-
6th January 2013, 12:48 PM
#11
Senior Member
Seasoned Hubber
இரும்புத் திரை படத்தைப் பற்றிய தங்களுடைய திறனாய்வினைப் பொறுத்த வரை மிகவும் பாராட்டத் தக்கதாக உள்ளது, தங்களது ஓரு சில சொந்த கருத்துக்களைத் தவிர்த்து. தங்கவேலுவின் நகைச்சுவை இந்த கால கட்டத்தில் மிகவும் dry யாகத் தான் தெரியும். போதாக்குறைக்கு அவருக்கு பாடல் காட்சிகள் சற்றே அதிகமாகவே தரப் பட்டது, படம் எதிர்பார்த்த அல்லது பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் விட்டிருந்தால், அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நடிகர் திலகத்தின் திரைப்படங்களில், அவரது நடிப்பில் அந்தந்த கால கட்டத்தில் சமுதாயத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது வியப்பளிக்கக் கூடிய ஒன்று. Representation of period and culture அவருடைய நடிப்பில் மிக நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் அவருடைய நடிப்பை திரைப்படத் துறைக்கும் அப்பால், வரலாற்று ஆவணமாகவும் பதிவு செய்யலாம். 50 ஆண்டு கால தமிழகக் கலாச்சாரத்தை அவர் படங்கள் பிரதிபலித்தன. அதற்குக் காரணம் அவர் அன்றாடம் சந்திக்கும் மக்களை உன்னிப்பாக கவனித்து தன்னுடைய பாத்திரங்களின் மூலமாக அவர்களை வெளிப்படுத்தியது. இந்த அடிப்படையில் தான் அவருடைய நடிப்பை நாம் அணுக வேண்டும். 60களில் மக்களின் வாழ்க்கை நெறிமுறை 70களில் இல்லை, அதே போல் 70களில் இருந்த வாழ்க்கை நெறிமுறை 80களில் இல்லை. இதைத் தான் அவர் படங்கள் கூறுகின்றன. இந்த விஷயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மேம்போக்காக மிகை நடிப்பு என்பதை சொல்பவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது நம் கடமை.
நம்முடைய மக்களின் கலாச்சாரமும் சொந்தமான நேடிவிடியினை விட்டு மற்றவர்களை தழுவத் தொடங்கியது 60களின் மத்தியில். அது வரை நாம் நாமாக இருந்தோம். ஆனால் திரைப்படம் மிகவும் ஆழமாக மக்கள் மனதில் பதியத் தொடங்கியது 60களின் முற்பகுதியில், குறிப்பாக அது ஒரு பொழுது போக்கு சாதனம் என்கிற நிலையைத் தாண்டி பிரச்சார சாதனம் என்கிற நிலையை அடைந்தது. இதன் பலன், பல முனைகளில் திரைப்படங்கள் தாக்கம் தரத் துவங்கின. அரசியல் பிரச்சாரம் ஒரு புறம் இருக்க அந்நிய படங்களின் படையெடுப்பு அன்றே நம் கலாச்சாரங்களில் ஊடுருவத் தொடங்கி விட்டன. இந்த நிலை பல பெற்றோர்களின் மனதில் கவலை அளிக்கத் தொடங்கிய காலத்தில் அவர்களுடைய நிலையைத் தான் நடிகர் திலகம் படங்களில் காண முடிந்தது. அப்போது அவர்களுடைய உள்ளத் துடிப்புகள் ஆவோசமாகத் தான் எதிரொலிக்கும். அந்த உணர்வுகளைத் தான் அவர் பிரதிபலித்தார்.
70களில் தமிழ்ப் படங்களின் இசை சற்றே பின் தங்கி ஹிந்திப் பாடல்களின் ஆதிக்கம் வந்த போது கூடவே பல ஆங்கிலப் படங்களும் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றன. அப்போதே நம் மக்கள் அந்தக் கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினர். டிஸ்கோவிற்கு முந்திய காலம் அது. ஜாஸ் இசையின் மூலம் மேற்கத்திய இசையும் நடனமும் பார்ட்டிகளும் நடைபெற்றன. எங்கே அதன் வீச்சு மிகவும் அதிகமடைந்து மக்களின் கலாச்சாரமும் அந்த திசையில் சென்று விடுமோ என்று பயந்த நேரத்தில் தான் மண்ணின் மைந்தரான இளையராஜா நுழைந்து அந்நிய கலாச்சார ஆதிக்கத்திற்கு சற்றே முட்டுக் கட்டை போட்டார். இருந்தாலும் ஓரு சில ஆண்டுகளிலேயே டிஸ்கோவின் வடிவில் மீண்டும் இசையும் நடனமும் திரைப்படங்களும் அந்நிய கலாச்சாரத்தை நோக்கி வேகமாக நடைபோடத் துவங்கின.
இதையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கப் பார்க்கலாம். அவருடைய நடிப்பிலும் அதனுடைய தாக்கத்தின் ஆபத்தை வெளிப்படுத்தி பல பெற்றோர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
90களின் துவக்கம் முற்றிலும் இசையிலும் பாட்டிலும் திரைப்படத்திலும் தமிழை அந்நியப் படுத்தியது. அந்தக் கால கட்டத்தில் நிலவிய கலாச்சாரத்தையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கக் காணலாம். இதற்கு ஒரு சான்று ஒன்ஸ் மோர். அந்தக் கால கட்டத்தில் இருந்த பெற்றோர் மனப்பான்மையினை அதில் அவர் மிக நன்றாக கூறி யிருப்பார்.
உதாரணங்கள் ஏராளமாய் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்க்கலாம். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பையும் பரிணாங்களையும் ஆழமாக ஆராயாமல், மேம்போக்காக மிகை நடிப்பு என்று சொல்வோர் கூட்டத்தில் சேர வேண்டாம் என்று கோபால் சார், தங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தன்னுடைய ஒரு படத்தில் கூட பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதைப் போன்று தேவையற்ற உணர்வு வெளியீட்டலை நடிகர் திலகம் தந்ததில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th January 2013 12:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks