-
24th May 2013, 12:58 AM
#11
வாசு சார் அவர்களுக்கு,
உங்களின் பல பதிவுகளைப் பற்றி இந்த ஒரே பதிவில் பேச வந்துள்ளேன்.முதலில் உங்களின் என் கிராமம் என் மக்கள் பதிவு பற்றி. பலரும் சொல்லிவிட்டார்கள் நான் புதிதாக என்ன சொல்லி விட முடியும்? சினிமா அவ்வளவாக கலக்காத ஒரு தனி கிராமிய மனம் கமழும் பதிவை யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பதிந்து அனைவரையும் ஒரு கிராமீய சுற்றுலா கூட்டிச் சென்ற உங்களுக்கு வாழ்த்துகள். அந்த பதிவின் மேன்மையே அதில் தொனித்த ஜீவன். எப்படி பாதுகாப்பு படப்பிடிப்பு பதிவில் ஒரு ஜீவன் இருந்ததோ, எப்படி சந்திப்பு ஓபனிங் ஷோ அனுபவ பதிப்பில் ஒரு ஜீவன் இருந்ததோ அதே உயிர் துடிப்பு இந்த பதிவிலும் எதிரொலித்தது. ராமாபுரத்திலும் நமது ரசிகர்கள் ராஜ்ஜியம்தான் என்பதை அழகாய் எடுத்துக் காட்டியிருந்தீர்கள்.
அடுத்து நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வரிசை.அனைத்து படங்களுமே அருமை என்ற போதிலும் அந்த பாவை விளக்கு படப்பிடிப்பு நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மனதை அள்ளிக் கொண்டு போகிறது.
நாயகியர் வரிசையில் மாலினி நல்ல தேர்வு. உங்களுக்கே உரித்தான பாணியில் அவரைப் பற்றிய கமன்ட் கூட ரசிக்க வைத்தது [ஆண் பிள்ளைத்தனமான உடல்வாகு].அது உண்மை என்ற போதிலும் அவரிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது.
சண்டைக் காட்சிகளைப் பற்றிய உங்கள் தொடர் சொல்லவே வேண்டாம். எந்தெந்த சண்டைக் காட்சியை எப்போது எடுத்துப் போட வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அந்த 57 வயதில் சண்டைக் காட்சியை ரசிக்க முடிந்தது.
இனி உங்களின் ஆதங்கப் பதிவிற்கு வருகிறேன். நானெல்லாம் நிறைய எழுதி விட்டதால் இப்போது என்னை தொந்தரவு செய்வது முறையாக இருக்காது என சொல்லியிருந்தீர்கள். நிறைய எழுதி விட்டதால் வர வேண்டாம் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே தோன்றியதில்லை. சொல்லப் போனால் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் இடையில் இருக்க கூடிய தடை என்பது நேரக் குறைவுதான். இது அனைவருக்குமே பொதுவானது என்ற போதிலும் என் விஷயத்தில் அதிகமாகவே இருக்கிறது. பகலில் நமது மையம் இணைய தளத்தையோ நமது திரியையோ பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு இல்லை.இரவில் வீட்டில் வைத்து மற்றுமே இவற்றை படிக்கவும் பங்கு பெறவும் முடியக் கூடிய சூழல். அந்த குறுகிய காலயளவில் தினந்தோறும் பங்களிப்பது பதிவிடுவது என்பது சற்று சிரமமான வேலை. ஆகையால்தான் பதிவுகள் குறைகிறதே தவிர மற்றப்படி வேறு எந்த காரணமுமில்லை. இதை முன்னரே பலமுறை இங்கே சொல்லியிருக்கிறேன். இந்த பதிலை நான் பதிவிட்டிருக்கும் நேரத்தை பார்த்தாலே அது புரியும். எனினும் அடிக்கடி பதிவிட நிச்சயம் முயற்சிக்கிறேன். இங்கே மட்டுமல்ல, நீங்கள் அடிக்கடி வேண்டுகோள் விடுக்கும் filmography திரியிலும் பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.
இது தவிர சில தவிர்க்க முடியாத வெளியூர் பயணங்களும் சில நேரங்களில் இது போன்ற சூழல் உருவாவதற்கு காரணமாகி விடுகிறது. அந்தக் காரணத்தினால் சென்ற ஞாயிறன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட இருவர் உள்ளம் திரைப்படத்தையும் நமது NT FAnS அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தையும் மிஸ் செய்ய நேர்ந்தது.
இறுதியாக உங்கள் வேண்டுகோள் பதிவு. Antony-ஐயும் Arun-ஐயும் என் கைவண்ணத்தில் படிக்க ஆசை என்று எழுதியிருந்தீர்கள். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இருவரும் உங்கள் ஊனோடும் உயிரோடும் ஒன்றாய் கலந்தவர்கள். நானும் அவர்களை மிகவும் ரசித்திருக்கிறேன், ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் உங்கள் அளவிற்கு அவர்களைப் பற்றி என்னால் எழுத முடியுமா என்பது சந்தேகமே. இதை சொல்லும்போது வேறு ஒன்று நினைவிற்கு வருகிறது. சிறிது கால அவகாசம் கொடுங்கள். முயற்சி செய்கிறேன்.
அனைத்திற்கும் மீண்டும் நன்றி.
அன்புடன்
-
24th May 2013 12:58 AM
# ADS
Circuit advertisement
Bookmarks