ராஜா சார் பேச்சில் குறை ஒன்றும் இருப்பதாய் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.


முதல் மரியாதை படம் பார்த்து விட்டு, படத்தை இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் மாற்றம் செய்ய அறிவுறுத்தியதாகவும், பாரதிராஜா கதையில் பிடிவாதமாக இருந்து எதையும் தனக்காக மாற்றவில்லை என்று ஏற்கனவே ராஜா சார் சொல்லி இருக்கிறார். படம் ஓடாது என்று தனக்கு தோன்றியதால் சம்பளமே வாங்கவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

மேலும், பாடல்களும் பின்னணி இசையும் பிரமாதமாய் வந்து படமும் நன்றாக ஓடி லாபத்தை ஈட்டி விட்ட பிறகு பாரதிராஜா பிரசாத் ஸ்டுடியோ வந்து தான் எதிர் பார்க்காத வேளையில் ஒரு பெரிய தொகையை கையில் கொடுத்ததாகவும் 2007 ஏப்ரல் மாதம் தினத்தந்தியில் பல நாட்கள் வெளிவந்த வரலாற்று சுவடுகளில் பதிவு செய்திருக்கிறார்.


முன்பே ஒருவர் கூறியுள்ளது போல், ராஜா சார் "அன்றைய மன நிலையில்" தனக்கு படம் பிடிக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு? தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் படத்தில் வேலை செய்ய ஒப்பு கொண்ட பிறகு தன் வேலையை சரியாக செய்வது என்பது இது முதல் முறை அல்ல. அவர் வேலை செய்த படங்களில் முக்கால் வாசி அவருக்கு மட்டும் இல்லை, நமக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் பாடல்கள் நம் மனதில் இன்றும் நிலைத்திருப்பது எதனால்?


அவர் சிறந்த பேச்சாளர் அல்ல, மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறார், அதனால் விமர்சனத்துக்கும் ஆளாகிறார். உண்மையில் சொல்ல போனால் பாரதிராஜாவின் படங்களில் காதல் ஓவியம், மண்வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் எல்லாம் காவியங்கள். எல்லா அம்சங்களும் அழகாய் பொருந்திய படங்கள். 1991 வரை வந்த அவருடைய மற்ற படங்களும் ஏற குறைய அப்படி தான். ராஜா சாரும் நண்பர் என்கிற தகுதிக்காக அல்ல, அனுபவித்தே அந்த படங்களுக்கு அள்ளி கொடுத்திருக்கிறார், கிள்ளி கொடுக்கவில்லை.