் போடக்கூடாது என எச்சரிக்க, அதே டயலாக்கை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்வதாகட்டும்...
தண்டனையை அனுபவிக்க கிராமத்திற்கு செல்லும் போது கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க, சிலம்பை எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகட்டும்,
கொஞ்சம் கொஞ்சமாக சௌகாரின் குடும்பத்துடன் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்தின் பொறுப்பான அண்ணனாக, மகனாக, குழந்தைகளுக்கு மாமாவாக, தம்பியாக தன்னை செதுக்கி புது மனிதனாக்கிக் கொள்வதாகட்டும்....
ஊரை 'மோகினிப் பேய்' என்ற போர்வையில் பயமுறுத்தி உலா வரும் 'பயாஸ்கோப்' காட்டும் பெண்ணை அடக்கி, ஆண்டு, தனக்கு அடிமைப் படுத்திக் கொள்வதாகட்டும்...
தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து திருமணம் செய்து வைத்த தங்கை தனக்கு ஆசையாய் உடுத்திக் கொள்ள வாங்கி வந்த உடுப்பைப் போட்டுக்கொண்டு ஆனந்தப் படுவதாகட்டும்...('நீதி'யில் இவருக்கு இரண்டே இரண்டு உடைகள்தான் என்பது எப்போதும் பேசப்படுகிற வரலாற்று உண்மை ஆயிற்று.)
தங்கைக்கு சீர் செய்ய பாலாஜியிடம் தான் உழைத்ததற்கான ஊதியத்தில் சிறிது வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஒரு அற்புதமான சல்யூட் (இந்த சல்யூட்டுக்கும், சிவந்த மண்ணின் சல்யூட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!) அடித்து அமர்க்களம் செய்வதாகட்டும்...
தான் அண்ணியாக மதிக்கும் சௌகாரின் மானத்தைக் காக்க வில்லன் மனோகரிடம் தொங்க விட்டிருக்கும் இறைச்சிகளுக்கு மத்தியில் போடும் ஆக்ரோஷ சண்டையாகட்டும்...(இந்த அருமையான சண்டைக் காட்சியில் ஐஸ் கட்டிகளின் மீது உண்மையாகவே வழுக்கியபடி வருவார். 'தியாகம்' படத்தில் தொங்க விட்டிருக்கும் மீன்களுக்கு மத்தியில் மீன் மார்க்கெட்டில் ஜஸ்டினுடன் படு ஸ்டைலாக நடிகர் திலகம் போடும் சண்டைக்காட்சிக்கு முன்னோடி இந்த சண்டைக்காட்சி எனலாம்).
இறுதில் நன்னடைத்தைக்காக தனக்கு விடுதலை என்று தெரிந்தவுடன் ஊரையும், உறவுகளையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் கிராமத்திலேயே பாச உணர்வுகளில் ஊறி அங்கேயே தங்கி விடுவதாகட்டும்...
நடிகர் திலகம் ஸ்டைலான நடிப்பில் கொடிகட்டிப் பறந்து அந்த மூன்று மணி நேரமும் நம்மை ஆடாமல் அசையாமல் கட்டிப்போட்ட அந்த அற்புதக் காலங்கள் (கார்த்திக் சார் சொன்னது போல அந்த 1971,72-கள்) நமக்கெல்லாம் சொர்க்கபுரி காலங்கள். நம்மை தவிக்க விட்டு, துடிக்க வைத்துவிட்டுப் போய் விட்ட அந்தத் தங்கத் தலைவனின் தன்னிகரில்லா காலங்கள்.
கனத்த இதயத்துடன்,
வாசுதேவன்.
Bookmarks