-
7th October 2013, 12:19 AM
#11
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி = Part II
இனி படத்திற்கு வருவோம். முழு படத்தையும் பற்றி பேசப் போவதில்லை. குறிப்பாக இரண்டே இரண்டு காட்சிகள். ஒன்று முதல் இரவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மனைவி ஆகி விட்ட நாயகியுடன் மனம் திறந்து பேசும் காட்சி. அதுவரை ஒரு பிடிவாத குணம் கொண்ட ரோஷகார இளைஞன் மாணிக்கம் என்ற முறையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அறிமுகமாகியிருப்பார். அந்தக் காட்சியில்தான் தான் நாயகி மேல் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவார்.[உன்னை மொத மொத பார்த்தபோதே என் மனசை பறி கொடுத்துட்டேன்] தானும் அவளும் எப்படி இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்கள் என்பதை சொல்லுவார். நாம் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் உண்மையான ஜனநாயக சோஷலிசம். இதைதான் நம்ம தலைவர்கள் எல்லாரும் சொல்றாங்க.[இந்த வசனம் வரும்போது 1971 ஜூலை மாதம் ஸ்ரீதேவியில் எழுந்த கைதட்டல் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது]. உன்னளவிற்கு நானும் படிச்சிருக்கேன். ஆயிரம் வயலை உழுதவ்னும் ஆயிரம் புத்தகங்களை படிச்சவனும் ஒன்னும்பாபாங்க.
இந்த டயலாக் டெலிவரி எல்லாம் தியேட்டரில் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த modulation, முக பாவம், உடல் மொழி எல்லாமே அற்புதமாக இருக்கும். பேசிக் கொண்டே வெகு இயல்பாக தோளில் கை வைக்க அதை படாரென்று தட்டி விட்டு என்னை தொடாதீங்க என்று கோபாவேசமாய் பேசும் JJ-வை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, இனி நீயா வந்து என்னை தொடரவரைக்கும் நான் உன்னை தொட மாட்டேன் என்று சொல்லி விட்டு போகும் அந்த look பிரமாதம். அன்றைய தினம் இந்தக் காட்சியோடு இடைவேளை விட்டதால் இதைப் பற்றியே நானும் சாரதியும் கிருஷ்ணாஜியும் பேசிக் கொண்டிருந்தோம்.
இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி. எனக்கு உங்கிட்டே பிடிச்சதே அந்த பிடிவாதம்தான். ஏன்னா நானும் பிடிவாதக்காரன். உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்னுடைய மனைவி ஆன பின்னாடி என்னுடைய வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்தறதுக்கு உனக்கு பழக்கமில்லாத வேலையெல்லாம் செய்ய சொன்னேன். ஆனா நான் உன்னை கொடுமைப்படுத்தறதா நீ நினைச்சுக்கிட்டே. நான் எப்ப தூங்குவேன்னு நீ பார்த்துட்டிருந்தே நீ எப்ப ஏம்மாத்துவேனு நான் பார்த்துட்டிருந்தேன்.
இந்த வசனங்களை எல்லாம் [நான் மேலே எழுதின வசனங்கள் படத்தில் verbatim ஆக இருக்காது] அவர் பேசும் போது பார்க்க வேண்டுமே! இத்தனைக்கும் இரண்டு மூன்று ஷாட்களுக்குள் மொத்த காட்சியும் வந்து விடும். ஆனாலும் continuity miss ஆகாமல் உணர்வுகள் அப்படியே அந்த வார்த்தை பிரயோகங்களில் வந்து விழும் அந்த modulation! என்ன ஒரு மேதமை!
நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
குறிப்பிடத்தக்க மற்றொரு நபர் நாகேஷ். சின்ன பண்ணையாக பெரிய பண்ணை T.S பகவதியுடன் கூடவே இருந்து குழி பறிக்கும் அந்த character-ஐ ஜாலியாகவும் வெகு இயல்பாகவும் செய்ய நாகேஷை விட்டால் யார் இருக்கிறார்கள்? பண்ணைக்கு ஆதரவாக பேசுவது போல் சிவாஜியின் மாணிக்கம் character-க்கு lead எடுத்துக் கொடுப்பது [ஏம்பா, தேர்தலிலே தோத்தா பணம் கொடுக்காம அவர் பெண்ணையா உனக்கு கொடுப்பார்?] எல்லாம் அக்மார்க் நாகேஷ். சரியாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடிகர் திலகம் படங்களில் நாகேஷ் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார். 1965 ஜூலை திருவிளையாடல், 1968 ஜூலை தில்லானா, 1971 ஜூலை சவாலே சமாளி!
மொத்தத்தில் அந்த ஞாயிறு நண்பகல் சற்று கசப்புணர்வுடன் ஆரம்பித்தாலும் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் அற்புதமான பாத்திர சித்தரிப்பினால் மனம் குளிர்ந்து மகிழ்ந்தது.
அன்புடன்
-
7th October 2013 12:19 AM
# ADS
Circuit advertisement
Bookmarks